Thursday, 21 November 2013

சுந்தர காண்டம் 651 -675



பாடல்-651:

சீதா தேவியே!
துன்பம் தாங்க முடியாமல் தாங்கள் உயிர்விட்டு விட்டால்
இராமபிரான் ஏழு உலகங்களையும் அரக்கர்களையும்
தனது அம்பினால் அழித்தாலும்
பழியும் பாவமும்
நீங்காது அல்லவா?

பாடல்-652:
பொன் போன்றவளே
“மூவுலக அரக்கர்களையும் கொல்வேன்” என்று
ஓங்கிய போர் வில்லாளன் இராமபிரான்
உன்னை இப்படி ஒரு சிறையில்  இட்ட பிறகு
எப்படி சாந்த குணம் கொள்வான்!
வியப்பாயிருக்கிறது அம்மா உன் பேச்சு!

பாடல்-653:

இராமன் இன்னும் இலங்கையில் தோன்றவில்லை
உண்மைதான்
அதற்கு வலிமையான தகுந்த காரணம் இருக்கிறது
அரக்கர்களைக் கொல்லாமல்
அவன் கடும் சினம் தணியாது
உன்னை மீட்காமல் போனால்
உன்னை உயிரோடு மீட்காமல் போனால்
மண்ணும் விண்ணும் பழிக்காதோ!
அரக்கர்கள் தப்பிட வேறு இடம் ஏது!
பாடல்-654:
அம்மா!
ஆக்ஞை சக்கரம் உடைய இராமனின் அம்புகள்
குளிர் ஆழக்கடல் மட்டுமல்ல
பதினான்கு உலகங்களையும்
ஊழிக்கால நெருப்பு போல உண்டுவிடாதா!

பாடல்-655:

“தேவரின் பகையான அரக்கரைக் கொன்றான்
தீய செயல்களை எழாமல் தடுத்தான்
தகுதியானவர்களை மீட்டான்
நல்ல வினைகளையே எந்த நாளும்
நிலைத்து வாழ இடம் கொடுத்தான்” என்று புகழ்ச்சியாக
நம்புதலாக
எடுத்துக் கொள்ளக் கூடாதோ அம்மா!

பாடல்-656:

உன்னால் உலகில்
நல்ல அறம் உண்டானால்
அது நல்லது தானே?
நீ ஒருத்தி அரக்கர் துன்பம் நீங்காமல்
சில நாட்கள் பிரிவு இடர் தீராமல் தங்குவதால்
உலகினர் அனைவரும்
நல்ல நாள் காணப்போகிறார்கள் என்றால் நல்லது தானே!


பாடல்-657:

மனம் புளித்து வெறுக்கப்படும் முட்கள் போன்ற அரக்கர்கள்
உடம்பு புண்ணாகி
அவர் தம் இரத்தத்தில்
பேய்கள் குடைந்து குடைந்து
குளிக்க வைக்கும் வரை இராமபிரான் விடப்போவதில்லை
இராவணனுக்கு அஞ்சி ஒளியும் தேவர்
அச்சம் நீங்கி
மணம் மலர களிக்கும் நல்வினை நடக்கத்தான் போகிறது
அதை நீ காணாயோ.

பாடல்-658:

ஊழிக்காலத்தின் இறுதிக்காலத்தில்
இடி விழுந்தது எப்படியோ அப்படிப் பாயும்
இராமனின் ஒளி மிக்க அம்பு!
அந்த அம்பு பிளந்து
புண்ணிலிருந்து பாயும் குருதிப் பெருக்கினால்
அலைகடல்கள் ஏழும் ஒன்றாக நின்று
பேரொலி இரைச்சல் கேட்பாய்
அதனை நீ காணாயோ!

பாடல்-659:
கர்ப்பம் கொண்ட அரக்கியர்கள்
பெரும் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள்
சோர்ந்து போவார்கள்
தமது தாலிகளை அறுத்து எரிவார்கள்
அவை
வான் உயரம் எழுந்த மலையினை விஞ்சும்
தாண்ட முடியாத வளர்ச்சியோடு குவியும்

பாடல்-660:

வானம் வரையில் நீண்ட பேய்கள்
கொடி இறகுகள் கொண்ட கழுகுக் கூட்டங்கள்
அரக்கர்களின் இரத்த வெள்ளத்தில் மூழ்கும்
அந்த இரத்தக்கறை நீங்க
அரக்கியர்களின் கண்ணீரில் மூழ்கும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-661:

இராமன் வெல்லும் காலத்தில்
கைகளினால் அடித்து ஒலிக்கப்படும் மத்தளங்கள் ஒலி
கைகளினால் தடவி ஒலிக்கப்படும் யாழ்கள் ஒலி
பாட்டிசை ஒலி கேட்பாய்
இது மட்டுமல்ல
தேவமங்கையர் நடனமாடிய
இலங்கையின் ஆடல் அரங்குகளில்
குரங்குகள் களித்துக் கூத்தாடுவதும் காண்பாய்.

பாடல்-662:

குற்றம் புரிந்த அரக்கர்களின்
புண்கள் இரத்தம் சொரிந்து
அலை பொருந்திய ஆறாகும்
ஆறு இழுப்பதால்
மலைகள் ஒத்த பெரிய உருவங்கள் மிக நெருங்கும்
அதனால்
பெரிய கடல் தூர்ந்து மேடாகும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-663:

சீதை ஒரு பெரு நெருப்பு
இலங்கையின் நடுவில் தங்கியதால்
இராமனது அம்பு எனும் பெருங்காற்று வீசி
தீவினை அரக்கர்கள் எனும் கரிகள் வெந்து சாம்பலாகிச் சிதறும்
அப்போது
இலங்கை எனும் பொன் உருகுவதை நீ காண்பாய்,.

பாடல்-664:

இராமனது அம்பினால்
இராவணன் இறந்து விழுவான்
காக்கைகள் அவன் தலையில் தாவும்
நல் வினைப்பயன் போன்ற சீதையாம் உன்னை
நோக்கிய கண்கள் இருபதினையும்
கூர்மையான மூக்கினால் கொத்தி உண்ணக் காண்பாய்.




பாடல்-665:

முற்காலத்தில்
இராவணனிடம் தோற்றுப்போன
திசை யானைகள் நாணமுற்று
முகம் திருப்பி நின்றன
நஞ்சாம் இராவணன் தலைகள்
இராமனது அம்பினால் அறுபட்டு உருண்டு ஓடி
திசை யானைகளின் கால்களை அடையும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-666:

நீலவானத்துக்கு வேர்த்தது போல
ஆங்காங்கே தோன்றும்
அழகிய கொடிகள் உடைய
இலங்கை நகரில்
இராமபிரான் அம்பு மழை பொழிவான்
கொழுத்த இரை கிடைக்கும் என நம்பும் பேய்கள்
புழுதியுடன் கூத்தாடுவதை
நீ காணத்தான் போகிறாய்.

பாடல்-667:

அரக்கர்கள் கரு நீல நிறமானவர்கள்
அவர்களது இரத்த வெள்ளம்
உப்பு நீர்க்கடல் நிறைந்து
ஊரெல்லாம் நுழைவதை நீ காண்பாய்
உலகம் கடைசியாக அழியும் வினாடியிலும்
உயிர் தின்னும் ஆசை விடாத எமனுக்கு
அளவுக்கு அதிகமாக
உயிர்களைத் தின்றதால் வெறுப்பு வந்து
முன்னர் தின்ற உயிர்களை
வெளியில் கக்குவதை நீ காண்பாய்.

பாடல்-668:

நல் மணம் வீசும் கற்பகமரங்கள் நிறைந்த
சோலையில் உள்ள குளங்களில்
தெய்வ மகளிர் போன்ற பெண்களோடு
அரக்கர்கள் குளிப்பார்கள்
அப்போது
ஒரு குரங்கின் வளைந்த வாலை
இன்னொரு குரங்கு பிடித்துக் கொண்டு
மாலை போல கூட்டமாகக் குளிக்கும்.
அதை நீ காண்பாய்.

பாடல்-669:

எதற்கு இன்னும்
பலப்பல சொல்வானேன்?
இராமனது தெய்வ அம்புகள்
இலங்கை அரக்கர்களை கொல்லும்
பிறகு அதுவும் தாண்டி மூன்று உலகிலுமுள்ள
அரக்கர்களும் இறப்பார்கள்
அதுவும் நீ காண்பாய்.

பாடல்-670:

இன்னும்
ஒரு முழு மாதத்திற்கு
துன்பத்தில் நீ உழல வேண்டியதில்லை
யான் இராமனைச் சென்று காண வேண்டிய
ஒரு செயல் தான் தேவை
அதற்குப் பின்
ஆண்மையாம் இராமபிரான்
ஒரு கணமும் தாமதிப்பானோ.

பாடல்-671:

“இராமனுக்கு உயிர் உண்டு” என்று
சொல்லும் அளவு தான்
அவனது உயிரின் நிலைமை உள்ளது
இராமபிரான் செல்லும் வழியில் உள்ள
காடுகள் முழுதும்
பூக்கள் முழுதும்
தளிர்கள் முழுதும்
சோலைகள் முழுதும் பொரிந்து தீய்ந்து விட்டன
இராமனின் திருமேனியின்
பிரிவு எண்ணங்கள் தீண்டியதால்!




பாடல்-672:

சுருங்கக் கூறினால்
இராமனுக்கு இப்போது எந்த உணர்வும் இல்லை
சோகம் என்பது
அறிவு தெளிந்து இருப்பவருக்குத் தானே?
மேகம் வந்து இடிந்து வீழ்ந்தாலும்
ஐந்து தலைப்பாம்பு
தோள்களிலும் மார்பிலும்
பற்கள் அழுந்தக் கடித்தாலும்
இராமனுக்கு எந்த உணர்வும் தோன்றாது!

பாடல்-673:

மத்தினால்
கடையப்படும் தயிர் போல
அவன் உயிரும் புலன்களும் தள்ளப்படுகின்றன
அதனால்
பைத்திய அளவும்
உனது பிரிவில் பிறந்த வேதனை அளவும்
எவ்வளவு என  எண்ணிட முடியுமோ.

பாடல்-674:

“இப்படிப்பட்ட நிலை உடையவன்
உனைப் பிரிந்து உயிர் தரிப்பான்
என நீ எண்ணுவது பொய் நிலை!
யான் புகல்வன அனைத்தும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல காட்டுவேன்
மெய்நிலை உணர்ந்து
எனக்கு விடை தந்தருள்க” என்றான்.

பாடல்-675:

அன்னையே
 இராமனின் தேவியே
தீர்த்தனாகிய இராமனும்
குரங்கு குல அரசன் சுக்ரீவனும்
உன்னைப் பற்றிய வார்த்தைகள் கேட்டு
மகிழ்வதற்கு முன்னமே
பெரிய கடல் தூர்க்கப்படப் போகிறது!
இலங்கையை முற்றுகையிட்ட
குரங்குகளின் ஆரவாரம் கேட்கப் போகிறது
அது கேட்டு
நீ மகிழ்ந்திருக்கப் போகிறாய்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment