பாடல்-576:
எங்கள் குலத்தலைவன் சுக்ரீவன் அறிவீர்களா?
வானில் ஒற்றைச் சக்கரத்தில் செல்லும்
சூரிய குலத்துக்குத் தலைவன்
அவன் வாழும் ருசிய முக மலைக்கு
இராமனும் இலக்குவனும் வந்தனர்
இராமபிரானின் உயிர் நண்பனாக
சுக்ரீவனும் தேவர்களும் நட்பு கொண்டனர்.
பாடல்-577:
உயர் வேதங்களும் உயர் ஞானங்களும்
காணமுடியா இராமன்
சீதையைத் தேடி வந்ததைக் கூறினான்
தன் துன்பம் கூறி மனம் புண்பட்டான்
மனநோய் மிகுதியாக விம்மினான்
அப்போது
குரங்குகள் நாங்கள்
நீ விட்டுச்சென்ற அணிகலன்கள் காட்டினோம்
அதைக் கண்டு மயக்கமுற்று விட்டான்.
பாடல்-578:
ஒளிமிகு வேல் படை மிக்கவன் இராமன்
சோர்வின் உச்சி அடைந்து விட்டான்
தூயவளாகிய உன் நகைகள் காட்டினோம்
அமுதம்தெளித்தாலும்
தீராத பெரிய நோய் அவனை அடைந்தது
ஆறாப்பிணி கொண்டனன்
எவரால் அதனைப் போக்க முடியும்.
பாடல்-579:
மனம் அயர்வு உற்று மிகச் சிரமப்பட்டு
மனம் தெளிந்தான்
ரிஷிய முக மலைக்கு அப்பால்
கிட்கிந்தம் எனும் மலை உள்ளது
அங்கு தான் வாலி வாழ்கிறான்
தனது வாலிலே இராவணனைக் கட்டித் தொங்கவிட்டு
கடல்களைத் தாவி
வலிமையோடு வாழ்பவன் வாலி.
பாடல்-580:
அத்தனை வலிவு மிக்க வாலியை
ஒரே அம்பினால்
வீழ்த்திய வலிமையாளன் இராமன்!
அது மட்டுமா
வாலி அபகரித்த அரசை மீட்டு
சுக்ரீவனுக்கே மீட்டும் அளித்தான்
“மழைக்காலம் முடிந்ததும்
சீதையைத் தேடிட
சேனையோடு உதவுக” என்றான் இராமன்
அதன் பின் நான்கு மாதங்களும் தங்கியிருந்தான்.
பாடல்:581
முன் நடந்ததும் அனுமன் அறிவான்
மூன்று காலமும் அறிவான்
அப்படிப்பட்ட அனுமன் சொன்னவை இவை:-
“வில் நெற்றி பெற்ற சீதா தேவியே
சுக்ரீவன் படைகள் வந்துசேர நான்கு மாதம் ஆகின
நான்கு திசைகளும் அதற்கு அப்பாலும் தேடிட
எம் இனம் அனுப்பினான் இராமன்
தெற்கு திசையில் தேட எனக்கு உத்தரவு
இதுவே இதுவரை நிகழ்ந்தது”
பாடல்: 582
அன்பன் அனுமன் உரை கேட்டாள் சீதை
உள்ளம் நொந்தனள்
சிறந்த பொறுமை மிக்க இராமனுக்கே
இத்தனை துன்பமா என நினைத்தனள்
மனம் இரங்க இரங்க அவள் எலும்புகள் உருகின
அவள் இதயம்
இன்பமும் துன்பமும் ஒன்றாய் சுமந்தன
தனக்காக
இராமன் பிரிவில் உருகுகிறான் என்ற இன்பம்
இராமன் தன்மீது
இத்தனை அன்பு வைத்து துயரம் கொள்கிறானே என்பதால் துன்பம்!
பாடல்:583
துன்புறும் மனமே கொண்ட சீதை
கண்ணீர் வழிந்து வழிந்து
வெப்பமான உந்திச்சுழியில் உலரும் சீதை
“ஐயனே ! அளக்கமுடியாத கடலை
எப்படிக் கடந்து வந்தாய்?” என்றனள்
பாடல் : 584
“ஒய்வில்லாத மாயை எனும் பெரும் கடலை
உனது இராமனின் திருவடி பற்றுவோர் எளிதாக
கடக்கிறார்கள் அல்லவா? அதுபோல்நானும் வான் காற்றில் ஏறி
கருங்கடல் கடந்தேன்” என்றான்
பாடல்-585
முத்துக்களைவிட
நிலவைவிட
அழகிய புன்முறுவல் பூக்கும் சீதை கேட்டாள்:
எப்படி உன் உடல் இத்தனை சிறிதாயிற்று?
அணிமா முதலிய எட்டுவகை சித்திகள் கற்றாயோ?
உன் தவத்தின் பயனோ! எனக்குச் சொல்க ”
பாடல்: 586
எப்படி எனக் கேட்கும்போது
வீரன் ஒருவன் பதிலா சொல்வான்? செய்தே காட்டினான்
ஆம் -
சிறிய மூர்த்திவடிவம் விட்டு பெரும் தோளுடன்
விஸ்வரூபம் எடுத்தான் விண்ணை முட்டினான்
தலை நிமிர்ந்தால்
உச்சி வான் இடிக்கும் என்கிற அளவு
உயரம் அடைந்தான் அனுமன் சற்றே தலை வளைந்தான்
பாடல்-587:
அனுமனின் பெரும் உருவம் வளர்ந்து கொண்டே வந்தது
நன் நெறியால் அடையும் பெருமை குணம்
ஐம்பூதங்களிடம் மட்டும்தானே இருக்கும்?
“இப்போது அனுமனிடம் உள்ளதே!” என
வியக்கும் வண்ணம் வளர்ந்தது.
பாடல்-588:
வானைத் தொட்டு வளரும் அனுமன்
தனக்குத் தான் மட்டுமே உவமையாகிய
பொன்மயமான மேருமலை என உயர்கிறான்
அவனைச்சுற்றிலும்
முன்பும் பின்பும் உள்ள நட்சத்திரங்கள்
மேருமலை மரங்களைச் சுற்றிலும்
மின்மினிப்பூச்சிகள் பறப்பது போல் உள்ளன.
பாடல்-589:
அனுமனின் விஸ்வரூபம்
கண் கடந்த காட்சி
அறிவு கடந்த காட்சி
அனுமனின் இரண்டு குண்டலங்களின் ஒளி
வானின் ஒன்பது கோள்களில்
சூரியன் சந்திரன் ஒளியுடன் பகை கொண்டது போல்
அதிகமாக ஒளிர்ந்தன.
பாடல்-590:
அனுமனின் விஸ்வரூபம்
திருமாலையே அசர வைத்தது
ஆம்!
திரிவிக்கிரம அவதாரத்தால்
எல்லா உலகங்களையும் அளந்த திருமால்
“வலிமையிலாத குரங்கு இது” என
அலட்சியமாக எண்ண முடியாத அனுமனை
அச்சு ஆணி போல் அமைந்த அனுமனை
நன்கு நோக்கினான்
“மிக உயர்ந்த பெருமைகள் எல்லாம்
ஒரே இடத்தில் இருந்து விடாது” என எண்ணியபோது
வெட்கம் அடைந்தான்.
பாடல்-591:
எட்டுத் திசைகளிலும் உள்ள
உலக உயிர்கள் அனுமனைப் பார்த்தன
மேலுலக அமரர்கள் தேவர்கள்
அனைவரையும்
தனது தாமரைக் கண்களால் அனுமன் பார்த்தான்.
பாடல்-592:
மேல் நோக்கி அனுமன் வளர
விண் வளர உயரும் போது
அனுமனின் இரண்டு பாதமும் அழுத்தமாக
இலங்கையை அழுத்தின
அவ்வூரின் நிலத்தில்
கடல் அலைகள் தழைந்து நுழைந்தன
புரண்டன மீன் இனங்கள்.
பாடல்-593:
அனுமனின் பெரிய உருவம்
விரிந்து விரிந்து விரிந்து
அவன் தாமரைத் திருவடிகளும்
காணமுடியாமல் மறைந்துவிட்டது!
“இனி அரக்கர்கள் இறப்பார்கள்” என மகிழ்வுற்றது
வஞ்சிக் கொடி போல் இடையும்
மாசற்ற கற்பும் கொண்ட சீதை தெய்வம்.
இன்னொன்றும் நினைத்தது
“உன் மகா உருவத்தை ஒடுக்க
எனக்கு அச்சமாய் உள்ளது அனுமா!”
பாடல்-594:
சீதை தெய்வம் இப்போது பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது
தூணைக் காட்டிலும் வலிவுடைய இராமன் தோள்களை
தழுவியது போன்ற மகிழ்ச்சி நிலையில் இருக்கிறது
தளிர்க்கும் சிந்ததையுடன் அது அனுமனிடம் சொன்னது
“அனுமனே உனது விரிந்த மகா உருவை காணும்
வல்லமையோடு காணும் உயிர்த்தொகுதி
உலகில் எதுவுமே இல்லை! அதனால் குறுகுக”
பாடல்-595:
வானவெளி கடந்து
வளர்ந்த ஆண்மை அனுமன்
“நீ அருளியபடி நடப்பேன்” என
தன் உருவம் ஒடுக்கி
அனைவரும் காணும்
சிறிய உருவம் கொண்டான்
தூண்டாமலே துலங்கும் விளக்கு போன்ற
சீதை அப்போது கூறியவை இவை:-
பாடல்-596:
“காற்றின் கடும் வேகம் பெற்றவனே
உலகை
மலைகளோடு பெயர்த்து எடுத்தாய்
மேலுலகைப் பொடி செய்தாய்
ஆதிசேஷனை ஒரு கரத்தால் பற்றி இழுத்தாய்
நினது அளப்பரிய ஆற்றலை விளக்க இயலுமா?
நீ
கடலின் மீது நடந்தாய் என்பதும் கூட
நின் பெருமைகளோடு ஒப்பிட்டால்
எளிய செயல்களே”
பாடல்-597:
“நெடிய கரங்கள் கொண்ட வீரா!
சக்கரம் ஏந்திய தடக்கை கொண்டவன் இராமன்
ஆண்மை மிக்கவன் இராமன்
அவனது அருளும் புகழும் பல யுகங்கள்
நிலை பெறச் செய்ய நீ ஒருவனே போதும் என ஆனாய்
இலங்கை ஏழுகடலுக்கு அப்பால்பட்டு இருந்திருந்தால்
உனது பெருமைக்கும் உனது தாண்டுதல் வலிமைக்கும்
பொருத்தமாக இருந்திருக்கும்!”
பாடல்-598:
உனது உருவம் எத்தகையதோ
அத்தனை பெரிது
உனது அறிவும் ஆற்றலும்!
ஐம்புலன் அடக்கும் திறமை
அதுவும் அப்படிப்பட்டதே!
மனத்தெளிவின் பயன் எண்ணமகிய நீதியும்
அப்படிப்பட்டதே!
பிரம்மன் முதலிய மேலோர்களுடன் உன்னை ஒப்பிட்டால்
அவர்கள் நல்ல குணங்களே இல்லாதவர்கள் ஆகிவிடுவர்!
பாடல்-599:
“மின்னல் போன்ற பற்கள் கொண்ட
அரக்கர் வலிமை நோக்கி
எனது ராமன் போரிடத் துணையாக
இலக்குவன் மட்டும் தானே உள்ளான்? என்ன செய்வது?
எப்படி வெல்லுவான்” என்று கலங்கினேன்
இன்று ஐயம் தெளிந்தேன்
உயிர் பெற்றேன்
நீயே என் இராமனின் துணை என்றால்
அரக்கர்களின் கதி அதோகதி !
பாடல்-600:
அழகின் ஒளி முகம் கொண்ட
திருமகள் சீதை
“இனி நான் இறந்தாலும் தவறில்லை
என்னை வருத்திய அரக்கரை
வேரோடு அறுத்தவள் ஆனேன்
இராமனின் திருவடிகள் அடைந்தேன்
இனி புகழ் மட்டுமே அடைவேன்
இழிவான பழி தீண்டேன்” என்று மனம் மகிழ்ந்தாள்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment