பாடல்-551:
சீதை உணர்வுகள் பெயரிட முடியாமல் விம்மின
இது -
பிறந்த பயன் அறியாது இறந்தவர்கள்
பிறவிப் பயன் அடைந்த மகிழ்ச்சிக்கு சமமோ!
விலை உயர்ந்த பொருளை மறந்தவர்கள்
பல்லாண்டுகள் சென்று அறிந்த உணர்வோ!
உடலைத் துறந்த உயிர்
மீண்டும் வந்து ஒட்டிய திறமோ!
பாடல்-552:
மாணிக்கம் இழந்து
மீண்டும் பெற்ற
புற்றுப்பாம்பென மகிழ்வு பெற்றாள்!
பழைமை மிகு சொத்துக்கள் இழந்து
மீண்டும் பெற்றவரை ஒத்தாள்!
மலடி ஒருத்தி குழந்தை பெற்ற நிலைக்கு உவமை ஆனாள்
குருடாய் உழந்து
விழி பெற்ற ஓர் உடல் ஒத்தாள்
பாடல்-553:
சீதை
அனுமன் தந்த மோதிரம் வாங்கினாள்
முலைக்குவையில் வைத்தனள்
தலையினால் தாங்கினாள்
கண்களில் ஒற்றினாள்
தோள்கள் பூரித்தனள் மெலிந்தனள்
வெப்பத்துடன் ஏங்கினள் உயிர் பெற்றனள்
அந்த உணர்வு
இந்த உணர்வு தான் என அறுதியிட்டுக் கூற இயலுமோ!
பாடல்-554:
அந்த மோதிரத்தை முகர்ந்து பார்த்தாள்
தன் முலை மேல் வைத்து
அழுத்தித் தழுவிக் கொண்டள்
ஒளிரும் ஆனந்தக்கண்ணீர் ததும்பினாள்
வெகு நீளமான நேரம் அதையே நோக்கினாள்
ஏதேதோ அதனுடன் பேச விரும்பினாள்
ஆனால் பேசமாட்டாள்
மேலும் மேலும் விம்மல் கொள்கின்றாள்
ஆனால் தன்னுள் விழுங்குகின்றாள்
பாடல்-555:
அந்த மோதிர ஒளியால்
சீதையின் நீண்ட கண் பொன்நிறமானது
மின்னல் போன்ற உடல்
பொன் நிறமானது
இராமனின் மோதிரம் தீண்டிய உடன்
பொன்னாக மாற்றும்
ஸ்பரிச வேதி எனும் தெய்வமணியோ!
பாடல்-556:
இராமனது மோதிரம் வாழ்க வாழ்க
பசியால் இடர்பட்டு உழந்தவர்கள்
அடைந்த அமுது அது
இறக்கும் நிலையில் உள்ளவர்கள்
உயிர் பிழைக்க வைத்த மருந்து அது
இல்லறம் ஏற்றவர் போற்றும் விருந்தினர் அது
பாடல்-557:
சீதை
அம்மோதிரமுடன்
இப்படியான தன்மைகள் பெற்று
உயிர் இன்பம் பெற்று
முத்த நகை உடையவளாகி
விழி நீர்
முலை முகட்டில் தத்திப்பாய்ந்தது
மழலைச் சொற்கள் தள்ள
“உத்தமா! உயிர் தந்தாய்” என இன்னமும் கூறுவாள்.
பாடல்-558:
“மூன்றுலகமும் படைத்த பிரம்மனுக்கு முதல்வன்
இராமனின் தூதனாக வந்தாய்
உன் செம்மையால் உயிர் தந்தாய்
உனக்கு எளிதாய் கைம்மாறு செய்ய முடியுமோ!
என் அம்மை அப்பனாகிய தெய்வமே!
அருளின் வாழ்விடமே
இம்மை இன்பமும் மறுமை இன்பமும்
புகழும் தந்தாய் நீ” என்றாள் சீதை.
பாடல்-559:
வலிமை மிகு
பருத்த பெருத்த தோள் உடையவனே
துணை இல்லாதிருந்த எனது
துன்பம் தீர்த்த வள்ளலே வாழி
நான் கற்பு நிலை மனத்தவள் என்றால் -
“பல யுகங்கள் - நாட்கள் - ஆண்டுகளெல்லாம்
நீ இன்று இருப்பது போலவே
சிரஞ்சீவியாக வாழ்க” என்றாள் சீதை.
பாடல்-560:
தூண் போல திரண்ட தோள் உடைய
அனுமனை நோக்கி
சீதை மீண்டும் பேசினாள்
“சிறந்த குணமுடையவனே
இராமபிரான்
இலக்குவனுடன் எங்கே இருக்கிறான்
உன்னை எங்கே சந்தித்தான்
என்னை இராவணன் கவர்ந்து சென்ற செய்தியை
யார் சொல்ல அறிந்தான்?” என்றாள்.
பாடல்-561:
கருமேக நிற கொண்ட
மாய அரக்கன் மாரீசன் என்பவன்
இராவணன் ஆணையால் மாய மான் ஆகினான்
மாயமான் எனத் தெரிந்தே நீ அதை விரும்பினாய்
இராமன் அம்பு எய்தான்
சுய வடிவம் பெறும் நிலையில்
“ஓ சீதா! ஓ இலக்குமணா!” என
இராமன் குரலில் அழைத்தான்
அது பொய்க் குரலின் ஓசை
மயக்கியது உன்னை அம்மா”
பாடல்-562:
பொய்க்குரலை -
இளவல் இலக்குவன் கேட்கக்கூடாது
என இறைவர் இராமன் விரும்பினான்
வில்லினால் உண்மை ஒலி உண்டாக்கினான்
ஆனால் வென்றது-
விதியின் வெப்பமே!
பொய்க்குரல்-
பொல்லாப் பொருள் ஆனது!
வில்லாளன் இராமன் -
இளையவன் இலக்குவன் வரவு கண்டான்.
பாடல்-563:
இராமபிரான்
இளைய வீரன் முகம் கண்டான்
முகம் கொண்டே கருத்தும் புரிந்தான்
அங்கு
வண்டுகள் உறையும் பர்ண சாலை வந்தான்
உன் திருவடிவைக் காணாமல்
“உயிர் உண்டோ இல்லையோ” எனும் படி
இன்னலில் இராமன் உழன்றான்
இன்னொரு காரணமும் வேண்டுமோ எனும் படி
மனம் உழன்றான்.
பாடல்-564:
சீதாதேவியே
தேடி இன்று உன்னைக் கண்டு கொண்டேன்
நீ வாழி ! இராமனுக்கு தீது ஏதுமில்லை
மெய் உயிர் நீயிருக்க
பொய் உயிர் தாங்கியது போல
இராமன் அங்கே வாழ்கிறான்
ஆண் தகை நெஞ்சில் நீ அகலவேயில்லை
அதனால் அழிவில்லை
இங்கே நீ இருக்கும்போது
அங்கே அவன் உயிர் எப்படிப் போகும்?
பாடல்-565:
அன்னையே
அப்படிப்பட்ட அண்ணலை ஆண்ட அன்னையே
உன்னை
காடுகளில் தேடினான்
மலைகளில் நாடி அலைந்தான்
உயிரில்லாமல் பொறியால் இயங்கும் இயந்திரப் படிவம் ஒத்தான்
தன் உயிரை
புகழுக்கு விற்ற ஜடாயுவைக் கண்டான்.
பாடல்-566:
Ƒஜடாயுவின் மேனி நோக்கி
வான் வரை துயரம் கொண்டு இராமபிரான் -
“என் தந்தையே
நீ எப்படி இப்படி ஆனாய்” என்றதும் விளக்கினான்
இலங்கை வேந்தன் தன்னை
வஞ்சனை செய்தததை
Ƒஜடாயு சொல்லச் சொல்ல
இராமனுக்குள் உலகம் வேகும் அளவு
வெம்மையான கோபமெனும் சீற்றத் தீ நிமிர்ந்தது.
பாடல்-567:
Ƒஜடாயுவின் பண்புதான் என்னே!
இராமன் சீற்றம் மிகுந்து
“மூன்று உலகங்களும் தீய்ந்து
நீறாகப் போகும்படி
என் சின அம்புகளால் அழிப்பேன்” என
கையிலிருந்த வில்லை நோக்கிட
“இராமா!
ஒரு சிறியவன் உனக்குச் செய்த தீமையால்
உலகுக்கே தீமைசெய்ய கோபம் உறுவாயோ
உன் தன் சினம் ஆறுக” என்றான்
தந்தை நிலையிலிருந்த ஜடாயு
அதனால்
சீற்றம் அடங்கி ஆறினான் இராமன்.
பாடல்-568:
“செம்மை குணவானே
இராவணன் எந்த வழியே சென்றான்
அவன் தங்குமிடம் எது?” என இராமன் வினவினான்
கழுகு அரசன் ஜடாயு பதில் கூற முனையும் போது
விதியின் வலியால் இறந்தான்
வில்லேந்திய இராமனும் இலக்குவனும்
துன்பத்தில் வீழ்ந்தனர்.
பாடல்-569:
துன்பாத்தால் அயர்ந்த அவர்கள்
மிகச்சிரமமுற்று மனம் தேறி
தந்தை முறை உடைய ஜடாயுவுக்கு
ஈமக்கடன்களை
தேவரும் மருளும்படி செய்தனர்
கயமைத் தொழில் செய்த அரக்கனை
நாம் தேடிக் காண்போம்” என்று முடிவு செய்தனர்
மேகம் தொடும் மலைகள் காடுகள் கடந்தனர்.
பாடல்-570:
அந்த வழிகளெல்லாம் அன்னையே
நின்னைக் காணாமல் இராமன் அயர்ந்தான்
மிகவும் மனம் தேறிக் கொண்டு
செங்கண் வழியே சிந்திய கண்ணீர்
நெடுவழியை சேறாக்கியது
நெருப்பிலுற்ற மெல்லிய மெழுகு என
அறிவு கலங்கினான் மெய்யன்
புலம்பும் சொற்கள் கூறினான் இவ்வாறு.
பாடல்-571:
“இவ்வுலகில்
எவரால்தான் கர்மவினை கடக்க முடியும்!”
என்று கூறிய
வீரத்திருமகன் உறையும் பெருந்தோள் இராமபிரான்
அறிவு மயங்கினான்
ஐம்புலன்களும் வேறு வேறாய் கழன்றன
நல்ல ஊமத்தம் பூவை
தன் தலை நாகம் அருகே அணிந்த
சிவபெருமான் போல் ஆனான்
தனை ஒன்றும் உணராதவன் ஆனான்.
பாடல்-572:
குளிர் மேக வடிவினன் இராமபிரான்
கோபம் தலைக்கேறிய நிலையில்
கோதாவரி நதி மீது சினம் கொண்டு
“சூரிய உதயத்தில் பவழக்கொடி சீதை
உன் குளிர் நீரில் ஆடியது உண்மையெனில்
அவளைத் தேடி தந்துவிடு !
இல்லையேல் நீ என் அம்பினால்
நெருப்பு ஆகிவிடுவாய்” என்றான்.
பாடல்-573:
நதிக்கு அடுத்து
மலையிட சினம் பாய்ச்சினான்
“ஏ! நீளப்பரந்த மலையே!
அழகிய பூங்கொடி சீதாதேவியை
உன்னிடம் தேடி என்னிடம் காட்டாவிட்டால்
உன் இனம் சேர்ந்த
எல்லா மலைகளையும் அழிக்க இந்த அம்பே போதும்” என்றான்.
பாடல்-574:
மலைக்கு அடுத்து
மான்களிடம் சினம் பாய்ச்சினான்
மாரீசன் பொன்மான் வடிவம் கொண்டதால்
என் மான் சீதை அகன்றாள்
ஏ! மான்களே!
கொலைபுரியும் என் அம்பினால்
உங்கள் பெயரே இனி உலகில்
இல்லாதபடி ஒழிப்பேன்” என்றான்.
பாடல்-575:
தன் மனதிலிருந்தே வேறுபட்ட இராமன்
உயிர் போன்ற இலக்குவன் கூறிய சொல் எனும் அருமருந்தால்
மனம் தேறினான் அதன் பிறகு
அனுமன் கூறியது இது.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment