பாடல்-801:
கைகளால் கால்களால் வாலினால்
அனுமன் நெரித்த போது
மணிகள் பதித்த கிங்கரர் தலைகள்
நிலத்தில் சாய்ந்தன
தேவர்கள் அமுதத்தை கைப்பற்றிய போது
காவலாய் வந்த நாகர்களை
விரட்டிய கருடன் போல இருக்கிறான் அனுமன்!
பாடல்-802:
அழிக்க அழிக்க புறப்பட்டார்கள் அரக்கர்கள்
பகையினால் இன்னும் சூழ்ந்து கொண்டார்கள்
யானை போன்ற அரக்கர்கள்
மீன்கள் நிறைந்த கடல்சூழ் இலங்கையில்
பெருகிக் கொண்டே இருந்தார்கள்
அனுமனின் ஆளுமையோ
விலங்குகளை அடக்கும் சிங்கத்திற்கு சமம்.
பாடல்-803:
இத்தனை யுத்தம் புரியும்
அனுமனின் உடம்பு எப்படி உள்ளது?
அனுமன் தோளில் உள்ள விழுப்புண்கள்
எவை எவையால் உண்டாகின?
அரக்கரின் ஆயுதங்களால் அடித்தவையால்
எய்தவையால்
வெட்டியவையால்
குத்தியதால்
பொத்தியதால்
துளைத்தவையால்
பிடித்தவையால்
குடைந்தவையால் ஏற்பட்டது என்று
எண்ணிச் சொல்ல முடியுமா! முடியாது முடியாது.
பாடல்-804:
போரில் ஆரவாரம் செய்யும்
வெண்பற்கள் கொண்ட அரக்கர்கள் ஒலியாலும்
அச்சத்தாலும்
கடல்களுக்கே வியர்த்தன
அரக்கர்களின் ஆரவார ஒலியை
ஒரே ஒரு ஒலி மிச்சம் இருந்தது
அது
புகழ்ந்து ஆரவாரம் செய்யும்
தேவர்களின் பேரொலி!
பாடல்-805:
போரின் சின்னமான அரக்கர்கள்
போரில் சினமானார்கள்
கோடி கோடி படைக்கருவிகளால்
அனுமனின் தோளில் புண்களும் கோடி தந்தார்கள்!
துன்பங்கள் மட்டும் தனியாகவா வரும்?
இன்பங்களும் அதில் கலந்தவைதான் என்பதுபோல
தேவர்கள் தேவமகளிர்
தேவமுனிவர்கள் பொழிந்த மலர்களும்
அனுமனின் தோளில் கோடி கோடி விழுந்தன!
பாடல்-806:
அனுமனின் உடல் எத்தனை பெரிது!
எனினும் அது
ஒரு காற்றாடி போல இடமும் வலமும் பெயர்ந்தது
விண்ணிலே தாவியது
மண்ணிலே குதித்தது
அரக்கர்களை அயர்வுறச் செய்தது
அனுமனுக்கோ இந்த செயல்களால் -
வியர்வையும் வரவில்லை! பெரு மூச்சு கூட வரவில்லை
அறவீரன் அன்றோ!
பாடல்-807:
அரக்கர்கள் அனைவரும் இராவணன் கட்டளையால்
நஞ்சு உண்டவர்கள் போல
அனுமனுடன் போரிட்டு மடிந்தார்கள்
யாருமே அதில்
புறமுதுகிட்டு ஓடியவர்கள் இல்லை
இப்படிப்பட்ட சிறந்த வீரர்களே அரக்கர்கள்.
பாடல்-808:
போருக்கு வந்தனர் கிங்கரர்கள்
“ஏ!” என்று உச்சரிக்கும் மாத்திரை அளவில்
அனுமனால் மடிந்தனர்
நந்தவனப் பாதுகாவலர்கள்
விரைந்து ஓடிப்போனார்கள் நடுங்கினார்கள்
பின் வாங்கும் காலினர் ஆனார்கள்
நடுங்கும் கையினர் ஆயினர்கள்
அச்சம்
கழுத்தைப் பிடித்துத் தள்ளியது
ஆயிரக்கணக்கான பிணக்குவியலில்
புதைசேற்றில் கல் விழுவதுபோல் விழுந்து வருந்தினார்கள்.
