பாடல்-301:
உறங்கும்போது இராவணன் தலைகளில் உள்ள
மாணிக்கங்கள் பதித்த மகுடங்கள்
உதிக்கும் இளம்சூரியன்
மலை மீது ஏறியது போல் உள்ளன
அது மட்டுமா?
பலதோள்களும் பல தலைகளும் பரப்பி -
படுத்துத் தூங்குவது இரணியனைக் கொன்ற
நரசிங்க மூர்த்தியின் இராவண வடிவம் போல உள்ளது!
பாடல்-302:
உறங்கும் இராவணன் !
இருபுறமும் அரம்பையர் ஆயிரம்பேர்!
பொன்காம்பு கொண்ட கவரி வீசுகின்றார்கள்
கற்பக மலரின் தேன் துளி கலந்த
பசுங்காற்று அதனால் உண்டாக்கி
அவனது நீண்ட மேனி வெதும்புகிறது
சீதையை நினைக்கிறான்
பெருமூச்சு விட்டு நினைக்கும்போதே உயிர் தேய்கிறான்!
பாடல்-303:
வெண்மதிக்குழந்தை சூடிய சிவபெருமானின்
கயிலை மலையை குலுக்கிய தோள்களில்
திசை யானைகள் மோதிய பழைய வடுக்கள் இருந்தன
அவற்றின் நடுவே -
இப்போது பசும்புண்கள் -
மன்மதனின் கொடிய அம்புகளால்!
பாடல்-304:
இராவணனின் உறக்கம் எப்படியிருக்கிறது?
தென்றல் காற்று
இராவணன் மீது பூசிய சந்தனத்தில் படுவதால்
காதல் கனவை வளக்கும்
துருத்திக் காற்றாகி வீசுகிறது
காந்தள் மலர்விரல்கள் கொண்ட சீதையிடம்
மனம் முதலான அந்தகரணங்கள் ஓடிவ்¢ட்டன
இப்போது -
பாம்புகள் நீங்கிய புற்று போல
நெஞ்சம் குழைந்து உறங்குகிறான்.
பாடல்-305:
இயல்பாகவே ஊக்கம் அதிகம் இராவணன்
அனைத்து திசைகளிலும் வெல்வதாகச் சொன்னபடி
சொன்ன வீரர்களோடு போரிடுவான்
வீரம் மிகுந்த கைகளால் வாரி வாரி உண்டு விட்டான்
திறந்த வாயுடன் உறங்குகிறான்
திறந்த வாயின் இரண்டு ஓரங்களிலும் வழியும் உணவு
கோரப்பற்கள் முளைத்தது போல உள்ளன
தேவர்களின் புகழ் வழிவது போலவும் உள்ளன.
பாடல்-306:
இராவணனின் உடல் வெம்மையால்
மலர்ப்படுக்கை வெந்தது
தீப்பொறி எழுந்தது
புள்ளிவெண் மொக்குகள் போல
வியர்வை கொதித்துப் பொங்கியது
கள் வழியும் மாலையில்
சுற்றிய தும்பிகள்
கரிந்து சாம்பலாயின இத்தனைக்கும்
இராவணனின் பெருமூச்சே காரணம்!
பாடல்-307:
திருமாலின் சிந்தை செல்வது சீதையிடமே!
அது போல் - தற்போது
இராவணன் சிந்தையும் ஆனது!
அதனால்
மலர்ப்படுக்கையில் பொய் உறக்கம் தான் வந்தது
இராவணன் -
காதல் எனும் நீரால்
அவன் தன் உயிரையே அம்மியில் வைத்து
அரைத்துக் கொண்டிருக்கிறான்!
பாடல்-308:
மிகுதிப்பட்ட நினைப்பு
முற்ற ஆரம்பித்தால்
உருவம் தோன்றும் அல்லவா!
ஆம்! சீதை உருவம் வந்தது
காதலால் நடுக்கமுற்றான்
“தேன் சிந்தும் மொழியாள்
ஏதோ ஒரு வகையில் இணங்கி என் அறையுள்ளே
வந்து விட்டாள் அல்லவா” என
அவன் மயிர்ப்புறங்கள் பொடித்துப் போயின.
பாடல்-309:
நுட்பமான அழகான
தோகை கொண்டது மயில்
எனினும் அது
தானிருக்கும் மலை விட்டு
வேறொரு மலை சேருவது மிகவும் கடினம்
அது போலவே - மயில்சாயல் பெண்களும்
இராவணனின் தோள்களை
அப்படித் தான் கருதினர்!
பாடல்-310:
உலகைச் சுற்றிலும் கடல் தான்
கடலின் மேல்
சூரிய கிரணங்கள் படர்ந்து ஒளிவீசுவது போல
இராவணன் மார்பில்
ஒளி வீசுகின்றன மாணிக்க மாலைகள்!
சிவனின் மழு
திருமாலின் சக்கரம்
பிரம்மனின் வச்சிராயுதம்
மூன்றின் வலிமையும் துடைத்த மார்பு
இராவணன் மார்பு!
பாடல்-311:
இராவணன் எட்டுத்திக்கு யானைகளுடன்
போரிட்டபோது -
அவன் மார்பின் மலர் மாலை வண்டுகள்
யானைகளின் மதநீரை மொய்த்தன!
இராவணனின் மார்பு சந்தனம்
திசை யானைகள் நெற்றிக்குப் பொட்டு வைத்தது!
யானைகளின் குங்குமம் -
இராவணன் மார்புக்குப் பயணமாயின!
அதனால் அவன் மார்பு
யானையின் தந்தங்களால் உழப்பட்டது !
இராவணனின் கையில் உள்ள வடிவேலின்
போர்குணத்துக்குப் பயந்து
அவன் தாளைத் தொழுதுபணிந்த
பகை வேந்தர்கள் மிக அதிகம்
ஆம்!
அவர்கள் மகுடங்கள் மோதி மோதி
இராவணன் பாதங்கள் வடுக்கள் கண்டுவிட்டன!
பாடல்-312:
தனது ஒப்பற்ற வடிவம் திருமாலின் வாமன வடிவைவிட
சிறிதாக்கி அனுமன்
இராவணனின் பத்து தலைகளை இருபது தோள்களை
உற்று நோக்கி காண்கிறான்
உறுதி கொண்டான்
“இவன் இராவணன்” என்றது அறிவு
மனம் செயல்படும் முன்னே
அனுமனின் கண்கள் கோபமுற்றன
செந்நிறமான ஊழித் தீயை கண்கள் கொட்டின
அந்த வெம்மையால் -
அண்ட கோளத்தின் -
மேல்பகுதியும் கீழ்ப்பகுதியும் பிளந்து வெடித்தன.
பாடல்-313:
அனுமனின் மனம் கொதிக்கிறது
“வாள்விழி சீதையைக் கவர்ந்த
இராவணனின் மணிமுடிகளை
கால்களால் உதைத்துத் தள்ளுவேன்
சிதறச் செய்வேன்
அப்படி இல்லையெனின் என் தோள் வலிமை எதற்கு?
நெடு வான்புகழ் எனக்கு எதற்கு?
அப்படி நிகழ்த்தாவிட்டால்
இராமனின் அடியவன் ஆகமாட்டேன்!
பாடல்-314:
அனுமன் மேலும் திகைத்தான்
இராமனுக்கு அடிமை பூண்டது என்பது
வெறும் நடிப்பா?
சீதையை சிறை பிடித்த இராவணனுக்கு
நான் கண்ட பிறகும் உயிர் இருக்கலாமா?
தோள்கள் உடைப்பேன்
தலைகளை உதைத்து உருட்டிக் கொல்வேன்
அவனையும் முடித்து இவ்வூரையும் முடித்த பின்
எது நடந்தாலும் எனக்கென்ன”
பாடல்-315:
இப்படியாக நினைத்து ஊக்கமுடன்
இரு கரமும் பிசைந்து எழுந்தான்
புறப்பட்டான்
ஒரு நொடி உணர்வு!
தனக்கே உரைத்துக்கொண்டான்
“இது இராமபிரான் இட்ட பணி அல்ல
ஒரு செயலை ஊக்கமுடன் முயன்று
வேறொன்று செய்தல்
சரியான உணர்வு அல்ல
பிறகு நினைத்துப் பார்க்கும்போது
இது பெரும் பிழை தந்துவிடும்” என்று விலகினான்.
பாடல்-316:
அனுமன்
தன் செயலை அடக்கிக் கொண்ட ஒழுக்கம்
நஞ்சினை உண்ட சிவனின் ஒழுக்கம் போன்று
ஆழ்ந்த சிந்தனை சார்ந்தது
உலகையே அழிக்கும் ஆற்றல் இருப்பினும்
தனக்குரிய காலத்தை எதிர்பார்த்து
கரை கடக்காமல்
காத்திருக்கும் கடல் போன்றது.
பாடல்-317:
இப்போது எனக்குள் பிறந்த
பெரும் சீற்றமும் கோபமும்
எனக்குள்ளேயே அடங்கட்டும்
“கற்றைப்பூங்குழல் சீதையை
சிறை வைத்த இராவணனை
ஒரு குரங்கு முடித்துவிட்டது என்றால் அது
இராமபிரானின் வில் தொழில் போருக்கு
குறைவு தருமே” என தன்னைக்
குறைத்துக் கொண்டான்.
பாடல்-318:
தன்னை அடக்கிய அனுமனுக்குள்
இன்னொரு புரிதல் வெளிச்சம் உண்டானது:-
“இராவணன் தனியே தவிக்கிறானே தவிர
பிற மகளிர் இவனுடன் இல்லை
கற்புச்சிகரம் சீதையும் இவனுடன் இல்லை என்பதால்
நல்ல நிலையில் தனித்து உள்ளான்
என்பது தெரிகிறதே!”
பாடல்-319:
“இனி இங்கு நிற்பதால்
ஒரு பயனும் இல்லை” என
மலையின் தோளுடைய அனுமன்
இராவணன் அரண்மனை விட்டு நகர்ந்தான்
சில நொடி நின்றான்
மனம் பொருமிற்று
இத்தனை பெரிய நெடுநகரில்
பொன் அணி பூணாத சீதை இல்லையே
பாடல்-320:
“ஒரு வேளை
கற்பு அழியாத குலமகளை கொன்று விட்டானோ
கொடிய செயலால் தின்று விட்டானோ
எங்கு சிறை வைத்தானோ
சிறியேனுக்கு ஒன்றும் உணர முடியவில்லையே
மீண்டும் திரும்பி இராமபிரானிடம்
என்னவென்று உரைப்பது?
இத்துயரம் அகல ஒரே வழி
நான் இறப்பதுதான்!”
பாடல்-321:
என் பயணமே வீண்
சீதையோடு வருவேன் என இராமபிரான் காத்திருப்பான்
வானர அரசன் சுக்ரீவன் காத்திருப்பான்
பகைவரை அழித்து
நானும் அழிந்திருக்க வேண்டும்
அப்படி ஏதும் நடக்காமல்
வீணாக இறந்துவிடுவேனோ!
பாடல்-322:
“சீதையைக் கண்டு வருவேன்” என்று
குறிப்பிட்ட நாளும் கடந்துவிட்டது
உயிர்விட முற்பட
அங்கதன் முதலானேவரைத் தடுத்து
நான் ஆரம்பித்த முயற்சி பலிக்கவில்லை
அதன் பின் உயிர் வாழ்வேனோ
“புண்ணியம் என்று ஒரு பொருள்”
எனை விட்டு நீங்கி விட்டது போலும்!
பாடல்-323:
இலங்கை மதிலின் நீளம்
ஏழு நூஏறு யோசனை
அதில்
நான் காணாதன இல்லை
பெருந்தேவி சீதையைத் தவிர!
கடலைத் தாண்டிய என்னால்
துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்து விடுவேனோ!
பாடல்-324:
வலிய அரக்கன் இராவணனை
பற்றிப் பிடித்து
வாயில்குருதி வருமாறு
என் கரத்தால் அடித்து
“சீதையைக் காட்டு” என்று காணமாட்டேனோ!
அல்லது
சூரியஒளி போல் வேல் கொண்ட இராவணனும் இலங்கையும்
அரக்கு போல் உருகிஅழியுமாறு
நெருப்பு மூட்டமாட்டோனோ!
பாடல்-325:
தேவர்களை சீதை எங்கே என்று கேட்டால்
அரக்கன் இராவணனுக்கு அஞ்சி
உண்மை சொல்லப்போவதில்லை
அவர்களே துணிவில்லாமல் இருக்கும்போது
பிறரும் அப்படித்தான்
சூழ்நிலை இப்படி எனில்
எப்படி தெரிந்து கொள்வேனோ
உடல் அழிந்து உயிர் நீங்காமல்
உயிர் சுமக்கின்ற உணர்வும் இல்லாமல் இருக்கின்றேன்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment