“எல்லா இடமும் நேசி” என்று
கணேசர் ஆனவரே...
“எழுதும்போதும் பொங்கி எழும்போதும் இடர் வரும்
அப்போது உன்
சுவாசக்கொம்பை ஒடித்து உனக்குள் பயன்படுத்தினால்
மகாபாரதம் கூட எழுதலாம்” என்று உணர்த்தும் ஆதி எழுத்தாளரே
“பொருத்தமே இல்லை என்று உலகம் இகழ்ந்தாலும்
உன் மனதுக்கு வசதியான வாகனத்தை
உன்னருகில் துணைகொண்டு சவாரி செல்க”என
மீஞ்சூறு கொண்ட முத்தமிழே..
மகான் திருஞானசம்பந்தரை
“பிள்ளையார்” என்றே பெரியபுராண சேக்கிழார் போற்றுகிறார்.
இந்தச் சிறியவனுக்கும் தாங்கள் பிள்ளையாரே !
“யானை வயிறு பானை வயிறு என இகழ்ந்தாலும்
மகிழ்ச்சியாக முகம் வைத்திரு
ஆரோக்கியமாக இருந்தால் போதும்” என்பவரே.
ஒளவைப்பிரட்டி அகவல் சூடிய அன்பு நேயரே.
பூரணமாக உன்னை கொழுக்கட்டை பூரணம் போல்
நெஞ்சில் மூடியே வைத்துக்கொண்டேன்
அன்பினால் வேக வைத்தேன் அன்பினால் பிட்டு உண்பேன்
பிள்ளையார்பட்டி வந்து தொழ ஆபீஸ் லீவு
இதுவரை வாய்க்கவில்லை எனும் சப்பைக்காரணம் சொன்னாலும் மன்னிப்பாய்
இதயநாயகா
அன்று தெய்வானையை யானையாக மாறித் துரத்தி
முருகனுக்கே திருமணம் நடத்தி வைத்தாய்
அருகம்புல் பறித்துப்போட அவகாசமில்லை என்றாலும்
தோப்புக்கரணமே போதும் என ஏற்பாய்
மறதியால் உலகப்பற்றால் உன்னை கைவிட்டாலும் என்னை உன்
துதிக்கையால் தூக்குவாய் என்றே ஏக்கம் வளர்க்கின்றேன்
மனித இனம் மீது அன்பு கொட்டும்
ஆற்றங்கரை அன்பே
இந்த ஏழையேன் ஆற்ற முடியா செயலை எல்லாம்
நீயே முடித்துக்கொடப்பா காலில் விழுந்தேன் சத்தமில்லாமல்!
No comments:
Post a Comment