பாடல்-809:
ஓடி பயந்து அலறி ஓடிய அரக்கர்கள்
இராவணன் முன் விம்மினார்கள்
வாயினால் எந்த வார்த்தையும் சொல்ல இயலவில்லை
கைகளினால் சைகையினால் காட்டி உரைத்தார்கள் சலித்தார்கள்
நான்கு திசையும் கண்டு மிரண்டார்கள்
இராவணன் புரிந்து கொண்டான் தோல்வியை.
பாடல்-810:
கருப்பு உடல் இராவணனுக்கு
மூன்று வினாக்கள் எழுந்தன
பத்து வாய்களிலும் கோபக்கனலுடன்
கேட்கின்றான் கேள்விகளை
“நான் அனுப்பிய கிங்கரர்கள் இறந்துஒழித்தனரா?
என் ஆணைக்கு
அடி பணியாமல் போருக்கு செல்லாமல் போயினரா?
தோல்வி அடைந்து நாட்டை மறந்து
வேறெங்கேனும் சென்று விட்டார்களோ
என்ன நடந்தது !”
பாடல்-811:
நந்தவனத்தின் பொறுப்பாளர் இராவணனுக்கு பதில் கூறுகிறார்
“கோபம் தலைக்கேறிய கிங்கரர்கள்
போருக்கு அஞ்சவில்லை
அத்தனை அரக்கர்களும் ஒருவர்விடாமல்
ஒரே ஒரு குரங்கினால் அழிந்து போனார்கள்
தன் அறிவு அறிந்தே பொய்ச்சாட்சி சொல்பவர்
குலம் அழிவது போல!”
பாடல்-812:
ஏவலுக்காக நின்ற
எட்டுத்திசை காக்கும் காவலர்களை நோக்கினான்
“இவர்கள் முன் இப்படி நடந்ததே!” என
இராவணன் சிந்தை நாணினான்
மூன்று உலகமும் விழுங்கும் கோபமுடன்
இராவணன் கூறுகின்றான்
“நடந்தது என்ன என அறியவில்லை போலும்”
பாடல்-813:
நந்தவனத்து நாயகர்கள்
பொறுப்பாளர்கள்
நடந்ததை மீண்டும் உரைக்கவில்லை
பயத்தினால் விம்ம ஆரம்பித்தார்கள்
பல இன மலர்மாலைகளும்
மகுடமும் புனைந்த இராவணன்
“அரக்கரை வீழ்த்தியது குரங்கு” என்பது கேட்ட செய்தியா?
கண்ணால் உண்ட செய்தியா? கூறுக!” என்றான்.
பாடல்-814:
“ஒருபுறம் ஓரம் நின்று
கண்களால் கண்டோம் மன்னா
தெளிந்த அலைகடல் போல்
சூழ்ந்து வளைத்த சேனையை
எப்புறமும் வளைத்தது ஒரு குரங்கு
மரத்தினால் அடித்தே கொன்றது
அனைவர் உயிரும் உண்டுவிட்டது
அந்தக்குரங்கு இனம்
அங்குதான் உள்ளது” என்றனர்.
சம்புமாலி வதைப் படலம்
பாடல்-815:
கூப்பிய கைகளுடன்
குன்று போல் தோள்களுடன்
பாம்பு போல் அஞ்சாமையுடன்
நிற்கிற சம்புமாலியை இராவணன் ஏவுகின்றான்
“குதிரைப் படையோடு செல்க
குரங்கினை வளைத்துப் பிடிக்க!
கயிற்றால் கட்டிக் கொண்டு வருக
என் மனச்சினம் தணித்திடுக ”
பாடல்-816:
சம்புமாலி வணங்கினான்
பெருமை உற்றான்
“எண்ண முடியாத அரக்கர்கள் இருக்க
எனக்கு இந்த ஆணை கிடைத்தது எனில்
என்னை விடபெருமை உற்றார் யார்!”
இலங்கை வேந்தன் இராவணனின் போர்ச்சினம்
வடிவெடுத்தது போல்
நடந்து செல்கின்றான் சம்புமாலி.
பாடல்-817:
அனுமனுடன் போரிடும் பெரும் பேறு பெற்ற
சம்புமாலியுடன் சென்ற படைகள் எவை எவை?
இராவணன் அனுப்பிய சேனை!
சம்புமாலியின் தந்தை பிரகதத்தன் அளித்த
மின்னல் ஒளி வாள் படை!
காவல் படை!
பாடல்818:
சம்புமாலியின் படையில்
சிவந்த கண்கள் வெண் தந்தங்கள் கொண்ட
முகபடாம் அணிந்த நெற்றியுடன்
மலை போன்ற யானைகள்
போர் அலங்காரத்துடன்
இடி போல் பிளிறுகின்ற யானைகள்!
மேகங்களின் முற்றுகையோ எனும்படி
யானைகள் வட்டமிட்டன
பெரிய தேர்களும் ஏராளம்
முத்துமாலைகள் சூழ்ந்த துகில் கொடிகள்
மிகப்பெரும் சக்கரங்கள் கொண்ட தேர்கள் !
பாடல்-819:
காற்றைப் ப்¢டித்து
காற்றின் திசைகளில் கால்களைப் பொருத்தி
உயிரையும் சேர்த்து
உயர்சாதி குதிரைகள் ஆக்கினார்களோ!
அதில் எமனை ஏற்றியது போல்
வீரர்களைச் செய்தார்களோ!
இது தவிர
காட்டுப்புதர்கள் , மலைகளிலிருந்தும்
படைகள் திரட்டப்பட்டன
அரக்கர் படைகளின் முகமும் கண்களும்
ஆண்புலிகளின் கூட்டம் ஒத்தன.
பாடல்-820:
போர்வீரர்களின் கருவிப்பட்டியல் மிகவும் நீளமானது
தோமரம்
உலக்கை
கூர்வாள்
கூர் கோடாலிகள்
வச்சிராயுதம்
அங்குசம்
அரத்தினால் கூராக்கிய வேல்
நெருப்பு ஒளி வீசும் சக்கரம்
வில்
தண்டாயுதம்
இரும்புத்தண்டுகள்
ஒளி விடும் இரும்பு நெருஞ்சி முள் படைகள்
பெரிய மரங்கள்
பாசக்கயிறு போன்ற படைக்கருவி
வளையங்கள்
கொடிய அம்புகள்.
பாடல்-821:
போர்ப்படைகள் செல்கின்றன
பாராட்டுக்குரிய வேல்கள்
எறியீட்டிகள் இரும்புத்தடிகள்
மழை பொழியும் கருமேகங்களில் மோதி
பொத்தல் செய்து மழை நீர் வழிகிறது!
நீர்த்தாரைகள் ஆயுதங்களில் பட்டு வழிகின்றன
கொடிக்கம்புகளில் சுற்றிப்பற்றும் கொடிகள் போல்!
பாடல் -822:
பலவகை இசைக்கருவ்கள் ஒலி
அழகிய சங்குகள் ஒலி
பொன் தேர்ச்சக்கரங்கள் உருளும் ஒலி
குதிரைகள் கனைக்கும் ஒலி
நெருங்கிய பொன் கிண்கிணி மாலைகள் ஒலி
நின்ற இடத்திலேயே ஒலிக்கும் வில் ஒலி
யானைகள் ஆரவாரிக்கும் ஒலி
எல்லாம் கூட்டாகி வானில் ஒலிப்பதால் -
தேவர்கள் தமக்குள் பேசும் பேச்சு
கேட்க முடியாமல் சிரமப்பட்டனர்!
பாடல்-823:
கடல் சூழ்ந்த பொன்நகர் இலங்கை உடைந்தது போல
சம்புமாலியின் சேனை சென்றது
அதன் பொங்கின புழுதிகள் பரவின
எளிய மலைகள் பொன் புழுதி படிந்த மேருமலை ஆனது
பழைய நகரங்கள்
பொன் புழுதி படிந்து சுவர்க்க நிறம் பெற்றன.
பாடல்-824:
கொடியவன் சம்புமாலியின் தேர் செல்ல
அதனைச் சுற்றி
அரக்கர்களின் தேர் பதினாயிரம்
யானைகள் இருபதினாயிரம்
குதிரைகள் நாற்பதினாயிரம்
காலாட்படை குதிரைகள் எண்பதினாயிரம்
பாடல்-825:
தேர்ப்படை வீரர்கள் என்ன சாதாரணமா?
தனுர் வேதம் எனும் வில் வேதம் கற்றவர்கள்
பல வகைக் கலைகள் அறிவர்
மிகுதியான வரங்கள் பெற்றவர்கள்
வீரவிழிகள் பெற்றவர்கள்
உறுதியான தோள்கள்
வீரவம்சம் கொண்டவர்கள்
அம்பறாத்துணி கொண்ட முதுகு கொண்டவர்கள்
கல் போன்ற மார்பினை
செம்பொன் கவசத்தால் மூடியவர்கள்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment