Saturday, 25 January 2014

சுந்தர காண்டம் - ( பாடல் 876 - 900 )



பாடல்-876:

சக்கரத் தேர்கள் எண்ணிக்கை ஐம்பதினாயிரம்
முகபடாம் அணி யானைகள் ஐம்பதினாயிரம்
பிரளய காலக்காற்று வேகக் குதிரைகள் ஒரு லட்சம்
வலிய தோள்கள் சிறந்த ஆயுதங்கள் கொண்ட
காலாட் படை வீரர்கள் இரண்டு லட்சம்.

பாடல்-877:

சேனைத்தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம்
சேனைக்கூட்டம் வருகின்றது
வெள்ளம் போன்ற தொடர்ச்சியுடன்!
சுடர் வீசும் ஆயுதத் தயாரிப்புகள்
ஒன்றோடு ஒன்று மோதி உராய்ந்து
நெருப்புப் பொறிகள் பிறந்தன
மேகங்களுக்கு சூடு போட்டன!

பாடல்-878:

அலங்கரித்த சிறந்த குல யானைகளின்
பக்கவாட்டில் தொங்கும் மணிகளின் கூட்டம்
எழுப்பும் ஒலி
மேக இடிகளுக்குச் சமம்!
திடீரென நோக்கினால்
கருமேகங்களிடையே சூரியன் போல தெரிகின்றன
அவை என்ன ?
யானைகளின் கருவிழிக்கூட்டமும்
யானைகளின் கன்னங்களில் பதிந்து
குளிர் இரத்தினக் கூட்டமும்!



பாடல்-879:

“இதுவரை
அனுமன் என்ற குரங்குடன் போர் செய்தவர்கள்
யாரும் உயிருடன் திரும்பவில்லை
உயிர்தர விருப்பமெனில்
நாங்களும் உயிர்விட வருகின்றோம்” என அழு குரல் கேட்டது
வீரர்களின் சுருண்ட கூந்தல் கொண்ட மனைவியிடமிருந்து!
வீரர்களை அவர்கள் மட்டும் தடுக்கவில்லை
சுற்றத்தார்களும் தடுத்தனர்
தாய்மார்கள் தடுத்தனர்.

பாடல்-880:

ஐந்து படைத்தலைவர்கள்
பஞ்ச பூதங்களின் கூட்டல் போல உள்ளது !
“உடல்கள்  மேக வரிசை பெற்றதோ ” என்ற
உவமையை வென்றவர்கள்!
தம்மைச் சுற்றி பரவி நிற்கும் கடலில்
கலந்தார்கள் ஐவரும்!
சூரியன்
நுட்பமான தேரில் வருவது போல
படையோடு வருகின்றனர்!

பாடல்-881:

முன்புறம் வாத்தியங்கள் ஒலிக்கின்றன
சேனைத்தலைவர்கள் ஐவருக்கும்
கோபக்கனல் பொறிகள் சிதறுகின்றன
அம்பு பூட்டிய வில்களை
வளைக்கும் விரல்களும் நாண்களும்
இடி போல் தெறிகின்றது
புகழத்தக்க முனிவர்களுக்கும் தேவர்களுக்கும்
அடங்கி நடுக்கும் புலன்கள் போல
ஐந்து படைத்தலைவர்களும்
படையில் பொருந்துகிறார்கள்.

பாடல்-882:

ஐந்து நபர்களின் வலிமையை இப்படிச் சொல்லலாம்
இந்திரனது  வச்சிராயுதம்
வருணனின் வலிய பாசம் (எனும் கயிறு)
எமனது கூரிய தண்டாயுதம்
சிவனது ஒப்பற்ற சூலம்
சேனைத்தலைவர்கள் ஐவரையும்
ஊசிக்குத்தும் அளவு கூட
எதுவும் செய்ய இயலாது
ஆம்! அவ்வளவு வலிமை மிக்கவர்கள்!

பாடல்-883:
அந்த ஐந்து சேனைத்தலைவர்களின்
நெற்றிச் சுட்டிகளில்
முறுக்கித் செருகப்பட்டவை எவை தெரியுமா?
சூரபத்மனைக் கொன்ற முருகனின் மயில்சிறகுகள்
உலகையே படைத்த
பிரம்மனின் அன்னச் சிறகுகள்!


பாடல்-884:

அந்த ஐவரும்
பொன் மார்பு அணிகல இராவணனுடன் போரிட்ட
திசை யானை தந்தங்களை அறுத்து
தங்கள் காதணியாக தரித்தவர்கள்!
திசை யானைகளின் முகபடாம் கொண்டு
மின்னல் ஒளித்தொகுப்பு போல செய்த
வீரப்பட்டம் தரித்தவர்கள்


பாடல்-885:

நிதி நெடும் கிழவன் குபேரன் ஆவான்
அவன் நகர் அளகாபுரி
புற முதுகுகாட்டி குபேரன் ஓடினான் இராவணனிடம்
அப்போது
அங்கிருந்த பொன் அணிகலன் மூட்டைகளை
பஞ்ச சேனாதிபதிகள் அணிந்திருக்கிறார்கள் இப்போது.

பாடல்-886:

ஐவரும்
இந்திரனையே தோற்கடித்துள்ளனர்
வலிமை தந்தங்கள் கொண்ட ஐராவதம் எனும் யானையுடன்
தப்ப முயன்றான் இந்திரன்
யானை வால் பிடித்து
“வல்லமை இருந்தால் செலுத்திச் செல்” எனத்
தடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

பாடல்-887:

உலகத்தவர்கள்
இராவணன் நோக்கி
“விதியை நிறுத்தி ஆட்சி செய்யும் எமன்
உன் ஆட்சியை நினைக்காமல் விட்டு விட்டானே” என்றனர்
இதனால்
கருநீல நிற இராவணன் கோபம் தணிய
ஐவரும்
எமனின் கையும் காலும் கட்டியவர்கள்!

பாடல்-888:

சேனைத்தலைவர்கள் ஐவருக்கும்
மலைகளை கேலி பேசிடும் மார்புகள் உண்டு
கடல் அலைகளை கேலி பேசும் நீண்ட தோள்கள் உண்டு
கொலைத் தொழிலில் எமனையே மிஞ்சியவர்கள்
நெருப்பைக் கக்கும் கண்களோ
கொல்லனின் உலைகளையே கேலி பேசும்.

பாடல்-889:

சேனைத் தலைவர்கள் ஐவரின் ஆற்றல் இது:
திசை யானைகள்
உலகையே சுற்றிக் கொண்டாலும்
முழக்கமிடும் தீ
பேரொலியோடு வந்தாலும்
ஊழிக்காற்று வீசினாலும்
பெருங்கடல்கள் பொங்கினாலும் அடக்குவார்கள் !
பாடல்-890:

இப்படிப்பட்ட புகழ் மிக்க ஐவர்
அனுமன் இருக்கின்ற
தோரணவாயில் அடைந்தனர்
அணிவரிசைப்படி படைகளை நெருக்கினர்
ஐயன் அனுமன்
 “அமைய” நோக்கினான்.


பாடல்-891:

திடீரென அனுமனை நோக்கும்போது
இந்திரனும் தேவர்களும்
இரக்கமும் துன்பமும் அவலமும் கொண்டார்கள்
“அளவிலா அரக்கப்படை முன்பாக
ஐவர் தலைமை முன்பாக
மாருதி
தனிமைத் தன்மையுடன் இருக்கிறானே!” .

பாடல்-892:

தன்னைச் சுற்றி முற்றிலும் நிற்கின்ற
முடிவிலாத சேனையை
சுற்றிலும் பார்த்துவிட்டு
அனுமன்
தன் தோளையும் நோக்கினான்.
“இந்தப்பகலே இவர்களுக்கு  கடைசி” என
கற்று உணர் மாருதி மனம் களித்தான்.


பாடல்-893:

எண்ணிலாத அரக்கர்கள் சந்தேகப்பட்டனர்
“சிறிய தலை உடைய இந்த குரங்கு தானா
தேவர் புகழை வேரோடு களைந்தது!
அரக்கரைத் திருகித் தின்றது!” என அசந்தனர்.

பாடல்-894:

அனுமன்
இந்திரன் தலைநகர் அமராவதியிலிருந்து
அசோகவனத்திற்கு கொண்டு வரப்பட்ட
சிவந்த ஒளி கொண்ட
தோரண வாயில் உச்சியில் இருந்தான்
மிகுந்த உச்சியான ஆகாயமும் கடக்கும் விதமாக
பெரிய வடிவம் எடுத்துக் கொண்டான்.

பாடல்-895:

தீமையே செய்யும் அரக்கர் இனம்
சும்மா இருக்குமா?
வீங்கிய வீரனை வியந்து நோக்கியது
வில்லை வளைத்து அனுமன் மீது அம்புகள் வழங்கியது
ஏங்கிய சங்குகள் ஒலித்தன
இடித்தன முரசுகள் ஒலி!


பாடல்-896:

எறிந்தார்கள்
எய்தார்கள்
எண்ணிக்கையே சொல்ல முடியாத அளவுக்கு
ஆயுதங்கள் எறிந்தார்கள்
அவை
அனுமன் உடலின் மயிர்ப்புறம் சேர்ந்தன
தினவு தீருபடி சொறிந்தன
ஐயன் அனுமன் ஆனந்தமாய் அனுபவிக்க!

பாடல்-897:

ஒன்று சேர்ந்த அரக்கர்கள் திரண்டார்கள்
வெறியுடன் மோதினார்கள்
செருக்குடன் தாக்கினார்கள்
“இப்போது இவர்களை விரைந்து தாக்குவேன்
அப்போதுதான் மற்ற அரக்கரும்
என்னிடம் மோத வருவார்கள்” என நினைத்த அனுமன்
“எழு” எனும் இரும்புத்தடி எடுத்தான்.

பாடல்-898:

அனுமன் அடியில் நொறுங்கி வீழ்ந்த பட்டியல் இவை :-
சிவந்த கண் அரக்கர்கள்
அவர் தம் ஆயுதங்கள்
தாக்க வந்த குதிரைகள்
தடுத்த தேர்கள்
மேக வரிசை போன்ற யானைகள்.

பாடல்-899:

பெருகும் மதநீர் யானைத்தந்தங்கள் பறிப்பான்
பறித்து
யானைகளின் தோள்கள் சிதைப்பான் அனுமன்
சிதைத்த தேர்ச்சக்கரங்களால்
போர்வீரர்களை உருட்டுவான்
வீரர்கள் வாளினால்
கிண்கிணி மாலை அணிந்த
குதிரைகளைத் துண்டாக்குவான்.

பாடல்-900:

அனுமன்
தன் இரு கைகளிலும்
இரண்டு  தேர்கள் ஏந்தி
இரண்டு யானைகள் இறக்கச் செய்வான்
இரண்டு பெரிய யானைகள் ஏந்தி
இரு பக்க குதிரைகளில் மோதுவான்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment