Thursday, 1 August 2013

ஞானமரம் கண்டேன் !

தேக்கு மரம் தெரியும்!
அதன் வலிமைக்காக அறிந்திருப்போம் சொல்லிக்காட்டுவோம் ஆனால்
தேக்கு மர இலைகளை நேசிப்போமா?
நேசிப்போம் வாருங்கள்
பச்சை இலைகளின் பரப்பில்
அழகுடன் நெளியும் நரம்புகள் காற்றில் அலையும்,
மென் கவிதையின் ஆரம்பம் அது!

இன்று
அந்த தேக்கு மரத்தின் இலை உதிர்கால ஆரம்பம்
மெல்லிய பனிப்பொழிவு தொடங்கப்போகும் மார்கழி  முன் பருவ காலம்

எப்படியிருக்கிறாய் மரமே! என்று
நான் ஏதும் கேட்கும் முன்னர்
மனிதர்  வாழ்நிலை போல
நாலுவித பருவம்  சொல்லிற்று அதன் தோற்றம்

முதன்முதலில்
நட்டு வளர்த்து ஆளான போது
பிரம்மச்சரியம்

அடுத்த கட்டத்தில் -            
பூப்பூத்து
கிரகஸ்தன் எனும் இல்வாழ்க்கை காலம்

“மூன்றாம் பருவமான
துறவறத்தில் தானே இப்போது நீ இருக்கிறாய்?” என்று நான் கேட்டேன்

காவிநிற ஆடை தரித்தது போன்ற தோற்றம்
நோக்கிக் கேட்டேன்

“ஆம்” என்று அம்மரம் கூறிவிட்டால்
அதற்கடுத்த நிலையில்
“வானபிரஸ்த்ம்” ஆகிவிடுமே என்ற
அச்சமோடும் கவலையோடும்  நான் அதனைக் கேட்டேன்

“வானபிரஸ்தம்” என்பது மரண நிலை அல்ல
இருந்து வாழும் வாழ்விலேயே
துறவு மனதை கெட்டியாய் ஒட்டி விடுதல்!

“கூழுக்கும் ஆசை! மீசைக்கும் ஆசை என்பது போல
வாழும் வாழ்வுடனே
துறவு நிலை சாத்தியமா?”எனக் கேட்டதும்
தேக்கு மரம் கூறிற்று:

“கூழுக்கும் மீசைக்கும் ஆசையுற்ற ஒரு மனிதன்
கூழும் ஒட்டாமல் மீசையும் நனையாமல்
ஸ்டிரா எனும் உறிஞ்சு குழாய் கண்டதுபோல்
உனக்குள் நீயே ஒரு வழிகாண்” என்றது தேக்குமரம்.

தேக்குமரத்தின் வலிமை
அதன் வாக்கிலும் இருக்கிறது என்பது அறிந்தேன்
அழகிய துறவறம் பூண்ட
அந்த இனிய தேக்குமரத்தின்
ஆயிரமாயிரம் பச்சை இலைகளில் ஒன்று
ஆரஞ்சு வண்ண கோலம் கொண்டு
அட்சதை போல் என்மேல் விழுந்து ஆசி கூறிற்று!!

                        *****

No comments:

Post a Comment