Friday, 26 July 2013

சுந்தர காண்டம்

பாடல்-251:

கரிய இரவு
நேரமும் கருப்பான நேரம்
எமனும் அஞ்சும் அரக்கர் வாழும் இலங்கையில்
பனிரெண்டு யோசனை தூரம் கொண்ட
மூன்று லட்சம் தெருக்களில்
அனுமன் தனி ஆளாக
சீதையைத் தேடுகிறான்

பாடல்-252:

இலங்கையின் நள்ளிரவு இப்படி இருந்தது
கள் உண்ணும் தொழில்கள் அடங்கின
கடல் ஒலி போன்ற ஒலிகள் நகரில் அடங்கின
தொழிலாளர்கள் செயல்கள் அடங்கின
மூன்று வகைப்பட்ட பறைகள் அடங்கின
அனைவருக்கும் உறக்கம் தொடக்கம்!

பாடல்-253:

நள்ளிரவில் -  
நல்ல நிறம் கொண்ட குதிரைகள்
இன்பமாய் உறங்குகின்றன
வீரம் செறிந்த மதில் காவலர்கள்
துடி எனும் பறையினால் ஒலி எழுப்ப
ஓசைகள் கிளம்பின
மலரணிந்த கூந்தல் மகளிர் ... 
தம் கணவரைப் பிரியாதோர்....
கணவரோடு ஊடல் தவிர்த்தவர் ...  
அனைவரும் உறங்குகின்றனர்!

பாடல்-254:

அந்த நள்ளிரவில் - 
மாலைகள் அணிந்த பெரும் தோள் ஆடவர்
கலவிப் போர் முடித்து ஓய்கிறார்கள்
களிப்பு கொண்ட மயில்கள் போன்ற
மங்கையர் கொங்கைகள் மீது
மயங்கிக் கிடக்கிறார்கள்
இதனால் களைப்பு நீங்கும்!

பாடல்-255:

அந்த நள்ளிரவில் -  
இரண்டு வகை மனிதர்கள்
நடக்க முடியாமல் உறங்கினார்கள்
மது எனும் நீர்த்துறையில் மயங்கி
தம்மை மறந்தவர்கள் ஒருவகை!
மற்றொரு வகை யார்?
தேனை விரும்பிய வண்டுகள் ஒலிக்கும்
நறுமணப்புகை சூழும் படுக்கை அறைகளில்
காமம் எனும் “கள்” பருகியவர்கள்!


பாடல்-256:

அந்த நள்ளிரவில் - 
பொருநர்களின் பாடல்கள்
பண் தரும் கருவிகளின் இசையை மூடிவிட்டன
இருள்  நிறைந்து வானம் -  
தனது இமையை மூடிவிட்டது
தோல் கருவிகளின் இசையும் மூடிக்கொண்டது

பாடல்-257:

அந்த நள்ளிரவில்
அலைந்தது காற்று!
நரத்தம் முதலிய வெண்மலர்கள் மீது
உராய்ந்து வருகிறது தென்றல் காற்று
உயிரின் மீதும் அக்காற்று  உலாவியதால்
கணவனைப் பிரிந்த கன்னியர் கண்கள்
கண்ணீர் சொரிந்தன
காதலரைப் பிரிந்ததால்
நாணமும் அவர்களைப் பிரிந்தது
நாணம் இழந்த நெஞ்சம்
துணையின்றி வாடியது தெரிந்தது!

பாடல்-258:

இளகும் நெய் குறைந்து
கணகற்ற விளக்குகள் அழியத் தொடங்கின!
பகைவர் தளர்ச்ச்¢யுற்ற நேரத்தில்
பாய்ந்து அழிக்கும் பகைவர் போல
காற்று - 
அந்த விளக்குகளை அழித்தது!
அந்நகர மங்கையர் உடலில் உள்ள
நவமணிகள் பேரொளிக் கடலில் பரவியது
அதற்கப்பாலும் உள்ள திசைகளில் பரவியது.

பாடல்-259:

தன் கடமைகளை
நாள்தோறும்  தவறாமல் செய்யும்
நிறை ஞான உத்தமர்கள் உறங்கினர்
மதம் பிடித்த கொடிய யானைகளும் உறங்கின
இதில்
மற்றவர்கள் -  
உறங்கியவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.

பாடல்-260:

வினைப்பகை வென்ற அனுமன்
இடைநகரின் மதிலுள்ளே புகுந்தான்
பிறகு
அரச குடும்பங்கள் வாழும்
இரண்டு  கோடித் தெருக்களில் சீதையைத் தேடினான்
அகழி மதில் கடந்தான்
சீதாப்பிராட்டி காண
இராவனணின் இருப்பிடமே சென்றான்.
                 
                                        --மீண்டும்  அனுமன் 02/ 08/2013  வருவார்

No comments:

Post a Comment