Thursday 20 March 2014

ரக்பி விளையாட்டு!



                பயங்கரமான கனவு கண்டேன். ரக்பி மேட்ச் ஆடுகிறேன். (அதாவது பந்தினை கையில் தூக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம்)  ஆட்டம் ஆரம்பிக்கிறது.யாரோ சில ரவுடி ப்ளேயர்கள் வருகிறார்கள். ரெப்ரீ எனும் ஆட்ட நடுவரைத் தாக்குகிறார்கள். இப்போது அது மிக நல்லதாக இருக்கிறது.எல்லா ஆட்டக்காரர்களுக்கும் ஒரே குறிக்கோள்தான். பந்தினை விரட்டி விரட்டி எதிர் அணியின் கோல் போஸ்ட்டில் சேர்க்க வேண்டும். சொந்த கோல் போஸ்ட் நோக்கி பந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். நிறைய விளையாட்டுக்காரர்களுக்கு காயம் ஏற்படுகிறது. சரியான அடி பலருக்கு.
               நிஜமாக சொல்ல வேண்டுமானால் எனக்கும் தலையில் பலத்த காயம் ஒரு ரெளடி பிளேயரால் ஏற்பட்டுள்ளது. ஏன் என்னை அடித்தான் என்று ரத்தம் துடைத்துக்கொண்டே யோசிக்கிறேன். ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது. ஒன்றுமே புரியவில்லை. இது ஒரு கனவுதானே என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பலத்த தலைக்காயங்களுடன் சில விநாடிகளில் இறந்துபோகிறேன். ஹெல்மெட் அணியாமல் செத்துப்போனேனே என்று ஒரே ஏக்க ஏக்கமாய் வருகிறது. கடைசி நிமிட ஏக்கம். ரக்பி விளையாட ஏற்பாடு செய்தவர்கள் நடுவர் எனும் ரெப்ரீயை காப்பாற்றியிருக்கலாம். சை! கனவு கலைந்து எழுந்து உட்கார்ந்தேன்!
                     மறு நாள் இன்னொரு கனவு. ரக்பி மேட்ச்! இந்த முறை நான் ஹெல்மெட்டோடு ஆடுகிறேன். ரவுடிகள் நுழைந்து தொப் தொப் என நடுவருக்கு அடி விழுகிறது. சில விநாடிகளில் மயங்கிப்போய் விழுகிறார். எப்படியோ ரக்பி ஏற்பாடு செய்தவர்கள் டாக்டரை அழைத்து வர ரெப்ரீ காப்பாற்றப்படுகிறார்.நான் இந்த முறை ஆட்டத்தில் தோற்றாலும் நிம்மதியாகவே உணர்ந்து வீட்டுக்கு வருகிறேன். ஏதோ திருப்தி. 
                     இரண்டு கனவுகளையும் அழ்ந்து சிந்திக்கிறேன். முக்யத்துவம் ஆராய்ந்தேன். ரப்பி மேட்ச் என்பது வாழ்க்கையின் குறியீடு என்பது புரிந்தது. நாம் இந்த வாழ்க்கையில் பிறப்பு எடுத்து வந்ததற்கு காரணமே இந்த பிரம்மாண்டத்தின் படைப்பில் பங்கு பெறவே. இதில் இன்னொரு கருத்து இல்லை. அது புரிந்தால் வெற்றி. இல்லையேல் தோல்வி. அதுவும் கனவில் வருகிறது. நான் இந்த விளையாட்டில் எனது பதப்படுத்தப்பட்ட ஈகோவுடன்  ஆடியிருக்கிறேன். இப்படியிருந்தால் இப்படி நடந்து கொள்வேன் என பொத்தி பொத்தி வளர்ந்த ஈகோ அது.  என்னுடைய உடம்பு, என்னுடைய ஐந்து புலன்கள்,எனது மனம், எனது சாதுர்யமான புத்தி ஆகியவை என்னுடன் ரக்பியில் விளையாடிய மற்ற மற்ற ப்ளேயர்கள். அவர்கள் என்னோடு சேர்ந்து சேர்ந்து ஆடினார்கள். நான் ஓடும்போதெல்லாம் அவர்களும் ஓடி மகிழ்ந்தார்கள்.
                     எதிர் டீமில் விளையாடியவர்கள் யார்? அவர்கள் என்னுடைய மற்ற மற்ற புலன் இன்பங்கள்.அவை எனது பேராசைகள். எனது கோல் போஸ்டில் நான் எவை எதற்கு எதிராக நிற்கிறேன் தெரியுமா? என்னுடைய காயங்கள், என்னுடைய அதிருப்திகள்,எனது கோபங்கள் ஆகியவற்றை யாரும் பார்த்துவிடாமல் தடுக்க நான் எனது கோல் போஸ்ட்டில் நிற்கிறேன். நடுவர் யார்? அவர்தான் ஆன்மீக விழிப்புணர்வு.
                    இந்த பூமியில் நாம் இயங்க சில விதிகள் இருப்பதுப்போல ஆன்மீக விதிகளையும் நாம் பின்பற்றாமல் வாழ்வு விளையாட்டை விளையாட முடிவதில்லை. ரக்பி விளையாட்டுபோல - வாழ்க்கை விளயாட்டுக்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு . ஆன்மீக விழிப்போ என்கின்ற ரெப்ரீ எனும் நடுவர் நம் தவறை சுட்டிக்காட்டும்போது நாம் அவரை வீழ்த்தி விடுகிறோம். அதன் பிறகு - நமது பதப்படுத்தப்பட்ட ஈகோ, உடம்பு, ஐந்து புலன்கள்,  புத்திசாலித்தனம் என்பவை  இன்பங்களைத்தேடி வீரவெறியோடு போரிடும் நார்வே போர்வீரனைப்போல ஈகோவுடன் போரிட்டு  வலிகளும் தாக்குதல்களும் பெறுகின்றது .ரத்தம் கட்டிப்போய் கன்றிப்போன காயங்களுடன் - திருப்தியின்மையுடன் - கடைசியில் ஒரு நாள் இறந்து போகிறோம். அப்போது நினைக்கிறோம்  மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்து நிச்சயம் நன்கு விளையாடுவோம் என்று. இந்தச் சுழல் முடிவதே இல்லை.
                         இரண்டாம் கனவில்- நடுவரை - ரெப்ரீயை ரக்பி அமைப்பாளர்கள் மூச்சை தெளியவைத்தது எதனைக் குறித்தது எனில் - சற்குரு நமது ஆன்மீக விழிப்புணர்வை ஏற்றுக்கொண்டு நம்மை காப்பாற்றிவிடுதல் ஆகும். அதன் பிறகு நமக்கு வாழ்வு எனும் விளையாட்டின் விதிகள் புரிகின்றன. வென்றாலும் தோற்றாலும் நமது வாழ்வு அவர் ஆசிர்வாதமாகிறது. விளையாட்டு முடிகிறது. நாம் நமது இல்லம் திரும்புகிறோம். அங்கே நாம் நமது உண்மையான “நாம்”- க்குள் நுழைவோம்.விடுதலை உணர்வு. நிறைவு ததும்பும் ஆனந்தம் கிடைக்கிறது. மீண்டும் வாழ்வில் பிறந்து விளையாடும் எண்ணம் வருவதேயில்லை. 
               


  *****

1 comment:

  1. //எனது கோல் போஸ்டில் நான் எவை எதற்கு எதிராக நிற்கிறேன் தெரியுமா? என்னுடைய காயங்கள், என்னுடைய அதிருப்திகள்,எனது கோபங்கள் ஆகியவற்றை யாரும் பார்த்துவிடாமல் தடுக்க நான் எனது கோல் போஸ்ட்டில் நிற்கிறேன். நடுவர் யார்? அவர்தான் ஆன்மீக விழிப்புணர்வு.//

    பக்குவம் சுவை கூட்டுகிறது. தொடரும் வரிகள் நிலையுணர்த்தி நிற்கிறது. தத்துவம் தெளிவிக்கிறது புத்தியை.

    ReplyDelete