பாடல் -851:
கொடி பறக்கும் தேர்கள்
குதிரைக்கூட்டங்கள்
அனுமன் ஒரே கையால் தேய்க்கப்பட்டு அழிந்தன
தந்தங்களுடன் சினமுடன்
வலிய மலை போன்ற யானைகள்
இன்னொரு கையினால் பிசையப்பட்டு அழிந்தன.
பாடல்-852:
கறுத்த அரக்கர்களை
கோரப்பற்கள் உடையவர்களை
பாசக்கயிறு கொண்டவர்களை
சின நெருப்புடன் விழிப்போரை
மழு ஆயுத நிபுணர்களை
கண்டோருக்கு எமன் போன்றவர்களை
பெருமுழக்கம் செய்வோரை அழிப்பதில்
தனித்தனியே அழிக்கும் சிவன் போல இருந்தான் அனுமன்.
பாடல்-853:
எது எது கலக்கக்கூடாதோ
அத்தனை கழிவும் கலந்த காட்சி அது
சக்கரங்கள் தோமரங்கள்
உலக்கைகள் கதாயுதங்கள்
கூரிய வாள்கள் எண்ணிலாத தேர்கள்
குதிரைகள் குடைகள் கலந்து கிடக்கின்றன!
இது மட்டுமல்ல -
இரத்த வெள்ளத்தின் அலைகள்
நீண்ட துதிக்கை யானைகளை உருட்டி
கடலில் தள்ளுவதும் நடந்தது!
பாடல்-854:
அனுமன் வீசிய இரும்புத்தடியால்
வெட்டுப்பட்ட தலைகள்
வான் வரை சென்று
மலையில் மோதி
திசைகளைத் தழுவி
போர்க்களத்தில் கிடக்கும் தலைக்கூட்டத்தில்
அடிபட்டு உடைந்தன
தட்டுமுட்டு சாமன்களைப் போல ஆடின.
பாடல்-855:
இப்போது மிஞ்சியவன்
எமன் போன்ற சம்புமாலி மட்டுமே!
காட்டில் வாழும் யானைக்கூட்டங்கள் முழுதும்
சிங்கத்தால் கொல்லப்பட்டப்பிறகு
எஞ்சி நிற்கின்ற
ஒரே ஒரு மலை யானை போல் நிற்கின்றான் சம்புமாலி
கண்களில் தேன் நிற சிவப்பு ஆனால்
அத்தனையும் சின விஷம்!
பாடல்-856:
காற்றைக்காட்டிலும் விரைவு கொண்ட
கடிவாளம் பூட்டிய இறந்த குதிரைப்படைகளின் இரத்தசேறு
இறந்த அரக்கர்களின் இரத்த சேறு
நிணம் படிந்த மண் சேறில்
இரதங்களின் சக்கரங்கள் உழண்டு சிக்கின
இரத்த சகதி படாத இடம் எதுவுமே இல்லை
என்றாலும் போரிட்டே தீர
இரங்கத்தக்க சம்புமாலி வருகிறான் போரிட!
பாடல்-857:
அனுமன் உடலின் புண்கள்
பூக்கள் பூத்த மரம் போலிருந்தன
சம்புமாலியை நோக்கி
“உன்னிடம் ஆயுதமும் ஒன்று தான்
உன்னிடம் தேரும் ஒன்று தான்
இறப்பதைத் தவிர வேறென்ன செய்வாய்?
உன்னுடன் வந்தவர்களை
காக்கும் வல்லமை இல்லாத உன்னை
வலிமையற்ற உன் உயிர் அழித்தல்
நீதியல்ல! போ!” என்றான் அனுமன்.
பாடல்-858:
“நன்று ! நன்று! உன் கருணை!”
நெருப்பு போல சிரித்தான் சம்புமாலி
இறக்கிறவர்களின் ஒருவன் என
என்னை நினைத்தாய் போலும் என்றான்
வலிமையும் திண்மையுமான வயிரம் போன்ற வில்லினால்
கூர்மை வாய்ந்த ஒளி வீசும் அம்புகளை
ஒவ்வொன்றாக
பத்து பத்தாக
நூறு நூறாக
லட்சம் லட்சமாக
அனுமன் மீது பாய்ச்சினான்.
பாடல்-859:
“செய்! செய்! வில்லுடன் வா!
உன் வில் ஆற்றல்
வெறுங்கையுடன் திரிவோரை வெல்ல
உனக்கு உதவும்
இரும்புத்தடி கொண்ட என்னை
வெல்ல உதவுமா?” என முறுவலித்த அனுமன்
மழையை
காற்றின் வலிமை
சிதறடிப்பது போல
அம்பு மழையைத் தடுத்தான்.
பாடல்-860:
சம்புமாலிக்கு
தன் முயற்சியின் தோல்வி புரிந்தது
மிகவும் கோபமானான்
அனுமனைத் தனது தேருடன் நெருங்க முயன்றான்
முடியவில்லை!
அனுமனின் இரும்புத் தடி எனப்படும்
எழு என்ற ஒன்றை
மழு போன்ற முனை உடைய
அம்பினால் அறுத்தான்.
பாடல்-861:
தனது “எழு”எனும் இரும்புத்தடி வீழ்ந்து
மனம் சலித்த அனுமான்
ஒரே கையினால்
சம்புமாலி அம்புகளைத் தடுத்தான்
தேவர்கள் ஆர்ப்பரிக்க
சம்புமாலியின் தேருக்குள் புகுந்து
அவன் வில்லை பிடுங்கினான் அனுமன்
மலை போன்ற அவன் தலையை
வில்லை மாட்டி
மண்ணில் இழுத்துத் தள்ளினான்.
பாடல்-862:
அனுமன்
தேரிலிருந்து குதித்த போது
தேர் பாகனும்
தேர்க் குதிரைகளும் குழம்பாகிட மிதித்தான்
அசோக வனச்சோலையைக் காப்பவர்கள்
அனுமனுக்கு பயந்து
போர்க்களம் விட்டு நகர்ந்து
இராவணனிடம் சொல்ல ஓடிச் சென்றனர்.
பாடல்-863:
இரத்தப் பேராறு பரவியது
அரக்கர்களை இழுத்துச் சென்று
அரக்கியர் வீடுகளில் வீசியது
நிலை குலைந்தது இலங்கை
அந்நகரமே அழுதது
“இன்று தான் அரக்கர் குலம்
அனுமனால் வலிவிழந்தது” என அறக்கடவுள் மகிழ்ந்தது.
பாடல்-864:
புகார் சொல்ல ஓடி வந்தவர்கள்
இராவணனிடம் ஏதும் சொல்ல முடியாமல்
விக்கிவிக்கி அழுதனர்
அஞ்சி ஏங்கினர் இராவணன் சிரித்தான்
“அஞ்சாதீர்” என்றபின்
“சம்புமாலியும் இறந்தான் ஒருகுரங்கினால்”
என்று சொல்லி முடித்தார்கள்.
பாடல்-865:
எரிந்து பெருகி
கிளம்பும் கோபம் கொண்ட இராவணன்
நினைக்க நினைக்க
அவன் விழிகள் இரத்தக்குமிழிகள் உமிழ்ந்தன
“நானே அக்குரங்கை பிடிப்பேன்” என்றான்
அப்போது சேனைத்தலைவர்கள் வந்தார்கள்
ஐவரும் இவ்வாறு தெரிவித்தனர்.
(சம்பு மாலி வதைப்படலம் முற்றிற்று)
பஞ்ச சேனாதிபதி வதைப்படலம்
பாடல்-866:
விருபாட்சன், யூபாசன், துர்த்தரன்
பிரகசன், பாசகர்ணன் என்கிற
ஐந்து சேனைத் தலைவர்கள் அவர்கள்
இராவணன் நோக்கி கூறினார்கள்:-
“திறலோய்!
சிலந்தியைப் பிடித்து உண்ணும்
ஒரு குரங்குடன் நீ போர் புரிவதா?
திசையானைகள்
கண் பொறி பறக்க முன்பு போரிட்டாய்
அப்போது
மழை பொழியாமல் மலைகள் வறண்டது போல
மதநீர் வற்றிப்போயின யானைகள்
இப்போது நீயே போரிடப் போனால்
மீண்டும் மதநீர் பெருகிவிடும்!”
பாடல்-867:
கொடும் கோபமும்
அழகிய இறகுகளும்
பெருகிய வலிமையும் மிக்க கருடன்
கொசுவுடன் போரிடலாமா?
அப்படி நீ சென்றால்
உன்னால் பெயர்த்து எடுக்கப்பட்ட கயிலைமலை
இரவும் பகலும் தொங்கி அசையும் உன் தோள் மாலை எண்ணி
அஞ்சி நடுங்கிய கயிலை மலை
கவலையற்று விடும்!
பாடல்-868:
ஒரு குரங்குடன் போர் புரிவதா?
என்ன நன்மை கிட்டும் அதனால்?
இதை விட ஏது இழிவு?
உன்னால் வலிமை அழிந்த மும்மூர்த்திகள்
உன்னால் பெருமை இழந்த மும்மூர்த்திகள்
மீண்டும் பெருமை அடைய முடியாத மும்மூர்த்திகள்
ஏளனமாக புன்முறுவல் பூப்பார்களே!
பாடல்-869:
“அரசே ! இதுவரை
தக்க ஆள் பலம் இல்லை என நினைத்து
மெலியோரை அனுப்பிவிட்டாய்
நன்மை காண விரும்பினால்
எம்மை அனுப்ப விரும்புக” என
கைதொழுது வேண்டினர்
அரக்கனும் இசைந்தான்.
பாடல்-870:
உடனே
ஐவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
மூவுலகுக்கும் முதன்மை பெற்றது போல!
நெற்றித்திலகம் மண்ணில் பட
இலங்கை வேந்தனை வணங்கினர்
அரண்மனை நீங்கினர்
கட்டளை இட்டார்கள் இப்படி
“எண்ணிலாத தேர்கள் வரட்டும்
யானைகள் வரட்டும்
குதிரைப்படைகள் வரட்டும்
அரக்கர் படை எழட்டும்”
பாடல்-871:
யானை மேல் அமர்ந்து
அரச கட்டளைகள்
வள்ளுவர் மூலம் முரசு அறையப்பட்டது.
அதற்கெனவே காத்திருந்தது போல
அரக்கர் சேனை பரவியது
நுரைத்த கடல் போல!
பெருமழை மேகம் போல
முரசுகள் முழங்கின!
போர்க்கருவிகள் எங்கும் பளபளத்தன
நட்சத்திர வானில் மின்னல் போல!
பாடல்-872:
அரக்கர் சேனையின் வெண் கொடிகள் உயர்ந்து
மேகங்களைக் குத்தின
ஆகாய கங்கை அலைகள் போல
வெண் கொடிகள் உள்ளன.
அந்தக் கொடிகளின் மிக விரைவான அசைவு
எவரும் மாற்ற முடியா புகழ் மிக்க அனுமனின்
சினப்போரினால்
ஆயுட்காலம் இழந்துவிட்ட
பகைவரின் புகழ் போல இருந்தது!
பாடல்-873:
அரக்க வீரர்கள்
பொன் பொருந்திய
வீரக்கழலை காலில் அணிந்து
அம்புகள் கொண்ட அம்பறாத்துணி
முதுகில் தரித்து
கவசம் அணிந்தனர்
சேணம் பூட்டிய குதிரைகளும்
தேர்களும் யானைகளும்
போருக்காக அலங்கரிக்கப்பட்டன.
பாடல்-874:
யானையின் மதநீர்ப்பெருக்கு
ஆறு செய்தன
தேர்ச்சக்கரங்கள் உருண்டு
சேறு செய்தன
குதிரைக் குளம்புகளோ
நீறு எனும் புழுதி செய்தன
குதிரைகளின் வாய் நுரைகள் வீழ்ந்தும்
மீண்டும்
நீறு
சேறு ஆகின.
பாடல்-875:
தேர்களின் இடிப்பு ஒலி
குதிரைகளின் மூச்சொலி
முழங்கும் களிறுகளின் அதிர்வு ஒலி
மொய்க்கும் வீரர்கள் கழல் ஒலி
பல இசைக்கருவிகள் ஒலி
யாவும் கூடிய ஒலி
பிரளய காலக்கடல் ஒலியை விட
மூன்று மடங்கு அதிகம் கேட்டது.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment