Friday, 7 February 2014

சுந்தர காண்டம் 926 - 950




பாடல்-926:

வெண்பற்களும்
கறுத்த உடல்களும்
விரியும்படித் திறந்த வாயும் கொண்ட அரக்கர்கள் இருவரும்
சூரியனை விழுங்கிட
கோபமுடன் நெருங்கும்
இராகு கேது போல இருந்தனர்
அனுமனோ சூரியன் என ஒளிர்ந்தான்.



பாடல்-927:

இரண்டு அரக்கர்கள்
யூபாட்சன் ! பிரகசன்!
கட்டப்பட்டார்கள் அனுமன் வாலினால்
தோள்களும் கால்களுமாக  பிறகு முறிக்கப்பட்டார்கள்
சூரியனை விட்டு
பாம்பு கேது நீங்கியது போல இறந்தார்கள்
அல்லி மலருக்குப் பகைவன் போன்ற சூரியனாக
எந்தத் தீங்கும் அடையாமல்
ஜொலித்தான் அனுமன்.

பாடல்-928:

ஐவருள் மீதம் பாசகர்ணன் மட்டுமே உள்ளான்
அவன் அனுமனை எதிர்க்க
அனுமன் பாய்ச்சல்
மலை மீது சிங்கம் போல அமைந்தது
ஒளி வீசும் வலிய தலை மீது குதித்து
பூமியில் தேரோடு புதைத்தான் இறந்தான் பாசகர்ணனும்!

பாடல்-929:

ஐவரும் விரும்பியது
வஞ்சனையும் களவுமே!
நஞ்சைக் காட்டிலும் கொடுமை மிகுந்து
அறமற்ற வழியில் சென்றனர்
அனுமன் ஒருவனால் மட்டுமே வெல்லப்பட்டனர்
கடுங்கோபம் மிக்க ஐவரும்
ஐந்து புலன்களுக்குச் சமம்
தனித்து நின்ற அனுமனோ
புலன்களை வென்ற அறிவின் வடிவம்!


பாடல்-930:

நெய் பூசிய வேல் ஏந்திய அரக்கர்களில்
எவரும் உயிருடன் இல்லை
அணி வகுப்பில் போர் முழக்கம் செய்த அனைவரும்
எமனையும் அஞ்ச வைக்கும் ஐவரும் இறந்து போனதை
நன்றாகப் பார்த்தனர்.

பாடல்-931:

காவலர்களுக்குப் புரிந்தது
“இந்தக் குரங்கு நம்மையும் இப்போதே கொன்றுவிடும்”
மனம் வருந்திக் கொண்டே
அரக்க மாதரை திட்டிக் கொண்டே இராவணனை அடைந்தனர்
கடுஞ்சொல்லின் சொந்தக்காரனும்
ஊழித்தீ போல ஏழு உலகமும் தீய்ந்திட பார்ப்பவனுமான
இராவணனிடம் சென்று
தோல்விச் செய்தியை சொல்லினர்.


பாடல்-932:

காவலர்கள் சொன்னது இது:-
“ஐயனே குரங்கின் தாக்கம் தாளாமல்
முதலில் சேனை அழிந்தது முதலில்
சேனைத் தலைவர்களும் பிறகு அழிந்தனர்
தம்முடன் வேறு யாரும் போருக்கு இல்லையே என
ஏக்கமுடன் சோம்பலுடன்
அங்கேயே இருக்கிறது அந்தக் குரங்கு”

( பஞ்ச சேனாபதிகள் வதைபடலம் முற்றியது )


அக்ககுமாரன் வதை படலம்

பாடல்-933:

அசோகவனம் காக்கும் பருவத் தேவர்கள்
கூறிய செய்தி இராவணன் கேட்டான்
சினமெனும் பெருகும் தீ கிளர்ந்தது
பெருமூச்சு விடும்போது
அவன் அணிந்த
வண்டுடன் கூடிய மாலைகள் தீய்ந்து விட்டன
கண்கள்
அரக்கு பூசியது போல் சிவந்தன
ஒருப்பட்டான் ! உருப்பட்டான்!
தானே போர் செல்ல முடிவெடுத்தான்
மைந்தன் அட்ச குமாரன் தடுத்தான்
“எனக்கு வாய்ப்பு தருக” என்றான்.

பாடல்-934:

என் தந்தையே
நீ போரிடச் செல்வது
முக்கண்ணன் சிவனின் ஊர்தியாம் காளையோடு அல்ல
மூன்று உலகும் அளந்த காலடி கொண்ட
திருமாலின் பறவையாம் கருடனோடு அல்ல
திசை யானைகளும் அல்ல
அற்பமான குரங்கு!
இக்கடன் தீர்க்கும் வாய்ப்பு தாராய்


பாடல்-935:

“எட்டுத்திசை வெற்றியாளரே
என் தந்தையே என்னை ஏவுவீர்
உன் கட்டளை நிறை செய்ய நான் உள்ளேன்
தேவர் தலைவன் இந்திரனை ஏவினீர்
அதனால் என் மனம் வாடிய குறை தீர
இன்று ஒரு வழி பிறந்துள்ளது
வலிமையிலாத இந்தக் குரங்கையாவது பிடிக்கிறேனே ! ”


பாடல்-936:

இமையாத முக்கண் ஈசன்
கொய்யும் தளிர் உண்ணும்
குரங்கின் உருவில் வந்திருந்தாலும் சரி
இலங்கைக்கு ஓர் சிறு பழி இழைத்தாலும்
எளிதில் பற்றி வருவேன்
ஓர்  நொடி போதும் ! உன் வசம் சேர்ப்பேன்

பாடல்-937:

துண்டம் செய்த தூணில் தோன்றிய நரசிங்கன் ஆனாலும்
வெள்ளி ஒளி வீசும் பல்லில்
பூமியை ஒட்டிக் கொள்ளும் அளவு வளர்ந்த வராகமே ஆனாலும்
போரிடும் ஆற்றலின்றி
அண்டம் கடந்து அகன்று ஓடும்!
நின் வசம் அக்குரங்கை நான் தரவில்லையெனில்
அப்போதே நீ என்னை தண்டிக்கலாம்

பாடல்-938:

இப்படியெல்லாம் சொல்லி
“விடை தருக:” என்று கெஞ்சினான் மகன்
வீரக்கழலும்
வயிரம் பாய்ந்த  தோளும் கொண்ட
மகனை மகிழ்ந்து நோக்கினான் இராவணன்
“விரையும் குதிரைகளின் தேரில் ஏறிச் செல்க” என்றான்
புனைந்த மலர் அணிந்து
அக்ககுமாரன் போருக்குப் போனான்.


பாடல்-939

இந்திரன் 
முன்பு போரில் பயன் செய்த
இருநூறு  குதிரைகள் பூட்டிய வலிமை மிகு தேரில் ஏறினான்
அரக்கர்கள் வாழ்த்தினர்
முரசுகள் மேகம் போல் முழங்கின
பிரளய கால கடல் போல்
சேனைகள் ஊற ஊறக் கிளம்பினான் அக்ககுமாரன்.

பாடல்-940:

அக்ககுமாரன் படையின்
யானைகள் எண்ணிக்கை அறிய வேண்டுமா?
கடலில் உள்ள சுறா மீன்களை எண்ண வேண்டும்!
வலிமையான தேர்கள் எண்ணிக்கை அறிய வேண்டுமா?
கடல் மீன்களின் எண்ணிக்கை வேண்டும்!
கடல் மணலை எண்ணி அறிந்தால் -  
காலாட்படை வீரர்கள் எண்ணிக்கை கூறலாம்
கடல் அலைகளை எண்ண முடிந்தால் -
தாவும் குதிரைகளின் எண்ணிக்கை அறியலாம்.


பாடல்-941:
ஊழிக்காலத் தீயின் நாக்குகளுக்குச் சமமான
பன்னிரு ஆயிரம் இளைஞர்கள்
அக்குமாரனை உயிராக நினைப்பவர்கள்
அரக்கர்களின் புதல்வர்கள் அவர்கள்
ஆதரவாக தேரில் ஏறி
அக்ககுமாரனை சூழ்ந்தனர்.

பாடல்-942:

இது மட்டுமா?
மந்திர ஆலோசனை குழுவினரின் புதல்வர்கள்
படைத்தலைவர் புதல்வர்கள்
அந்தரங்கமான தேவமகளிர் வழித்தோன்றல்கள்
இரண்டு  லட்சம் வீரர்கள் அவர்கள்
எந்திரத்தேர்களில் ஏறி சூழ்ந்தனர்
அக்ககுமாரனை ஆதரித்து!

