பாடல்-1026:
வெற்றிக்கு உரியவன் அனுமன்
ஆயுதங்கள் அற்றாலும்
இராம ஆசியே அவன் ஆன்மா
ஆதலால் அவன் உடலில்பட்ட ஆயுதங்கள் யாவும்
அவனால் உதறமுடிந்தது
இந்திரஜித் தேரில் குதித்தான் அனுமன்
வல்லமையுள்ள வில்லைப்பறித்து
வானில் பறந்து முறித்தான்.
பாடல்-1027:
இந்திரஜித் சாமான்யன் அல்ல
அனுமன் முறித்த வில் ஓசை ஒலித்து அடங்குமுன்
மீண்டும் ஒரு ஆயுதம் எடுத்தான்
அதுஒளி மிகுந்த படைக்கருவி
மலைகளின் சிறகுகளையே அறுத்த இந்திரன்
விட்டுச் சென்ற வில் அது.
பாடல்-1028:
மாறாத வெஞ்சின இராவணன் மகன் இந்திரஜித்
நூறு நூறு அம்புகளாக
அனுமனின் நெடுமேனியில் பாய்ச்சுகிறான்
இராம சேவகன் இராமதூதன்
சிறிது தளர்ந்தான்.
பாடல்-1029:
இதனைக்கண்டு
தேவர்கள் தளர்வுற அறிவுமயங்க
ஆதரவான அனுமன் தளர்ச்சி நீங்கினான்
பிறர் அன்பும் ஆதரவு முகமும்
தனக்கும் அவசியம் என அனுமன் புரிய வைத்தான் நமக்கு!
தேவர்கள் மனம் உயிர்ப்புற்றனர்
அழகிய கைகளால் மரம் பறித்தான் அனுமன்
இந்திரஜித் பாய்ச்சிய அம்புகள் வரிசையை
மரத்தால் ஒடித்தான்
மணி மகுடம் பதித்த இந்திரஜித் தலையில்
மரத்தால் அடித்தான் அனுமன்.
பாடல்-1030:
தேவர்களையே வென்ற இந்திரஜித்
வலியதும் பெரியதுமான மரத்தினால் பட்ட அடியால்
மகுட மாணிக்கங்கள் ஒளிக்கற்றைகள்
கீழே சிதறக் கதறினான்
மலை அருவி போல
கொழும் குருதி வர உடல் சோர்ந்தான்.
பாடல்-1031:
சிறிது நேரம் தான்!
திகைப்பு சிறிது நேரம்தான்
பிறைச்சந்திரன் போல் வளைந்த பற்களைக்கடித்து
மறுபடி எழுகிறான் இந்திரஜித்
தேவர்கள் திகைக்க அசுரர்கள் திகைக்க
ஆயிரம் அம்புகளை எய்கிறான் அனுமன் மேல்!
பாடல்-1032:
இந்திரஜித் விடுகின்ற அம்புகள் பாய்ந்தன
மார்பிலும் கரத்திலும் அனுமனைத்தாக்கின
வெறுத்துப்போன சிந்தையோடு அனுமன்
அதிகபட்ச கோபமுடன்
வில்வித்தகன் இராமனின் அம்பைவிடவும் வேகத்தோடு விரைந்து
இந்திரஜித்தை
தேரொடும் வேரொடும் பிடுங்கி வீசி
வானில் எறிந்தான் ! ஆரவாரம் செய்தான்.
பாடல்-1033:
மேலே சென்ற கண் இமை
கீழே வந்து கூடுவதன் முன்
அளவிட முடியாத வலிமையுடைய இந்திரஜித்
தேரோடு வானம் சென்றான்
புண்ணின் மீது வழியும் குருதியுடன்
பசும் புலால் நாற்றமுடன்
மண்ணில் வந்து விழுந்தான்.
பாடல்-1034:
வான் வரை வீசி எறியப்பட்டவன்
பூமியை அடையும் முன்
பெரு வடிவு கொண்ட அனுமன்
மணிக்கூட்டம் கொண்ட தேர்கள் முழுதும்
உளுந்து உருளும் நேரத்துக்குள்
சிதைத்துவிட்டான்.
பாடல்-1035:
ஏறிச் செல்ல தேரும் இல்லை இந்திரஜித்துக்கு
மீண்டும் அனுமனுடன் போரிட வலிமை இல்லை
கொடும் கோபம் மட்டும் இருந்தது
நெருப்பு போல வானில் திரிந்தான்
செய்ய எச்செயலும் இல்லாமல்
பிரம்மதேவன் பிரம்மாஸ்திரத்தை
அனுமன் மேல் எறிந்தான்.
பாடல்-1036:
அனுமனை வீழ்த்திடும் ஆசைக்கு மட்டுமே
வலிமையுள்ள இந்திரஜித்
அரை நொடிக்குள் மானசீக பூஜை செய்கிறான்
அந்த பிரம்ம அஸ்திரத்துக்கு!
மலர்களால் ஒன்று
மலர் போன்ற வெண்சோற்றால் ஒன்று
தீப ஆராதனையால் ஒன்று
நறுமணப்புகையால் ஒன்று
பிறகு
உலகம் படைத்த நான்முகன் அஸ்திரத்தை
கையில் எடுக்கிறான்!
பாடல்-1037:
வெற்றி உடைய வில் அது
நாண் ஏற்றினான்
அனுமனது தோளுக்கு குறி வைத்தான்
பூமி நடுங்க
திசைகள் நடுங்க
சந்திரன் தோய்ந்த விண் நடுங்கிட
வில் செலுத்துகிறான் இந்திரஜித்.
பாடல்-1038:
பிரம்மாஸ்திரம்
எவராலும் அடக்கமுடியாதது
பாம்புக்கூட்டங்களின் அரசன் வடிவம் கொண்டு
அச்சம் தரும் விழிகளுடன் பாய்கிறது பிரம்மாஸ்திர அம்பு
கருடனுக்கும்
நடுக்கம் தரும் விதமாக பாயும் அஸ்திரம்
பெரிய அனுமனின் தோள்களை இறுக்கிற்று.
பாடல்-1039:
அனுமனின் உறுதி வாய்ந்த உடலை
பிரம்மாஸ்திரம் கட்டிவிட்டது
அனுமன் கீழே விழுந்து சாய்ந்தான்
ஊழி இறுதியில்
சந்திரன் -
மற்ற கோள்களுடன் விழுவது போல!
அறக்கடவுள் கண்ணீர் சிந்திட
அனுமன் வீழ்ந்து கிடக்கின்றான்.
பாடல்-1040:
கீழே விழுந்தது
அனுமன் மட்டுமே
அனுமனது ஞானம் அல்ல
அதனால்
“பிரம்ம அஸ்திரத்தை அவமதித்து
அகன்று போகக்கூடாது” என எண்ணி
கட்டுப்பட்டு கண்மூடி இருந்தான் அனுமன்
அரக்கன் இந்திரஜித் -
“இவன் வலிமை ஓய்ந்தது!” என அருகில் வந்தான்.
பாடல்-1041:
பதுங்கிய மற்ற அரக்கர்களும் வந்தனர்
வாள் பற்கள் கொண்ட அரக்கர்களும் பலர்
அனுமனைச் சூழ்ந்தனர்
பிரம்மாஸ்திரமாகிய
துவாரம் கொண்ட பற்கள் பெற்ற பாம்பை இழுத்தார்கள்
அனுமனை அதட்டினார்கள்
பலரும் ஆர்ப்பரித்தார்கள்.
பாடல்-1042:
இலங்கை நகரமே
பெரு முழக்கம் செய்கிறது!
இலங்கை இப்போது அலைகடலாகவும்
அனுமன் இப்போது மந்திரமலையாகவும்
பாம்பு அம்பாகிய பிரம்மாஸ்திரம்
வாசுகி பாம்புக்குச் சமமாகவும் தெரிகிறது!
அதைப் பிடித்து இழுக்கும் தேவர் கூட்டம்
அரக்கர்கள் போல உள்ளது!
பாடல்-1043:
கரு நிறமான பிரம்மாஸ்திரப் பாம்பு
பொன்நிற அனுமனின் உடலை கட்டியது
ஒளி பொருந்திய ஆதிசேஷன் எனும் பாம்பினால்
மேருமலை சுற்றப்பட்டது போல இருக்கிறது
அறக்கடவுளுக்கு அனுமன் ஒருவனே துணை என நின்ற
அனுமனும் வீழ்ந்துவிட்டான்
இலங்கையில் இனி என்ன நடக்குமோ!
பாடல்-1044:
வெற்றி குதூகலிப்பால்
அரக்க ஆடவர் ஒலியும்
அரக்க மகளிர் ஒலியும்
வானை மோதியது
எத்திசையும் பரவியது
மேகம் மோதியது போல முழக்கம் எழுப்பினார்கள்
அந்த மகிழ்ச்சிக்கு சமம் எதுவெனில்
இந்திரனை
இந்திரஜித் சிறை செய்த போது
பெற்ற மகிழ்ச்சிக்கு சமம்!
(பாசப்படலம் முற்றியது.)
13. பிணி வீட்டுப் படலம்
பாடல்-1045:
கட்டுண்ட அனுமனை நோக்கி
அரக்கர்கள் நிலை பலவிதம்
“அம்பினால் எய்க !
வாளால் வெட்டுக !
ஈட்டியால் குத்துக
கோடலியால் பிளந்து
கூறு கூறாக்குக
மண்ணில் தேய்த்து த்¢ன்னுக
இந்த குரங்கின் உயிரை விட்டு வைத்தால்
நமக்கு உயிர் இல்லை!” என பலப்பல குரல்கள்!
பாடல்-1046:
அனுமனைச் சுற்றியிருக்கின்றார்கள்
மைதீட்டிய கண் கொண்ட மகளிரும் - மைந்தரும்
எல்லோரும் கோபமுற்றார்கள்
கனன்றார்கள்
“இத்தனை நேரம் இந்த குரங்குப்பயலை
விட்டு வைக்கலாமா?” என்றார்கள்
கொல்லவும் மொய்த்தார்கள் சிலர்!
பாடல்-1047:
“நஞ்சு ஆயுதங்களால் சாகின்ற
சாதாரண குரங்கல்ல இது
அலைகடலில் தள்ளி
உச்சம் தலையை அழுத்த வேண்டும்
வச்சிர உடல் குரங்கை நெருப்பில் இட வேண்டும்”
என்றும் சிலர் கூறினர்.
பாடல்-1048:
நீ கொன்ற
என் தந்தையைக் கொடு
என் தம்பியைக் கொடு
பிறகு நீ போகலாம்” என அனுமனைத் தடுத்தனர்
தேவர்களே இதன் காரணம் ஆதலால்
தேவர்களைக் கொல்வோம் என
மறுகினார்கள் பலர்.
பாடல்-1049:
இது வரை பிரியாத
மலை போல வலிமை கொண்ட கணவரை
இவனால் இழந்தோம்
வருத்தம் தீர அனுமன் தலை மீது ஏறி
எம் திருமங்கலம் நீக்குவோம்” என
அழுகின்றார்கள் பல மாதர்கள்.
பாடல்-1050:
அனுமனை இழுத்துச் செல்கிறார்கள்
வேடிக்கை பார்க்கிறது இலங்கை மக்கள் கூட்டம்
அதிகமாக ஆர்ப்பரிக்கிறது
ஆர்ப்பாட்ட ஒலி உலகம் முழுதும் பரவுகிறது
கழுத்து அறுபட்டு கணவர்களை இழந்திட்ட
குண்டலம் தரித்த மகளிருக்கு
அந்த ஒலி ஆறுதலாகிறது.
-அனுமனோடு மீட்போம்.

No comments:
Post a Comment