பாடல்-826:
மதநீர் பெருக்கும் ஆண் யானைகள் செலுத்தும் பாகர்கள்
அஷ்டதிக்கு பாலகர்கள் போல் அழகானவர்கள்
வாள் படைத் தொழிலும் தெரியும்
அங்குசம் கொண்டு யானை செலுத்தும் தொழிலும் தெரியும்
தென்மேற்குத்திசை பாலகியாம் நிருதி என்பவளின்
மரபில் பிறந்த வீரர்கள்
நெருப்புப் பொறி விழிகள்
சூரியன் போல் திகழும் உடல் கொண்டவர்கள்.
பாடல்-827:
அழகிய திசைகளின் தன்மை அறிந்தவர்கள்
பதினெட்டு வகை குதிரைகளின் நடை பேதம் அறிந்தவர்கள்
போர் ஆயுதப் பயிற்சி மிக்கவர்கள்
அறிவாளிகள் குதிரை வீரர்கள் மட்டுமா?
தேர்வீரர்கள் யானை வீரர்கள்
அடி மேல் அடி வைத்து
மாலை அணிந்த குதிரைகள் மீது
மனங்கள் பாய போர்களத்துக்குச் செல்கிறார்கள்.
பாடல்-828:
ஒளி வீசும் பற்கள் கொண்ட சம்புமாலி
நால்வகைப்படைகளுடன் செல்கிறான்
தேவர்களையும் அச்சம் சுற்றுகிறது
அவன் நீண்ட கண்கள் கனல் பொங்க
மார்பு கவசம் மின்னி ஒளிவீச
மலை மேல் நெருப்பு போன்ற சினமுடன்
பொன் தேரிலே போருக்குச் செல்கின்றான்.
பாடல்-829:
அதே நேரத்தில்
அசோகவனத்தில் இராமதூதன் அனுமன் எண்ணுகிறான்
“இன்னும் அதிக எண்ணிக்கையில்
போரிட அரக்கர்கள் வரவில்லையே”
அவர்கள் வரும் வழி நோக்கினான்
சந்திரனும் நட்சத்திரங்களும் தழுவிடும் அளவுக்கு
உயரம் கொண்ட வாசல் அது
இந்திரவில் வர்ணம் கொண்ட வாசல் அது
அசோகவனத்தின் தோரணவாசல் அது
அதன் மீது ஏறி அமர்ந்தான் அனுமன்.
பாடல்-830:
மாவீரன் இராமனின் வில்
நாண் ஏற்றும் ஒலிக்குச்சமமாக
அனுமனின் முழக்கம் கேட்டதும்
இடியுடன் மேகங்கள் சிதறி விழுந்தன
அலைகடலின் ஒலி அடங்கிற்று
மலைகளில் புற்றுப்பாம்புகள்
உயிரும் நஞ்சும் ஒன்றாக கக்கின
கொல்லும் அரக்கர் மனம் பயமாகியது
தேவர்கள் நடுங்கினர்.
பாடல்-832:
அடுத்து
அனுமன் தன் தோள்களைத் தட்டினான்
எட்டுத் திசையானைகளின் கர்வம் அடங்கிற்று
தென் திசை எமன் திடுக்கிட்டான்
மனம் சிதறிப் போனான்
வான நட்சத்திரங்கள் பூக்களாய் உதிர
பூமியும் மலையும் பிளக்க
கடலும் கலங்கிற்று.
பாடல்-833:
அப்போது
அலை நீண்ட கடல் போல
அரக்கர்கள் முழங்கினர்
அனுமன் இருக்கின்ற இடம் செல்ல முடியாமல்
பிணங்களின் பெரிய குவியல் மலை தடுத்தது
இரத்தப் பெருக்கு அதிகரித்தது
எப்படி அனுமனிடம் செல்வது எனத் திகைத்தார்கள்
முன்பு இறந்த தம் சுற்றத்தினர் உடம்புகள் மீதே
இடறி வீழ்ந்தார்கள் அரக்கர்கள்.
பாடல்-834:
சம்புமாலி
விரைவாக தனது சேனையை
அணி அணியாகப் பிரித்தான்
அனுமனுக்கு இருபுறமும் செல்ல
கட்டளை இட்டான்
வலிய தேரை இயக்கிச் சென்றான்
தோரண வாயிலில் நின்ற அனுமனின் தோள்கள் பூரித்தன
“அப்பாடா! எதிர்பார்த்தவன் வந்து விட்டான்”
பாடல்-835:
அனுமன் என்ன ஒற்றை ஆளா?
அவனே ஒரு படைக்கூட்டம் தான்!
சக்ராயுதம் கொண்ட திருமாலின் அவதாரமாகிய
இராமனின் ஆற்றல் இருக்கிறது
நெய்தீபம் போல சுடரும் நெற்றி இருக்கிறது
அவனது முன் அணிச்சேனை மட்டும்தான் இருக்கிறது!
அவன் உடம்பின் மயிர்த்திரளே
நிமிர்ந்து நிற்கும் சேனை வீரர்கள் அல்லவா!
வலிய நகங்களே பக்க சேனைகள் அல்லவா !
அழகிய வாலே பின் அணிச் சேனை அல்லவா !
பாடல்-836:
ஊது கொம்புகள் ஊதிக் கொண்டு
வெண் சங்குகள் ஊதிக் கொண்டு
வில்களினால் நாண் ஒலி எழுப்பி
இசைக் கருவிகள் முழங்க
பறவைகள் ஓயாமல் ஒலிக்க
கோபமுள்ள அரக்கர்கள் புறப்பட்டனர்
வெயில்கள் போல ஒளி வீசும் ஆயுதங்களை
அனுமன் மீது ஏவினர்.
பாடல்-837:
கருநிறக்கடல் போல் அரக்கர்கள்
எறிந்த ஆயுதங்கள் யாவினையும்
கடலில் விழுமாறு
கைகளால் அடித்தான் அனுமன்
ஒடித்து சிதறிப் போக பிசைந்து எறிந்தான்
பரவிய தீப்பொறிக்கூட்டத்தின் நெருப்பு போல
கோபம் கொண்டான் அனுமன்
இரும்புத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டான்.
பாடல்-838:
தோரண வாயிலில் இருந்த அனுமன் எழுந்தான்
இறங்கினான் நின்றான்
திரிந்தான் போர் புரிந்தான் என
செயலின் வேகத்தால்
பிரித்துச் சொல்ல இயலாதபடி
திரண்டும் பரவியும் நின்ற அரக்கர்களை
ஒரே நேரத்தில் அழித்தான்
அடித்துக் கொன்றான் இரும்புத்தடியால்.
பாடல்-839:
எய்யப்பட்டவை
எறியப்பட்டவை
இடி போல நெருங்கி வந்தவை
அத்தனையும் அனுமன் இடக்கையால் அழித்தான்
அவன் வலக்கைக்கு
யானைகளும் தேர்களும் குதிரைக் கூட்டங்களும் அழிந்தன.
பாடல்-840:
அனுமனின் தாக்குதலால்
யானைகள் கன்னங்களை இழந்தன
உயர்த்தும் பெரிய கொடிகளை இழந்தன
பெரிய தந்தங்களை இழந்தன
பெரிய கால்களை இழந்தன
மதம் ஒழுகும் நிலை இழந்தன
மிகுந்த கோபங்களையும் இழந்தன.
பாடல்-841:
அனுமனின் தாக்குதலால்
அரக்கர் தேரின் சுற்றுப்புரங்கள்
அச்சுக்கட்டைகள்
நுகத்தடிகள்
தேர்ச்சக்கரங்கள்
மேல்தட்டுகள்
பூட்டப்பட்ட விரைவு குதிரைகள்
பெரிய தேர்கள்
அத்தனையும் அத்தனையும் தூளாகி நொறுங்கின.
பாடல்-842:
அனுமனின் தாக்குதலால்
குதிரைப்படைகளின் கழுத்துகள் ஒடிந்தன
உருண்டன இறந்தன
இடிபட்டு இறந்தன எரிந்தன
எலும்புகள் நொறுங்கின
சில எழுந்தன பிறகு மடிந்தன
கால்கள் முறிந்தன
மலை போல் குவிந்தன.
பாடல்-843:
அனுமனின் தாக்குதலால்
காலாட்படை வீரர்கள் அஞ்சினர் பாராட்டினர்
மயங்கி விழுந்து தெளிந்தனர்
உணர்வு வந்து மருண்டனர்
புத்தி பேதலித்தனர் வருந்தினர்
மீண்டும் போரிட்டு இறந்து உருண்டனர்
உடனே இறக்காதவர்
மிகுந்த துன்பம் கொண்டு
சுருண்டு புரண்டு முடிவில் இறந்தனர்.
பாடல்-844:
அனுமன்
யானைகளை யானைகளால் கொன்றான்
குதிரைகளை குதிரைகளால் மோதி அழித்தான்
வில் வீரர்களை வீரர்களால் மோதி அழித்தான்
மணி கொண்ட தேர்களும் அப்படியே!
பாடல்-845:
அரக்கர்களின் தோள்களும் வாள்களும்
துவையல் போல அரைபட்டன
கால்கள் தலைகள் சிதறின
மூளையும் இரத்தமும் ஒலியுடன் குழம்பாகி ஓட
சேறு உண்டாகியது அதில்
யானைகள் மூழ்கி இறந்தன!
பாடல்-846:
வலிமை வாய்ந்த வீரர்களை நிலத்தில் மோதி
அப்படி அப்படியே அழித்தான்
வாயிலிருந்த வளைந்த பற்களோடும்
பயணித்து வந்த யானைகளோடும்
பருத்த அடிப்புறம் கொண்ட வில்லோடும் வேலோடும்
வீரமுகத்தோடும் உயிர்களோடும் அழித்தான்!
பாடல்-847:
கண்களில்
கோபக்கனல் புகை கக்கும் அனுமன்
பொறி கக்கும் அனுமன்
ஏதேனும் மீதி உண்டா என
அழிபட்ட தேர்கள் எல்லாமும் ஏறி நோக்குவான்
பெரும் யானைகள்
குதிரைகள்
ஏளனமாகச் சிரித்த படைகள்
படைவீரர்களின் தலைகள்
எல்லாமும் ஏறி ஏறி இறங்குவான்.
பாடல்-848:
வெற்றித் தரும் குதிரைகளின் முதுகு
பகைவர்கள் மார்பு
எல்லா இடத்திலும் அனுமன் குதித்தான்
மணிகள் ஆடும் தேரிலிருந்து
இன்னொரு தேருக்கு குதித்தான்
மதம் பொழியும் மலை போன்ற யானைகளில் ஏறி
பிரளய கால இடியென குதித்தான் .
பாடல்-849:
அனுமன் போர்க்களத்தில் திரிவது
நல்வினை தீவினை சாராத நடுவு நிலை நீங்காத
சான்றோரின் அறிவு போலிருந்தது
ஒப்பற்ற செயல் திறம் கொண்ட
செங்கோல் போல இருந்தது
வருகின்ற யாருக்கும்
தனது முலைகளை விலைக்குத்தர விரும்பும்
வேசையர் மனம் போல
காற்றாடியாகத் திரிந்தது.
பாடல்-850:
திருமாலின் அடியவர்கள்
திருமாலின் தன்மை பெற்று
எங்கும் பரந்து உறைவார்கள்
அது போலவே
அண்ணல் அனுமனின் பெருமை
விண்ணிலும் மண்ணிலும்
போரிட்ட அரக்கர்கள் கண்ணிலும் மனதிலும்
தனித்தனியே கலந்திருந்தது.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment