Thursday, 3 April 2014

குரு வடிவம்


                    

“குருவே சிவமென்று கூறினன் நந்தி” என்று திருமூலம் பேசுகிறது. இந்த உலகிற்கு நம்மைக் கொண்டு வர இரண்டு பேர் தேவைப்பட்டனர். ஆனால் இந்த உலகில் இருந்துக் கொண்டே இன்னொரு உலகை நாம் அறிய உதவுகிறவர் குரு ஒருவரே. குருவின் கண்களில் வாழ ஒருவன் சேவை செய்ய ஆரம்பிக்க வேண்டும். பயன் கருதாத சேவை. “இன்ன செய்தால் இன்னது வரும்” என்ற எதிர்பார்ப்பு இல்லாத சேவை ஒன்றைச் செய்து தனது மனதை தானே செதுக்கும் சிற்பியாகவும்; உளி அடித்து உருவான சிலையாகவும் முயற்சிகளை மேற்கொள்வது குருவை நோக்கி அவனை நகர்த்தும் .
குரு நேரில் வந்து “நாளை முதல் நானே உனக்கு குரு” என்று சொல்லிக் கொள்வதில்லை. “அறிந்தவர் அறிவாராக” என்று மவுனமாக தனது செயல்களைப் புரிகிறார் குரு. ஆலமரத்தின் கனிகளில் , எது ஒன்று நிறைவு நோக்கிப் பழுக்கும் என்று அறிந்திருந்தும் மவுனம் காப்பவர் குரு. குருவின்  காலடிகளில் தனது எதிர்காலத்தை வைத்துவிட்டு நிகழ்காலத்தின் கத்திமுனைகளை ஆரஞ்சு சுளைகளைப் போல கடித்துச் சுவைக்க தனது சிஷ்யனை தயாராக்குவது குருவின் மாண்பு.
“மலை உச்சி அடைய எந்த வழியாக ஏறத்துவங்கலாம்? என்று சிஷ்யன் பவ்யமாக பணிவாகக் கேட்கிறான். “உச்சியிலிருந்து துவங்கு” என்கிறார் ஜென்குரு. அதாவது மலை உச்சியை இப்போதே அடைந்துவிட்டவனைப் போல உன் மனநிலையை உயர்த்திக் கொள். மலையின் உயரம் உன் மன உயரமாகட்டும். அந்த மனோநிலைக்கு உன்னை நீ வசியப்படுத்திக் கொண்டு மலை ஏற ஆரம்பி என்று அர்த்தம்.
நாம் தேடும் குரு எப்படி இருப்பார் என்று ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் ஏங்கியிருப்போம். வாழ்வின் துன்ப சுவடுகளில் அழுந்தி அழுந்தி அடி வாங்கிய பின்பும் நம்மை நடத்திச் செல்லும் பூரண சக்தி நம்மைத் தாண்டிய சக்தி வடிவான குருவிடம் உள்ளது என்று நமது அறிவு ஒத்துக்கொள்வதில்லை. “அறியும் அறிவை  நீ தந்துவிடு” என்று நாம் மனம் கசியக் கேட்பதுமில்லை. கேட்காத ஒன்று எப்படிக் கிடைக்கும்?

                                           (குருவைத் தேடுவோம்) 

No comments:

Post a Comment