Thursday, 3 April 2014

சுந்தர காண்டம் -1126 to 1150







பாடல்-1126

“அப்படிப்பட்ட இராமனின் அடிமையேன்
அடியேன் நாமம் அனுமன் என்பேன்
அழகிய நெற்றியாள் சீதையைத் தேடி
மிகப்பெரும் நான்கு திசைகளும்
தேடி அலைந்த வாலியின் புதல்வன் அங்கதன்!
அவனது தூதன் நான் மட்டும் வந்தேன்இங்கு”

பாடல்-1127:

அனுமன்  கூறிவிட்டான்
கருமேகம் நடுவே மின்னல் தெரிவது போல
இராவணன் பற்கள் தெரிய சிரித்தான்
“வாலி மகன் அனுப்பிய தூதனே
வலிமை மிகு வாலி நலமா!
வாலி அரசு நலமா?”என்றதும்
நாயகன் இராமனின் தூதன் சிரித்தான்.

பாடல்-1128:

“அஞ்சாதே அரக்கனே!
பெரும் சினமுடைய வாலி
வானுலகம் எப்போதோ அடைந்தான் !
அவன் வாலும் போய்விட்டது ! எப்படி என அறிவாயா?
மை போன்ற கருநிற இராமனின்
ஒரே ஒரு அம்பினால் அழிந்தான் வாலி
எமக்கு தற்போது அரசன் வாலி அல்ல
சூரியன் புதல்வன் சுக்ரீவன்”

பாடல்-1129:

“எதற்காக இராமன் மனைவி சீதையை
அங்கதன் தேட வேண்டும்?
எதற்காக வலிமை வாலியை
அம்பினால் இராமன் கொன்றான்?”
வாயு மகன் அனுமன் பதில் சொன்னான்.

பாடல்-1130:

தேவியை நாடி வந்தான் செங்கண்ணான்
எங்கே எங்கே எனத்தேடுகின்ற  இராமனுடன்
நட்பானான் சுக்ரீவன்
இன்னொரு உயிராக இராமனுடன்  இணைந்தான்
“வாலியால் வந்த  துன்பம் துடைத்திடுக” என்றான்
ஓவியர்களும் எழுத இயலா உருவன் இராமன்
சுக்ரீவன் மனைவி உருமையை மீட்டான்
செல்வத்தை முன்னே கொடுத்தான்
வாலியையும் கொன்றான்

பாடல்-1131:

“சுக்ரீவனுடன் இராமன்
நான்கு மாதம் தங்கியிருந்தான்
வானர சேனை சூழ இனிது இருந்தான்
“நீங்கள் தேடுங்கள்” எனப் பணித்தான்
இப்படித்தான் இலங்கை வந்தோம்” என
தூதன்  சொன்னான்.

பாடல்-1132:

“உங்கள் குலத்தலைவன் சுக்ரீவனோடு
ஒப்பிட முடியாத வலிமை வாலியை
அம்பினால் கொலை செய்த இராமனுக்குத்
அடிமைத் தொழில் செய்யும்
உங்கள் புகழ் அழியவே அழியாது!
அப்படி அழிந்தால்
உலகம் பேதமை உடையது
என்று ஏளனமாகச் சொன்னான் இராவணன்.

பாடல்-1133:

“தன் சகோதரன்  வாலியைக் கொல்லச் செய்தவன்
உங்கள் தலைவன் சுக்ரீவன்!
அப்படிக் கொன்றவன் மீதே அன்பு செலுத்துபவன்
உங்கள் தலைவன் சுக்ரீவன்!
அப்படிப்பட்டவனின் தூதன் செய்தி என்ன!
போரிட்டது ஏன்?
தூதனைக் கொல்லமாட்டோம்
நெஞ்சம் அஞ்சாமல் சொல்க”என்றான் இராவணன்.

பாடல்-1134:
இராவணன் சொல்லிய சொற்களை
தொகுத்து ஆராய்ந்து
“உலக பொது நீதியை உணர்த்தினால்
அது பொருத்தம்” என நினைத்து
அருங்குணத்தான் அனுமன்
சொல்லத் தொடங்கினான்.

பாடல்-1135:

தூதனாக நான் வந்தேன்
சூரியன் புதல்வன் சுக்ரீவனுக்கு!
அச்சொற்களின் நீதியை உணர்வாயெனில்
“குற்றமற்றன” என உணர்வாய்
உன்னிடம் சொல்வேன்.

பாடல்-1136:

“உன் வாழ்வை வீணே கெடுத்தாய்
அறத்தை சிறிதும் நோக்கவில்லை
தீமை செய்தாய்
அழிவு காலம் நெருங்கிவிட்டது
எனினும்
என் சொல்லைக் கேட்டால் உன்
உயிரை நீண்ட காலம் காக்கமுடியும்”

பாடல்-1137:

பெருந்துன்பத்திலும்
குற்றமற்ற கற்புடைய சீதையை
தீயைக்காட்டிஉம் தூய சீதையைத் துன்புறுத்தினாய்
அதனால்
புலன்களை வென்று போற்றிக்காத்த
தவத்தின் பயன்
உன்னை விட்டுக் காய்ந்து போய்விட்டது.

பாடல்-1138:

தேவர்களை வென்ற பெருமை
முன்பு அழிந்தது
இன்று அதில் சிறிது அழிந்தது
நாளை அதிலும் சிறிது அழியுமே தவிர
நிறைந்து நிற்குமா?

பாடல்-1139:

“பாவத்தால்
புண்ணியத்தை அழிக்கமுடியாது”
எனும் உண்மையை விட்டு நீங்கினாய்
மாதவம் செய்து
அதனால் பெற்ற தூய்மை நிலை நீங்கினாய்
தூய்மை மிகு சீதையிடம் கொண்ட
ஆசை எனும் நோயால்
உன் தூய்மையை துடைத்து அழிக்கின்றாய்”

பாடல்-1140:

திறம் நிரம்பிய காமசெருக்கினால்
அறமுறை மறந்தவர்கள்
தன்னுடைய அறிவுக்குள்ளேயே
சுழன்று சுழன்று மயங்கி
இறந்து இறந்து
மேலும் மேலும் தாழ்ந்து அழிவார்கள்
அறம்மாறி நடந்தவர்களில்
அழியாமல் வாழ்பவர்
உலகில் யார் உள்ளார்கள்


பாடல்-1141:

உலகில் எல்லாவற்றுக்கும் கணக்கு உண்டு
ஆனால் இளமை மிகு மகளிரிடம்
முறையற்ற காமத்தால் அளவு கடந்தவர்கள்
கணக்குக்கு எல்லை இல்லை!
களிப்பு கொண்ட வண்டுகள் மொய்க்கும்
மாலைகள் அணிந்த ஆடவர்கள்
நேர்மையற்ற செயலால்
மறைந்தவர்கள் எண்ணிக்கைக்கு
எண்ணிக்கை இல்லை.

பாடல்-1142:

ஞானமுள்ளவர்கள் இருளாக நினைப்பது
பொருளாசை காம ஆசை மட்டுமே!
வறியவர்களுக்கு ஈதல்கருணையுடன் நடத்தல்
பொருளாசை காம ஆசை தீர்தல் என்பதையே
தெளிவு என நினைப்பார்கள்!

பாடல்-1143:

காம இச்சைத் தன்மையால்
பிறர் மனைவியை விரும்பி
தினமும் பிறர் எள்ளி நகையாடினாலும்
வெட்கம் அற்றவன் ஆனாய்
உனது பசுமையான தேகம்
காமதாபத்தால் உலர்ந்தது
பழிபடுகின்ற ஆண்மை
சிறந்த குணங்களில் ஒன்றாக ஆகுமோ!

பாடல்-1144:

அலைகடல் சூழ்ந்த உலகினில்
உன் போன்ற அரக்கர்களில்
உன்னைப் போல அறிவும் நீதியும் பெற்றவர் எவர் உண்டு!
வேத நீதியின் விதிப்படி நடந்திட
காதல் கொண்ட நீ
அறத்தின் எல்லை கடந்து விடவா செய்வாய்!

பாடல்-1145:

வெறுப்பு உண்டான ஒருத்தியை விரும்பி
அவள் மறுத்த பின்பும்
வாழ்கின்ற வாழ்வை விட
முகத்தின் நடுவே ஓங்கிய மூக்கை அறுத்துக் கொண்டு
“அது அழகு” என்று கூறுதல்
ஏற்புடையது ஆகும்!

பாடல்-1146:

உலகையே அழிக்க வல்ல கைகளும்
ஆயிரம் தலைகளும் இருந்து என்ன பயன்?
அறம் தவறும்போது
அவை உன் உயிர் காக்குமோ
ஊரெல்லாம் அழிக்கின்ற
கொடு நெருப்பில் அகப்பட்ட
நூறு துணிகளைப் போல் அழியும்.

பாடல்-1147:

நீ எதை மறந்தாய் தெரியுமா?
திரிபுரங்களும் தப்பமுடியாமல்
பெரும் நெருப்பால் கோபமுடன் அழித்த சிவன்
வீணை நரம்புகள் கொண்டு
நீ இழைத்த பாடலுக்கு மகிழ்ந்து அளித்த வரம்
அறம் தவறினால் அழியும் என்பதை மறந்தாய்
வேதநெறி விலகாத இராமனின்
அம்புச்சக்கரம் குறி தப்பாமல் அழிக்கும்
என்பதும் மறந்தாய்.

பாடல்-1148:

தெளிந்த ஞானிகளும் விரும்பும் அளவுக்கு
சிறப்பு உடையவனே
அழியாத நின் வாழ்நாள் சிதையுமாறு
எல்லாச் செல்வமும் அழிய
எளியவனாக மாறி
எல்லோரும் ஏளனம் செய்யும்
இழி தொழில் செய்வதில் ஈடுபடுவாயோ!


பாடல்-1149:

உலகில் பிறந்தவர்கள் மட்டுமல்ல
உலகில் பிறவாத வீடுபேறு  பெற்றவர்கள்
தேவர்கள்
தேவர்களுக்கெல்லாம் தேவராகச் சிறந்தவர்கள்
எவருமே இராமனை  மறந்தவர்கள் அல்ல
இது சத்தியம்.

பாடல்-1150:

“ஆதலால் இராவணா!
அருளும் செல்வமும் உறவினரையும்
இழக்காமல் பெற்றிட
சீதையைத் தருக” எனச் செப்பினான்
சூரியன் மகன் சுக்ரீவன்” எனப்படும் அனுமன்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment