Monday, 17 June 2013

பாடல்-126 :

தொய்யில் என்பது
செந்நிற குங்குமப்பூக் குழம்பினால் எழுதும் கலை !
அரக்கர்கள் -  
அரக்கியர்களின் இளமுலைகளில் தொய்யில்  எழுதினர்
அன்பினால்
அரக்கியர் தழுவும் போது
அரக்கரின் கறுத்த மேனியில் ஒட்டியதால்
அழகு வந்தது
ஊடல் கொண்டு உதைத்தபோதும்
அரக்கர்கள் அழகாயினர்
எப்படி?
அவர்கள் காலில் இருந்த தொய்யில்
அரக்கர்கள் தலையில்!

பாடல்-127 :

விளரி எனும் பண் கொண்டு
இனிய சொற்கள் பேசும் மங்கை போல் உள்ளது
இலங்கைக்கடல்!
அது மட்டுமல்ல - 
கடலில் மிதக்கும் பவளக்காடு போல் இலங்கை உள்ளது
குவளை மலர்க்கண்கள்
நிரம்பிய நீர்க்குளம் போலவும் தோன்றுகிறது!



பாடல்-128:

அரக்கர்கள்
எழுந்து திரிவதால்
அவர்கள் எண்ணிக்கையை
தாமரையில் வாழும் பிரம்மனும் கூறி விட இயலாது
அவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால்
அண்டம் கிழியவில்லை என்பதும் அறியலாம்.

பாடல்-129:

அரக்கர்கள் யார்?
உடல் அளவில் மட்டுமா பெரியவர்கள்?
அளவிலா வீரத்தில்
உலகை அழிப்பதில்
கணக்கற்ற வரங்கள் பெற்றதில்
எவரும் உணரா மாயத்தில்
அனைத்திலும் !
சரி -  
இலங்கையின் தெருக்கள் எப்படி இருக்கும்
ஒரு ஒரு தெருவும்
ஒரு நாடு !

பாடல்-130:

வீரக்கழல் கொண்ட கால்கள்
கூற்றுவன் போல் வேல் ஏந்திய கைகள்
கனல் தெறிக்கும் கண்கள்
இப்படிப்பட்ட ஆடவர்கள் மட்டுமே
இலங்கையில் உண்டு
பெண்கள் வடிவம் எப்படி இருக்கும்?
வண்டுகள் மொய்க்கும் கூந்தல்
செம்பஞ்சுக் குழம்பு கொண்ட குழல்
யாழ் போன்ற மழலைக்குரல்
சிவந்த வாய்!

பாடல்-131:

இலங்கை நகர யானைகள்
வண்டுகளால் சூழப்படும்
புலால் மணம் வீசும்
செந்நிறத்தலைகள் பெற்றிருக்கும்
கருநிற உடல் பெற்றிருக்கும்
உள்ளத்தில் களிப்பு அதிகம் பெற்றிருக்கும்
இதனால் - 
யானைகளும்
செம்பட்டை முடி கொண்ட அரக்கர்களே!

பாடல்-132:

இலங்கை அரக்கியர் மனம்
தேவமகளிர் பூ இடை
சோர்வது போல வருந்தியது!
எனினும்
வெண்ணிறப்புன்னகை அரக்கியர் முகத்தில் தோன்றியது
நாணம் வந்தது அரக்கர்களுக்கு
எனினும்
அரக்க மகளிர் குரவைக்கூத்து கண்டு
மகிழ்வதை நிறுத்தவில்லை!

பாடல்-133:

அனுமன் - 
இவ்வாறு
இலங்கை நகரம் கண்டதும்
ஒரு நினைப்பு வருகிறது:-

“ நாம் இந்நகரை அழிப்பது இருக்கட்டும்
எப்படியாவது வாரை சேனை
இங்கு  வந்து சேர்ந்து விடலாம்தான்
ஆனால்....
ஆனால்....
அரக்கரும் அரக்கியரும்
இத்தெருக்களில்
வீசியெறிந்த அணிகலன்களைக்
கடந்து வர இயலுமா !! ”

பாடல் - 134 :
கடல் ஏன் ஆழமாக உள்ளது ?
 ஓ!
இலங்கை நகரின்
சந்தனக் குழம்பு
யானைகளின் மத நீர்
குதிரைப் படைகளின் வாய் நுரை
எல்லாம் ஆறுகளாகி
கடலில் விழுவதால் !
அது மட்டுமில்லை - 
அந்த ஆறுகள்
வீதியில் எறிந்த
பொன் மலைகளையும்
காதணிகளையும்
 அணிகலன்களையும் எடுத்து
கடலில் கொண்டு சேர்க்கின்றன !

பாடல் - 135 :
இதுவரை அடியேன் கண்டதெல்லாம்
என் உயிர் நாயகன் இராமனிடம் கூற வேண்டுமே...
என்னவென்று கூறுவேன்...
வில் படை பெரிது என்பேனா
வேல் படை பெரிது என்பேனா
வாள் படை வலிது என்பேனா
இரும்பினால் செய்த
யானை நெருஞ்சி போன்ற
“ கப்பணம் ” என்ற கருவிகள் அதிகம் என்பேனா
எறியும் ஆயுதமான
“ பிண்டி பாலம் ” அதிகம் என்பேனா...,.


பாடல் - 136 :
அனுமன்
இவ்வாறு பலவும் நினைந்தான்
“ இந்த இடத்திற்கு வந்து
அரக்கர்கள் என்னைக் காணக் கூடும் ”
என நினைத்து
பெரிய உடலை சுருக்கினான்
அழகிய சாரல் பவள மலையில் நின்று
இத்தனையும் முடித்த போது
மேற்கு திசைக் கடலில்
கதிரவன் மூழ்கினான்

பாடல் - 137 :
அப்போது இருள் சூழ்ந்தது
அந்த இருளின் வலிமை
கனத்து இருந்தது
சூழ ஆரம்பித்தது
அது எப்படி இருந்தது.... ?
முற்பிறவி நல்வினையால்
அடைந்த செல்வம் போல !
நல்லது - தீயது ஆராயும்
மனமற்றவன் மனம் போல !
அறிஞர் சொல் கேளன் மனம் போல !
இந்தத் தன்மைகளால்
தனக்கு கேடு வருமே என நினைக்காத மனம் போல !
உண்மை இல்லாத மனத்தனின் பாவச் செயல் போல !

பாடல் - 138 :
அந்த இருட்டுக்கு
இன்னொரு உவமையும்  உண்டு
முப்புரம் எரித்த
மழுவாயுதம் ஏந்திய சிவபெருமான்
தாருகா வன முனிவர்
உண்டாக்கிய  யானையின் உரித்த தோலைக் கொண்டு
உலகுக்கு
உரை செய்து போர்த்தியது போல
இருக்கிறது இருட்டு !

பாடல் - 140 :
சீதை வழி எது ?
கொடை வள்ளல் ஜனகனின் மரபு வழி
பெண்மை நீங்காத கற்பு வழி
அப்படிப்பட்ட திண்மை நிறைந்த சீதையை
இராவணன்  சிறை வைத்தான் எனும் இகழ்
உலகம் முழுதும் பரவியது போல
இருக்கிறது இருட்டு !

பாடல் - 141 :
இப்படிப்பட்ட இருள் எனினும்
எத்திசையிலும் செல்கிறார்கள் -              
அரக்கர்கள் !
எதனால் ?
மந்திர ஆற்றலால் !

பாடல் - 142 :
அரக்கர்களுக்கு
இராவணன் உத்தரவே முக்கியம்
இந்திரனின் வளநகர்
அமராவதிக்கு ஏவப்படலாம் !
சந்திலோகத்துக்கு ஏவப்படலாம்
கோபப்படாமல் - 
எமனது உலகுக்கும் செல்லலாம் !

பாடல் - 143 :
தேவலோகப் பெண்கள்
வித்தியாதர மகளிர்
நாக நங்கையர்
இயக்கர்
பாள வயர்
ஒருவரை முந்திக் கொண்டு
மின்னல் கூட்டமென நெருங்கி விரைவது
அரக்கர்கள் சொல்லும் வேலை முடிக்க !

பாடல் - 144 :
 அது -  
இருள் நேரம்தான்
எனினும் பகலாகத் தெரிந்தது !
தேவர்கள்
அசுரர்கள்
செங்கண் நாகர்கள்
இயக்கர்கள்
வித்தியாதரர்கள்
தேவகணத்தினர் மற்றும்
உடலின் ஒளியால் !




பாடல் - 145 :
 சித்திரத்தால் வரைந்த பாவை
உயிர் பெற்றால் எப்படியிருக்குமோ
அத்தனை மெல்லமாக தேவர்கள் நடந்தனர்
“ காலம் தாழ்த்தி விட்டோம்
 இராவணன் கோபிப்பான் ” என
முத்து மாலைகள் சரிய
மலர் மாலைகள் சரிய
மேலாடைகள் சரிய
ஓடினார்கள் தேவர்கள் !

பாடல் - 146 :
இராவணன் எனும்
கோடை சுட்டது
அறம் வற்றியிருந்தது
மாருதி எனும் மாவீர மழையால்
அறம் துளிர்த்தது போல
சந்திரன் வானில் வருகிறான் !

பாடல் - 147 :

மகிழும் கூந்தலும் அழகு நெற்றியும் பெற்ற
கிழக்குத் திசை எனும்
அழகுப்பெண் முகம் மலர்வது போல
“இராமனின் தூதன் வந்தான்
எமது தூதன் இந்திரன் வாழ்ந்தான்” என
எண்ணி மகிழ்ந்தது நிலவு!

பாடல்-148:

கடலின் வெண்ணிற நிலைகள்
வெண்தாமரை போல் வீசின
அப்போது -  
குளிர்ச்சி மிகுந்த வெண் சந்திரன்
இந்திரனது  வெண் கொற்றக்குடை போல் வெளிப்பட்டது.
“எம் பகைவனாகிய அரக்கர் குலம் அழிந்தது”
என்கிற மகிழ்ச்சியும் வெளிப்பட்டது.

பாடல்-149: 

சந்திரன் எனும் வெள்ளிக்குடத்தால்
பாற்கடலின் பாலை முகர்ந்து
ஊற்றியது போல -  
வெண்ணிலவின் ஒளியும்!
வீண்மீன்களின் ஒளியும்!

பாடல்-150:

வானம் -  
அருந்தவ முனிவன் வசிட்டனின் காமதேனு!
சந்திரன் உதிக்கின்ற இடம் -  
காமதேனுவின் மடி!
சந்திரன் -  
முலை!
சந்திரகிரணங்கள் - 
பாலின் தாரைகள்!
நிலவின் தோற்றம்-  
பெருகும் பால்!


                                                                -அனுமனோடு மீட்போம்


No comments:

Post a Comment