Saturday, 12 October 2013

சுந்தரகாண்டம் 501-525




பாடல்-501:

இப்போது நான்
எதற்காக உயிர் வாழ வேண்டும்?
என்ன நன்மைக்காக உயிர் தரிப்பது?
என்ன நன்மை வந்து விடும்?
பிறர் மனை சேர்ந்த பெண்ணை
சேர்ப்பது கூடாது என்று நினைத்து தானே
உயிர்த்தலைவன் இராமன் இங்கு வரவில்லை?
அறம் இல்லாததை செய்து கொண்டிருக்கிறேன்
அறவடிவன் இராமன் வருவான் என
பொழுது போக்குகிறேன்!

பாடல்-502:

எப்போது இந்தப் பெரும்பழி நேர்ந்ததோ
அப்போதே உயிர் விட்டிருக்க வேண்டும் நான்!
உலகம் ஏற்க முடியாத பழி சுமந்து
பெருமை அழியும் உயிர் வாழ்வது
மறு உலகில்
வசந்தம் காணவோ!

பாடல்-503:

எதிர்பார்ப்புகள் முடிந்ன
வறண்ட பாலை மணல் உள்ளமாகி
சீதாப்பிராட்டி மனம் உதிரத் தொடங்கியது
அது நினைக்கிறது இப்படி:-
“என்னிடம் அன்பு அழித்து விட்டார்கள்
இராமனும் இலக்குவனும் என்பதால்
வலிய பழி சுமக்கப் போகிறார்கள்
சுமக்கட்டும்
வான் புகழ் கொண்ட ஜனகர் குலப்பெண்
எனத்தோன்றினேன்
எனது துயர் துடைக்க இப்போது
என்னைத்தவிர யார் உள்ளனர்?”

பாடல்-504:

“நான் உயிர் வாழ்வதை
உலகத்தார் ஒப்பமாட்டார்கள்
ஏன்?
வஞ்சக மானின் பின்னே இராமனைப் போகவிட்டேன்
மைத்துனர் இலக்குவனையும் ஏசி அனுப்பினேன்
நஞ்சு போன்ற இராவணனின் வீடு புகுந்த நங்கை நான்
நிச்சயம் உலகம் எனை விரும்பாது”

பாடல்-505:

“வலிமை மிக்க இராமர் இலக்குவர்
அரக்கரை எதிர்ப்பார்கள்
போரில் வென்றாலும் வெல்லட்டும்
வீழ்ந்தாலும் வீழட்டும்
இல்வாழ்வுக்கென ஒரு அறம் இருக்கிறது
அதனை இறக்கச் செய்த நான்
இன்னும் உயிர் வாழ்வதால்
எனக்குரிய இழி சொற்கள் பழி சொற்கள்
என்னையே சேரவேண்டும் அவர்களுக்கு அல்ல”.

பாடல்-506:

“மானத்துக்கு தீங்கெனில்
கவரி மான் உயிர் விட்டுவிடும்
அது போன்ற மகளிர் முன்
நான் ஒரு பேதை ஆனேன்!
“கருமுகில் இராமனைப் பிரிந்து
கள்வன் ஊரில் இருந்தவள் இவள்!” என
ஏசும்படி வாழ வேண்டுமோ நான்?

பாடல்-507:

“அற்புதன் இராமன்
அரக்கர் வர்க்கம் அழிப்பான்
வில்லால்  எனை நிச்சயம் சிறை மீட்பான்
அந்நாளில் “தனது வீட்டுக்குள் வர
தக்கவள் நீ அல்ல” என்று சொல்லிவிட்டால்
என் கற்பை
எந்தத் தன்மையால் நிரூபிப்பேன்?”





பாடல்-508:

“நான் இறப்பதே அறத்தின் விருப்பம்”
என்னைத் தடுக்கும் அரக்கியர்
தற்போது உறங்குவது நல் வினைப்பயனே
நான் இறக்க இதுவே உகந்த நேரம்”
நினைத்துக் கொண்டே சீதை
இறக்க முடிவு செய்தாள்
குருக்கத்திமரம் அருகே சென்றாள்

பாடல்-509:

சீதை இறக்கச் செல்வது
அனுமனுக்குப் புரிந்துவிட்டது
அச்சம் அடைந்தான்
சீதை திருமேனி தீண்டிடக் கூசினான்
ஆதலால் சொற்களால் அவளைத் தீண்டினான்
“தேவர் தலைவன் அண்டநாயகன்
அனுப்பிய அருள் தூதன் நான்”
என்று தொழுதுக் கொண்டே பிராட்டி முன் தோன்றினான்

பாடல்-510:

“மடந்தையே
அடியேன் வருகை இராமனின் ஆணை!
உலகங்கள் குடைந்து குடைந்து
உன்னைத் தேடுகின்ற வானரங்கள்
எண்ண முடியாதவை ஆயின!
தவம் செய்துள்ளேன்
தங்கள்  சேவடி நோக்கி தரிசித்தேன்”

பாடல்-511:
இங்கு நீ இருப்பாதை இடரில் உழலும்
ஆண் தகை அறியவில்லை
அதற்கு காரணம் உண்டு
“அரக்கர்கள் வர்க்கம் இன்னும்
வேரொடு அழியவில்லை” என்பது தவிர
வேறு எந்த காரணமும் இல்லை.

பாடல்-512:

“நெய் நிறை விளக்கே! சீதையே
என்னை வேறாக நினைக்காதே
நீ ஐயப்படலாம் என்பதால்
உண்மை உணர
அடையாளம் என்னிடம் உள்ளது
இராமன் உணர்த்திய உரைகளும் உள்ளன
அப்போது
உள்ளங்கை நெல்லிக்கனி போல நீ உணர்வாய்
தவிர்க்கவும் தற்கொலையை ! ” என்றான் அனுமன்

பாடல்-513:

சீதையினைத் தொழுது நிற்கிறான் அனுமன்
சீதையோ கருணையும் கடும் சினமும் அடைந்தாள்
சீதையின் மின்னல் எண்ணம் இது:-
“இவன் அரக்கன் அல்லன்
நெறி நின்று ஐம்புலன் வென்ற முனிவன்
அதுவுமில்லையெனில் தேவனாக இருப்பான்
இல்லையெனில்
நல் உணர்வு உரைப்பவனாக இருப்பான்
தூயன்
குற்றமிலான்”

பாடல்-514:

அரக்கனாக இருக்கட்டுமே
அமரனாக இருக்கட்டுமே
குரங்கினத் தலைவனாக இருக்கட்டுமே
கொடுமை தர வருகிறவனாகட்டுமே
எம்பிரான் இராமன் நாமம் சொல்லி
உருக்கி விட்டான்
உணர்வைத் தந்தான்
பிரிய இருந்த உயிரைத் தந்தான்
இதை விட உதவி உண்டோ? 

பாடல்-515:

சீதை தெய்வம் ஒரு கணம் நின்றது
அனுமனை உற்று கவனித்தது
பேசலாமா வேண்டாமா என்று கருதியது
உள் நெஞ்சு அதற்கு முன் எண்ணியது:-
“என் உள்ளம் இவனைக் கண்டதும் இரங்குகின்றது
கள்ள மனம் கொண்ட வஞ்சகன் இவனல்ல
என் துன்பம் கண்டு
கண்ணீரால் நிலம் நனைய
நினைவுடைச் சொற்கள் புலம்புகிறான்”
இவனிடம் பேசுவோம்
பிறகு -“வீரா ! நீ யார்?” என்றாள்
முதல் சொல்லே அனுமனுக்கு முற்றான தேன் சொல்!

பாடல்-516:

சீதை கூறிய சொற்களை
தலையில் கொண்டான் அனுமன் பிறகு
தனது கைகளையும் தலைமேல் கொண்டான்
“தாயே
தூயவன் இராமன் உன்னைப் பிரிந்த பின்பு
துணைவனாக சுக்ரீவனைப் பெற்றான்
அவன் தான் சூரியனின் மைந்தன்
கவிக்குலமாம்  குரங்குகளின் கூட்டத்த¨லான்
குற்றமிலான்”

பாடல்-517:

சுக்ரீவன் அண்ணன் வாலி
இராவணன் வலிமை அழிக்கும்படி
வாலினால் இறுக்கிப் பிணைத்து
எட்டுத் திசையிலும் எழுந்து தாவிய
வெற்றி உடையவன்
தேவர்கள் வேண்டியதால்  பால்கடலை
மந்திமலையில் சுற்றிய
வாசுகி எனும் பாம்பின் உடல் தேய
அமுதம் தோன்றச் செய்யும்
தோள்களைப் பெற்றவன் வாலி.

பாடல்-518:

அப்படிப்பட்ட வலிமை வாலியை
உன் தலைவன் இராமபிரான் ஒரே ஒரு அம்பினால்
அவன் ஆவி வாங்கினான்!
வாலியின் தம்பி சுக்ரீவனுக்கே
அரசாட்சி நல்கினான் எம் மன்னவன்!
சுக்ரீவனைத் துணை எனக் கொண்டான்
நாயேன் சுக்ரீவன் அவையில் இருந்தேன்
நல் நெடும் காற்றின் மைந்தன் நான்
அடியேன் நாமம் அனுமன்.

பாடல்-519:

வானரங்களின் வலிமையோடு
உன் தலைவன் மனம் ஒத்துக் கூடியுள்ளான்
வானரங்களால்
உலகங்கள் யாவற்றையும் கையில் எடுக்க இயலும்
கடலைத் தனித்தனியே தாண்ட இயலும்
வானினும் உயர் தோற்றம் எங்களுக்கு
எழுபது வெள்ளம் எனும் எண்ணிக்கையில் உள்ளோம்
உன் தலைவன் இராமன் நினைத்ததை
முகத்தால் அறிந்து
குறைவறச் செய்து முடிப்போம்”

பாடல்-520:

அன்னையே 
உன்னைத் தேடிட
பல திசைகளிலும்
வானரங்கள் புறப்பட்டுள்ளன
பவழக்கொடியுடைய ஏழு கடல்கள்
ஏழுகடல்களைச் சூழ்ந்த ஏழு தீவுகள்
சிறப்பு மிகு நாக லோகம்
விண் - மண் - இடைவெளி
அண்டத்தில் எல்லாப்பக்கங்கள்
இவை தவிர
அண்டம் தாண்டி அப்பால் உள்ள
பல கிரகங்களிலும் தேடப்போயுள்ளன
குறிப்பிட்ட நாள் எல்லைக்குள் திரும்பும்!

பாடல்-521:

இராமனது அருள் ஆணை பொய்க்குமா?
அன்றே சொன்னான் “தென் திசையில் தேடு” என
எவ்வாறு கூறினான் எனில்
இழி தொழில் இராவணன் கடத்திய நாளில்
ரிஷிய முகக் குன்றில்
துணி சுற்றி  நீ வீசினாய் நகைகளை
எமக்கு அருகில் போட்டாய்
அதனைச் சொன்னதும்
இராமன் சொன்னதே அவ்வார்த்தை!

பாடல்-522:

“சீதாதேவியே
கொற்றவன் இராமனுக்கு
சுக்ரீவன் நட்பு கிடைத்த அன்று
உன் அணிகலன்கள் கொண்ட துணி முடிச்சைத் தந்தேன்
அன்று அவன் நிலை
எனது வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது
அன்று இராமன் நீங்காமலிருக்க
உயிர் காப்பாற்றியவை உன் நகைகளே
ஆம் அவைகளே -
இராமனை இறக்காமல் காத்தன
அன்று மட்டுமல்ல இன்று -
உன்னையும் காப்பாற்றின உன் மங்கல அணிகள்!

பாடல்-523:

பழியை வென்ற அனுமன் கூறியது:-
“இராமனின் நிலை இருக்கட்டும்
மற்றது கேளுங்கள்
வாலியின் மகன் அங்கதன்
சுக்ரீவனால் ஏவப்பட்டுள்ளான்
இரண்டு வெள்ளம் வானரர் சேனையோடு
கிஷ்கிந்தை விட்டு
தென் கடற்கரை அடைந்திருக்கிறான்
வீரம் மிக்க அங்கதன்”

பாடல்-524:

அனுமன் இசைக்க இசைக்க
சீதாதேவி உவகையும் உயரம் ஏறிற்று
துன்பத்தால் ஒடுங்கிய மேனி
வான் வரை விம்மி ஓங்கிற்று
“நான் உயிர் பிழைக்கும் காலமும் வந்து விட்டதோ!”
அருவி போல் கண்ணீர் ஒழுகும் கண்ணாள்
“ஐய! சொல்..” என்றாள்
ஐயன் மேனி அறிவதற்கு எப்படி இருந்தது” என்றாள்

பாடல்-525:

“துடி இடையாளே
இராமன் திருமேனி
உவமானத்தின் தன்மையிலோ
உவமானத்தின் பண்பிலோ கூறினால்
அந்த உவமைகள்
தமது இலக்கணம் இழக்கும்
ஆதலால்-
நான் கூறும் அடையாளங்களின் தொடர்ச்சியால் அறிக” என
இராமனின் அடி முதல் முடி வரை
அனுமன் கூறுவான் இவ்விதம்.

-அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment