Thursday, 12 September 2013

சுந்தர காண்டம் 401- 425



பாடல்-401:
நற்குடிப்பிறப்பின் இலக்கணமும்
பெண்மை என்பதும் தவம் செய்து
சீதையை அடைந்து உயர்ந்தன!
நாணமும் தவமும் தாம் உயர்வதற்கு ஒரு வழி இதுவென
சீதை அடைந்து உயர்ந்துவிட்டன!
நங்கை சீதை
தன் கணவனையே நினைத்து நினைத்து
தவம் செய்யும் முறைகளைக் காண
இராமபிரான் கமலக்கண்கள் மட்டும்
தவம் செய்யவில்லை போலும்!

பாடல்-402:

மிக எளிதில் கோபப்படும் அரக்கிகள் வசமிருந்து
தன்னைத் தவிர துணையிலாத
இனியவள் சீதை தப்பிட எது உதவியது?
தனிமை - பெண்மை - கற்புத்தவம்
மூன்றும் தான்
அவளைக் காத்த துணைகளாகும்
அறத்தின் மாண்பு
பெண் குலத்தினைக் காக்கட்டும்!

பாடல்-403:

சீதையைத் தருமம் காத்ததோ!
ஜனக மன்னன் நல்வினைகள் காத்தனவோ!
கற்பு காவல் காத்ததோ!
அருமையே! அருமையே!
யார்தான் இதனைச் செய்ய முடியும்!
அந்த மன ஒருமை -  
மிகச்சிறிய என்னால் உரைக்க இயலுமா?


பாடல்-404:

தேவர்களே இரவும் பகலும்
பணி செய்யும் அளவுக்கு
செல்வ வளமுள்ள இராவணன் கோட்டையில்
கற்பு தவறா நிலையில்
வேறு எவராலேனும் முடியுமா!
இனி எந்தத் துன்பமும் இல்லை
வெல்லுமோ தீவினை அறத்தை?
மெய்மை வெல்லப்பட முடியாதது!

பாடல்-405:

அழகிய பெரிய மரத்தின்
இலைகள் நிறைந்த கிளை அமர்ந்து
அசோகவனத்தில்
 நினைத்துக் கொண்டிருக்கும்போது
 இராவணன் தோன்றினான்!

(காட்சிப் படலம் முற்றிற்று)

நிந்தனைப் படலம்

பாடல்-406:

இராவணன் - 
சோலைக்குள் வருகை வியப்பானது
உயரமான உச்சி உடைய சிகரங்கள்
ஒரே இடத்தில் சேர்வது போல வந்தான்
மாணிக்கம் பதித்த மகரக்குழைகளுடன்
அசைகின்ற இருபது தோள்களுடன் வந்தான்
பத்து தலையில் பத்து மகுடங்களும்
இளவெயில் வீசுவதாக ஜொலித்ததால்
நள்ளிரவு
நண்பகலாகும்படி நடந்து வந்தான் இராவணன்.

பாடல்-407:


இராவணன் வருகை மற்றவர்கள் இல்லாமலா!
உடைவாளை எடுத்துக் கொண்டு தொடர்கிறாள் ஊர்வசி!
வெற்றிலைப்பாக்குடன் தொடர்வது மேனகை
அவன் செருப்பு தாங்குவது திலோஹ்தம்மை
பக்கமெல்லாம் சூழ்ந்து வருவது தேவமகளிர்
மலை போன்ற திசை யானைகளின்
புள்ளிகள் உடைய துதிக்கையின் மூக்கில் -
மாலை மணம் - சந்தன மணம் -கற்பூர மணம்
மூன்றின் மணமும் மோதுகின்றன


பாடல்-408:

நெய் விளக்குகள் ஏந்தி
மகளிர் எட்டு வரிசையாக கைகளில் ஏந்தி வருகின்றனர்
மங்கையர் அணிகலன்கள் ஒளி
இருள் முழுதும் உண்ணுகின்றது
பாதச் சிலம்புகள் ஒலிக்க
சதங்கைகளும் மேகலையும் ஒலிக்க
வெண்ணிற அன்னப்பறவைக் கூட்டம் என
மகளிர் சூழ இராவணன் வருகின்றான்.

பாடல்-409:

இராவணன் வருகின்ற நடை
இந்திரனுக்கும் தேவர்களுக்கும்
கவலை மூட்டிற்று
“தன் ஆசைக்கு இணங்கா சீதையிடம்
கோபம் கொண்டு
தூக்கம்  கலைந்தவன் இவன்
மதிபோன்ற முகம் உடைய சீதை இருக்கும் சோலை வரைக்கும்
இராவணன் சினம் நீளுமோ?
வேறு யாரிடம் போகுமோ?”


பாடல்-410:

அதோ! இராவணன் அழகிய பட்டு மேலாடை
நீலநிறக்குன்றிலிருந்து
மிக ஆழம் நோக்கி இறங்கும் அருவி போலுள்ளது
கழுத்து மாலைகள் இடையே உள்ள பேரொளி
சூரியனின் இள ஒளி போல உள்ளது
கருமேகம் கிழித்து
அதனிடை அசையும் மின்னல் போல
இராவணனின் மார்புப் பூணூல்.

பாடல்-411:

இருபது  தோள்களிலும்
சுறாமீன்களின் வடிவில்
வாகுவலயங்கள்!
அதில்
வைரங்களின் பேரொளிகள் நட்சத்திரங்களையும் பழிக்கின்றன
இரு  கால்களிலும் பொன்கழல்களது ஒளி
நிலம் தடவிச் செல்கிறது
சுற்றத்தாரின் புன் சிரிப்பு
வெண்ணிலவு ஒளி போல
இராவணனின் மீது விழுவதால்
தனது முகத்தாமரை மலர வருகிறான் இராவணன்.




பாடல்-412:

கருநிறத்து மலை நடுவே
இளம் வெய்யில் போல்
இராவணன் தரித்த ஆடை இருந்தது
இருபது விரல்களிலும் பொன் மோதிரம்
அதில் வீசும் நவமணிகற்களின் மின் ஒளி
அது
கற்பகச் சோலை அழகுக்குச் சமம்.

பாடல்-413:

“சன்ன வீரம்” என்கிற பொன் மாலை
வெற்றி மாலை
அதில் பதித்த முத்துக்கள்
ஊழிக்காலத்தில் தனித்து நின்ற
மேருமலையில் தோன்றும் கிரங்கள்
நட்சத்திரங்கள் போல் மின்னுகின்றன
உதயகிரியில் பன்னிரு சூரியர்களில் இருவரை நீக்கி
பத்து சூரியர்கள் ஒன்று கூடியது போல்
வருகிறான் இராவணன்.

பாடல்-414:

இராவணன் வலிமையால்தான்
திசை யானைகளின்
இரு தந்தங்களும் முறிந்து அவமானமுடன் உள்ளன.
மயிலின் பாதம் போல்
மூன்று பாதங்களாகப் பிரிந்த
மதப்பெருக்கு கொண்ட
திசை யானைகள்  அஞ்சும்படி
இராவணன் நடந்து வருகிறான்.

பாடல்-415:

பெரிய மலையைச் சுற்றி
மயில்கள் கூட்டம் வருவது போல
இராவணனைச் சுற்றிலும்
குங்குமக் கொவ்வை கொண்ட பெண்கள் கூட்டம்
கொவ்வைக்கனி செவ்வாய் கொண்ட பெண்கள் கூட்டம்
குயிலைத் தோற்கடிக்கும் குரல் கொண்ட பெண்களுடன் 
இராவணன் வருகிறான்.

பாடல்-416:

மேல்புறம் செயற்கைத் துளைகளும்
உட்புறம் இயற்கைத் துளைகளும் கொண்ட
வேய்ங்குழல் இசையோடு
இளம் பெண்டிர் வாய்ப்பாடலோடு
 கின்னரர் எழுப்பும் யாழ் இசையோடு
சில்லரிப்பாண்டில் எனும் கருவி இசையோடு
முழவு இசை கலந்து விண்ணில் பரவும் படி
இராவணன் வருகை நிகழ்கிறது
புற்றில் நஞ்சு கக்கிடும் பாம்புகளும்
அமுதம் சொரியும்படி
இசை கேட்கும் சூழலில் வருகிறான் இராவணன்.

பாடல்-417:

இராவணன் வருகையின் போது
பூமணம் வீசும் நான்கு தெருக்கள் கூடிய சதுக்கத்தில்
பெண்கள் வரிசையாக நின்று
வெண்சாமரம் ஆலவட்டம் ஏந்தி
கருமேகம் கண்ட மயிலின் களிப்போடு
நடந்து வந்து வரவேற்றனர்
அப்பெண்கள் சும்மாவா! என்ன அழகு!
மின்னல் இடை ...
சிவந்த வாய் ...
குவிந்த முலை ...
பருத்த மூங்கிலின் தோள் ,...
தேர்த்தட்டு போன்ற அல்குல்


பாடல்-418:

இராவணன் வருகைக்கு
அழகிய பெண்களின் நடனமும் உண்டு
இசை இலக்கணப்படி அரம்பையர்கள் இசைக்க
தந்திரி எனும் யாழினை
ஏழுவகை இசை எழுப்ப
விரல்களால் வாசிக்க
நடனமாடுகிறார்கள் அழகிய பெண்கள்
குறடு எனும் தோல்கருவியில்
குறுந்தடியால் எழுப்பும் ஒலியுடன் இராவணன் வருகிறான்.
பாடல்களின் பண் இசை
இத்தனை கருவிகளுடன் பொருந்திட
அழகிய பெண்களின் நடனம் கலக்க
வருகின்றான் இராவணன்.

பாடல்-419:

இராவணன் வருகையைச் சுற்றி
இத்தனை இன்பநிலைகள் இருப்பினும்
மனதில் துன்ப நிலைதான்.
எதனால்?
இராவணன் மார்பில் மன்மதனின் கூர் அம்புகள் துளைத்து
நெருப்பு பறக்கிறது புண்கள் வலிப்பதால்!
வெந்த புண்ணில் வேல் போல
சந்திரனின் குளிர் கதிர்கள்பாய்வதால் !
மலர்களில் வாரிய தேன் துளிகளை 
தென்றல் எடுத்து
இராவணன் மீது தெளிப்பதால்!
உருக்கிய செம்பு உலோகத்தின் துளிகள் போல்
உடலெல்லாம் சுடுவதால்!

பாடல்-420:

இராவணன் வருகையின் போது
காமனின் தாக்குதல் மட்டுமல்ல
அவனது தோளிலும் மார்பிலும்
அழகிய பெண்களின் பார்வைகளும் தாக்குகின்றன
எப்படிப்பட்ட பெண்கள் அவர்கள்?
நூலிழை அளவு இடை கூட இல்லையே
முறிந்துவிடுமே என
வர்ணிக்கத் தக்க பெண்கள்!
சுருங்காத அழகிய முலைகள்
இரண்டு செப்புக்குடங்கள் 
அவற்றை மறைக்கும் மேலாடைகள்!
தாமரைக் கண்கள் - 
செவிகளில் அணிந்த குண்டலங்கள் வரை நீண்டிருக்கின்றன
அக்கண்கள் சாய்ந்து சாய்ந்து
புன்னகையுடன் பார்க்கின்றன!
செவ்வரி படர்ந்த கடைக்கண் பார்வைகள்!
இத்தனையும் தாங்கி  இராவணன் வருகிறான்.


பாடல் -421:

இராவணன் பின்னே வந்தவை எவை?
சோலைக்கூட்டம் போன்ற கற்பக மரம்
சங்க நிதி போன்ற நவநிதிகள்
மாலையும் சந்தனமும் கலந்த கலவை
அணிகலன்கள் மெல்லிய ஆடைகள் மணிகள்
இது மட்டுமா?
வெண்ணிற பால்கடலின் அலைகள்
கருநிற மலைமேல் பரவியது போல
வெண் சாமரைகள் வீசப்பட
இராவணன் வருகின்றான்
அதுமட்டுமா?
அவன் தலைக்கு மேல் உள்ள சந்திரக்குடை
கடலிருந்து மேலெழும்
கறையில்லாத சந்திரன் போலுள்ளது.

பாடல்-422:

இராவணன் நடை சாதாரணமல்ல!
அவன் நடையின்போது - 
விரிந்த கடலினை அகழி எனப் பெற்றுள்ள
திரிகூட மலை மீது அமைந்த இலங்கை நகரம்
கீழே அழுந்துகிறது!
கடலில் சுருளும் அலைகள்
கரை கடந்து எத்திசையும் பாய்கின்றது
விஷப்பற்களும் திறந்த வாயும் கொண்ட ஆதிசேஷன்
இராவணன் நடை பாரம் சுமக்க இயலாமல்
தலை தடுமாறினான்
கடலையே ஆடையாகக் கொண்ட நிலமங்கை
முதுகு சுளுக்கு அடைந்தாள்!

பாடல்-423:

இராவணனைச் சுற்றிலும் அரக்கியர்கள்
பக்கபலமாக நடந்து வருகிறார்கள்
தாடகை எனும் அரக்கியை விட பலசாலிகள்
பெரும் மலைகளைத் தாங்கும் கைகள்
பகைவரைக் கொல்லும் போர் முகங்கள்
அவர்கள் கரங்களில் எத்தனை வகை ஆயுதங்கள்!
கேடகம் -மழு -இரும்பு உலக்கை -
அங்குசம் - கப்பணம் -கிடுகு
பொன் போல மின்னும் வாள்
வேல் -வில் - வச்சிராயுதம்!

பாடல்-424:

அசோக வனத்தின் மரங்கள் என்ன சாதாரணமா!
தளிர் -அரும்பு -மலர்- கிளை - இலை
வேர் -அடிமரம் -அத்தனையும் பொன்! பொன்!
அது ஒரு பொன் சோலைதான் ஆனால் அத்தனையும்
திருமகள் சீதை உமிழும் பெருமூச்சினால்
கண்ணீர் கலந்த மூச்சினால்
கரிந்து எரிந்து போய்விட்டன.
இதெல்லாம் அறிந்திருந்தும்
இராவணன் வருகின்றான் கீதை நோக்கி!
இல்லாமல் போகப் போகின்ற இராவணன்
பல தலைகள் கொண்ட பாம்பு
தன் ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்தது போல
வருகின்றான் இராவணன்!

பாடல்-425:

இத்தனை விதமான ஆற்றல் மிக்க இராவணன் வந்தான்
அஞ்சனை மகன் அனுமன்
இராவணன் செயலை ஆராய்ந்தான்
ஒரு கணம் யோசித்தான்:-
“இவன் வினை என்ன?
இவன் செயல் என்ன?
இவன் வினையின் பயன் என்ன?
இன்னும் சில நொடிகளில் தெரியும்”
 இராமப்பிரானின் பெரும் பெயர் நெஞ்சில் ஓதினான்
கொஞ்சம் தள்ளி மறைந்து கொண்டான்
எந்தச் சிக்கலும் மறைய
 மறை புகழ் இராமநாமம் போதும் என
எண்ணுகின்றான் அனுமன்.

-அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment