Thursday, 13 February 2014

சுந்தர காண்டம்951 - 975






பாடல்-951: 

“இந்திரஜித் அல்லது இராவணன் !
இருவரில் ஒருவனே இவன்
நான் முன்பு செய்த புண்ணியம் இது
என் அரசன் சுக்ரீவனின் தவப்பயன் இது
நானும் தயார்
வந்திருப்பவன் உயிர் வாங்க எமனும் தயார்
நினைத்தது விரைவாக முடிப்பேன்!”

பாடல்-952:

பத்து தலை இராவணன் இவன் அல்ல
ஆயிரம் கண்கள்  உடைய இந்திரனைக் வென்ற
இந்திரஜித் இவன் அல்ல
இவன்  வடிவில் எந்தக் குற்றமும் இல்லை
புகழ் மிக்க முருகனும் இல்லை
ஆராய்ந்தால்
மூவருக்கும் மேம்பட்டவன் அப்படியெனில் -
நீலமலை போல் நிற்கும் இவன் யாரோ!

பாடல்-953:

விண் வரை உயர்ந்த இந்திரவில் போல
காணப்படுகிற தோரணவாசலின் உச்சியில்
வீற்றிருக்கின்ற அனுமனைப் பார்த்தான் அக்ககுமாரன்
பற்கள் தெரிய சிரித்தான்
“அரக்கர் கூட்டத்தைக் கொன்றது
இந்த  குரங்கு தானாம்!” என்றான்
ஏளன உச்சியில் ஏறி நின்ற அக்ககுமாரன்.

பாடல்-954:

ஏளனச் சொல் கேட்ட
அக்ககுமாரன் தேரோட்டி உணர்த்தினான்
“ஐயனே! கேளுங்களேன் என் சொல்லை
உலகியலில் இதுதான் நிஜம் என ஏதும் உண்டோ?
இகழாதீர்கள் எதையும்
நம் மன்னன் இராவணனை எதிர்த்து வென்ற
வாலியும் ஒரு குரங்குதான் என்பதை நினைவு கொள்க
மற்றது சொல்ல வேண்டுமோ
போருக்கு முன் இதை நன்கு யோசிக்கவும்”

பாடல்-955:

நஞ்சினால் செய்த வடிவம் போன்ற
அக்ககுமாரன் பதில் இது:-
“இத்தனை அழிவு செய்த இக்குரங்கு அழிப்பேன்
அழித்த பின்னும் எஞ்சியிருக்கப்போகும் என் கோபத்தால்
மூன்று உலகமும் நுணுகி நுணுகித் தேடுவேன்
வெளியில் உள்ள உலவும் குரங்குகள் மட்டுமல்ல
கருவில் உள்ள குரங்குகளும் அழிப்பேன்”

பாடல்-956:

அஞ்சனை மைந்தன்
மலை போன்ற அனுமன் மேல்
பருவ கால மழை போல
அக்ககுமாரன் ஆயுதங்கள் பொழிந்தான்!
தேவர்கள் அச்சத்தால் உடல் வேர்க்க
வெற்றி மாலை கொண்ட அனுமன்
தானும்
தனது தனிமையுமாக சேர்த்து
படைகளை எதிர்த்தான்.

பாடல்-957:

அரக்கர் படைகள்
கருவிகளை எறிய
அனுமன் உடம்பில் மோதி முறிந்தன
அனுமன் போரினால்
யானைகள் இறந்தன
தேர்கள் சிதைந்தன
குதிரைகள் கூட்டம் வலிமை இழந்து வீழ்ந்தன.

பாடல்-958:

அனுமனின் போர் வேகம்
பற்றியெறியும் நெருப்பு
காய்ந்த புல் தொகுதியில் பற்றியது போல் உள்ளது
“ஏய்!” எனும் ஓசை புறப்படும் முன்
போரிட வந்தவர்களின் உயிர்கள்
தென்திசையில் உள்ள எமலோகம் சென்று வீழ்ந்தன
இந்தச் செயல் முடிக்க
எமனுக்கு ஆயிரம் கோடி தூதர்கள் இருந்தால்
அது வியப்பு தான்!

பாடல்-959:

அனுமனின் பலம் அதிகம் அதிகம்
உலகம் அழியும் கடைசி காலத்தில்
எரித்திடும் சூரியனின் வெப்பம் போல
எதிரிகளை எரிக்கிறான் அனுமன்
அதனால்
போருக்கு முன்பே வந்தவர்களும்
வருகின்றவர்களும்
வந்து கொண்டிருப்பவர்களும்
எலும்பில்லாத புழுக்களுக்கு சமம் ஆயினர்!

பாடல்-960:

ஐம்புலன்கள் வென்ற அனுமன்
இரத்த வெள்ளம் செய்கின்றபோது
முகபடாம் கொண்ட யானைகள்  குதிரைகள்
இரத்தச் சேறாவதும் தப்பவில்லை
“சுறாமீன்கள் நிறைந்த கடல் எனும்
அரண் அழிந்துவிட்டது
இலங்கை உயிர்கள் அழ்¢ந்தன
எமன் கொள்கை இது” என
பார்த்தவர்கள் கூறும் அளவுக்கு அனுமன் போரிட்டான்.

பாடல்-961:

நேரே போரிட்டார்கள் இறந்தனர்
தனியே தப்பி உயிரோடு நின்றவர்கள்
தம் உடலில் உயிர் நிற்காமல் தவித்தனர்
“தேர்களே அதிகமாக அழிந்தன” என்றனர் சிலர்
“காலாட்படை மனிதர்களே அதிகம் இறந்தனர்” என்றனர் சிலர்
யானைகளே அதிகம் என்றவரும் உண்டு.

பாடல்-962:

அலை மோதுகின்றது அரக்கர் சேனை
அதில் இருக்கின்ற வலிமை வீரர்கள் தொகுப்பு
அகன்றவாய் கொண்ட பானைத்தயிர் போலவும்
அவர்களைக் கடையும் மத்து போலவும்
அனுமன் இருந்தான்!
அரக்கவீரர்கள்
ஊழிக்கால வெள்ளம் என இருந்தாலோ
அதனை உறிஞ்சி அழிக்கும்
வடவாமுக அக்னி எனும்
ஊழித் தீயானான் அனுமன்.

பாடல்-963:

அரக்கர் கூட்டங்களை
உடனுக்குடன் அனுமன் கொல்வதால்
இரத்தப் பேராறுகள் பெருகியபடியே உள்ளன
மிஞ்சியவர்கள்
இரத்த ஆறில் ஓடித் தப்பித்துவிட்டனர்
அக்ககுமாரன் மட்டுமே நின்றான்
கண்களில் தீப்பொறியுடன் அம்புகள் செலுத்த
அனுமன் தன்னந்தனியாக நிற்கின்றான்
சூரியன் எனும் ஒற்றைச் சக்கரத்தேர் போல
பெருமை மிக்க தேருடன்
அனுமனை எதிர்க்கின்றான் அக்ககுமாரன்.

பாடல்-964:

ஒரே நாளில் பல உயிர்கள் உண்ணும்
அனுமனுக்கு எதிரே இந்திரசித்துக்கு இளையவன்
அக்ககுமாரன் நிற்கின்றான்
தேவர்களுக்கு மனம் கசிவுற்றது
“மாருதி நிலை என்னாகுமோ” என்றனர்
இமையாத விழி நமக்கு இருப்பதால்
அதனால் விழி மூடாமல் பார்க்க முடிகிறது
என மகிழவும் செய்தனர்
பிரியாமல் போரிடும் இருவரையும்
எதிர் எதிர்பக்கம் நின்று கூடினர்
வேடிக்கை பார்க்க!

பாடல்-965:

அக்ககுமாரன் எய்தான் அம்புகள்
நெருப்பு உமிழும் பதினான்கு அம்புகள்
அனுமன் மீது பொழிந்தன
பொடியாய் உதிரச் செய்தான் அனுமன்
இரும்புத்தடி ஒன்றினால்!
அதனால் சீற்றமாகி
இன்னும் கொடுமை மிகு பல அம்புகள்
ஒரு படையாக செலுத்தினான் அக்ககுமாரன்
அவற்றுக்கு எதிராக
கைகளே படையாக எதிர்தாக்குதல் செய்தான் அனுமன்
பாய்கின்ற அவன் தேர் மேல் பாய்ந்தான் அனுமன்.

பாடல்-966:

தேரில் சென்று பாய்ந்து
கோல் கொள்வான் ஆகிய சாரதியின் உயிர் தின்றான்
தேர் தரையில் உருண்டது
இதற்குள்  அக்ககுமாரன் அம்புகள் சில
அனுமன் மார்பில் நுழைந்துசென்றன
பல அம்புகள் அனுமன் தோளில்
எந்த இடம் என அறியாமல் மறைந்தன
அனுமன்
அக்ககுமாரன் வில்லையே
இப்போது பிடித்துக் கொண்டு எதிரே நிற்கின்றான்!

பாடல்-967:

அனுமனின் ஒரு கரம்
அவனது வயிரம் வாய்ந்த வில்லைப் பற்றியது
அக்ககுமாரன் இரு கைகளால் எதிர்க்க
அந்த வில் இற்று ஒடிந்தது
அனுமனின் அழகிய தோளை
வாளை உருவிக் குத்துகின்றான் அக்ககுமாரன்
இராமனின் சொல் கொண்டு வரும் தூதன் முன்
அவை என்ன ஆகும்?
முறித்தான் பொடிப்பொடியாகக் உதிர்த்தான்.

பாடல்-968:

வீரன் அக்ககுமாரனின் வாள் பொடியாகி
உதிர்வதற்கு முன்பு
மீண்டும் அனுமனின் தோளைத் தழுவிட முனைந்தான்
அனுமனின் மயிர்கள் யாவும்
வேல்களாகி தைத்தன
அக்ககுமாரனை நிமிர விடாமல்
அனுமனின் நீண்டவால் சுற்றியது பற்றியது
அக்ககுமாரன் மேல் ஏறினான் அனுமன்.

பாடல்-969:

வாலினால் பற்றிக் கொண்ட அனுமன்
கையினால் அறைந்தான் அக்ககுமாரனை!
கன்னத்தில் அறைந்த அறையில்
வாள் போல் ஒளிரும் பற்கள் உதிர்ந்தன
குண்டல ஆபரணங்களிலிருந்த மணிகள் முழுதும்
மேகத்திலிருந்து வெளிவரும் மின்னல் போல் வெளியேறின
வெற்றி மிக்க அவன் பிடரி
அனுமனின் ஒரே கரத்தில் குத்துப்பட்டது
அவனைத் தாண்டிவிட்டான் அனுமன்.

பாடல்-970:

ஊழிக்காலத்தின் இறுதியில்
ஏழு உலகமும் அழிந்தாலும்
தன் புகழ் அணுவளவும் தேயாத அனுமன்
இப்போது அக்ககுமாரனை அரைக்கப் போகிறான்
அரைக்கும்போது தெளிக்கும் நீர்
அங்கு ஓடும் இரத்த ஆறு!
அம்மிக்கல் எது ?
போர்க்களம்!
அரைப்பதற்கான உப்பிய அரிசி -
அக்ககுமாரன் எலும்புகள்!
அம்மிக்குழவி -
அக்ககுமாரன்!
வயிரம் பாய்ந்த கைகளினால்
விண்ணுலகம் மண்ணுலகம் காண
அம்மிக்குழவியை
அம்மிக்கல்லில்
தேய்த்து அரைக்கிறான் அனுமன்!

பாடல்-971:

ஒவ்வொருவரின் பயமும்
ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டது
இரத்த வெள்ளத்தில் ஒளிகிறார்கள் சிலர்
பேய்களின் செல்வமாம் பிணக்குவியலில்
புகுந்து சில ஒளிகின்றனர்
பயத்தால் இறந்தனர் சிலர்
திசை தெரியாமல் சிலர் கலங்கி நடந்தனர்
சிலர் ஓடிய திசைகளையே
இன்னும் சிலரும் தேர்வு செய்து
ஆயுதம் கீழே போட்டு ஓடுகிறார்கள்!

பாடல்-972:

பயத்தின் உச்சியில்
சிலர் வடிவங்களும் மாறின
மீனாகி கடலில் புகுந்தவர் சிலர்
பசு வடிவமாகி மேயத் தொடங்கினர் சிலர்
அந்தணர் வடிவமாயினர் சிலர்
மான்விழி மங்கையாகி கூந்தல் விரிய
அனுமன் எதிரே நின்றனர் சிலர்
“ஐயனே நாங்கள் உன் அடைக்கலம்” என்றனர் சிலர்
காவல் கடவுள் திருமாலின் பெயரை உச்சரித்தனர் சிலர்

பாடல்-973:

பய உச்சியில் இன்னும் சிலர்
என்ன செய்வதெனத் தெரியாமல்
ஏதேதோ செய்தனர்
அனுமன் மீது கொண்ட அச்சத்தால் சிலர்
தமது மனைவியைப் பார்த்ததும் கூட
“நாங்கள் உமது உறவினர் அல்ல
இந்தப் போரினை காண வந்த தேவர்கள்” என்றார்கள்
சிலர்
“நாங்கள் மனிதர்கள்” என்று கூற ஆரம்பித்தனர்
மந்தார மரச்சோலையுள் புகுந்து
சோலை வண்டுகளாக வடிவம் மாறினர் சிலர்
மயங்கி நின்றனர் சிலர்
சந்திரனாய் வளைந்த கோரப்பற்கள் எனும் அடையாளத்தை
ஒடித்துக் கொண்டனர் சில அரக்கர்கள்
இன்னும் சிலர்
நெருப்பின் செந்நிறம் கொண்ட தலை மயிரை எரித்து
கருப்பாக்கிக் கொண்டார்கள்!

பாடல்-974:

ஒரு அரக்கியர் அல்ல இருவர் அல்ல
பல அரக்கியர்கள் அழுகிறார்கள்
குண்டலம் எனும் காதணிகளும்
அழகிய கொங்கைகளும் கொண்ட அரக்கியர்கள்
வண்டுகள் அலையும் கூந்தல் அவிழ்த்து
காலை வருடும்படி நின்று அழுகிறார்கள்
தாமரை நிறத்தில் செம்பஞ்சுக்குழம்பு பூசப்பெற்ற
அவர்கள் வாய் திறந்து அழுகிறார்கள்
அந்த அழுகை
அந்த ஊரிலிருந்து
அண்டம் வரை சென்றது.

பாடல்-975:

உதிக்கும் சூரியனின் முகம் கொண்ட கணவன்மார்கள் முன்பு சென்று
கால்களில் விழுந்து
அழுது சோர்கிறார்கள்
அழகு வாய்ந்த சிவப்பு கூந்தல் நிறமும்
அவ்வூரில் பெருகிய இரத்த நிறமும்
ஒரே நிறத்தில் பரவி ஓடியது.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment