பாடல்-1001:
நீர்த்தன்மை கொண்ட இரத்த வெள்ளம்
அதனால் பேரலைகள் கொண்டது கடல்!
கடலில் மட்டும் நீந்தவில்லை இந்திரஜித்
பிணக்குவியலிலும் நீந்தியும் இடறியும் செல்கின்றான்
தேய்க்கப்பட்டு இறந்து கிடக்கிறது தம்பி உடல்
கோபத்தால் சிவப்பு உண்ட கண்களுடன்
தீயில் காய்ச்சிய செம்பு போலாகிய கண்களுடன்
மனதில் சோகக் கறுப்புடன் காண்கிறான் இந்திரஜித்.
பாடல்-1002:
தாருகாசுரன் இரத்தக் குருதியில்
தம்பியின் உடல் கிடந்தது
ஒப்பற்ற நரசிங்கம் கூர் நகத்தால் பிளந்த
இரணியன் உடல் குழம்பிக் கிடப்பதுபோல!
தம்பியைக் கண்டதும் தேர் நின்றது
வீரத்தின் வில் நழுவி விழுந்தது
கண்ணீர், இரத்தம், நெருப்புப்பொறி
மூன்றும் ஒன்றாகச் சிந்தின இந்திரஜித் கண்கள்!
பாடல்-1003:
என் ஐயாவே!
இலை வடிவ கூரிய வேல் கொண்ட
உன் தந்தை சினம் நினைத்தால்
உன் உயிர் வாங்க எமனும் அஞ்சுவானே!
வேறு வேறு உலகினரும் அஞ்சுவரே!
எம்மை விட்டு எளிதில் எந்த உலகம் அடைந்தாய்!
என் அப்பனே!
பாடல்-1004:
இந்திரஜித்
ஆற்ற முடியாத துன்பத்தினன் ஆனான்
அன்பின் மிகுதியால் அறிவு அழிந்தது
அயர ஆரம்பிக்கும் வேளையில்
சினம் என்ற ஒன்று
தானே மேல் நிமிர்ந்து ஓங்கியது
துன்ப நோயை உள்ளடங்கச் செய்த அந்தக் கோபம்
எதற்கு சமம் எனில்
உள்ளே போன முதல் ஆணியின் மேல்
அடித்துத் தைக்கப்பட்ட
இரண்டாம் ஆணி போல இருந்தது.
பாடல்-1005:
சூரியனால்
விரைவாகச் செலுத்தப்படும் தேர் போல
இந்திரஜித் அனுமனைத் தாக்கிட வருகின்றான்
முப்புரம் அழிக்க முற்படும் சிவனைப் போல
வீரக்கழல் அணிந்த ஆண்மை பெற்ற அனுமன்
கோபமுடன் பார்த்தான்.
பாடல்-1006:
அனுமன் சொல்கின்றான்:-
“இதன் முன்பு சில வீரர்களை வென்றேன் எனும்
உண்மைதான் இவனை விரைவாக
இங்கு வரவழைத்தது! அம்மா!
அடுத்து நடப்பது
வெல்லுதல் தோற்றல் இரண்டில் ஒன்றே!
அதுவும் இன்றை சமைந்துவிடும்
இவன் இந்திரஜித்! ஆம்! இவன் இந்திரஜித்!”
பாடல்-1007:
மணம் வீசும் மாலை
கட்டப்பட்ட மாலை அணிந்த வீரன்
காளை இந்திரஜித் என் கைகளால் இறந்தால்
அதுவே இராவணனுக்குப் புரிந்துவிடும்
“கெட்டுவிடுவோம்” என எண்ணுவான்
கற்புக்கரசி சீதையை விட்டு விடுவான்
அது மட்டுமல்ல
அரக்கரும் சினம் தீர்வார்கள்
அமைதி பெறுவார்கள்.
பாடல்-1008:
இந்திரஜித் கொல்லப்பட்டால்
ஒரே ஒரு நன்மை மட்டுமா கிடைக்கும்?
பலப்பல!
ஒளி பொருந்திய அவன் இறப்பு -
இந்திரனுக்கு துன்ப விடுதலை தருமே
இலங்கையின் காவல் அழியுமே
இராவணனையும் வேரொடு வென்றவன் ஆவேனே.
பாடல்-1009:
அனுமான் நினைக்கும் அக்கணத்தில்
மூன்று உலகமும் வென்ற இந்திரஜித்
யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை மற்றும்
குதிரைப்படைகளோடு களத்தில் புகுகின்றான்
ஆரவாரிக்கின்றன படைகள்
அனுமன் வெகுண்டான் சினமானான்
பெரும் உரு எடுத்து
ஒரு பெரும் மரத்தை எடுத்துக் கொண்டான்.
பாடல்-1010:
யானைக்களிறின் வதம் ஆரம்பம்!
அனுமனால் சில யானைகள் உதை உண்டன
சில யானைகள் உதைப்பட்டு உருண்டன
இது மட்டுமா?
சில யானைகள் மிதிபட்டன
சில கீழே விழுந்தன
சில யானைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி
மண்ணில் புதைபட்டன
போரினால் சில யானைகள் வதைபட்டன
மண்ணில் விழுந்தும் சில மரணமாயின.
பாடல்-1011:
தேர்க்கூட்டங்கள் வதம் ஆரம்பம் !
அனுமனால்
சில தேர்க்கூட்டங்கள் முறிந்து விட்டன
சில இடிந்து சரிந்தன
சில அச்சு முறிந்து சிதைந்தன
சில பொடிப்பொடியாகின
சில நெருங்கி நொறுங்கின
சில மண்ணில் சாய்ந்தன.
பாடல்-1012:
குதிரைப்படைகள் வதம் ஆரம்பம்!
அனுமனின் தாக்குதலால்
குதிரைகளின் தலை நொறுங்கின
கருவிழிகள் சிதைந்தன
வலிமையான கால்கள் முறிந்தன
முதுகுகள் ஒடிந்தன
கிண்கிணி மாலைகளோடு மார்புகள் உடைந்தன
ஒரே நேரத்தில் பல இடங்களில் இரத்தங்களாயின
ஒளி விடும் பொன் குளம்புகள் நொறுங்கின
வளைந்த கழுத்துகள் ஒடிந்தது ஒடிந்ததுதான்!
பாடல்-1013:
அனுமன் வீரத்தாக்குதலால்
அரக்கர்கள் கொண்ட காலாட்ப்படை
வதை பட ஆரம்பிக்கிறது
பிடிக்கப்பட்டவர்கள் பலர் பிளக்கப்பட்டார்கள்
இன்னும் பலர் பெரும் தோள்கள் முறிந்தனர்
இன்னும் பலர் தலை உடைந்தார்கள்
உடலில் அடிபட்டவர்கள் கழுத்தினை இழந்தார்கள்
கரத்தினால் அடிபட்டவர்களும்
அச்சப்பட்டவர்களும் எண்ண இயலாதவர்கள்!
பாடல்-1014:
அரக்கர்களின் அம்புத் திறம் சொல்ல எளிதோ!
வட்டமாக வளைந்த கொடிய வ்¢ல் அம்புகள்
வலிமையான ஆயுதப்படைகள்
வீரன் அனுமன் மேல் வீழ்ந்தன! ஒன்றும் பலனில்லை!
பழுக்கக் காய்ச்சிய இரும்பு
பட்டடைக்கல்லை சுட முடியாது போல செயலிழந்தன !
பாடல்-1015:
கோபமான
அரக்கர் சேனையின் சுடர் மிகு அம்புகள்
அனுமனின் உடலில் பட்டாலும்
அனுமனின் உடல் வெப்பம் தாளாமல்
அம்புகள் புகையுடன் சரிந்து வீழ்ந்தன
தேவர்களின் உள் மனங்களோ
மகிழ்ந்து புன்னகை பூத்தன.
பாடல்-1016:
தேர்கள் அழிய
யானைகள் அழிய
குதிரைகள் அரக்கர்கள் அழிய
அனைத்தும் வதைத்து கொன்ற பின்
“வாருங்கள்! வாருங்கள்!” எனப் போருக்கு
அழைக்கின்றான் அனுமன்
பருத்த தோள்களுடன் கோபப்புன்னகையுடன்
போரிட வருகின்றான் இந்திரஜித்.
பாடல்-1017:
இந்திரஜித் தனது கொடிய வில்லில்
நாண் தெறிக்க எழுப்பும் ஒலியால்
இந்திரன் தலையே அஞ்சியது நடுங்கியது
வான் மேகங்களின் இடித்தொகுதிகள் நடுங்கின
நிரந்தரமாய் பூமி தாங்கும் ஆதிசேஷனின்
ஆயிரம் தலைகளும் நடுங்கின.
பாடல்-1018:
எல்லா உயிர்களும் ஆளுகின்ற
இராமதூதன் அனுமன் பலம் சும்மாவா?
அனுமன் தன் அழகிய தோள்களைத் தட்டும்போது
அண்டம் பிளந்த ஒலி கேட்கிறது
மலைகள் பொடிபடும் ஒலி கேட்கிறது
நீண்ட நிலம் பிளக்கும் ஒலி கேட்கிறது
இந்திரஜித் வில்நாண் அலறும் ஒலியும் கேட்கிறது!
பாடல்-1019:
இந்திரஜித் உரைத்தவை இவை:
“அனுமனே நீ மிக நல்லவன்
இவ்வுலகில் உன்னை ஒத்தவர்கள் யாரும் இல்லை
மாறுபட்டு போரிட மிகவும் வல்லவன் நீ
நீ கொண்ட வாழ்நாட்களின் எல்லை இன்று காண்பாய்
வா போருக்கு!”
பாடல்-1020:
அனுமன் உரைத்தான் இப்படி:
“கொடியவர்களே
உலகை உறுத்தும் உங்கள்
வாழ்நாளுக்கு எல்லை உண்டு
கொடிய செயல்களுக்கு எல்லை உண்டு
வாளுக்கு முடிவு உண்டு
என் தோள்பலத்துக்கும் வலிமைக்கும்
எல்லை ஒன்று இல்லை
வா போருக்கு!”
பாடல்-1021:
பகைஞன் இந்திரஜித்
“அனுமனே !
உன் நம்பிக்கையைத் தொலைப்பேன்” எனகர்ஜித்தான்
வச்சிராயுதம் காட்டிலும் வலிதான
கூர்மையான அம்புகள் எய்தான்
அனுமனின் தலையிலும் மார்பிலும்
பச்சை இரத்தம் வெளிப்பட்டு ஒழுகியது
தேவர்கள் துடித்தனர்.
பாடல்-1022:
நெடும் சினம் கொண்டான் அனுமன்
தன் உருவை
வானம் வரை உயர்ந்ததும்
அதையும் தாண்டி
அதிகரித்தான்
அந்த உயரமும் நிமிர்வும்
எதுவரை இருந்தது?
தன் சிற்றன்னை கைகேயி திருமொழி
தலையிலே தாங்கி
உலகம் முழுதும் பரதனுக்கே தந்து
நல்நெறி நின்ற இராமபிரான் புகழ்
நிமிர்வதற்குச் சமமாக இருந்தது.
பாடல்-1023:
இந்திரன் !
விரிந்த வானம் உள்ளிட்ட
பத்து திசைகளும் கொண்ட
அளவற்ற உலகின் தனித்தலைவன்!
அவனது பருத்த தோள்களையே கட்டியவன் இந்திரஜித்
மேகநாதன் எனும் சிறப்பு பெயர் பெற்ற இந்திரஜித்!
அப்படிப்பட்ட இந்திரஜித் இன்று
“அனுமனின் ஒரு பகுதி மட்டும் தானே
காணமுடிகிறது! என்று
திகைப்புற்றான் வியப்புற்றான்!
பாடல்-1024:
வான உயரம் தாண்டி
இராமன் புகழ் போல் உயர் அனுமன்
இந்திரஜித் வீசிய கொடிய அம்புகளை வாங்கி
அரக்கன் மீதே வீசினான்
வலிமை மிகு தேரில் பூட்டப்பட்ட பேய்களையும்
தேர்ப்பாகனையும்
நிலத்தில் விழுந்து இறக்குமாறு
அடித்து நொறுக்கினான்.
பாடல்-1025:
தேர் இழந்த அடுத்த கணம்
ஊழிக்காற்று போல செல்லும்
குதிரைகள் கொண்ட தேருடன்
ஒரு பாகன் உதவியோடு
இந்திரஜித் பாய்ந்து ஏறினான்
சக்ராயுதங்கள் போன்ற அளவற்ற அம்புகள் பாய்வதால்
மாருதி மேனி எங்கே என்றே தெரியவில்லை
அவ்வளவு அம்புகள்!
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment