Thursday, 13 March 2014

சுந்தரகாண்டம் 1051 - 1075


 
பாடல்-1051:

அனுமனுக்கோ களிப்பு தான்! ஆம்!
கூர் நெருப்பு ஒத்த ஆயுத வீரர்கள்
பெரும் யானைகள்
கொடி பறக்கும் தேர்கள் குதிரைகள்
மர வீச்சினால் உடைப்பட்ட மாளிகைகள் கூட்டம்
எல்லாமும் கண்டான் களித்தான்.

பாடல்-1052:

தன்னைத் துன்புறுத்தும் ஆயுத வரிசையை
எறும்புக்கூட்டம்
தன் மேல் ஏறுவதை அனுமதிக்கும்
பழைய மரம் போலிருந்தான்
அனுமனின் தோள்களை அருகில் முற்றிலும் காண
அரக்க மகளிரே அஞ்சுகிறார்கள்
பற்கள் நடுங்கி இதழ்கள் வருந்தின
வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடினர்
சிலர் மயக்கமும் அடைந்தனர்.

பாடல்-1053:

அனுமனை நேரில் காண அஞ்சி
ஆரவாரம் அடங்கிக் கிடந்தவர்கள் பலர்
அனுமன் செய்த அழிவுகளைச் சொல்கின்றவர் மிகப்பலர்
நேருக்கு நேரே பார்க்க அஞ்சி
சிதறி ஓடுகிறவர்களோ இன்னும் பலப்பலர்!

பாடல்-1054:

சில அரக்கர்கள்
மிகத் தெளிந்த கூரிய அறிவோடு பேசினர்
“இந்தக் குரங்கு சாமானியமல்ல
எரிக்கும் ஆற்றலும் கொடுமையும் கொண்ட
நச்சுப் பற்கள் கொண்ட நாகத்தினால் இவனைக் கட்டினோம்
இவன் முகமோ
பூமாலையால் கட்டியது போல் ஒளி விடுகிறது
ஆதலால் மிக கவனமுடன் இருக்கவும்!”

பாடல்-1055:

அரக்கர்களில்
ஞானமும் கலந்த நிலையுடன் சிலர்
நினைப்பு இப்படி இருந்தது
“அனுமனின் இந்த எளிய அடங்கிய நிலை
நாகபாசம் எனும் நாகக் கயிறால் நிகழவில்லை
இக்குரங்கின் எண்ணம் வேறு”
அது மட்டுமா?
“அனுமனே !
களிப்பு மிகு சிந்தையால் எம்மைக் காண்க
கோபிக்காதே” எனத் தொழ ஆரம்பித்தனர்.


பாடல்-1056:

பசும் பொன்னால் ஆன வீரக்கழல்
அனுமனின் கால்களில் கொண்ட அனுமனைக்
கட்டியிருந்தார்கள்  நாகபாசம் எனும் பாம்பினால்!
அனுமனை  இழுத்துச்செல்ல
கருடனைப் போல் மூன்று மடங்கு வலிமை பெற்ற
ஐம்பதாயிரம் அரக்கர்கள் தேவைப்பட்டனர்!

பாடல்-1057:

மிகுந்த ஆற்றல் மிகு அரக்கர் கர்வம் அடங்க
அழியாத தன் உருவை
அனுமன் வடிவம் கொண்டு
வந்திருக்கிறான் எமன் !” என்றனர் பலர்.

பாடல்-1058:

இழுத்துச் செல்லப்படும் அனுமனைக் காண
வரிசையாய் நிற்கிறார்கள்
வளையல் அணிந்த அரக்க மகளிர்!
கூட்டம் கூட்டமாய் ஆண்கள்
மாளிகை நிலா முற்றத்தில் நிற்கின்றார்கள்
பலகணிகளில்!
முரசு முழங்கும் வாசல்கள்
எல்லாவற்றிலும் ஏறி நிற்கிறார்கள்.


பாடல்-1059:

பலர் கூறியது இதுதான்
மயில் போன்ற சீதையின் கற்புச்சிறப்பினால்
கூரிய பற்கள் கொண்ட குரங்கின் வடிவு கொண்டு
இங்கே வந்திருப்பது
மழுவாயுதம் ஏந்தி வாழும்
கயிலை சிவபெருமான்தான்!”

பாடல்-1060:

தேவமகளிர்
வித்தியாதர நாட்டுப் பெண்கள்
யாழ் நரம்புகளைவிட 
இனிய பேச்சு கொண்டநாக நங்கையர்
கரும்பு போல் இனித்திடப்பாடும்
சித்தர் இனப் பெண்கள்
எண்ணிக்கைக்கு அளவேயில்லை!


பாடல்-1061:

“இது குரங்கே அல்ல
பெரும் சக்ராயுதம் கொண்ட பாற்கடல் பெருமாளும்
ஒப்பற்ற மலர்களின் மாலை அணிந்த பிரமனும்
கலந்து உண்டான உடல் கொண்ட அனுமனை
எவரால் வெல்ல முடியும்?” என்றனர் பலர்.

பாடல்-1062:
அப்போது
அரக்கர் அல்லாதவர் குழாமும்
அரக்கியர் அல்லாதவர் குழாமும்
தமது கண்ணீரை மறைக்காமல் சொரிந்தனர்
அப்படிப்பட்ட தேவர்களின் அழுகை
மணம் வீசும் கூந்தல் கொண்ட சீதையின்
துன்பம் எண்ணியதால் வந்த கண்ணீரோ!
அனுமனிடம் கொண்ட இரக்கமோ!
அறத்தின் வலிமை
இப்படி எளிமையாகிவிட்டதே என எண்ணியோ!

பாடல்-1063:

ஆண்மையாளன் அனுமன்
அவர்களோடே போனான்
மீளவில்லை
வேறு செயலும் விரும்பவில்லை
“தொடர்ந்து போவோம்
இலங்கை வேந்தனைக் காண்பதே நல்லது” என
கருத்தில் எண்ணினான்.

பாடல்-1064:

“என் தந்தை வாயுதேவன் அருளால்
இராமன் சேவடி தியானிக்கும் நலத்தால்
சீதை தந்த வரத்தால்
தேவர்கள் தந்த வரத்தால்
பிரம்மாஸ்திரம் எனும் நாக பாசமும் அறுப்பேன்
எனினும் அவ்வாறு செய்யக்கூடாது” என
தளர்ந்து இருந்தான் அனுமன்.

பாடல்-1065:

வளைந்த பற்கள் உடைய
அரக்கன் இராவணனை அடைவேன்
அவனுக்கு மந்திர ஆலோசனை தரும்
அளவற்ற முதியவர்களிடம்
நடக்கப்போகும் விளைவை நான் கூறும் போது
இராவணன் இளகுவான்
மிதிலைச் செல்வி சீதையை ஒப்படைப்பான்.

பாடல்-1066:

அது மட்டுமல்ல
இராவணன் துணைவர்களுக்கும்
நமது பலத்தின் எல்லை தெரிந்திருக்கும்
இராவணன் நிலையும் மனமும்
தெரிந்து கொள்ளவும் முடியும்
இராமனிடமிருந்து புறப்பட்ட என் முகமே
அவனுக்கு தூது சொல்லிவிடுமே.

பாடல்-1067:

கருநீல நிற இராவணன் நெஞ்சுக்கு
வாலியின் மரணம் தெரியும்
ஏழு மராமரங்களுக்கு உற்ற நிலை தெரியும்
கொடிய குரங்குப்படை வலிமை தெரியும்
சுக்ரீவன் வலிமையும் மேன்மையும் தெரியும்
அவன் நெஞ்சில் தைத்தவை தான் இவை,.

பாடல்-1068:

“ஆதலால்
அரக்கன் இராவணன் அடைவோம்
இராமபிரான் ஆற்றலும் நீதியும்
மனம் கொள்ளுமாறு நிறுவுவோம்
உணராவிடில்
மிச்சமிருக்கும் சேனைகளையும்
பாதிக்கு மேல் அழித்து
பையப் போய்விடுவோம்” என அனுமன் போனான்

பாடல்-1069:

இந்திரஜித் !
தேவர்களின் அரசன் இந்திரனை வென்றவன்
கடல் போல் படை சூழ
கட்டுண்ட காளை போன்ற வீரன் அனுமனை
கொற்றக்குடை பெற்ற இராவணன் அரண்மனைக்கு
கொண்டு போனான் இந்திரஜித்.


பாடல்-1070:

தூதுவர்கள் ஓடி வந்தனர்
இராவணனைத் தொழுதனர்
“மன்னா முன்பு தொல்லை தந்த குரங்கு
தாமரை மலர் பிரம்மன் அஸ்திரத்தால்
பிணிக்கப்பட்டது” என்றனர்.

பாடல்-1071:

அதைக் கேட்ட அடுத்த கணம்
இராவணன் நெஞ்சு
மகிழ்ச்சியால் நிமிர்ந்தது
ஒளி அற்ற வானம் என
இருள் விழுங்கிக் கிடக்கும் கறுத்த மார்பிலிருந்து
திசை யானைகளோடு மோதிய
மிகப்பெரிய முத்து மாலையைப்
பரிசாக நீட்டினான் இந்திரஜித்துக்கு.

பாடல்-1072:

அளவற்ற மகிழ்ச்சியால்
பூரித்தன தோள்கள்
கள் வடியும் பூக்கள் அவன் கரம் தழுவ
ஆணையிட்டான் இராவணன்
“விரைவாக ஓடுக! சொல்க! என் ஆணை!
கொல்லாமல் கொணர்க” என்றான்.

பாடல்-1073:

தூதர்கள் ஓடினர்
பகை என்பதே இல்லாமல் அழிந்த
இந்திரஜித் அறியச் செய்தனர்
இவர்கள் இங்கு உரைக்க
அங்கு
பழியற்ற அசோகவன சீதை நிலை சொல்வோம்.

பாடல்-1074:

“அனுமன் அசோகவனம் அழித்தான்
எண்ண முடியாத அளவுக்கு
பலரைக் கொன்றான்” என்ற போது மகிழ்ந்தாள் சீதை
இப்போதோ
உயிர் வெறுக்கின்றாள்
வீரன் அனுமனுக்கு உற்றதை
களங்கமில்லா திரிசடை
வருத்தமுடன் உரைத்தாள்.

பாடல்-1075:

புகையுண்ட ஓவியம் போல்
காணப்படுகிறாள் சீதை
ஒளிரும் பூவின் மேன்மை மிகு சீதை இப்போது
பாவி வேடனின் கையில் சிக்கிய
அன்னக்குஞ்சுக்காக வருந்துகிற
தாய் அன்னம் போல் வருந்திச் சொல்கிறாள்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment