Sunday, 9 June 2013

பாடல் - 101 : 

இதற்கு இணை என ஒன்றை
இந்திரன் வாழும் அரண்மனைக்கு உவமை என்று கூறினால்
அந்தச் சொல்-
குற்றமுடையதாகும்
பொருத்தமற்றதும் ஆகும்
பொருத்தம்தான் என்று கூறினால்
துல்லியமாகச் சொல்லவில்லை
என்பது வெளிப்பட்டு விடும்!
எனவே-
இலங்கை அரக்கரின் செல்வத்திற்கும்
மாளிகைகளுக்கும் பொருத்தமான உவமை இல்லை!

பாடல்-102:

உலகில் உள்ள சிறப்பான மணிகள்
திருமால் மார்பில் உள்ள
கெளஸ்தூப மணியை விட
சிறந்தது இல்லை-  
தேவசிற்பியான விஸ்வகர்மா
அமைத்த அழகிய நகரத்தின்
தொழில்நுட்பம் இலங்கை போல இல்லை!

பாடல்-103:

தவத்தினால்
எந்த மனிதரும்
எதுவும் அடையலாம்
அதன் உதாரணம் இராவணனே!
அவன் தவம் செய்த தவத்தால் -  
இலங்கை மரங்கள் - கற்பக மரங்கள்!
இலங்கை மாளிகைகள் - பொன்!
பணிப்பெண்களும் -தேவமங்கையர்!
பணியாட்கள்- தேவர்கள்!

பாடல்-104:

தேவர்கள் என்று புகழ் பெற்றாலும்
அவர்கள் - 
இராவணன்  ஏவலுக்கு அடிமைகள்

எண் வகை மூம்மூர்த்திகளிலும்
உயர்ந்தவன்
இராவணன் தான்!

இவை எப்படி நிகழ்ந்தன ?
தவத்தினால்!

பாடல்-105:

இலங்கையில்
எட்டுயானைகள் மட்டும் இல்லை
முன்பு அவை
இராவணனுடன் போர் செய்து பயந்து
எட்டு திசைகளில் நிற்கின்றன
இலங்கையில்
ஐங்கரன் என்னும் விநாயக யானை தவிர
மற்ற எல்லா யானைகளும் உள்ளன!
இலங்கையில்
ஒற்றைச் சக்கரமுடைய
சூரியத்தேர் மட்டும் தான் இல்லை!

பாடல்-106:

சூரியனின் தேரில் பூட்டிய
ஏழு குதிரைகள் தவிர
மீதி எல்லாமும் இலங்கையில்!

உலக உயிர்கள்
ஒரு சேர வாழும் அளவு
பெரிதாயிருக்கும்
திருமாலின் வயிறு போன்றது
இலங்கை நகரம்!

பாடல்-107:

கடலின் ஆரவாரம் தவிர
வேறு என்னவோ கேட்கிறதே!
ஓ... அது- 
பேரிகைகள் பெருமுழக்கம்!
பெரும் களிறுகள் பேரொலி!
ஆனால்-  
பேரிகை ஒலிகள் அடக்கப்படும் -    
புல்லாங்குழல் போல் ஒலிக்க ஆரம்பித்துவிடும் -
மழலை பேசும் மகளிர் சிலம்பொலியால்!

பாடல்-108:

மரகதமணிகள் அணிந்த குதிரைகள்
அழகு செய்யப்பட்ட குதிரைகள்
குதிரைகளோடு  தேர்கள்
தேர்களின் கூட்டங்கள்
தேர்க்கூட்டம் கொண்ட கொட்டில்கள்
அடடா
இலங்கையின் வளம் கண்டால்
சொர்க்கம் என்பதும்  நரகமே!

பாடல்-109:

சூரியனின்
பொன்னொளி பாயும் இலங்கை
கருப்பு நில அரக்கர்களையே பொன் நிறம் செய்துவிட்டது!
உப்புக்கடல் பொன்நிறமாகி
கருமை இல்லாமல் போனது!
சந்திரனுக்கும் களங்கம் இல்லை!
பசும் பொன்னை உருக்கி ஊற்றியது போல்
கடல் சிவப்பானது
ஆம் - 
பொன் கடல்!


பாடல்-110:

அண்டம் முழுதும்
நிறைந்த இருளை
சூரியன் அகற்றுகிறான்
அதற்காக -  
இலங்கையில் உள்ள மாளிகைகள்
வெளியிடும் கதிர்கள்
இருளை  அகற்றுவதோடு ஒப்பிட முடியுமா!
அப்படிச் செய்தால் - 
சூரியன் முன்
மின்மினிப்பூச்சிக்கு
எந்த தகுதியோ
அந்தத் தகுதியைக் கூட
சூரியனால் பெற முடியாது! 

பாடல்-111:

கடல்களில் வாழும் மீன்களின்
புலால் நாற்றம் போய் நறுமணம் வீசுகின்றன!
எதனால் எனில் -
மலர்த்தேன்
சந்தனக்குழம்பு
கஸ்தூரி வாசனைக் கலவை
அப்போது தான் பூத்த
வானூலகக் கற்பக மலர்கள்
வலிமையான யானைகளின் மதநீர்
எல்லாமும் கடல் நீரில் கலந்ததால்!


பாடல்-112:

சிறப்புமிகு இலங்கை உருவாக்கிய
யாரைப் புகழ்ந்தால் சரியானது?
தேவசிற்பி விசுவகருமா?
இராவணனின் சத்தியமான தவம்?
பிரமன் வரம்?
எனது சிந்தை தொய்கிறதே...
யாருக்கு உரியது புகழ்?

பாடல்-113:

இலங்கையில்
காடுகள் சோலைகள்
பொன்னிற தங்கத்தாலும்
மணிகளாலும் ஆனவை
ஆனால் -   
மலர்ந்த தேன் , கனி உட்பட
யாவும் இயற்கை போலவே தெரிகின்றதே
இது போல் எங்குமில்லை!

பாடல்-114:

இலங்கை கோபுரம் கண்டு - 
நீர் - நிலம் -நெருப்பு -காற்று - வானம்  
இவை ஐந்தும் தமது வளர்ச்சி
சிறப்பில்லை என உணர்ந்தன
மாமேரு மலை பார்த்தால் -   
நாணப்படுமோ...
உடல் முழுதும் வெளிறிப்போகுமோ..!

பாடல்-115:

சூரியன் -         
இலங்கை நகர் உச்சி மேல்
செல்லாமைக்கு காரணம்
“இராவணன் பயம்” என்பார்கள்
அது உண்மையல்ல -  
இலங்கை மதிலின் ஒளியால்
சூரியனின் கண்கள் வழுக்குகின்றன!

பாடல்-116:

மதில்கள்
எவ்வளவு உயரம் அமைத்தான்
இராவணன் கருத்தென்ன?
முன்பு ஒரு முறை - 
கயிலை மலை எடுத்தபோது
தேவர்களால்  தீங்கு வரலாம் என
தேவலோகத்தை விட உயர்மதில் அமைத்தான்
ஆகாயம் முழுதும் கடந்த
மதில் அமைத்துவிட்டான்!


பாடல்-117:

அழகிய மதில் கடந்து
மதிலின் உட்புறத்தில் காற்று புகாது
சந்திரக்கதிர்கள் புகாது
கூற்றுவன் ஆற்றல் புகாது
எனவே -  
தேவர்களும் புகமாட்டார்கள் என்ற வீண் வாதம்
அனைத்தும் அழித்து அத்தனையும் அழிந்து
அதன் பின் நிலைக்கும்
அறமும் 
இந்நகரில்  புகாது!

பாடல்-118:

மேகங்கள் - 
இலங்கைக் கடல் மீது படிகின்றன
இலங்கை அரண்மனை உயரம்
வானை எட்டுகிறது
இலங்கை நகரின் அமைப்பு
திருமால் - 
தனது உந்தியில் உண்டாக்கிய
அண்டம் போலிருக்கிறது.

பாடல்-119 :
இலங்கை நகரில் - 
பாடுவோர் பலர்
ஆடுவோர் அதனினும் பலர்
இசைக்கருவி இசைப்போர்
இன்னும் பலர் !
அரக்கர்கள் - 
தேவர்களை ஆட்டுவித்து
ஆடல் நிகழ்ச்சி கண்டு
ஆனந்திக்கிறார்கள்.

பாடல்-120 :
இலங்கை
ஆடல் கலைக்கும் புகழ் பெற்றது

தேவ மகளிர்
சிறப்பாக நடனம் ஆடுவர்
அவர்களை விட வித்தியாதர மகளிர்!
அவர்களை விட இயக்கர் மகளிர்!
அவர்களை விட அரக்கியர்!
இப்படியாக மிஞ்சிடும் நடனம் கண்டு
பிற நாட்டினர் வியக்கின்றனர்.

பாடல்-121 :

இழையும் அணிகலன்கள்
ஆடைகள்
சந்தனம்
எவ்வளவு வேண்டுமோ அவ்வளவை
நவநிதியங்கள்
ஏவலாளி போல் ஏந்தி
அரக்கர்க்கு கொடுக்கின்றன

இந்த போகம் குறித்து -   
வாயினால் வர்ணித்தால்
சொற்கள் சோர்ந்து போகும்
வாயும் சோர்ந்து போகும்
மனதால் நினைத்தால்
“ சாத்தியமில்லா ஒன்றை நினைக்கிறாயே ” என
மனம் அதனை
மாசு என்றுதான் சொல்லும்.

பாடல்-122 :

இலங்கை நகரம் -                             
நான்முக பிரம்மன் சிந்தனை !
மாமேரு மலை நவமணிகள் கொண்டு
தேவசிற்பி
விசுவகருமா
சிருஷ்டித்த உழைப்பு !

பாடல்-123 :

இலங்கையில்
வாசிக்கப்படும்
மகர வீணை நாதத்தில்\
கடலின் பேரொலி சிறிய ஒலியாக
கரைந்து விட்டது !
வான் தொடும் தம் கூந்தலுக்காக
மங்கையர்
ஊட்டிய சந்தனப் புகையில்
மேகக் கூட்டம் காணவில்லை

பாடல்-124 :

பளிங்கு மாளிகையில் காண்கிறேன்
பசுந்தேன் வழியும்
கற்பக மரச் சோலை  காண்கிறேன்
மதுவைக் குடித்து
ஆடிப்பாடும் அரக்கர்கள் காண்கிறேன்
கவலையில் ஒருவருமில்லை.

பாடல்-125 :

அரக்கியர்களுக்கு
அரக்கர்களே உயிர் போன்றவர்கள்
அதனால்  -
அரக்கியர்கள் தரும் - 
மது பருகினர்
இசை பருகினர்
செவ்வாய் அமுதநீர் பருகினர்
இனிய சொற்கள் பருகினர்
கடும் சொற்கள் பருகினர்
ஊடல் மாறியது
அதுவும் ஏற்றனர் 

                   --அனுமனோடு  மீட்போம்














No comments:

Post a Comment