பாடல்-351:
சீதையின் கண்கள் சட்டென
கலங்கவும் ஆரம்பிக்கின்றன
எப்படிப்பட்ட திருவார்த்தைகள் கூறினான்
ஆழமான கங்கை நீர் ஓடம் செலுத்தும்
ஏழை வேடனை “என் தோழன் நீ..” என்றான்
அது மட்டுமா?
“என் தம்பி உன் தம்பி
என் மனைவி உனக்கு மைத்துனி”
என்று சொன்ன பண்பை உணர்ந்து மயங்குகிறாள்.
பாடல்-352:
மெய்யறிவு கொண்ட ஜனகன் மிக விரும்பி
தன் மகள் சீதை நீட்டிய கரங்களை
இராமபிரானின் கைத்தலத்தில் சேர்த்தான்
வலக்கையால் சீதையின் இடக்கைப் பற்றி
திருமணச் சடங்கினைச் செய்தபடி
தருப்பை போன்றபரிசுத்தமான சீதை பாதத்தைப் பற்றி
அம்மியில் வைத்த அந்நிகழ்ச்சி எண்ணி
கண்ணீர் வர
இப்போது அயர்வாள் சீதை.
பாடல்-353:
“எனக்கு பதிலாக நீ அரசு ஆள்க” என்று கூறியதும்
பொன் முடி சூடிட மறுத்தான் பரதன்
திரித்துவிடப்பட்ட சிவந்த சடை சூடியவன் ஆனான்
தம்பியின் செயலுக்காக
இராமபிரான் வருந்தியதை நினைத்து
சீதை இப்போது நெஞ்சம்
இரங்குகிறாள் வாடுகிறாள் .
பாடல்-354:
சில நேரங்களில் சிலரது புன்னகைக்கு அர்த்தம்
அந்த நேரத்தில் புரியாது
சீதைக்கும் இராமனின் புன்னகை ஒன்று நினைவில் வருகிறது
“ஆம் ! அன்று புன்னகைத்தாள்...
அரசாட்சி துறந்து காடு நோக்கிப் புறப்பட்ட
யாத்திரை தான நேரத்தில்
திரிசடன் எனும் வேதியனுக்கு
பசுக்கூட்டம் தானமளித்தான்
தானம் பெற்ற திரிசடனோ மேலும் மேலும் கேட்க
இராமன் புன்னகைத்தான்
அதை நினைத்து அழுகிறாள் சீதை இப்போது.
பாடல்-355:
மழு என்ற ஆயுதத்தால்
தனது எதிரி மன்னர் வம்சத்தை
இருபத்தொரு தலைமுறை அழித்து
அவர் தம் குருதி நீரில் முழுகி எழுந்த
பரசுராமனின் வலிமை
இராமனுக்கு முன் நிற்கவில்லை
பரசுராமன் தவவலிமை இலவம் பஞ்செனப் பறக்கவிட்ட
மேன்மை எண்ணி வாடினாள் சீதை.
பாடல்-356:
இந்திரன் மகன் ஜெயந்தன்
காம எண்ணத்தால்
காக வடிவுடன் திரிந்தான்
அவனது
ஒரு கண்ணை
தர்ப்பப் புல் அம்பு செலுத்தி அழிக்க
அனைத்து காகங்களும்
ஒரு கண் இழந்திடச் செய்தான்
அந்த வெற்றியை மிகவும் நினைத்தாள் சீதை.
பாடல்-357:
கொடியவன் விராதன் என்பவனின்
தீவினையும் சாபமும்
மாற்றிய இராமனின் திறம் எண்ணுகிறாள்
அவளது ஆருயிர்
செம்மையாய் இருக்கமுடியாமல்
அவள் அறிவும் உடலும் தேம்புகிறது.
பாடல்-358:
நள்ளிரவு நெருங்கியது
அரக்கியர் அனைவரும்
உறக்கம் எனும் மதுவைப் பருகி
மயக்கமடைந்தனர்
தீவினை உறங்கவில்லை
இன்சொல்லை திருத்தமாகக் கூறும் திரிசடை உறங்கவில்லை
சீதைக்கு துணையாக!
பாடல்-359:
அன்பு மிகு திரிசடையை நோக்கி
சீதை கூறினாள்
“நீ தாயினும் நல்லவள்
தூயவளே கேள்” என ஆரம்பித்தாள்.
பாடல்-360:
சீதை ஆர்வமானாள்
“திரிசடையே .. சொல்
அழகிய உடுக்கை போன்ற
இடையினைப் பெற்றவளே! சொல்
எனது புருவமும் கண்ணும்
இடப்பக்கம் துடிக்கின்றதே இது எதற்காக?
நலம் செய்யத் துடிக்கின்றதா? அல்லது
நான் செய்த பாவம்
வஞ்சகமாகத் நடித்து
இன்னமும் தீங்கு தருமோ?”
பாடல்-361:
“முன்பு -
இராமபிரான்
விசுவாமித்திர முனிவருடன்
மிதிலை வந்த போது
குற்றமற்ற என் தோளும் புருவமும் கண்ணும்
இனிமை விளைவிக்க இடப்பக்கம் துடித்தன
இப்போதும் அப்படித்தானா?
ஆராய்ந்து சொல்லேன் திரிசடை” என்றாள்.
பாடல்-362:
“அடீ ! திரிசடை!
மறந்து விட்டேனடி இன்னொன்று!
அறம் தங்கும் என் ஆவி நாயகன்
“பரதனே நாடாளட்டும் என்று
காடாளப் புறப்பட்ட நாளில் மட்டும்
வலது பக்கம் துடித்தது”
பாடல்-363:
“தண்டகாரண்யத்தில்
நஞ்சு போன்ற இராவணன்
வஞ்சம் மிக்க செயலைச் செய்தானே!
அன்று வலதுபக்கம் துடித்தது
இப்போது மட்டும் இடப்பக்கம் துடிப்பது எதற்காக?
அஞ்சாதே என்று இரக்கபடுமாறு
நடக்கப்போகும் ஒரு செயல் உண்டெனில்
அது எதுவாக இருக்கும் ? என்றாள் சீதாப்பிராட்டி.
பாடல்-364:
சீதை சொன்னதும் -
திரிசடை சொன்னது இது தான்:-
“நல்லது நல்லது நீ உன் துணையாம்
கணவனை அடைவது உண்மை
இது ஒரு மங்கல அறிகுறி! இன்னும் கேள்”
பாடல்-365:
மின்னல் இடை சீதையே ! கேள்
இராமனைப் பிரிந்து அதனால் உன்னில்
உண்டான பசலை நீங்கப் போகிறது
உன் உயிர் உய்வு அடையப்போகிறது
எப்படிச் சொல்கிறேன் தெரியுமா?
பொன்னிற வண்டு ஒன்று இனிய தன்மையோடு
தேன் இசையை உன் செவியில் ஊதியது!
பாடல்-366:
அதனை ஆராய்ந்தால் ஒன்று புரியும்
உன் ஆவி நாயகன் அனுப்பிய தூதாக
ஒருவன் உன்னைச் சந்திப்பான்
தீயவனுக்கு தீயது நிகழ்வது உறுதி
என்னிடம் கேள் சொல்கிறேன் என்று
சீதை வாயை மறித்து இன்னும் சொல்ல ஆரம்பித்தாள்.
பாடல்-367:
வேல் விழியாளே! சீதையே!
உனக்கு கனவு வருவதில்லை
ஏனெனில் நீ உறங்குவதேயில்லை
ஆனால் எனக்கொரு கனவு வந்தது
பழுதிலாத கனவு அது
சூரியனது வெயிலை விடவும்
மெய்யாக பலிக்கும் கனவு
கேட்பாயாக அதை!
பாடல்-368:
களங்கமில்லாக் கற்பரசியே கேள்!
அரசன் இராவணன் -
அழகிய தனது பத்து தலைகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு
சிவந்த ஆடை அணிந்து
பேய்களும் கழுதைகளும்
பூட்டிய தேரில்
தென்திசை நோக்கிச் செல்வதைக் கண்டேன்
பாடல் -369:
“இராவணன் மட்டுமா?
அவன் பிள்ளைகள், உறவுகள்
மற்றுள்ள அரக்கர்கள்
அதே திசையில் செல்கின்றனர்
சிக்கில்லாமல் சிடுக்கில்லாமல்
இதை நான் நோக்கினேன்
இன்னும் சில தீயதும் உண்டு !அதுவும் கேள் நீ..”
பாடல்-370:
ஆண்மை மிக்க இராவணன்
வளர்க்கின்ற ஹோமத்தீ அணைந்துவிடுகின்றது
அந்த இடத்தில் செந்நிறக் கரையான்கள்
கூட்டம் தோன்றியதைக் கண்டேன்
தூண்ட வேண்டா மாணிக்க மணி விளக்குகள்
ஒளிவிடும் அரண்மனை
விடியற்காலையில் இடிந்து விழுகின்றது!
பாடல்-371:
பெண் யானைகள் -
மதம் கொண்டன
பேரிகைகள் தானாகவே -
இடியென ஒலித்தன
மேகக்குலம் -
அண்டம் வெடிக்க இடித்தது
வானின் நட்சத்திரங்கள் யாவும் உதிர்ந்தன.
பாடல்-372:
ஒளிமிகுந்த பகல் அற்ற பொழுது
அப்படிப்பட்ட இரவு நேரம் அப்போது
சூரியன் பாதியாகத் தோன்றினான்
வலிமை வீரர்கள் தோளில் இருந்த
கற்பக மலர் மாலைகளோ -
புலால் நாற்றம் வீசின.
பாடல்-373:
அது மட்டுமா?
இலங்கை நகரம் சுழலும் சூழ்ந்த மதில்கள் சுழலும்
திசைகள் யாவும் தீப்பற்றி எரியும்
கற்பகச்சோலை அழியும்
மங்கலக்கலசங்கள் விழுந்து உடையும்
விளக்குகளை இருள் விழுங்கிவிடும்.
பாடல்-374:
அது மட்டுமா?
தோரணங்கள் முறிந்து
துண்டுகள் ஆயின
முகபடாம் பொருந்திய
வாரணங்களின் தந்தம் ஒடிந்தன
வேத அறிஞர்கள் நாட்டிய
பூரண கலசகும்பத்திலுள்ள
புனித நீர் -
கள்ளாகிப் பொங்கியது.
பாடல்-375:
அது மட்டுமா?
வானச்சந்திரன் பிளந்து உடைந்து
விண்மீன்கள் வெளியாடும்
திரண்ட மேகங்கள்
புண் வழியும் குருதி மழை பொழியும்
கதை - சக்கரம் - வாள் - வில்
இன்னும் மற்ற மற்ற போர்க்கருவிகள்
கடலொலி போல் பேரொலி கிளப்பி
தாமே போர் செய்யும்.
-- அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment