“அருட்பெருஞ்சோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி” என்று வடலூர் சாலை முழுதும் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். வெண் ஆடை உடுத்திய உடலில் திருநீறு அணிந்த மனிதர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். கூப்பிட்டு கூப்பிட்டு சாப்பாடு போடும் தனித்த கனிவு வடலூரில் நிகழ்கிறது. பலப்பல ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்து அன்னதானம் செய்வது சகஜமாகக் காணலாம். ஏன்?
இன்று வடலூர் தைப்பூசம். ஆம். வள்ளல்பெருமான் என்கிற மகாசித்தர் இன்றுதான் முத்தேக சித்தி பெற்றார். அதாவது தனது மூன்று உடல்களையும் துறந்து - இனி எல்லா உடல்களிலும் இருப்பேன் என வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் அருட்பெரும்ஜோதி ஆனார் . பூச நட்சத்திரம். தை மாதம்.
சத்திய ஞான சபை உள்ளது. மாய வாழ்வின் ஏழு திரைகள் விலக்கி காட்டப்படுகிறது.நமது மூளையே சிற்றம்பலம். அம்பலக்கூத்தன் நமது அஞ்ஞானத்திரைகள் விலக்கி நமது ஆன்மா நமக்கே புலப்பட்டால் அப்போது திருச்சிற்றம்பலம் ஆகிறது.
வள்ளல் பெருமான் சொன்னவை செய்தவை எழுதியவை எல்லாம் தண்ணீர் போல் எளிமையாக இருக்கும். ஆனால் உணர்வதற்கு ஒரு தாகம் தேவைப்படும். அந்த தாகம் அவர் நமக்குத் தருவது. அது வரை வடலூரில் நிகழ்வன மேலோட்டமான ஒரு செயலாகவே நம்மை மூடிவிடும். திரைகள் விலகுவது அத்தனை எளிதா! எத்தனை பிறவிகளாக வளர்த்துவிட்டோம்! அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ஆட்கொள்வீர் என கரைந்து அழுவது தவிர வேறென்ன குறுக்கு வழி இருக்கிறது. “வாய்த்தது நமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” - திருநாவுக்கரசு சாமிகள்.
No comments:
Post a Comment