Thursday, 7 November 2013

சுந்தர காண்டம் 601-625


பாடல்-601:

சீதை உரைத்ததும்
பெருந்தன்மை கொண்ட அனுமன்  திருவடி தொழுதான்
“அருந்ததி போன்றவளே
இராமனின் அடியவராக
குரங்குக் கூட்டத்தின் தலைவர்கள்
கடல் மணலை விட பலராவர்
அந்த வானரக்கூட்டங்கள்
ஏவிய வேலைகள் செய்யும் தன்மை உடைய ஒருவனாக வந்துள்ளேன்”
என்றான் அனுமன்.

பாடல்-602:

அன்னையே கேள்
எமது இராமனின் வானர சேனை அளவு எவ்வளவு?
எழுபது வெள்ளம்!
இந்தக் கடல் நீர் வெள்ளம் ஒப்பிட்டால் பள்ளத்து நீர்!
அவர்கள் அனைவரும்
ஒரு கையால் குடிக்கவும் கடல் போதாது
இலங்கை இன்று வரை தப்பிப் பிழைக்க காரணம்
அரக்கர் காவல் செய்யும்
இலங்கை இருக்கும் இடம் தெரியாமை தான்
தெரிந்துவிட்டால் பிழைக்காது இலங்கை.

பாடல்-603:
வாலியின் சொந்தங்கள் பல
வாலியின் தம்பி சுக்ரீவன்
வாலியின் மகன்கள்
அங்கதன்- வசந்தன் - துமிந்தன்
வெற்றி உடைய குமுந்தன்
நீலன் -இடபன்
குமுதாக்கன்- பனசன்
சரபனுக்கு மூத்தவனாகிய சாம்பவான்
எமனை நிகர்த்த துன்மர் மற்றும் சாம்பன்
கவயன் - கவயாக்கன்
உலகெல்லாம் அறியும் உத்தமசங்கன்
வினதன் - துவிதன் - நளன்.

பாடல்-604:
இது தவிர படைத்தலைவர்களும் பலர்
தம்பன் - ஒப்பற்ற தூமன் - ததிமுகன் - சதவலி
“இவர்கள் படைத்தலைவர்கள் மட்டுமல்ல
இராமனின் அம்பு போல் தப்பாமல் உதவுவர்
இராமபிரான் தலைமை கீழ் இயங்கும்
வானரங்கள் தொகைக்கு எல்லை இல்லை எனலாம்
கச்சணிந்த முலையாய்!
 இங்குள்ள அரக்கர்களின் பெருந்தொகை
இராமனது துணை வலிமை முன்பு குறுந்தொகை!”
என முடித்தான் அனுமன்.

-உறுக்காட்டு படலம் நிறைவு.



சூளாமணிப்படலம்

பாடல்-605:

அனுமன் கொண்ட உணர்வுகள் இவை:-
“உலகின் அம்மா இவளுக்கு
உவமை சொல்தல் எளிதோ?
தாமரை வாழ் இலஷ்மி போன்ற
இவள் இன்னல் கொள்கிறாள்.....
அண்டம் முதலான சகலத்திற்கும் நாயகனாம்
இராமனின் ஆவி இவளை
எடுத்துக் கொண்டு இராமனிடம் செல்தலே கருமம்”

பாடல்-606
அனுமன் மொழிந்தான்:
“அடியேன் உரை கேட்டு கோபிக்க வேண்டாம்
இராவணன் கொன்றபின்
அவனை வெல்லுவதில் பலனில்லை
பல வார்த்தைகள் பேசுதலில் என்ன பயன்?
இராமனின் எதிரில் நின்னைக் காட்டுவேன்
நீயே காண்க !அதற்கு இதுவே காலம்”

பாடல்-607:

“பேரழகு பொற்கொடியே
ஒரு நொடிதான்
 ஒரே ஒரு நொடி தான்
இராமன் தங்கியுள்ள
மலையிலே உன்னோடு குதிப்பேன்
மென் மயிர் அடர்ந்த
என் தோளில் அமர்ந்து இனிய உறக்கம் கொள்!”

பாடல்-608:
சுருள் கூந்தலாளே...நெடியோன் இராமன் முன்
நினது நிலைமை கண்டும்
வெறும் கையோடு எப்படிப் போவேன்
அரக்கர்கள் தொடர்ந்தால்
சிதைந்து சிதறும்படி அழித்து
மனச்சினம் முடிப்பேன்

பாடல்-609:
“இலங்கையோடு பெயர்த்து எடுத்துச் செல்”
என்றாலும் பெயர்ப்பேன்
வலது கையால் ஏந்துவேன்
இடக்கையால் எதிரிகளைப் பொடிப்பேன்
வீரக்கழலும் வில்லும் கொண்ட
இராம இலக்குவர் திருவடிகளில்
தாழ்ந்து நிற்பேன்
இது எனக்கு ஒரு வேலையே அல்ல”

பாடல்-610:

“அருந்ததி போன்றவளே
அழகிய இராமன் அருகில் சென்று
உன் உயிர் மருந்து அனைய தேவி
நெடிய வஞ்சனை கொண்டோர் சிறையில்
பெரிய துயரத்தோடும்
விடுபட வழியில்லாமல் இருந்தான்” எனச் சொன்னால்
என் அடிமைத் தொழிலால் என்னதான் பயன்.

பாடல்-611:
இராமபிரானிடம்
புண்படாத தோள்களுடன் சென்று
அரக்கர்கள் வலிமை சொல்வேனா?
என் உயிர் பாதுகாப்புக்காக
சீதையைக் கண்டு வரவில்லை என்பேனா?
சீதையைக் கண்டு மட்டும் வந்தேன் என்பேனா?

பாடல்-612:
“அன்னை சீதையே...
இங்குள்ள மதில் சூழ் இலங்கையை
நெருப்பால் உருக்க வேண்டுமா?
வலிமைமிகு இராவணனை அழித்து
அரக்கர் குலம் முழுதும் கொன்று
போர்த்தொழில் செய்க !பிறகு செல்க” என்று
கட்டளையிட்டாலும் செய்கிறேன் இப்போதே! இன்றே!”

பாடல்-613:
“பிறை நெற்றி பெற்றவளே
நான் உன்னை எடுத்துச் செல்வேன்
இராமபிரானுக்கு மனத்துயர் நீங்கித் தெளிவு வரும்
பிறகு
அரக்கர் கூட்டம் முழுதும் அழியும்
கொன்று அழிக்கப்படும்
அழிவற்ற இந்த உலகுக்கு
அவர்கள் செய்த துயரை நீக்கிட அது நல்லதாகும்.

பாடல்-614:
“இனிய சொற்கள் பேசும் இளவஞ்சிக் கொடியே
அடியேன் தோளில் விரைந்து ஏறுக
இனி சொல்லக் கூடியது வேறொன்றும் இல்லை
இதனை நான் செய்த நல்வினைப் பயனால்
அடியேனுக்கு அருள வேண்டும்!” என
சீதையின் திருவடி வணங்கினான்.

பாடல்-615:
அனுமன் கூறும் நல்வார்த்தைகள்
தாய்ப்பசுவுக்கு முன்னே செல்லும்
கன்று ஒத்திருந்தது
அதனைக் கேட்டாள் தூய சொற்கள் கொண்ட சீதை
“சொன்னதை சொன்னபடி செய்தல்
இவனுக்கு அரியதும் அல்ல சிரமமும் அல்ல” என நினைத்து
பின் வருவன கூறினாள்:-

பாடல்-616:
“அனுமனே! அன்பின் வடிவனே
உனது ஆற்றலின் முன்
இது அரிய பெரிய செயல் அல்ல
நீ நன்கு ஆராய்ந்துள்ளாய் .. செய்தும் முடிப்பாய் எனினும்
பெரிய அறியாமையோடு
பேதைத் தன்மை மிக்க
பெண்மைக்கே உரிய
சிறிய அறிவும் என்னிடம் உள்ளது”

பாடல்-617:
“என்னை எடுத்துச் செல்லும்போது
கடல் நடுவில் அரக்கர் சூழ்ந்தால்
போரிடவும் முடியாது
என்னைக் காப்பாற்றவும் முடியாமல் தடுமாறும்
துணையற்றவன் ஆவாய்”

பாடல்-618:

“இன்னொரு  காரணமும் உண்டு
இராமபிரான் வெற்றி வில்லுக்குப் பழி உண்டாகும்
என்னை வஞ்சித்த
நாய் போன்ற இராவணனின்
வஞ்சகத் தொழிலையே
நீயும் செய்ய நினைத்துவிட்டாயா?
இதனை நல்ல செயல் என்பார்களா?யோசி”

பாடல்-619:
“போர் நிகழ வேண்டும்
எம் கொற்றவன் வில் தொழில் நடக்க வேண்டும்
தேவர்கள் பார்க்கும்போதே என் உடலை
காம இச்சையுடன் நோக்கிய
அரக்கனின் கண்களை
காகம் குத்தித் தின்ன வேண்டியது நிகழாமல் இன்னும்
நான் உயிருடன் இருக்கிறேன் என்பது பொய்!”

பாடல்-620:
நாணமில்லாத அரக்கியர்கள்
சூர்ப்பனகை போல மூக்கு அறுபட வேண்டும்
அவமானம் அடைந்து
மங்கல நாண் அறுபட வேண்டும்
இதனை இராம இலக்குவர் வில் தான் விளைவிக்கும்
அது வரை
என் நாணம் சிறப்பு பெறாது.

பாடல்-621:
“பொன்மயமான திரிகூட மலைமேல்
அமைந்த இலங்கை
இனி
பகைவர்களின் எலும்பு மலை பெறச் செய்தால் தவிர
எனது நற்குடிப்பிறப்பும் ஒழுக்கமும்
மாசற்ற கற்பும்
மற்றவர்களுக்கு எப்படி காட்டுவேன்?”

பாடல்-622:
“பிறருக்கு
அல்லல் தருவதையே தொழிலாகக் கொண்ட
அரக்கருடைய இலங்கை மட்டுமல்ல
எல்லையிலா உலகங்கள் யாவும்
என் சொல்லினால் சுடுவேன்
அப்படிச் செய்தால்
அது
தூயவன் வில் ஆற்றலுக்கு அழுக்கு என
அச்செயலை செய்யாமல் வீசி விட்டேன்”

பாடல்-623:
“என்னை நீ எடுத்துச் செல்லாதே!
காரணம்  இன்னொன்றும் உண்டு
என் உரை கேள் அனுமனே மெய்யனே
ஐம்பொறிகள் அடங்கிய உன்னையும்
உலகம்
ஒரு ஆண் என்று கூறும்
ஆதலால் இராமனின் திருமேனி தவிர
உன் உருவம் தீண்டுதல் தகுமோ?

பாடல்-624:
“அற்பன் இராவணன்
இவ்வளவு நீண்ட காலம் என்னைத் தீண்டாமல் உள்ளான்
தீண்டியிருந்தால் அவன்உடம்பில் உயிர்
கண் இமைக்கும் முன்னே பொருந்தாமல் போயிருக்கும்
அதனால்தான் -
வலிய கையினால்
நிலம் பெயர்த்து
நிலத்தோடு என்னை எடுத்துக் கொண்டு போனான்”

பாடல்-625:

தாமரைப்பூவில் தோன்றிய பிரம்மனின் சாபம் ஒன்று
 என் உயிரைக் காத்து வருகிறது
“இராவணனே...
உன்னைக் கூடும் விருப்பமில்லாப் பெண்களைத்
தீண்டினால்
தெய்வத்தன்மை மிக்க உன் பத்து தலைகளும்
நிலத்தில் சிதறி விழும்”
என்பதே அது!

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment