பாடல் 901:
மிகப் பெரிய நீண்ட மலை பெயர்த்து எடுத்து
ஆயிரம் தேர்களை
மண்ணில் தேய்ப்பான் அரைப்பான்
“ஏ” என்ற உச்சரிப்பு முடிவதற்குள்
ஒரு மரம் பெயர்த்து எடுத்து
ஆயிரம் யானைகளை அடித்து அழிப்பான்.
பாடல் 902:
அனுமன்
கொடிய யானைகளை கலக்குவான்
தேர்களை மிதிப்பான்
வலிய குதிரைகளைத் தேய்ப்பான்
அரக்கர் தலைகளில் குதிப்பான்
கடிப்பான் குத்துவான்.
பாடல்-903:
அனுமன் ஆகாயத்தில் நிறையுமாறு வீசுவது
குதிரை பூட்டிய தேர்களை, யானைகளை!
அனுமன் ஒன்றாகப் பிசைவது
கடிவாளத்துடன் பாயும் குதிரைகளையும் வேல்களையும்!
பாடல்-904:
நெருப்புப் பொறியென சினந்த கண்கள் கொண்ட யானைகளை
ஆகாயத்தில்
அனுமனது பெரும் கைகள் வீசினான் அனுமன்
கடலில் யானைகள் வீழும் போது
பாய் மரங்களோடு
பெரும் கப்பல்கள் மூழ்குவது போலிருந்தன.
பாடல்-905:
கிண்கிணி மாலை அணிந்த குதிரைகள்
அழகிய சக்கரங்கள் அணிந்த தேர்கள்
அனுமன் வீசி எறிய
கடலில் விழுந்தபோது
சூரியனது தேர்கள் போல இருந்தன.
பாடல்-906:
அனுமன் வலிமையால்
தன் வலிமை இழந்த குதிரைகள்
இரத்தம் பெருகி வானில் முட்டிக்கொண்டன
கடலில் வீழ்ந்து அழுந்திய குதிரைகள்
வாயில் நெருப்பு கொண்ட
வடவை எனும் பெண் குதிரை போல் உள்ளன.
பாடல்-907:
அனுமனின் வாலினால் கட்டப்பட்டு
வெகுதூரம் விரிய கடலில் வீசப்பட்டு
கடல் நீரில் உழலும் அரக்கர்கள்
வாசுகி எனும் பாம்பு சுழற்றிய
மந்தரமலைக்குச் சமம்!
பாடல்-908:
அனுமனின் பெரிய கைகள் எடுத்துவீசிய
மதநீர் யானைகள்,
தேர்கள்,
குதிரைகள்
அச்சம் தரும் கடலில் வீழும் முன்னரே
அவை சிந்திய
இரத்த ஆறுகள் கடலில் கலக்க முந்திக்கொண்டன.
பாடல்-909:
அந்தப்போர்க்களம் கண்ட அரக்கர்களின் பிணங்களுக்கு
பிறைச்சந்திரன் போல கோரப்பற்கள்
குகை போன்ற வாய்கள்
கறை செய்யும் இரத்தப்பெருக்கு
நெருப்புப்பொறி விழிகள்!
அளவிலும் பெரிய பிணங்கள்
வானைத்தொடும் தோரணவாசலை மூடி மறைத்து விட்டன.
பாடல்-910:
அனுமனுக்கு எல்லாமே ஆயுதம்தான்
குன்று இருக்கிறது
மரம் இருக்கிறது
“எழு” எனும் இரும்புத்தடியும் ஒன்றல்ல ! பல உண்டு
உயிர் உண்ண எமனும் உள்ளான்
ஐயன் அனுமனின் கையால் இறப்பது தவிர
வேறிடம் செல்ல முடியுமா அரக்கர்களால்!
பாடல்-911:
மும்மூர்த்திகளில் முதல்வன்
நெற்றிக்கண்ணன்
முருகனின் தந்தை
சிவபெருமானின் கையில் மழு இருக்கும்
அரக்கர் கூட்டம் அழித்த
அனுமனின் கையில் இப்போது எழு இருக்கிறது
பாடல்-912:
அரக்கர் சேனை காய்ந்தது உலர்ந்தது
உவகை அடைந்தனர் தேவர்கள்
கடல்சூழ் இலங்கை மக்கள் அழுகுரல்
கடல் ஓசையில் கலந்தது அப்போது
சேனைத் தலைவர்கள் ஐவரும்
அனுமனை நெருங்கினர்.
பாடல்-913:
இரத்த வெள்ளம் நடுவே உள்ள மேடுகள்
விரைய முடியாத தேர்களைத் தடுத்தன
அம்மேட்டையும் தாண்டி வந்த ஐவர்
அஞ்சனை மைந்தன் அனுமனை அணுகி எதிர்த்தனர்
போர் முழக்கம் செய்து
பல்லாயிரம் அம்புகளால்
அனுமனைத் தூர்த்தார்கள்!
பாடல்-914:
ஐவரது அம்புகளையும்
எளிதில்
அனுமன் நொறுக்கினான்
ஐவரில் ஒருவனின் தேரில் குடைந்து ஏறி
அம்புகள் இயக்கும் கடும் இயந்திரத்தை அழித்தான்.
பாடல்-915:
ஓடும் தேர்
உள்ளே புகுந்தான் அனுமன்
தாக்குதல் வரும் முன்பே
தேர் சிதையும் முன்பே
அதிலிருந்து வானுக்கு உயர்ந்தான்
“தூர்த்தரன்” எனும் சேனைத் தலைவன்
அனுமன் இரும்புத்தூணால் அடிக்க
வில்லினால் தடுக்கின்றான் துர்த்தரன்.
பாடல்-916:
துர்த்தரன் தடுத்த வில் முறிந்துவிட்டது
முறிந்த வில்லையே
அனுமன் மீது எறிந்தான் பிறகு மலை எடுத்து வீசினான்
போர் நுணுக்கம் மிகு அனுமன்
இரும்புத் தூணால் மலை தடுத்தான்
இரும்புத்தூணால் அவன் உயிர் உண்டான்.
பாடல்-917:
மீதி இருக்கின்ற நால்வரும் மோதினர் அனுமனை
இறுதிக் காலத்து தீ நாக்குகள் போல கொதிப்பாகினர்
வில்கள் வளைத்து அம்புகள் செலுத்த
புகைந்தன கண்கள்
அனுமன் தோள்களில்
இரத்தப் பெருக்குகள் கீழே வடிந்து இறங்குகின்றன.
பாடல்-918:
வீரன் அனுமனும் உள்ளம் கொதிப்பானான்
மாய அரக்கர் பலம் உணர்ந்தான்
நெருப்பு கக்கும் கல் பாறை ஒன்றை எடுத்து வீச
தீயவர் நால்வரும் அதனை
பொடி செய்து விட்டனர்.
பாடல்-919:
அரக்கர்கள் செலுத்திய வில் இனம்
அனுமன் மார்பில் பரந்து
அப்பால் எகிறிப்பறந்து போயின
நால்வரில் ஒருவனாகிய விருபாட்சனை
தேரோடு பிடுங்கி
ஆகாயத்தில் வேரோடு வீசினான் அனுமன்.
பாடல்-920:
அனுமன் வீசிய தேர்'
ஆகாயம் முழுதும் நீந்தியது
அத்தனை வேகம் !
ஓய்ந்து வீழும் முன்
தேரிலிருந்து நிலத்தில் குதித்தான் விருபாட்சன்
பாய்ந்த அரக்கன் மேல் மாருதி பாய்கிறான்.
பாடல்-921:
மதயானை மீது
கொடிய ஆண் சிங்கம் பாய்வது போல
வீராதி வீரன் அனுமன் குதித்தான்
பெரும் மலை போன்ற உடம்பினை சிதைத்தான்
குழம்பாக்கினான் கால்களால் மிதித்தான்
பாடல்-922:
உயிருடன் இருந்த மூவரும்
பெரும் சினமுடன் தேர்கள் செலுத்தி
அனுமன் மீது அம்புகள் தொடுத்தனர்
“இனி எங்கு ஓடுவாய்?” என
அனுமன் எதிரே சென்றனர்.
பாடல்-923:
திரண்டு உயர்ந்த தோளுடைய அனுமன்
அஞ்சனை பெற்ற சிங்கமாம் அனுமன்
காவல் மிக்க தேவர்களும் அஞ்சிட
ஒரு காரியம் செய்தான்
வலிமையான மூன்று தேர்களில்
இரண்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.
பாடல்-924:
எடுக்கும்போதே -
தேவர்களின் குதிரைகளும் பாகர்களும் இறந்தனர்
பருத்த தோள் அரக்கர்கள் இருவரும் தப்பித்து
வானில் புகுந்து மறைய முயன்றனர்
அனுமன் தாவி அவர்களை அடைந்தான்
பாடல்-925:
அரக்கர்கள் இருவரின்
கொடிய வில்களை கையால் முறித்து
அம்பறாத்துணிகளை அழித்து
அம்புகளையும் அழித்த பின்
வெம்படை இல்லாத இருவரும்
வானில் நின்று அனுமனுடன்
மற்போர் துவக்கினர்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment