Wednesday, 25 September 2013

சுந்தர காண்டம் 451 -475


பாடல்-451

“கயிலை மலை எடுத்தேன்
திசை யானைகளை வென்றேன்”
இப்படி வீரம் பேசும் நீ
இலக்குவன் என்னை காத்து நின்ற போது
நேரில் உன் உருவுடன் வந்தாயா?
இந்த அவமானம் போதவில்லையோ?
உன் தலையை பெண்களின்
காலிலும் வைக்க வேண்டுமோ!

பாடல்-452:

அற்¢வில் ஏழையே
நீ ஒளிந்துள்ள இடம் இது என
என் கோமகன் அறிந்த
அதே நாளில் என்ன நடக்குமோ தெரியாது
கடல் அழியுமோ இலங்கை அழியுமோ ஊழி வருமோ
உன் உயிரை அழித்தாலும்
கோமகன் சினம் இன்னும்
ஏதேது செய்யுமோ

பாடல்-453:

கொடும் கோபம் கொண்ட அரக்கரை
அழித்த பின்பும்
இராமபிரான் கோபம் அடங்குமோ?
எனது வள்ளல் சீற்றத்தை
இந்த உலகம் தாங்குமோ?
மிஞ்சுமா ஏதாகிலும்? நான் அஞ்சுகிறேன்
இதற்கு அறக்கடவுளே சாட்சி!

பாடல்-454:

மண்ணுலகினர் அஞ்சிட விண் உலகினர் அஞ்சிட
உன் இழி செயலை விலக்க
எண்ணம் எதும் உள்ளே இலாதவனே
திருமால் எளியன்
நான்முகன் எளியன்
சிவன் எளியன்
எங்கள் நாயகன் அப்படி அல்ல முட்டாளே!

பாடல்-455:

இராமரும் இலக்குவரும்
மானிடர் தானே என நினைக்கிறாய்
காட்டிலே உயர்ந்த மலை போன்ற
கார்த்த வீரியனை
பரசுராமனாகி ஒற்றை மனிதனாக
வீழ்த்தியதை எண்ணிப்பார்
இராமனது தன்மை புரியும்

பாடல்-456:
நினது செல்வம் இழந்து
உயிரும் இழக்கப்போகிறவனே
“இருவர் மட்டும்தானே
இராமரும் இலக்குவனும்” என அலட்சியம் செய்கிறாய்
யுக முடிவில்
உலகம் எல்லாம் அழிக்கும் நாராயணன் வரும் போது
அந்த இருவருடன் போரிடும் போது
நான் சொன்னது உண்மை என உணர்வாய்

பாடல்-457:

இரணியாட்சன்
இரணியாட்சன் தம்பி இரண்யகசிபன்
இவர்களில் யாராவது
பிறன் மனைவி விரும்பினார்களா
வில் நாக்கு உராய்ந்து தழும்பேறிய
மற்ற மற்ற அரக்கர்கள்
யாரேனும் பிறன்மனை விரும்பிச்சேர்ந்து
மகிழ்ந்து வாழ முடிந்ததா? யோசி

பாடல்-458:

ஐம்புலன் இன்பவழி சென்றவர்
எவரேனும் சிறந்துள்ளார்களா?
பிரம்மனோ தேவர்களோ அசுரர்களோ
யாராயினும் சரி
பாவத்திலிருந்து நீங்க முற்படலே சிறப்பு
எல்லா உலகும்
உன் ஆணைக்கு அடிமை புரியும் வாய்ப்பு எப்படி வந்தது
உன் பாவப்பயனா? உன் இளமையில் நீ செய்த தருமமா?
பாடல்-459:

இவ்வளவு பெரும் செல்வமும் உனக்கு
சிவபெருமான் தந்தது எதற்காக? நீ
மேலும் தவநெறியில் ஒழுகி
பெரும் செல்வம் அனுபவிக்க வேண்டும்
என்ற அருள் தானே?
அறிவில்லாத நீ
செல்வமும் அழிய உறவும் அழிய
அறம் தவறுகிறாய்
உன் செல்வமும் அதிகாரமும் பெருகியதே
உன் அறத்தால் வந்தது தான்
அந்த வழியில் நடக்க விரும்ப மாட்டாயா?

பாடல்-460:

வீரம் மாறாதவர் இவ்வுலகில் இறந்து விட்டனர்
மாறா வலிமை மிக்கவர் இவ்வுலகில் இறந்தனர்
இரக்கம் அற்றவர் இறந்தனர்
அறம் தவறியோர் இறந்தனர்
பற்றுகள் நீக்கி
காமம் வெகுளி மயக்கம் எனும்
மூன்று உட்பகை அழித்தவர்களோ
பாச பந்தம் நீங்கினர்
பிறப்பும் இறப்பும் தவிர்த்தனர்
வேறு யாராவது
பிறப்பு  பிணியிலிருந்து நீங்கினார்களா சொல்!

பாடல்-461:

அன்று நீ செய்த
கொடும் செயல்களை நான் கேட்டேன்
தண்டகாரண்யத்தில்
இராமன் புகுந்த போது
இனிய தமிழ் மொழி அகத்தியன்
“இழி தொழில் அரக்கர்கள் இம்சையால்
தவம் ஆற்ற முடியாமல் தவிக்கிறோம்
அவர்களைக் கொல்க
உன்னால் தான் முடியும்” என்று
வருந்திட நீயே காரணம்.

பாடல்-462:

இராமன்
உன்னைப்பற்றி கேள்விப்பட்டான்
உன் வலிமை
உன் ஆயுள்
உன் அரக்கர் படை பெருமை
முனிவர்கள் புகழக் கேட்டான்
அதன் பிறகு தான்
உன் தங்கை சூர்ப்பனகை மூக்கு அறுத்தான்!
அதை அறிய மாட்டாயோ?
உன் தம்பிகளாகிய கரன் தூஷணன் திரிசரா
தோள்களும் தாள்களும்
சின்ன பின்னமாக்கினான்
இதனை நீ சிந்திக்க மாட்டாயோ?

பாடல்-463:

நீசனே
நன் நெறி அறியாதவனே
உனது இருபது கரங்கள் பிடித்து
உன் வாய் வழியே இரத்தம் கொட்டுமாறு குத்தி
உன்னை சிறையில் அடைத்த
சுத்த வீரன் கார்த்த வீரியார்ச்சுனன்
ஆனால் அவனது
வைரம் பாய்ந்த ஆயிரம் கைகளையும் தோள்களையும்
வெட்டித் தள்ளியவன் பரசுராமன்
ஆனால் அப்படிப்பட்ட பரசுராமனே
இராமபிரானால் வலிமை போனவன் ஆனான்

பாடல்-464:

கண்டவரை
கடிக்கும் பாம்பு
மந்திரத்தால் அடங்கும்
செருக்கு கொண்ட உன்னை
இடித்துச் சொல்லி
“இது தவறு” என ஆதாரமுடன்
அறிவு வழி செலுத்துவோர் இல்லை
நீ செய்த தீமை எண்ணத்தையே
அவர்களும் எண்ணுகிறார்கள்
உன்னை முடிப்பவர்கள் அவர்கள்
அதனால்
நீ அழிவாய் என்பது தவிர
வேறென்ன முடிவு இருக்கிறது!

பாடல்-465:

இப்படியெல்லாம் உரைத்த சீதை வார்த்தைகள் கேட்டு
இராவணனின்
இருபது கண்கள் மின்னலும்
தீப்பொறியும் சிந்தின
கோரப்பற்களின் ஒளி வீசும்படிவாய் பிளந்து
அதட்டி ஆர்ப்பரித்தான்
குன்றுகள் இடிபட்டு விழுந்தன
இதை இன்னும் எதற்கு
விளக்க வேண்டும்?
இராவணன் கோபத்தின் அளவு
அவனது காம அளவும் தாண்டி வெளிப்பட்டது.

பாடல்-466:

திசைகளையே மறைக்கும் தோள்கள்
கனல் விழிகள்
எல்லாமும் மறைய
ஒரு பெண் இகழ்ந்து விட்டாளே என்று
குமுறிக் கொண்டே
“இவளைப் பிளந்து தின்பேன்” என்றான்
ஆனால் அப்படிச் செய்ய முடியாமல்
சீதையிடம் கொண்ட காமம் தடுத்தது
காமமும் கோபமும்
எதிர் எதிரே நின்று வாட்டின
இரண்டையும் அடக்க முடியவில்லை
கோபத்தால் சீதையைக் கொல்ல நெருங்கினான்
அவளிடமுள்ள
காமத்தால் சீதை விட்டு விலகினான்
நெருங்குவதும் பின் வாங்குவதுமாக அலைந்தான்.


பாடல்-467:

அப்போது
அனுமன் எண்ணம் இது:-
“அருந்ததி ஒத்திட்ட கற்புச்செல்வி
எம் சீதையே
ஆளுடை நாயகன் தேவியை
என் முன்பே தவறாகப் பேசிவிட்டான்
அந்த நீசன் தொடும் முன்
அவனை மிதித்து உழக்கி
பிறகு சீதை மீட்பேன்”
பாடல்-468:

அனுமன் உணர்ச்சிப்பிழம்பானான்
“தனியனாய் நிற்கின்ற இராவணன்
தலை பத்தும் சிதறிடத் தாக்குவேன் இலங்கையே
குளிர்கடலின் கீழே பாய்ச்சுவேன்
புனித மாதவ அரசி சீதையை
இனிதே சுமந்து இராமனிடம் சேர்ப்பேன்”
இதெல்லாம் நினைத்து
தன் கரம் பிசைந்தபடி இருந்தான்.

பாடல்-469:

வாள் போல் கொடிய அரக்கன்
அண்டத்தையே அழிக்கக்கூடியவன்
உலகம் அழியும் ஊழிக்கால நெருப்பு போல கோபம்
முற்றியவன் ஆனான்
ஆனாலும்
நீண்ட காமம் வென்றதால்
கோபத்தை ஒரு விதமாய் வ்ன்று
பேச ஆரம்பித்தான்:-

பாடல்-470:

ஒன்றைப் புரிந்து கொள் சீதையே
உன்னைக் கொல்வேன் என்று தான்
ஆனால் கொல்லவில்லை எழுந்தேன்
என்னைப்பற்றி நீ சொன்ன வார்த்தைகள் சரியே
அதற்கெல்லாம் ஒரே காரணம் தான்
என்னால் முடிந்த காரியம் முடியாத காரியம்
என இரண்டு என்னிடமில்லை
வெல்வதும் தோற்பதும் எனக்கு விளையாட்டே.

பாடல்-471:

இன்னொன்றும் கூறுகிறேன்
நன்றாகக் கேள்
அன்று நான் வஞ்சனையால் கவர்ந்தேன் கவர்ந்தேன்
என்கிறாயே...
என்னால் இராமனைக் கொல்ல முடியும்
கொன்றிருந்தால் நீ இறப்பாய்
நீ இறந்தால் எமனால் நானும் இறந்திருப்பேன்
இதனை உணர்ந்தே
வஞ்சக் வேடம் தாங்கி வந்தேன்

பாடல்-472:

“தேன் என்பதை அறிய வைக்கும் சொல் உடையவளே..
கேள்!
மாயமானைத் துரத்திய மானிடர்கள்
இராமனும் இலக்குவனும்
கவர்ந்து சென்றது நான் தான் என அறிந்தால்
வரமாட்டார்கள்
வருவார்கள் என நினைப்பது உன்
ஏழைமை உணம்
கவர்ந்து சென்றது இராவணன் என அறிந்தால்
தேவர்களும் பின் வாங்குவர்”

பாடல்-473:

மென் தோள் கொண்டவளே
நீ சொன்னாய்
வீரீயார்ச்சுனன் உயர்வு என!
ஆனால் அவன் உயிர் இருக்கும் போதே
யாவரினும் உயர்ந்த மும்மூர்த்திகள் வாழும் போதே
இந்திரனை எனக்கு ஏவலாள் ஆக்கினேன் 
மூன்று உலகமும் ஆட்சி செய்கின்றேன்
என்னைத் தவிர இத்தனை சிறப்பு எவருக்கு உண்டு
வேறு காரணம் வேண்டுமா?

பாடல்-474:
என் விழி போன்றவளே
குழந்தை மொழியாளே கேள்
“மும்மூர்த்திகளையும் தேவர்களையும்
வலிமை அழித்து வெற்றி பெற்ற நான்
இராம இலக்குவ மனிதர்களைக் கொன்று
பழி ஏற்பட நடக்க மாட்டேன்
அவர்களை பணிவிடைச் செய்யச் சொல்வேன்”


பாடல்-475:

குற்றமற்ற அழகு அரசீ!
அற்ப ஆற்றல்
அற்ப இயல்பு
அற்பத் தொழில்
இம்மூன்றும் கொண்ட அற்ப மனிதர்கள்
வீரம் முதிர்ந்த என்னிடம் செல்லாது
இதோ இதோ! இன்று பகலிலேயே செல்கிறேன்
அந்த இருவரையும் ஒரே கையால் பற்றுகிறேன்
கொண்டு வருகிறேன்!”

                                                                         --அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment