இப்படி ஒரு அன்பா என வியக்க வைத்த மன்னா
உனக்குத்தான் எத்தனை அன்பு
திருவிடைமருதூர் வாழ்
பெருநலமுலை நாயகி உடனுறை மகாலிங்கேஸ்வரர் மீது !
அன்று ஒரு நாள்
கோயிலில் விழுந்த வேப்பம் பழங்களை
சிவலிங்கங்களாக எண்ணி அம்மரங்களுக்கு கூரை எழுப்பினாய்
அக்கோயில் வளாகத்தில் கிடந்த மண்டை ஓடு ஒன்றைக்கண்டு
அது செய்த புண்ணியம் என்னவோ என அதுபோலவே
இறப்புக்கு பின் ஆக வேண்டும் என சிவம் தொழுதாய் அழுதாய்
பேரழகியை மணந்த அதே இரவில் அவளை
சிவனுக்கே சமர்ப்பிக்க நடு இரவில் சந்நிதி தட்டித் திறந்து
பெருமானே இவள் உன் சொத்து என்று ஒப்படைத்தாய்
அவள் கரம் தவிர அனைத்தும் சிவலிங்கத்துள் மூழ்கிட
“என் கரம் பட்டதால்தானே அவள் கரம் மட்டும் ஏற்க மறுத்தாய்” என
குழந்தை போல் பதறினாய் உருகினாய்
குளத்துத் தவளைகள்
அர அர அர அர ஒலிபக்தி எழுப்பியதாய் உணர்ந்து
தவளைகளுக்கு பொன் காசுகள் தண்ணீரில் வீசினாய்
அதுமட்டுமா
காட்டு நரிகள் ஊளையிடும் ஒலி
சிவனைத் துதிப்பதாக மனம் கசிந்து அந்நரிகளுக்கு
பொன் ஆபரணமும் ஆடைகளும் அணிவித்து அழகுபார்த்தாய்
அடடா
உன்னைபோல் உண்மை பக்தி கொள்ளுமோ நாயொத்த என் வாழ்வு
உன் இதயம்போல்
அடியேனுக்கு ஒரு கணமேனும் இதயம் துடிக்குமோ
அதுவும் வாய்க்குமோ பேதையேன் அறியேனே
No comments:
Post a Comment