Thursday, 1 August 2013

சுந்தர காண்டம்

பாடல்-261:

இராவணனுக்கு
போர் புரிவது பிறவிக்குணம்
அவனது பொன் மாளிகை
முழு சந்திரன் எனத் திகழ்கிறது
சுற்றிலும் நட்சத்திரங்கள் தேவைதானே?
அப்படித்தான் இருந்தன
தொடராக
அவனது உரிமை மகளிர் வாழும் மாளிகைகள்!
அங்கு அணுகினான் அனுமன் ...

பாடல்-262:

முயல் வடிவில் கருப்புக்கறை மட்டும்
நிலவில் இல்லையென்றால்
எத்தனை அழகாக இருக்கும்!
அப்படி அந்த அழகையும்
வென்றவர் இயக்க மங்கையர்!
அவர்கள் வாழும் மாளிகை வீதிகளை
அடைந்தான் அனுமன்


பாடல்-263:

ஒளி மழை பொழிகின்ற மாளிகைகள்!
சீதைப்பிராட்டியைத் தேடிட வேண்டும்
பொருட்களை விரும்பும் கொடிய ஆசையை
வேரோடு களைந்த அனுமனால் மட்டுமே
ஆசையற்ற கண்களோடு
இயக்க மகளிர் வாழும் இடம்தோறும் தேட முடிந்தது
ஒளி மழை  மாளிகையின்
சாவித்துவாரங்களில்
நூலைவிட மெலிதாக மாறி நுழைந்தான் அனுமன்
இளம் தென்றலை விட
நுண்ணியதாக மாறியும்  நுழைந்தான்.

பாடல்-264:

இயக்க மங்கையர் நிலை என்ன?
அவர்கள் யார்?
மலை போன்ற யானைகள் உடைய
இராவணனிடம் சிந்தை வைத்து
ஏக்க மூச்சு விடுகிறவர்கள்!
தாமரை இதழ்கள்!
சித்திரப்பாவைகள் போன்ற அழகிகள்!


பாடல்-265:

இயக்க மங்கையரில் சிலர்
அகத்தில் உறக்கமின்றி
புறத்தில் மட்டும் கண்மூடி உள்ளனர்
மன்மதனின் அம்புக்கு பயமா?
கனவின் இன்பம் தேவைப்பட்டதா?
வஞ்சனைச் செயலோ!
நமக்குத் தெரியவில்லை!

பாடல்-266:

இராவணன் இல்லாத சோகத்தை
தாங்க முடியாத இயக்க மங்கையரால்
அவர்களில் சிலர் -  
மன்மதனின் பழுதில்லா அம்புகள்
பலமுறை பாய்ந்த
கொங்கைகள் பெற்றவர்!
ஊசலாடும் உயிர்ப்பு அவர்களுக்கு!
சித்திரத்திலாவது இராவணனைக்காண
ஏங்கினார்கள் சிலர்.

பாடல்-267:

இயக்க மங்கையர் சிலருக்கு
கண்ணீர் துளிர்த்தது
உயிரற்ற மங்கைகள் பேசுவதுபோல
தமது பூவைகளாகிய
நாகணவாய்ப் புள்ளிடம் புலம்பினர்:-
“என் உயிர் இராவணன் இங்கு வர அழைக்கவுமில்லை!
என் துயரம் அங்கு கூறவுமில்லை
எனக்கு இன்பமாகும் எதனையும்
நீ கூற மாட்டாய்”

பாடல்-268:

இயக்க மங்கையரை
ஈரத்தென்றல் சீண்டியதும் மெலிந்தனர்
தமது பாரமான கொங்கைகளைப்பார்த்து
பாதகனாகிய இராவணன் வீரத்தோள்கள்
தழுவவில்லையே என்று
சோர்ந்து சோர்ந்து
உயிர் மெலிய
துடிதுடித்தார்கள் சிலர்.

பாடல்-269:

இன்னும் சில இயக்க மங்கையர் -  
சிவப்பு ஒளி வீசும்
மாணிக்கப் பேரொளி வீசும் படுக்கையில்
நிறைவேறாத ஆசையுடன்
நாட்கள்  வீணாகக்கழிய மெலிந்து - 
அதனால்
செவ்வானத்து நிலவு ஒத்தனர்.


பாடல்-270:

இன்னும் சில இயக்கமங்கையர்
ஒளித்தெளிவு பெற்ற கற்பக மரத்தைச் சார்ந்த
பொற்கொடி பொன்றவர்கள்!
அவர்களின் தோள்கள்
ஊஞ்சலில் துயின்றாலும்
காதில் விழும் பாடகர்களின் பாடலும்
யாழிசையும் செவிக்கு தேளாயின!

          --மீண்டும்  அனுமன் 08/ 08/2013  வருவார்

No comments:

Post a Comment