Thursday, 20 March 2014

சுந்தர காண்டம்1075 - 1100






பாடல்-1076

மிகப்பெரிய வானப்பரப்பை
உருவி ஊடுருவினாய்
அதற்கு மேலும் வளர்ந்து நின்றாய்
கலைகள் யாவும் முற்றும் கற்றாய்
ஒரு கள்ள அரக்கனால் கட்டப்பட்டாய்
இதுதான் அறத்தின் தன்மையோ?

பாடல்-1077:

கடல் கடந்து
இலங்கை புகுந்தாய்
அரக்கர்கள் உடல்கள் பல கடந்தாய்
வென்று அழித்தாய்
உன் ஆயுள் அழியவில்லை
வெற்றித் தோள்கள் திரண்ட ஐயனே
இராமனைப் பிரிந்த இடர்கள் மேல்
இப்போது இன்னொரு இடர் தந்தாய்!

பாடல்-1078:

அனுமா ...
இராமனது ஆழி( மோதிரம்) காட்டினாய்
அதனால் என் உயிரை மீண்டும் எனக்கே காட்டினாய்
ஊழிக்காலம் வரை வாழ்க என உரைத்தேன்
அது பலிக்கும்
எனினும்
உன் மலைத்தோள் வலிமை காட்டி
பழிப்பு பெற்று அதுவும் காட்டுகிறாய்.

பாடல்-1079:

“என் அரிய உயிரை மீட்ட நீ
நன்றாக அறிந்த இந்த இடங்களை
இராமனுக்குக் கூறுவாய் என நம்பியிருந்தேன்;
கடும் போரில்
இராவணன் கொல்லப்பட்டபின்
சிறை மீட்கப்படுவோம் என இருந்தேன்”
அந்த நம்பிக்கை என்னை
தாண்டிப் போகச் செய்துவிட்டாய் அனுமா!

பாடல்-1080:

தீயைச் சுடும் கற்பு எனும் தீ போன்ற சீதை
அப்படியே தளர்ந்தாள்
மயக்கம் அடைந்தாள்
உயிர் தேய ஆரம்பித்தது
எதிரிகளிடம் சிக்கிய கன்றுக்காக
துவளும் தாய்ப்பசு போல தளர்ந்தாள்.

பாடல்-1081:

பெருமைக் குணத்தான் அனுமன்
பெரியோன் அனுமன்
அப்படிப்பட்ட அனுமனைக்கட்டிய இந்திரஜித்
இராவணன் அரண்மனை சென்றான்
தவப்பயனால்
மூன்று உலகும் ஆள்கிற
இராவணன் அரண்மனை அது.

பாடல்-1082:

இராவணன் கொற்றக்குடை வெள்ளைநிறம்
மூன்று உலகுக்கும் ஒளி வழங்கும்
இன்னொரு சந்திரனோ!
குளிர் நிழல் பேரொளி!
அந்த வெண்கொற்றக்குடை
இராவணன்
வானம் வரை தூக்கிய
கயிலை மலை போல் திகழ்ந்தது.

பாடல்-1083:

இராவணன் தோள்களில்
கருடக்கொடி திருமாலின் வச்சிராயுதம் உண்டு
முக்கண் சிவனின் சூலாயுதம் உண்டு
தழும்புகள் உண்டு
தேன் சொரியும் மகளிர் வாள் நகங்கள் பதித்த
வடுக்கள் உண்டு.

பாடல்-1084:

இராவணன் பத்து தலைகளில்
செந்நிற மயிர்க்கற்றை ஒளி
எத்திசையும் நிறைந்து ஓங்கியது
கோபமான பெருமூச்சு
பெரும் புகை உண்டாக்கிற்று
கடலில் ஒரு வடவைக் கனல் போல்
இராவணனை அது காண்பித்தது. 

பாடல்-1085:

இராவணனின் மகுடங்களில்
மரகதங்களின் செழுமை ஒளி உண்டு
மாணிக்க மணிகளின் நீண்ட ஒளி உண்டு
இரண்டு ஒளிகளும்
நரக லோகத்தின்
அசையாத இருளையும் விழுங்கின
இப்போது இராவணன் தோற்றம்
பாம்பரசன் ஆதிசேஷன்
எத்திசையும் செல்லுமாறு
அரசு செலுத்துவது போலிருந்தது.

பாடல்-1086:

இராவணன் மேலாடையில்
பலவிதமான இரத்தினங்களின்  ஒளி!
இராவணன்  தோள்களில்
சுடர் நிறைந்த அணிகலன்களின்  ஒளி!
கருங்கடல் பூமியில் பரவிய மேருமலையை
பொன்மகுடமாக சூடிவிட்டானோ இராவணன்!

பாடல்-1087:

சிவப்புநிற ஆடை
இடுப்பில் இறுக்கமாகக் கட்டப்பட்டு
காணப்பட்டான் இராவணன்
வரிசை வரிசையான வெண்முத்துக்கள் கொண்ட
அணிகலன்கள் ஒளி
வெண்ணிலா ஒளிக்குச் சமமாக இருந்தது.
இராவணனின்  இத்தோற்றம்
அந்திவானத்தை ஆடையாக
நட்சத்திரங்களை அணிகலனாக
சந்திரனாம் வெண்கொற்றக்குடை நிழலில்
காணப்படும் இருள் போல இருந்தது.
ஆம்! இராவண இருள்!


பாடல்-1088:

இராவணன்
கொலைத்தன்மைக்கு இருப்பிடம்!
சிறந்த வேதங்களுக்கு இருப்பிடம்!
வலிமையின் உச்சத்திற்கு இருப்பிடம்!
பத்து தலைகளும் கண் பார்வை வீசினால்
எண் திசை காக்கும்
எட்டு யானைகளுக்கு பயம் வரும்.
அது மட்டுமல்ல
விண்ணிலிருந்து காக்கும் துருவனும்
மண்ணிலிருந்து காக்கும் ஆதிசேடனும்
பெரும் பயம் கொள்வார்கள்.

பாடல்-1089:

உலகங்கள் அனைத்திற்கும் ஒரே நாயகன்
ஏக நாயகன்
இராமபிரான் தேவி சீதையைக் கண்டபின்
இராவணனுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது
நாகர்கள் வாழும் பாதாள லோகம்
பிரமன் வாழும் சத்தியலோகம்
இடைப்பட்ட உலகம்
அனைத்திலும் உள்ள அழகிய மங்கையர்கள்
அனைவருமே ஆண்களாகத் தெரிந்தனர்
காதல் பெண்களாகவே இல்லை!

பாடல்-1090:

இராவணனுக்கு ஏவல் செய்ய
புலால் படிந்த வேல்கள் ஏந்திய
அரக்கர்களோடு பணி செய்ய
எல்லோருமே சூழ்ந்து நிற்கிறார்கள்
சுற்றி நில்லாதவர்கள் பட்டியல் இது
சிவன்!
திருமால்!
அற்பத் தொழில் புரியும் மனிதர்கள்
முனிவர்கள்!

பாடல்-1091:

நரம்புக்கருவியாம் வீணை
தேன் தருகிறது!
பிரம்ம தாளம் எனும் இசைக்கருவியும்
சில்லரி எனும் இசைக்கருவியும்
குறகு எனும் இசைக்கருவியும்
வீணை இசைத்தேனுக்குத் தாளமிடுகிறது
தேவமகளிர் பாடல் கலக்கிறது
இத்தனையும்
இராவணன் இருபது  செவிகளில் சேர்கிறது.

பாடல்-1092:

தாளத்தோடு பாடல் இசைந்து
முழவின் ஒலியும் இசைகிறது
மலர் போன்ற சிறிய பாதமும் மனமும்
கைகளும் ஒன்றுபட்டு
மேனகை நடனம் இயங்குவதைப் பார்த்தால்
“முக்தியே வேண்டாம்” என
முனிவர்களைச் சொல்லச் செய்யும் ஆற்றல் புரிகிறது.

பாடல்-1093:
இராவணனின் முகங்கள்
ஒவ்வொன்றும் ஒரு செயல் செய்கின்றது
ஊடிய மகளிர் முகத் தேனை ஒரு முகம் நுகர்ந்தது
கூடிய மகளிர் முகக்களிப்பு எனும்
கள் அருந்துகிறது இன்னொரு முகம்
மற்ற மகளிர் காதல் பருகியது இன்னொரு முகம்
மகளிர் அழகு எனும்
அமுதம் குடிக்கிறது இன்னொரு முகம்

பாடல்-1094:

பணி செய்யும் தேவர்களுடன்
அரசியல் செய்யும் ஒரு முகம்
படைத் தலைவர்களுடன்
மந்திர ஆலோசனை செய்கிறது ஒருமுகம்
பாவ காரியங்களை சிந்தித்து
அந்த எண்ணங்கள் கொண்டது ஒருமுகம்
பூவை  சீதையின்
வெளி உருவத்தோடு ஒரு முகம் பொருந்துகிறது.

பாடல்-1095:

“காந்தள் மலர் போன்ற
மெல்லிய விரலைப் பெற்ற ஜானகியின்
கற்பு எனும் கடல் நீந்துதல் எவ்விதம்?” என
ஒரு முகம் நினைக்கிறது
சந்தனம் பூசிய கொங்கை மங்கையர்
இராவணனுக்கு கண்ணாடி காட்ட
அதில் தனது எழிலை நோக்குகிறது ஒருமுகம்.

பாடல்-1096:

மரச்செறிவில் இருக்கும் தேனை
பருக விரும்புகிறது வண்டு
மனம் வாடுகிறது
வேட்கையால்
செருக்கு துறக்கவும் முடியாத வண்டு
இராவணன் மனம் இப்படியிருக்க
இராவணன் மீது மோகம் கொண்ட பலவகை மகளிர்
மனம் கலங்குகினார்கள்
உடல் நலிந்தார்கள்
கொங்கை மீது கண்ணீர் விடுவார்கள்
இராவணன் இருபது தோள்கள் தாக்க
கண் அம்பு விடுவார்கள்.

பாடல்-1097:

தென்றல் இரு வித செயல்கள் செய்தது
மலர்களில் மகரந்தத் தேன் பருகி
மகளிர் அரும்புக் கொங்கைகள் பூசிய
சந்தனச் சேற்றிலே கலந்தது ஒரு செயல்
அதே நேரம்
இராவணன் உடலில் பகையுடன்
நஞ்சு போல் நுழைகிறது!

பாடல்-1098:

இராவணனும் இருவித செயல்கள் செய்தான்
பிறைச்சந்திரன் ஒளி நெற்றி மகளிர்
சிவந்த வரிகள் பெற்ற
கயல்மீன்  கண்கள் பெற்ற முகங்களுக்கு
தாமரை மலர்களுக்கு சூரியனாக ஆனான்
தாமரைப் போல்
கைகூப்பி வணங்கும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்
சந்திரனாகவும் ஆனான் .

பாடல்-1099:

எட்டுத்திசைகளுக்கும்
உரிமை பெற்ற இராவணனை
அனுமன் எதிரே கண்டான்
“அனுமனின் சினம் -
கருநாகம் கண்ட கருடனின் சினம்!
சிறந்த எனது தோளில் உள்ள
நாகபாசம் எனும் பிரம்மாஸ்திரம் சிதறச் செய்வேன்
நச்சு இராவணன் மீது இப்போதே பாய்வேன்” என
கோபம் கொண்டான்.

பாடல்-1100:

“முன்பு
இராவணன் உறங்கும்போது
கொல்வது குற்றம் எனவிட்டுவிட்டேன்
இப்போது
பொன் அரியாசனத்தில் இருப்பதை கண்டேன்
பலவகையாகச் சிந்திப்பது எதற்கு?
இராவணன் தலைகளைச் சிதறடிப்பேன்
அறத்தின் வடிவம் சீதையை மீட்பேன்
சீதையுடன் புறப்படுவேன்” எனவும் எண்ணினான்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment