Friday, 28 June 2013

பாடல்-151:

சிறப்பு மிக்க அனுமன் மேல்
தேவர்கள் சொறிந்தனர் பூ மழை!
அவை -  
மண்ணில் விழவில்லை
இராவணனுக்கு பயந்து
நட்சத்திரங்களாய் விண்ணில் நிற்கின்றன!

பாடல்-152:

மல்லிகை மலர்களின்
தேன் உண்ண வண்டு வரும்
ஆனால் - 
இங்கோ பகைமை உண்டாகிவிட்டது
இருளும் ஒளியும் பகை தானே? ஆம்!
வண்டுகள் - 
இருளின்  துண்டுகள் போல் இருப்பதால்!
மல்லிகைகள் -  
நிலவின் துண்டுகள் போல் இருப்பதால்!

பாடல்-153:

கிளர்ச்சி தருகிறது சந்திரன்
சந்திரனின் வெள்கதிர் தொகுதி
எல்லா இடங்களிலும்
இராவணனின்  காவலில் உள்ள
மதில்களின் மேல்
உறையாகப் போர்த்தியது போல் உள்ளது!

பாடல்-154:
இகழ்ச்சிக்கு இடமற்ற இராமன் எய்த
அம்பின் வேகமே - 
அனுமனின் இலங்கைப் பயணம்!
அகழி கடந்து
அரண் கடந்து
தடையின்றி
இலங்கை  நகரில் பரவிய
சந்திரன் ஒளி போல்
அனுமன் பயணம்!

பாடல்-155:

எவ்வழியில்
இலங்கை நுழையலாம் என
ஆராய்ந்த அனுமன்
செவ்வழியாகிய
நேர்வழி என்ற முடிவு செய்து
தேவர்கள் வாழ்த்த
அரக்கர் ஊருக்குள்
செல்லத் தொடங்கினான்
வெல்லத் தொடங்கினான்!

பாடல்-156:

இலங்கை மதிலுக்கு - 
கடலே அகழி!
தேவர்கள் உலகம் வரை
உயரம் கொண்டது
இலங்கை மதில்!
ஊழியிலும் அழியாதது
இலங்கை மதில்!
அதில் கால் பதித்தான் அனுமன்
இராம நாயகன் உள்ளிருக்கும் தைரியத்தில்!

பாடல்-157:

“நிலை கலங்காத சூரியன்
நிலை கலங்காத கோள்கள்
வேல் கொண்ட இராவணனுக்கு அஞ்சி
இலங்கை மீது
விரைந்து செல்வதில்லை” என்பது
உண்மையல்ல!
இலங்கையின் மதில் மீது
சூரியனால் ஏற முடியவில்லை
அதுவே உண்மை என வியந்தான் அனுமன்!

பாடல்-158:

எண்ண முடியாத அரக்கர்கள்
தங்கும் அளவுக்கு
இலங்கையின் மதில் உள்ளது
என்று சொல்லிவிட்டால்
பெருமை முடிந்து விடுமா!
அண்டம் எத்தனை உயரம்
அத்தனை உயரம் இந்த மதில்!
வியப்பு மேலும் மேலும் விரிந்தது அனுமன் மனதில்.

பாடல்-159:

எமனின்
அளவில்லாத சேனைகள்
வாய் திறந்தால் எப்படியோ
அப்படி இருந்தன
மூதூரின் வாசல்கள்!
அதன் அருகில்
ஆண் சிங்கமும்
மத யானையும் வெட்கமுறும் தைரியமுடன்
அனுமன் நெருங்கினான்

பாடல்-160:

வியப்பு விரிந்தது அனுமனுக்கு!
மேருமலையைக் குடைந்து
மதில்வாசலை உருவாக்கினார்களா!
இவை தேவலோகப் படிக்கட்டுகளா அல்லது
ஏழுலகங்களும் அசையாமல் நிற்க
முட்டு கொடுத்த தூணோ!
கடல் நீர் புகுந்து செல்ல
அமைந்த மதகு வழியோ!


பாடல்-161:

“ஏழு உலகிலும் வாழும் உயிர்கள் அனைத்தும்
எதிர்த்து
ஒரே நேரத்தில் வந்தாலும்
இலங்கை வாசல் உள்ளே
அடைபட்டுவிடும் போல உள்ளதே!
அப்படியிருக்காது எனில்
இலங்கைவாழ் அரக்கர்கள் வந்து செல்லும்
வழக்கமான வழி என்று  கொண்டால்
நமது பகைவர்களின் எண்ணிக்கை
ஏழு கடல்களின் அளவுக்குள் அடங்காதே!:”
நினைத்தான் அனுமன்.

பாடல்-162:

அப்போது அரக்கர்கள் - 
“இரு நூறு வெள்ளம்” எண்ணிக்கையில்
வீரம் - வஞ்சனை- வலிமை கொண்டு
நிற்பதைக் கண்டான்
இரு  கைகளிலும் முள் போல் வாளுடன்
இகழ முடியாத காவலர்களெனப்
புரிந்து கொண்டான் அனுமன்.

பாடல்-163:

சூலம் - மழு - வாள்
வேல் - பெரிய ஈட்டி - இரும்பு
உலக்கை - எமன் போன்ற வில் - அம்பு
கப்பணம் -முசுண்டி - கோல்
வளைந்த தடி -சக்கரம் -வச்சிராயுதம்
உடைவாள் -கை ஈட்டி -பிண்டி பாலம்
இத்தனை  ஆயுதங்கள் ஏந்திய
ஆயுதங்களாய் நிற்கிறார்கள் அரக்கர்கள்!

பாடல்-164:

இத்தனை  ஆயுதங்கள் மட்டுமல்ல!
அங்குசம் -  
கல் எறியும் கவன்
“பாசம்” எனப்படும் நுனியில் கூர்மையால் அறுக்கும் கயிறு
என்பனவும் இருந்தன.

அரக்கர்களுடைய
முகம் கோபத்தால் சிவப்பன
முகம் மட்டுமல்ல
தலைமுடியும் செம்பட்டை நிறம்

தொலைவிலிருந்து பார்த்தால்
பங்குனி மாதம் பூக்கின்ற
முள் முருங்கை பூக்களின் காடு போல் உள்ளனர்!

பாடல்-165:

அனுமன் கண்டான் - 
அங்கே உள்ள விளக்குகளை
எண்ண முடியாதவையாக இருக்கின்றன
அதனால்
வெளிச்சம் இருட்டினம் தின்று பிரகாசிக்கிறது.
கல்மணம் கொண்ட எமனும் அஞ்சுவானே..
கடல் படை என நிற்கிறதே -
சோர்விலாத அரக்கர் கூட்டம்.

பாடல்-166:

“அரக்கர்கள் நிறைந்த நெடிய வாசல் இது!
இதனைக் கடப்பதற்கு
தேவர்கள் யார் உள்ளனர்!
அசுரர்கள் யார் உள்ளனர்!
அத்தனை சிறப்பு மிக்க காவல் இது
எவ்வளவு வியப்பு இது
இராமனும் நாமும்
இவர்கள் மீது போர் தொடங்கினால்
என்ன நடக்குமோ!”
அனுமன் எண்ணங்கள் இவை.

பாடல்-167:
அனுமனின் எண்ணங்கள் தொடர்கின்றன
“கருங்கடலைக் கடந்து வருவது சிரமம் அல்ல
நகர் காக்கும் படைக்கடலே சிரமம்!
நம் எண்ணம் சிறிது பெயர்ந்தாலும்
அரிய கடமை முடிப்பது அரிது
ஆம்
அரக்கர்களோடு போரிட நெருங்கினால்
பலநாட்கள் நடக்கும்!”


பாடல்-168:

“இவ்வளவு பாதுகாப்பு கடந்து
வாசல் வழியே போக இயலாது
அதுமட்டுமல்ல
ஆராய்ந்து பார்த்தால்
வல்லவர்களுக்கு
பிறர் வைத்த வழி அழகல்ல
எனவே -  
கதிரவனும்கடக்க இயலாத இந்த மதிலை
விரைவாக தாவிக்கடப்பேன்”
நினைத்தான் பறந்தான் அனுமான்.

பாடல்-169:

இலங்காதேவி!
இலங்கை நகரின் ஆயுள் கொண்டது போல இருக்கிறாள்
தூண்கள் போன்ற தோளுடைய
அனுமனைக் கண்டாள்
அது - 
கதிரவனை விழுங்க வரும்
இராகு கேதுவின் கோபப் பார்வையுடன்
மறித்தாள் அனுமனை.

பாடல்-170:
இலங்கை தேவி
எப்படி இருப்பாள் ?
எட்டுத் தோள்கள்! நான்கு முகங்கள்!
ஏழுலகங்களும் தொடுகின்ற பேரொளியின் நிறம்!
சுழலும் விழி!
எவரேனும் மோதினால்
விண்ணுலகையும் அடியோடு பெயர்த்துவிடுவாள்!
மூவுலகையும்  அடியோடு பகைத்து மோதினால்
மூவுலகையும்  கட்டிப்போடும் வலிமை!
பொறுமை அற்றவள்!

பாடல்-171:

அவள்-  
எட்டுத்திசைகளின் மேய்ப்பவள்
கருமேகங்களின் மழை போல முழக்கம்
கேட்டால் அச்சம் வரும்
சிலம்பு அணிந்த கால்கள்
மின்னல் ஒளி நகைகள்
வியர்வை வழியும் மேனி!


பாடல் -172:

வேல் வாள் சூலம் கதை இருந்தது
பாசக்கயிறு சங்கம் கோல் குந்தம் இருந்தது
எட்டுக்கருவிகளும் ஏந்திட
எட்டுக்கரங்கள் கொண்டவள்
இமயமலை போன்றவள்
சந்திரனைப் பிளந்தது போல பற்கள்
புகை கக்கும் வாய்
காலனைக் கலங்கச் செய்யும் கடும்கோபம்!

பாடல்-173:

அவளுக்கு - 
பஞ்சவர்ணத்தில் ஆடை
பாம்புகள் அஞ்சும் கருடனின் வேகம்
கருணையற்றவள்
பொன்னாடையே மேலாடை
அழகிய நத்தைகள் ஈன்ற முத்துக்களை சேர்த்த
மாலைகள் ஆகியவற்றால் ஆன மாலையை
அணிந்திருந்தான் அனுமன்.

பாடல்-174:

அவள் - 
மணம் வீசும் சந்தனக்குழம்பு பூசியவள்
அவள் சொற்கள் -  
யாழில் வாசிக்கப்படும் “தாரம்” எனும் இசைக்கு சமம்!
ஒலிக்கும் வண்டுகள் - 
காந்தாரம் எனும் பண் பாடிக் களிக்க இடம் தருகின்றன.

பாடல்-175:

இலங்கா தேவி யார்?
இலங்கை என்னும் மூதூருக்கு
நன்மை செய்பவள்
கண்ணின் கருமணியை
கண்கள் காப்பது போல் காப்பவள்
அனுமனைக் கண்டாள்
“நில்லாய் ந்¢ல்லாய்” என அதட்டியது தான் மிச்சம்
முன்னை விட வேகமாய் அனுமன் பயணப்பட்டான்.
திரும்பினான் அனுமன்
“நில்லாய்! நில்லாய்!” என அதட்டினாள்
வருக என அனுமன் கூறினான்
திசை வழியே சென்று “நின்றான்” அனுமன்.

 
                                                                      --அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment