Tuesday 27 August 2013

அப்பாவுக்கு ஒரு பரிசு

சொல்ல முடியாத  சொற்களையே
காற்று சுமக்குமோ
ஒருவருக்கொருவர் சொல்லமுடியாதவை அதிகம்
அப்பா மகனிடம் - மகன் அப்பாவிடம்
அம்மா மகளிடம் - மகள் அம்மாவிடம்
உறவுகளிடம் இது இன்னும் எவ்வளவோ அதிகம்
காற்றே இப்போது அவரிடம் செல்க
என் கவலைகள் இரு டன் எடை எனச்சொல்க
எண்பத்தி இரண்டு வயதினால் காது கேட்காது என நினைக்காதே
நன்றாகக் கேட்பார்
என்ன என்றால் நான் சொல்லி அனுப்பியதாக
மந்திரஸ்லோகம் ஒன்று சொல்லிவிட்டு வந்துவிடு
வேண்டாம் என்பார்
புதிதாக இதெல்லாம் என்ன புதுப்பழக்கம் என்பார்
கையிலேயும் மனதிலேயும் எழுதி வைத்துக்கொண்டு
பிரார்த்னை போல பயன்படும் என்று உங்கள்  மகன் சொன்னான்
என பதில் கூறுக காற்றே!
“அனாயா சேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
க்ருபையா தேஹி மே சம்போ
த்வயி பக்தி ரசஞ்சலம்”

 தமிழில் அர்த்தம் கேட்பார் அவசியம் சொல்:-
“ஹே சம்புவே! சிவமே! வேதனையின்றி நிம்மதியாக
என் உயிர் பிரிய வேண்டும்! வாழும் காலத்தில்
யாரிடமும் அடிமைப்படாமல் மகிழ்வாக வாழவேண்டும்
உன்னிடம் நிலைத்த பக்தி வேண்டும் ! கருணையோடு அருள்க!”
காற்றே! நீ சொல்லி முடித்ததும் அப்பா
கண்ணீரோ பெருமூச்சோ விடுவார் அதை ஆறுதல் சொல்லாக
என்னிடம் கொண்டுவருவாயா?




2 comments:

  1. அப்பாவுக்கு காற்றைத் தூதுவிடும் புதுமை சந்தோஷம் .
    அதே சமயம் தூது விட்ட விஷயம் வலிக்கிறது.ஏன் பிரிவு?
    அன்புடன்
    நளினி சாஸ்திரி

    ReplyDelete
  2. 82 வயசான எல்லா அப்பாக்களுக்கும் இந்த கதிதான். யாரிடமும் அடிமைப்படாமல் மகிழ்வாக வாழ இப்பிரிவின் வலிதாங்கியிருக்க வேண்டியுள்ளதோ...

    தன்னிலும் இரட்டிப்பாய் கவலை சுமக்கும் மகனுக்காக நிச்சயம் பெருமூச்செழும் அவரிடம்.

    ReplyDelete