இராவணன் வருகை இப்போது நிகழ்கிறது
அரம்பையர் கூட்டம் நகர்கின்றது
மற்ற மற்றவர் கூட்டம் விலகுகிறது
வேறிடம் நகர்கிறது
பெண்களுக்குள் பெருவிளக்காம் சீதையோ
நடுங்கினாள் கரைந்தாள் -
உடலுக்குள்ளே வலிமையும்
உடலின் மேல் வரிகளும் கொண்ட
கடும் சினப்புலி தின்ன வரும் போது
பெண்மான் உயிர் கரைவது போல.
பாடல்-427:
அனுமன் தற்போது
அந்த இருவரையும் காண்கின்றான்
உடல் கூசி உயிர் குலையும்
சீதைப்பிராட்டி ஒரு புறம்
ஆசையினால் உயிர்க்கட்டு குலையும் இராவணன் மறுபுறம்
இதற்கு சாட்சி எது?
அனுமனின் குற்றமற்ற கண்களே சாட்சி
ஊசல் ஆடிய அனுமனின் உள்ளம்
தனக்குள் உளைந்தது தானே பேசிக் கொண்டது
பாடல்-428:
வாழ்க ஜானகி! வாழ்க இராகவன்!
வாழ்க நான்கு வேதங்கள்!
வாழ்க அந்தணர்!
வாழ்க நல் அறம்! என்று வாழ்த்தினான்
ஒவ்வொரு ஊழியிலும் !புகழ் வளரும் அனுமன்
பாடல்-429:
உயிரைக் கொல்லும் கொடிய விஷத்தை
அமுதம் என நினைத்து விட்டான் இராவணன்
அது தான் ஆசை எனும் விஷம்!
சீதை இருப்பிடம் அருகே சென்றான்
“துன்புறும் இடை பெற்ற குயிலே!
எனக்கு இன்னருள் செய்வது என்று?” என வேண்டினான்.
பாடல்-430:
தான் வணங்கும் ஈசன்
சிவபெருமானிடம் கூட இராவணன்
பெருமிதம் அழியாத மனதினன்!
ஆனால் இப்போது
சீதை மீது காமமும் ஆசையும் வருத்தியதால்
கூசிக் கூசி இவ்வாறு கூறுகிறான்:-
பாடல்-431:
“காதணி வரை செல்கின்ற நீண்ட கண்கள் உனக்கு
சீதையே போரிடும் செங்கண்கள் உனக்கு!
இன்று வரை நாட்கள் இறந்து போயின
இனி வரும் நாட்களும் இறக்கப்போகின்றன
என் காதல் என்னைக் கொன்று
நான் இறந்த பிறகு
என்னைக் கூடுவாயோ!”
பாடல் -432:
“திலகம் போன்றவளே ஒன்று அறிவாயாக
எல்லையிலாச் செல்வத்தினால்
மூன்று உலகங்களும் ஆள்கின்ற அரசியலில்
உனக்காக மன்மதன் செய்யும் கலகம் தவிர
எனக்கு இழிவு எதனாலும் வரவில்லை தெரியுமா?”
பாடல்-433:
பூச்சூட்டலுக்கு அமைந்த
நீண்ட கூந்தல் பொன் கொழுந்தே!
புகழ் மிக்க என் செல்வத்தை இகழ்ந்து பேசினாய்
உன் இனிய உயிர் கள்வன் இறக்காமல் இருந்துவிட்டாலும்
காடு கடந்து போய் நீ வாழ்ந்தாலும்
அது
சாதாரண மானிட வாழ்வு தானே!
பாடல்-434:
கச்சுக்கு அடங்காத முலையாளே
தவம் செய்யும் முனிவர்களும்
நுண் பொருளை ஆராய்பவர்களும் பெறுகின்ற
முடிவான பயன் என்ன தெரியுமா?
என் ஆணை ஏற்கும் தேவர்களுடன்
சேர்ந்து வாழ்கின்ற இன்பம் தான்
பாடல்-435:
உன் மழலைக்குரலால்
விளரிப்பண் இசை
தோற்றுவிடும் இனிய குரல் மங்கை நீ
நாகணவாய்ப் பறவை மருளும் மங்கை நீ
நான்முகன் பிரம்மன்
உனக்கு உள்ளத்தில் அருள் வைத்தான்
உடலில்
இடை வைக்கவில்லையே!
பாடல்-436:
கழிகின்ற உனது ஒவ்வொரு நாள்
இளமையும் மீண்டும் வராது
சிறுகச் சிறுகத் தேயும் அழியும்
விரும்பும் நாட்கள்
வீணே கழிந்தால்
இன்ப வாழ்வு எப்படி வாழ்வது?
இடரில் உழல்கிறாயோ?
அதில் ஆழ்ந்து போனாயோ?
பாடல்-437:
உன் குழைந்த முகம்
சிறிது கோணினால் அதனால்
என் உயிர் இழவு அடைந்தாலும் அடையட்டும்
உன்னிடம் பழகிட நிலையாக உள்ள
பண்புக்கும் காமத்திற்கும் அழகிற்கும் சமமாக
என்னை விட்டால் யாரும் இல்லையே
பாடல்-438:
சனகர் குலத்தில் பிறந்த உன்னிடம்
பெண்மை இருக்கிறது அழகு இருக்கிறது
பிறழாத மனத்திண்மை இருக்கிறது ஆனால்
கருணையும்
கருணை படர்ந்த கொடை உள்ளமும்
இல்லை போலிருக்கிறது
பாடல்-439:
கிளி போன்ற சீதையே
இராமனை நான் கொன்றபோது
அவன் அலறிய மெய்க்குரல் கேட்டும்
“அவன் இருக்கின்றான்” என நம்பி
இராமனைக் காண காத்திருக்கிறாயா?
நல் அறத்தின் பயனை அனுபவிக்க
காலமே உதவும் போது இகழலாமோ? இது சரியா?
பாடல்-440:
சீதையே இதுவும் கேள்
என் உயிர் போனால்
என் அனைத்து செல்வமும் அழியும்
“உன் ஒப்பற்ற வருகையால் தான்
என் செல்வம் அழிந்தது” எனும் பெரும்பழி
தேடிக் கொள்வாயோ!
பாடல்-441:
என்னை மட்டும் நீ அடைந்தால் உன்னை
தேவர்கள் வணங்குவர்
தேவிகளும் கை தொழுவர்
மூன்று உலகங்களும்
உன் சிவந்த பாதம் வணங்கும்
நீயோ விலக்குகின்றாய்
உன்னை விட பேதை வேறு யார்!
பாடல்-442:
“தனது இருகரமும் தலை மேலே கூப்பி
மூன்று உலகங்களும் வென்றேன்
ஆனால் நான் உன் அடிமை
என் அடிமைத் தன்மையை ஏற்று அருள்க”
மாதரசி சீதையை
மண்ணில் விழுந்து வணங்கியே விட்டான்
பழி வருமே என எண்ணாத இராவணன்.
பாடல்-443:
சீதையால்
இராவணன் சொற்கள் பொறுக்க முடியவில்லை
நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய காம சொற்களால்
காதுகள் தீய்ந்தன உள்ளம் திரிந்தது
கண்கள் இரண்டிலும் குருதி வந்தது
உயிர்க்கும் பெண்மையுடன்
சீதை பேசத் துவங்கினாள்.
தன் உயிர் போகும் அச்சம் அவளுக்கில்லை.
பாடல்-444:
மல்யுத்தத்தில் எதிரியைக் கொல்லும்
திரண்ட தோள்கள் கொண்ட
வஞ்சகன் இராவணனுக்கு
கூறினாள் இவ்வார்த்தைகளை:
“ஏ ! துரும்பே!
இல்லற மாதர்களுக்கு
உன் கொடுஞ்சொற்கள் பொருத்தமல்ல
என் கற்பு
கல் போன்று உறுதியானது
என் நெஞ்சும் அப்படியே
உலகில் கற்பை விட உறுதியானது இல்லை”
பாடல்-445:
அறிவற்றவனே
என் இராமனின் அம்பு
மேருமலை துளைக்கும்
வானம் கிழிக்கும் மறுபுறம் போகும்
பதினான்கு உலகங்கள் அழிக்கும்
இதை அறிந்தும்
உன் பத்து சிரங்கள் சிதற விடப்போகிறாயா ?
பாடல்-446:
இராமன் அம்புக்கு அஞ்சியதால் தானே
இராமன் இல்லாத நேரம் வந்தாய்?
வஞ்சனை மான் ஏவினாய்?
உன் வடிவம் மறைத்து துறவி வேடத்தில் வந்தாய்?
உன் குலத்திற்கே -
நஞ்சு போன்ற எனது இராமன் வரும் போது
உன் கண்கள் என்னை பார்க்குமா?
நீ உயிர் பிழைக்க ஒரே வழிதான் உள்ளது
என்னை இராமனிடம் கொண்டு விடு”
பாடல்-447:
எனைக் கவர்ந்து வந்த போது
சடாயுவால் தாக்கப்பட்டு
சட்டென பூமியில் விழுந்தவனே
பத்து தலைகளும் இருபது தோள்களும்
வித்தக வில்லாளன்
இராமனுக்கு பொருத்தமான இலக்கு!
உனக்கு
வில்லாளன் இலக்கு தாங்கிட
சக்தி இருக்கிறது போலும்!
பாடல்-448:
இராவணா! நீ தோற்றுக் கொண்டே வருகிறாய்
என்னைக் கவர்ந்து வந்த நாள்
நீ ஜடாயு என்ற பறவையிடம் தோற்றாய்
துள்ளும் கங்கை நீர் பெற்ற சிவனின் வாளால்
ஜடாயுவைக் கொன்றாய்
அன்று அந்த வாள் இல்லையெனில் இறந்திருப்பாய்
உனது நோன்பு உனது வாழ்நாள் உனது வரங்கள்
எல்லாமும் எமனிடமிருந்து
காத்துக் கொள்ளத்தான் உதவும்
இராமனிடமிருந்து தப்பமுடியாது நீ!
பாடல்-449:
இராவணா!
நீ அறிவாயா ....
சிவபிரானிடம் நீ பெற்ற சந்திரகாசம் எனும் வாள் மட்டுமல்ல
உனது நீண்ட ஆயுள் உனது வலிமை உனது வரங்கள்
பிரமன் அளித்த வார்த்தையின் சிறப்புகள்
யாவுமே இராமன் வில் அம்பினால் சிதையும்
இது சத்தியம்
விளக்கின் முன்னே இருள் நிற்காது என்பது போல!
பாடல்-450:
இராவணா!
கயிலை மலையை நீ எடுத்தாய்
சிவபெருமான் கால் விரலால் மிதிபட்டாய்
திரிபுரங்கள் எரித்திட
சிவபெருமான் வில்லாகப் பயன்படுத்திய மேருமலை
என் கணவன் வலிமை தாங்காமல்
முறிந்து வீழ்ந்த ஒலியை நீ கேட்கவில்லை போலும்!
அதிசயம் !
-அனுமனோடு மீட்போம்
No comments:
Post a Comment