பாடல்-943:

ஆயுதங்கள் வரிசையுடன்
அக்ககுமாரன் ஆதரவாளர்கள் உள்ளனர்
என்னென்ன ஆயுதங்கள்?
தோமரம் -உலக்கை - சூலம்
ஒளிவிடும் கோடாலி - வச்சிராயுதம்
அங்குசம் - வில் - கோல் - ஈட்டி
வாள் - எழு - மரத்தடி - பாசக்கயிறு
வளையம் - கூர்மையான தண்டு
வளைத்தடி -கைவேல் - கப்பணம்
சக்ராயுதம்.

பாடல்-944:

இத்தனை இத்தனை ஆயுதங்கள்
அடடா
நிலவும் வெயிலும் கலந்த ஒளி காட்டுகின்றது !
வானம் முழுதும்
சேனைகளின் புழுதி பறக்கின்றது!
புழுதி பூசிய இடங்களும்
ஒளியும் வெயிலுமான இடங்களும்
இப்போது  பூமியில்
அழியாத பொன்மயமான தேவலோகம் உருவாக்கியதே!

பாடல்-945:

இத்தனை  மிகப்பெரியப்படை புறப்பட
பின் தொடர்ந்தவைகளும் இருக்கின்றன
எவை எவை படையைத் தொடர்கின்றன?
காகங்கள்!
கழுகுகள்! பேய்கள்! எமன்!
பலகாலமாக உறுதியுடன் செய்த பாவங்கள்!
பாகு என இனிக்கும் சொற்களும் செந்நிற வாயும்
வாள் விழியும் பருத்த மூங்கில்  தோள்களும் கொண்ட
அரக்கர் இனத்து மயில் மங்கையர் மனங்கள்!
வீரர் மாலைகள் மொய்க்கும் வண்டுக்கூட்டங்கள்!

பாடல்-946:

மழைக்க்குரல் இடி போல ஒலிக்கும் சொற்களும்
சேனைகளுக்குள் எழும்புகின்றன
ஆனாலும் பிறருக்கு கேட்கவில்லை
ஏன்?
முன்பு நிகழ்ந்த போரில் இறந்த அரக்கர்களின்
மான்விழி அரக்கியர்
எழுப்பும் அழுகை ஒலியினால்!
பல் வகை இசைக்கருவிகளால்!

பாடல்-947:

சூரிய கிரணங்களின் ஒளி அடங்கியது - 
மாலைப்பொழுதால் அல்ல -
வீரர்கள் அணிகலன் ஒளியால்!
அணிகலன்கள் ஒளியோ
வீரர்களின் வேலொளியால் அடங்குகிறது!
வேல்களின் ஒளியோ
வீரர்கள் இளம்பிறை பல்வரிசை ஒளியால் வெல்லப்படுகிறது!
பலவகை ஒளிக்கூட்டத்தினால்
பிராணிகளுக்கு
இரவுமில்லாமல் பகலுமில்லாமல்
புதுவித உணர்வு!

பாடல்-948:

எவ்வளவு உயர்ந்த அடையாளங்கள்
எவ்வளவு வலிமைகள் இருப்பினும்
தீய சகுனங்கள் காட்டித் தந்துவிடும்
ஆம்
பிடரி கொண்ட தேர்க்குதிரைகள் தூங்கி வீழ்ந்தன
வீர அரக்கர்களின்
இடக்கண்கள் இடது தோள்கள் துடித்தன
பருத்த மேகங்களோ இரத்தத்துளி சொரிந்தன
காகங்கள் ஆரவாரிக்கின்றன.

பாடல்-949:

சேனைகளை அளவிடுவர் “வெள்ளம்” என்ற அலகினால்!
அக்ககுமாரனைச் சூழ்ந்ததோ சேனை வெள்ளமே!
வான தேவர்கள் அஞ்சினர் கலங்கினர்
கூற்றுவனோ புன்சிரிப்பு செய்கின்றான்
பேய்களோ தோள்தட்டி குதித்தன
காற்றின் சேய் அனுமன்
இத்தனையும் காண்கின்றான்

பாடல்-950:

உருவத்தில் தான்
அனுமன் குரங்கே தவிர
கோபத்தில் சிங்கம்!
சந்தேகம் கொள்கின்றான்
“போருக்கு வந்திருப்பது இந்திர ஜித்தா? இராவணனா? சரி!
மனதில் நினைத்தது நடக்கிறது..
மகிழ்ச்சி!”
சுந்தரத் தோள் கொண்ட
இராமன் வாழும் திசை நோக்கி வணங்கிக் கொண்டு
சொல்கின்றான் இதனை:-

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment