Thursday, 27 March 2014

சுந்தர காண்டம்-1101 -1125




பாடல்-1101:

“இராமனனின் இதயமாம் சீதையை
சிறை வைக்கப்பட்டதைக் கண்டும்
செயல்படாமல் இருப்பதில் என்ன இருக்கிறது?
தேவர்களும் அசுரர்களும் கண்டிட
மகுடம் அணிந்த இராவணன் தலையை
பறித்து எறியாவிட்டால்
பாவகாரி இராவணனுக்கு அழிவைத் தராவிட்டால்
இராமனிடம் என் அடிமை தனத்துக்கு
என்ன பெருமை இருக்கிறது!” துடித்தான் அனுமன்.

பாடல்-1102:

அனுமன் மேலும் நினைக்கின்றான்
“சீதையைத் தேடி வந்து ஒரு குரங்கு
இராவணன் அருகிலுள்ள மகளிர் திகைக்க
மகுடம் அணிந்த பத்து தலைகளையும்
பத்து திசைகளில் உருட்டியது கொடிய குரங்கு” எனும் புகழ்
சிறிய புகழா?
நிச்சயம் சிறிய புகழ் அல்ல.

பாடல்-1103:

இது வரை என் உயிரை சுமந்தேன்
நீண்ட வாள் பற்கள் இராவணனைக் காண!
வசை மட்டும் வீசி விட்டுச் சென்றால்
எனக்குப் பழிதான் சேரும்
ஆனால்
போரிட்டு நான் மாண்டாலோ புகழே கிட்டும்
புகழ் நிச்சயம் கிட்டும்


பாடல்-1104:

என் தோளில் இறுக்குகின்ற
நாகபாசம் அறுந்து விழும்படியாக  பாய்வேன்
மலையில்வாழும் ஆற்றல்மிகு ஆண்சிங்கம் போல
ஒரே குதி குதிப்பேன்! சென்று அடைவேன்!
சிந்திக்கும் போதே
“இப்படிச் செய்யக்கூடாது” என
நீதியால் நினைத்தான்!

பாடல்-1105:

இந்த  இராவணன்
கொல்லக்கூடிய எளிய வலிமை கொண்டவன் அல்ல
இவன் வெற்றிகளை கவனித்தால்
பிறரால் வெல்லும் நிலைமை கொண்டவன் அல்ல
இருளின் திரட்சி போன்ற இவனை
இராமன் தவிர பிறர் வெல்லமுடியுமோ? முடியாதே!

பாடல்-1106:

என்னை வெல்லவும் இவனால் முடியாது
இவனை வெல்லவதும் என்னால் முடியாது
வெற்றி தோல்வியின்றி காலங்கள் கழியும்
ஆதலால்
கடினமான ஒரு போர் தொடங்குதல்
தூய்மையானதல்ல!

பாடல்-1107:

“உலகங்கள் ஏழிலும் உள்ள மக்கள்
இன்ப மடையுமாறு
இராவணனின் வலிய தோள்கள் மட்டுமல்ல
பத்து தலைகளையும் பூமியில் புரட்டுதல்
என் இலட்சியம்” என ஊழியான் இராமபிரான்
விளம்பிய சபதம் ஒன்று இருக்கிறதே
அதை நான் மறக்கலாமா!”

பாடல்-1108:

நான் இராவணனுடன்
போர் செய்து பொழுது போக்கினால்
இன்னும் ஒரு மாதமே இருப்பேன் நான்!
இது நாயகன் இராமன் மீது ஆணை” என்ற
அழகு விழி சீதையும் உயிர் விடுவாள்


பாடல்-1109:

ஆதலால்-
“போர்த்தொழில் அழகல்ல
தூதுவனின் தன்மையே நல்லது” என உணர்ந்தான்
வேத நாயகனின் தனித் துணைவன் அனுமன்
நெருங்கினான் -  
வெற்றியும்  பகைமையும்  கொண்ட
இராவணனின்  அரியாசனத்தை !

பாடல் -  1110 :

இலங்கை வேந்தன்  இராவணன்  இருந்தான்
தீட்டிய வாள் எனக் கூறத் தக்க   மனைவியர்கள் குழு நடுவே !
பாற்கடல் அமுதம்  உண்ட தேவர்களை
ஓட ஓட  விரட்டிய  இந்திரஜித் காட்டினான் அனுமனை 
இராவணனுக்கு !

பாடல் -  1111 :

எத்தனை புவனங்கள்  உண்டோ
அத்தனையும்  போரினால்   கடைந்தவன் இராவணன்
போரினால் கடந்தவன் இராவணன்
அவனிடம் அனுமனை  
மூன்றே சொற்களில் சொல்கிறான் இந்திரஜித் :-
“  இவன் திருமாலின்  உருவம்
இவன் சிவன் ! செங்கண்கள் உடையவன்  ”

பாடல் -  1112 :

கைகூப்பி வணங்கி  இந்திரஜித் கூறிமுடித்தான்
அனுமனை நோக்குகிறான் இராவணன்
நோக்குதலில் உண்டானது கனல் பொறி
நோக்குதலில் உண்டான பொறிகளால் -    
அனுமனின்  உடல் மயிர் ‘ சுறு சுறு ' என தீய்ந்தது
 அனுமனின்  உடலினை -  
வெப்பமும் புகையும் 
நாகபாசம் போல     
இன்னும் இறுக்கின.

பாடல்  - 1113  :

கொடும் கோபம்  !
எமனின் வடிவம் இராவணன் !
தேவர்கள் நடுங்கிட
சுற்றிலும் நின்றவர்கள் நடுங்கிட
“எதற்கு இவன் வந்தான்? நீ யார்?”என
அனுமனின் தன்மை வினவினான்

பாடல் : 1114
சக்ரதாரி திருமாலோ?
வச்சிரதாரி இந்திரனோ?
சூலாயுதபாணி சிவனோ?
பூமிதாங்கும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனோ?
உன் பெயரும் உருவமும் மறைத்தாய்
அழிவதற்கு வந்திருக்கிறாய்!

பாடல் ; 1115

எதிரே நின்று
பாசக்கயிற்றால் உயிர்கவரும் கருநீலமான எமனோ?
குன்று பிளக்க வேல் எறிந்த கந்தனோ?
தென் திசை உரிமை எமனோ?
எந்த திசையில் ஆட்சி செய்கிறாய் நீ ? எவன் நீ?

பாடல் 1116

அந்தணர்கள் வேள்வியில்
கிளம்பிய கொடிய பூதமா நீ ?
இலங்கை அழிக்க
தாமரை மலர் பிரம்மன் படைத்த்¢ட்ட
அஞ்சாமை மிக்க தெய்வமோ நீ ?

பாடல் 1117

தேவர்கள் புகழை வேரோடு பறித்த இராவணன்
மேலும் கேட்டான்
“இவர்களில் நீ யார் ?
எதற்கு வந்தாய் ?
யார் உன்னை அனுப்பினர்?
என் கட்டளை! சொல்லிவிடு தப்பாமல்!”

பாடல் 1118

நீ சொன்ன யாரும் அல்ல நான்
அற்புதமான வலிமையாளர்களின்
ஏவலுக்காகவும் வரவில்லை
அழகிய செந்தாமரையே போன்ற
செங்கண்கள் கொண்ட வில்லி
இராமபிரான் தூதன் நான்
இலங்கை வந்தேன்

பாடல் 1119
அப்படிப்பட்ட வில் வீரன் யார் என
அறியவில்லை எனில் சொல்கிறேன்
முனிவர்கள்
அமரர்கள்
மும்மூர்த்திகள்
எத்தன்மை பெற்றவர்கள்  யாராயினும்
நினைக்கவே முடியாத பெரும் செயலை
செயலாக்கிட அவதாரம் செய்தவள்

பாடல் 1120

உங்களது தேகபலம் மட்டுமல்ல
தவ வலிமை
புதிது புதிதான படைகள்
தேவர்கள் தந்த நல்ல வரங்கள்
பெற்ற சிறப்புகள்
இன்னும் பிற எது இருந்தாலும்
தனது
ஒற்றை அம்பினால் அழிக்க வல்லவன்.

பாடல் 1121

அந்த வில்லாளன் இராமபிரான்
தேவர்களும் அல்ல
மற்றவர்களும் அல்ல
திசை காக்கும் காவலன் அல்ல
மும்மூர்த்திகள் அல்ல
மற்ற முனிவர்களும் அல்ல
பூமி முழுதும் ஆண்ட அரசனின் புதல்வன் !

பாடல் -  1122 : 

அவன் -  
ஞானம் பொருந்தும் வேள்வியின் பயன் !
மாபெரும் தவங்களின் தீரா வரங்கள்  அவன் !
இது மட்டுமல்ல - 
அவன் என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும்
காரணம் வேண்டுமா ?
வேதமும் அறமும்  புகழும்
மெய்யாகிய அற மூர்த்திதான் அந்த வில்லாளன் !

பாடல் -  1123 :

பரம் பொருளாகிய இராமபிரான்
அரச குமாரனாய் அவதரிக்க
காரணம் எதுவென  நீ கேட்டால் சொல்கிறேன்
அவன் - 
முடிவில்லாத வேதங்கள் ஆவான்
வேதங்கள் முடிவான உபநிடதமும் அவனே
அவை இதுதான் என விளக்க முடியாத
அறிவின் அறிவு அவன்
கஜேந்திரன்  எனும் யானை ஒன்று
சிறப்புப் பெயர் கூறாமல் பொதுவாக
‘ ஆதிமூலமே '  என்ற  அழைப்பிற்கே  அன்று  வந்தான்
இன்று - 
அமரரைக் காக்க வந்துள்ளான்

பாடல் -  1124 : 

மூலம் இல்லாதவன்   
நடு இல்லாதவன்
முடிவும் இல்லாதவன்
மூன்று காலங்களும் கணக்கும் நீத்தவன்
அனைத்துக்கும் காரணன்
சூலம் - சக்கரம் - சங்கு - கமண்டலம் துறந்தான்
வெள்ளி மலையாம்  கயிலை துறந்தான்
தாமரை மலரும் துறந்து
அயோத்திக்கு
வில்லுடன்  மட்டும் வந்த  பரம்பொருள்.
அவனே இராமன்.

பாடல் -  1125 : 

தன் பொன்னடிகள்  போற்றுவாரின்
பிறப்பை அறுப்பான்
அறம் தலை நிமிர நிறுத்துவான்
கருணையுடன் வேதம் கூறிய நீதியை
உலகம் அறிந்து அவ்வழியில் நடக்க
கொடியவர்களை  அழிப்பான்
நல்லோர் துன்பங்கள் துடைப்பான்
அவர்களை ஆள்பவன் .

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment