Monday, 7 October 2013

சுந்தர காண்டம் 476- 500


பாடல்-476:

பசுமையான வளையல் அணிந்தவளே!
அந்த இருவரும் அற்ப மனிதர்கள்
எனினும்
உன்னை எனக்குத் தந்த உதவி பெரிது
அதனால் உயிர்க் கொலை வேண்டாம் என  விடுகிறேன்
ஆனால் உனக்கு வேண்டுமெனில்
அவர்களைக் கொலை செய்யும் முறையும்
ஆராய்ந்து இயற்றுவேன்! அதையும்  பார்ப்பாய் !

பாடல்-477:

“குறைந்த நாட்களே வாழப் போகிறவளே!
கேள்
ஆழமான அகழி காவல் காக்கும் அயோத்தி அடைவேன்
பரதன்  உயிர் குடிப்பேன்
உலகம் அழிக்கும் ஊழித் தீ போல
மிதிலை நகர் முழுதும் அடியோடு அழிப்பேன்
எளிதாக இங்கு வந்து
உன் உயிரும் போக்குவேன்! பார்!”

பாடல்-478:

செந்தாமரைக் கண்ணாளை அகத்தில் வைத்து
புறத்தில் அவளை ஏசிவிட்டு
இராவணன் மிகவும் பொங்கினான்
எரிக்கும் கதிர் வாளை நோக்கி
கூறியது இதுவே:_
“நீ எனக்கு இணங்கவில்லை
கொல்ல வேண்டிய காலம்
பனிரெண்டு மாதத்திலிருந்து
இரண்டு மாதமாகி விட்டது
இனி நீயே அறிந்து கொள்
மரணமா? வாழ்வா? என்பது உன் கையில்!”


பாடல்-479:

இராவணனுக்கு
தான் மிரட்டியது போதாதென்று
தோன்றியது போலும்
 அரக்கியரைத் தனியே அழைத்தான்
சிரிப்பில்லாத முகம் பிளந்த வாய் கொடும் கோபம்
மூன்றின் கூட்டுத்தொகை ஆன அரக்கியரையும்
மிரட்டினான்
“சீதையை அச்சப்படுத்தியோ நல்ல அறிவுரை கூறியோ
என் வசம் ஆக்குக ..இல்லையேல்
உங்களுக்கு நான் நஞ்சாவேன்”

பாடல்-480:

இராவணன் என்னும் இடி
சீதாப்பிராட்டியை இத்தனை நேரம் வதைத்தது
அசோகவனம் நீங்கியது அரண்மனைக்கு அகன்றது
அடுத்த இடி வந்தது
அரக்கியர்கள் வடிவில் சூழ்ந்தது
இராகு எனும் பாம்பு விழுங்கி
பிறகு உமிழ்ந்த தூய நிலவு போன்ற சீதையை
மயில் போன்ற சீதையை
அரக்கியர்கள் அத்தனை பேரும்
ஒரே நேரத்தில் சுற்றிக் கொண்டனர்
பெரும் ஓசையுடன் அதட்டினர்
சிந்தைக்குத் தோன்றியதெல்லாம் பேசினர்!

பாடல்-481:

ஒவ்வொரு அரக்கியரும்
ஒவ்வொருவரை மிஞ்சும் வண்ணம்
சீதையை மிரட்ட முற்பட்டனர்
சிலர்-
கண்ணில் கனல் வர கோபம் காட்டி மிரட்ட
சிலர்-
மின்னும் சூல்த்தையும் வேலையும் காட்டி மிரட்ட
இன்னும் சிலர்-
“கொல்லுங்கள் கொல்லுங்கள் குடல் கிழிய
வயிறாரத் தின்னுங்கள் தின்னுங்கள்”
என்று மிரட்டினர்.

பாடல்-482:

இன்னும் சில அரக்கியர்
கேள்விகள் கேட்கவும் செய்தனர்
“இராவணன் யார் தெரியுமா?
உலகைப் படைத்த பிரமனின் வழித்தோன்றல்
ஆம்
பிரம்மனின் மகன் புலஸ்தியன்
புலஸ்தியன்மகன் விசிர முனிவன்
விசிர முனிவனின் மகன் இராவணன்
மூவுலகத் தலைவன்
சாமவேதத்தின் ஆயிரம் பகுதிகளிலும் வல்லவன்
அறிவாளன்
மெய் அன்பு உன்னிடம் வைத்தது தவிர
அவன் செய்த இழிதொழில் வேறென்ன?”

பாடல்-483:

இன்னும் சில அரக்கியர்கள்
சுத்தமாய் வடிகட்டிய அநியாயங்களை
புனிதவதிக்கு புத்திமதியாக்கினர்:-
“பெண்களில் தீயவளே!
புண்ணில் கோல் இட்டுக்குத்தியது போல பேசினாய்
இதனால்
மண்ணில் மானுடர்கள் தம் குலத்தோடு
அழிய வைத்து விட்டாய்
உன் உடலும் அழியும்படி
நோய் போன்ற செயல் செய்து விட்டாய்
உண்மையை
நடுநிலை நின்று பார்க்கத் தெரியாதவளே!

பாடல்-484:

இன்னும் சில அரக்கியர்
மிச்சம் வைத்திருந்த ஏச்சுகள்
உச்சகட்டமாய் பாய்ந்தன
“அறிவற்றவளே
உன் மனதில் சிக்குமாறு சொல்கிறோம் கேள்
புகுந்த குலத்துக்கும் பிறந்த குலத்துக்கும்
புகையும் சுடு நெருப்பு விதைக்க வந்தவளே
உணர்வில்லாதவளே
இந்த நிமிடமே இராவணனை அடைக
இல்லையேல் உன் இனமே இருக்காது”

பாடல்-485:

அரக்கியர்கள்
சீதையைக் கொல்வது போல் நெருங்கினார்கள்
கொடுமை செய்தார்கள்
“இராவணன் வெல்வான் இவளைத் தின்னுங்கள்”
என்று கூச்சலிட்டபடி
பயமுறுத்தும் உடம்புகளோடு வந்தார்கள்
இராவணன் கட்டளையும் சீதை நினைத்தாள்
ஒரே நேரத்தில்
அத்தனை துயரமும் நினைத்தாள்
மன உறுதி குறையவில்லை ஆனால்
கண்ணீர் விட்டு
தனது அவலம் நினைத்து சிரித்தாள்

பாடல்-486:

துயரங்கள் கொத்து கொத்தாக
செவி வழியே உடல் வழியே
தேளாகப் புகும்போது
தேனான சொல்லுடன் வந்தாள் திரிசடை
ஆண்டவன் அனுப்பிய தாய்ப்பால் போல்
சீதை இதயம் நோக்கி வந்தாள் திரிசடை
“தாயே
நான் கண்ட கனவின் பயனை
முன்பே சொன்னதை நினை
வீண் கவலை பிழையாகும்” என்றாள்
கேட்டதும்
சீதையின் இதயச்செவியில்
இன்பத் தேன் பரவிய மகிழ்வுடன்
“அன்னை போன்றவளே! நல்லது!”


பாடல்-487:

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்!
அறிஞர் போன்ற திரிசடை
தனது கனவு காட்டப்போகும் உண்மைகளை
அரக்கிகளுக்கு எடுத்துச் சொன்னாள்
மாமன்னன் இராவணன் கட்டளை தவிர
ஏதுமறியா அரக்கியர்
திரிசடை சொற்கள் கேட்டு அதிர்ந்தார்கள்
நிறுத்திக் கொண்டனர் ஏச்சுக்களை!
சீதையின் உயிர் உடலில் நின்றது!

5. உருக்காட்டுப்படலம்

பாடல்-488:

அனுமன் எண்ணங்கள் இவை :-
“சீதை காண ஏற்ற காலம் இது
காவல் அரக்கியர் இன்னும் உறங்கவில்லையே
அவர்களே உறங்க நினைத்தாலும் உறங்க முடியாதே”
நினைத்துக் கொண்டே அனுமன்
மந்திரம் உச்சரிக்க
இறந்தது போல மயக்கம் அடைந்தார்கள்!

பாடல்-489:

சீதா தேவி
உறங்காதவர்களும் உறங்கக் கண்டாள்
துயரம் தாங்க முடியவில்லை
நெஞ்சினால் எது சிந்தித்தும்
உய்யும் வழி காண முடியவில்லை
நெகுகின்றாள் ஆனால் அஞ்சாமல் நின்றாள்
உள்ளம் அழிவுற்றாள்
இராமன் அன்பு பேச வாய்ப்பு கிடைக்குமா
இளகிடும் சொற்கள் கூறி
இன்னும் இளகி மேலும் வருந்தினாள்.

பாடல்-490:

வலிமையான விதியே! சொல்!
கரிய மேகம் போன்ற இராமன்
நெடிய கடல் போன்ற இராமன்
அடர் இருள் போன்ற இராமன்
தனியே தவிக்கும் என் உயிரை
நிலைப்பெறச் செய்ய
வில்லின் இடி போன்ற முழக்கமுடன் வருவானா
நாண் ஒலி ஒலிக்குமா? விதியே நீ சொல்!

பாடல்-491:

அறிவில்லா நிலவே !சூரியனே! கூர் நிலவே
விரைந்து செல்லாத மந்தமான இரவே
குறையாத இருளே
எல்லாரும் என்னைத்தான் வருத்துவீர்களா?
என்னை நினைத்தும் பார்க்காத வில்லாளனை
சற்றும் வருத்த மாட்டீர்களோ!

பாடல்-492:

பூங்கொடிகளே!
அனல் காற்றுத் துணையுடன்
நீங்களும் தான் துன்பம் செய்கிறீர்கள்
என் உயிர் நிலைமை தெரியும் தானே
தன் மேனியும் கடல் மேனியும் ஒன்றாகப் பெற்ற
இராமனுடன் காட்டில் பழகி வரும் நீவீர்
என் குறை உரையாடக்கூடாதோ?

பாடல்-493:

“இராமன் வராமல் போகான்” எனும் வலிய எண்ணத்தால்
ஆயிரம் கோடி இடர்களைக் கொண்டேன்
வலி தீர்த்துவிடு அன்புச் சேவகனே
நாராயணனே தனி நாயகனே

பாடல்-494:

“மரங்கள் அடர்ந்த காட்டுக்கு
என்னுடன் வருதலை சிதையே நீ தவிர்
அயோத்தியிலேயே இரு” என்றாயே
உன் அருள் இதுதானா
என் உயிர் உண்ணமாட்டாயோ!”

பாடல்-495:

“பேணிக் காக்கும் உணர்வே
பேணும் உயிரே
வெட்கமில்லாமல் எதற்கு
இன்று என்னுடன் உழல்கிறீர்கள்?
தனி நாயகன் இராமனைக் காணும் வரை
கழிய மாட்டீர்களோ
நான் அடையும் பழி
உமக்கும் வேண்டுமா? போய்விடுங்கள்!”

பாடல்-496:

நான் எதற்கு மகிழ்வது?
எப்படி மகிழ முடியும்?
முடியாத வழிகளை உடைய வனத்தில் நுழைந்து
புறப்பட்ட இராமனால்
முடிவிலாப்புகழ் தசரதன் முடிவுற்றான்
அப்படிப்பட்ட இராமன் துயர் துடைப்பான் என மகிழ்வதோ!
சீதை தன்னை மதிக்காமல் உயிர்விட முடிவு செய்தாள்
ஆம்!
அவள் எண்ணங்களால் தன்னையே குத்திக் கொள்கிறாள்

பாடல்-497:

மின்னலிடும் அணிகள் இடையில் விளங்கும் சீதை
இடர்களால் துவண்டாள்
உயிர் விம்மி அழுதாள்
“உயிர் உண்டு என்பதால்தானே இடர்களும் இருக்கின்றன?
இடர்களைத்தான் விட்டுவிட முடியவில்லை
உயிரை விட்டால் துன்பமும் நீங்கும் புகழும் சேரும்”
என நினைத்தாள்.


பாடல்-498:

பொறுமையாக இருந்தேன்  இத்தனை நாட்கள்
உயிரைப் போற்றிக் காப்பாற்றி விட்டேன்
எதற்காக?
வீரக்கழல் அணிந்த இராமனைக் காணும் ஆசையால்
நீண்ட இந்நகரின் சிறையிலே
அரக்கர்கள் வதையிலே வாழ்ந்து விட்ட என்னை
அந்தப்புனிதன் ஏற்பானோ?

பாடல்-499:

“இங்குள்ளவர்களை அரக்கிகள் என்கிறேன்
உண்மையில் நானே அரக்கி
ஆம்
பிற ஆடவர்கள் என்னை விரும்பியதை உணர்ந்தும்
உயிரோடிருக்கின்றேனே
அரக்கரும் அரக்கியரும் சொன்னவை எல்லாம்
கடும் சொற்கள் எல்லாம்
என் செவியில் தங்கியும் உயிரோடு இருக்கின்றேனே
இப்படியே நீண்ட காலம் வாழ்ந்தேனே
நானே அரக்கி நானே அரக்கி”.

பாடல்-500:

தன்னையே
தன் எண்ணங்களால் கிழிக்கும் சீதை
தன் உயிரையும் பழிக்கிறாள்
உத்தமிகளும் உத்தமர்களும்
அதிகபட்சம் கலங்குவதே உலக இயற்கையோ!
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பதே வல்லவன் வகுத்ததோ!
ஆம்!
சீதை தன் துயரை விரிக்கின்றாள்
“சொற்களை விட்டுப் பிரியாத பழியை
சுமந்து தாங்குகின்றேனே ஆம்
நான் நல் பிறப்புக்காரி!
நான் நல்ல குடியில் பிறந்தவள்!
கற்புள்ள பெண்கள் கதையில்தான் இருப்பார்கள்!
வீட்டை விட்டுப் பிரிந்து
கற்பை நிரூபித்தவர்கள்
என்னை விட யார் உள்ளனர்!!”
இப்படியெல்லாம் பழித்தும் இழித்தும்
தாழ்த்தியும் உயர்த்தியும்
சீதை தெய்வம் உழன்றது.


--அனுமனோடு மீட்போம்.


No comments:

Post a Comment