Thursday, 1 August 2013

அடிகள்

சிறு வயதில்
சிலேட்டில் தப்பாக எழுதும் எழுத்துக்கு
அடிப்பது அம்மாவின் கைகள் தான்

கணக்கில் ஏறுவரிசை இறங்குவரிசை
தப்பாகச் சொல்லிவிட்டால்
அப்பாவை முந்திக் கொண்டு
அப்போதும் அம்மாதான் முதலில் அடிப்பாள்

பள்ளி விட்டு தாமதமாக வர நேரிட்டாலும்
தங்கையுடன் சண்டை முற்றும்போதும்
நிலவைக் காட்டியும் சாப்பிட மறுக்கும்போதும்
பக்கத்து வீட்டுத் தோட்ட மாம்பழங்கள் திருடியபோதும்
முதல் ஆளாக பல தருணங்களில்
அப்பாவை முந்திக் கொண்டு
அடிக்க கை ஓங்கும் அம்மாவிடம்
காரணம் கேட்டே விட்டேன்

சிறிது வளர்ந்ததும் விளக்கம் சொன்னாள் அம்மா :-
“அப்பா அடித்தால் தாளமுடியாது உன்னால் !
 அதிகம் வலிக்கும் என்பதால் -
முந்திக் கொண்டு நான் அடிக்கிறேன் !
கோபித்து கத்திக்கொண்டே வேகமாய் கை ஓங்கி ஆனால் -
மெல்ல அடித்து உன்னைக் காத்திடுவேன்”


*****                                            

No comments:

Post a Comment