Wednesday 22 May 2013

பாடல்-56:

அனுமனே!
நீதி நெறி நின்றவனே!
“கார்மேக வண்ணன் இராமனின் பணி செய்ய
வாயுதேவன் மகன் வரும்போது
நீ அவன் அருகே செல்க!
இளைப்பாறி விட்டு செல்ல அது உதவும்
இவ்வாறு என்னை இச்செயலில் தூண்டியது
கடலே அகும்! நான் அல்ல ”
என்று விளக்கமாய் சொல்லியது மலை.

பாடல்-57:

“ பொன் மாலை மார்பனே
அனுமனே
உன்னை இளைப்பாறச் சொல்லி கேட்கிறவன்
நல் தாயைவிடவும் நல்லவன் என நினை
இப்போதே தங்கு! இளைப்பாறு
விருந்தை ஏற்றுக் கொள்
என் வீட்டுக்கு வந்த நண்பன் நீ
நண்பர் என்பவர்
வீட்டில் தங்கிச் செல்வதை விட
எனக்கு உதவி வேறு உண்டோ!”
என்று அன்பு பேசியது மைந்நாக மலை.


பாடல் - 58 :

மைந்நாகன் உரைத்த உரை கேட்டான்
“ இவன் துன்பம் தர மாட்டான் ”
என்று அனுமன் நினைத்தான்
தாமரை மலர் முகம் மலர
ஒளி முகம் மலர
அளவுடன் சிரித்தான் அனுமன்
செல்ல வேண்டிய திசையில்
மேலும் செல்ல நினைத்து
அந்தத் திசையே நோக்கினான்
மைந்நாக மலையின்
பொன் சிகரம் அருகே கண்டான்

பாடல் - 59 :

குறிக்கோளுடன்
சிகரம் தொட நினைப்பவருக்கு
எதிரிகள் மட்டுமல்ல-
அன்பும் இடைமறிக்கும் போலும்!

அனுமனின்
அழகிய மறுப்பு இப்படி அமைந்தது:-

“ மைந்நாக மலையே....
உன்னிடம் இளைப்பாறாமல் செல்வதால்
வருத்தப்பட மாட்டேன்
அதற்கு-
என் துணை இராமனின் அன்புதான்!
என் ஆசை
நிறைவுறும்  வரையில் எதுவும் உண்ணப் போவதில்லை

நின் அன்பை
என் மேல் செலுத்திய போதே
உன்னிடம் தங்கி இருந்துவிட்டேன்
விருந்து நுகர்ந்து விட்டேன்
இதற்கு மேல்-
இனி-
நீ தரப் போவது என்ன உண்டு! ”
அன்புக்கு
அன்பு மழையே கொட்டினான் அனுமன்

பாடல் - 60 :

மைந்நாக மலையே கேள்:-
“ ஆசை தீர அளிப்பவர்களில்
முதல் வள்ளல்கள்
இடை வள்ளல்கள்
கடை வள்ளல்கள் உண்டு
அவர்கள் பண்பே அன்புதான்

உடலுக்கு எலும்பைவிட
வலிமை தருவது வேறில்லை
அது போல
உயிரின் குணங்களில்
அன்பைத் தவிர-
சிறந்த பொருள் யாரால் தர முடியும்? ”

பாடல் - 61 :

“ இப்போதே செல்வேன்
திரிகூட மலையில் அமைந்த
இலங்கை அடைவேன்
இராமன் இட்ட பணி முடித்து
என் ஆற்றலினால்
மீண்டு வந்தால்
மீண்டும் வந்தால்
உனது விருந்தை ஏற்பேன் ” என்றான்

மைந்நாக மலையின்
கண்களுக்கு காண முடியாமல்
அனுமன் முன்னேறினான்

பாடல் - 62 :

வேகமான பயணத்தின் போது
காண்பன யாவும் ஒன்றாகவே தெரியும்
சூரியனை
சந்திரனை
தேவர்கள் தங்கிய விமானங்களை
அனுமனின் வேகம்
ஒன்றாக  இணையாத பொருட்களையும்
ஒன்றிணைக்கும் ஊழிக்காற்று போல
அனுமன் காணப்பட்டான்!



பாடல் - 63 :

“ அனுமன் -
குழந்தைப் பருவத்திலேயே
கால்களைப் பரப்பி நடக்க
சூரியனாகிய என் தேர் மேல் குதித்தான்

இப்போதோ -      
கடல் மீதே உயர்ந்து செல்கிறானே
யார் மேல் பாயவோ! ” என
சூரியன் வியந்தான்.....

பாடல் - 64 :

அனுமனின் பற்கள்-
வாளுக்கு ஒப்பான வெண்மை உடையது
அனுமன் உடலோ-
வானையே நிரப்பிவிட்டது
அனுமன் வாலோ-
ராகு கிரகம் போன்று சூரியனையே மறைக்கிறது
அனுமன் உடல்-
பகல்- இரவு எனும் இருபகுதி கொண்ட
நாள் போல் உள்ளது
அதனால்
பூமியின் மேல் பகுதி முழுதும் ஒளி
பூமியின் கீழ்ப்பகுதி இருள்!



பாடல் - 65 :

ஒருவனின் வலிமை வெளிப்பட
அவனைத் துன்பம் தாக்க வேண்டும்
மூன்று உலகங்களிலும்
அரக்கர்கள் தரும் துன்பத்தை அழித்திட
முழுதாக உடன்பட்டு வந்தவன் அனுமன்

அனுமனது வலிமையை உணர்த்திட
தூய சிந்தை கொண்ட  சுரசை என்பவளை அழைத்தனர்
“நீ அரக்கியாக மாறு
அனுமனுக்கு துன்பம் கொடு ” என
தேவர்கள் விண்ணப்பித்தனர்

பாடல் - 66 :

சுரசை-
பிளவுபட்ட வாயுடன் அரக்கியாக மாறினாள்
அனுமனை உண்ணும் ஆசையுடன்
“ ஆணவக் குரங்கே
கொடிய எமனுக்கும் அச்சம் தருபவனே
எனக்கு ஏற்ற உணவு நீ ” என்று
வானத்தை தலையில் முட்டும்படி
உயர்ந்து நின்றாள்


பாடல் - 67 :

“ வன்மை மிகு அனுமனே
தீயாகிய என் பசிப்பிணி தீர்க்க
வளைந்த பற்களையுடைய என் வாயில் புகு
இது தவிர-
மாற்றுப்பாதை உனக்கில்லை ” என்கிறாள்

பாடல் - 68 :

அனுமனுக்கு சீற்றம் வரவில்லை
நட்புணர்வு வந்தது!
“ பெண்ணாகிய நீ பசிபிணியால் துன்புற்றாய்
தேவர் தலைவன் இராமனின் பணி நிறைந்தபின்
நீ என் உடம்பை உண்ணலாம்
அப்போது நான் உடன்படுகிறேன் ” என்றான்
தியாகசீலன் அனுமன்

பாடல் - 69 :
“ ஏழு உலகங்களும் காணும்போதே
உனைக் கொன்று
உன் உடல் தின்று பசி தீர்வேன் இது ஆணை ”
சுரசை சொன்னதும்-
வலிமை குவிந்த அனுமன் சொன்னான்:
“ கோரமான
உன் பெரிய வாயின் வழியே செல்வேன்
வல்லமை இருந்தால் தின்றுகொள் ” என்றான்.


பாடல் - 70 :

அண்டம் பெரிது
பல அண்டங்கள் சேர்ந்தாலும்
சுரசையின் வாயுள்
சென்று வரும் அளவு விரிந்தது வாய்!
அத்தனை அகலமாக
தொண்டை விக்காத அளவு விரிந்து
அனுமனை முழுதாக உண்ணக் காத்திருந்தாள்
எல்லாத் திசைகளிலும் விரிந்து
அனுமனை உண்ணக் காத்திருந்தாள்
ஆனால் - 
எல்லாத் திசைகளிலும் விரிந்த
சுரசை வாய் சிறிதாகும்படி
அனுமன்-
வான் வளர வளர்ந்தான்


பாடல் - 71 :

நீண்டு
உயர்ந்த அனுமன்
சுரசைக்கு உணவு என அவள் கருதும்படி
சிறிதாகச் சுருங்கினான்
ஒருமுறை அவள் சுவாசிக்கும் முன்
சட்டென வெளியே வந்துவிட்டான்!
“ ஆஹா! இந்த அனுமன் எம்மைக் காப்பான் ” என்று
 மலர்களைத் தூவி வாழ்த்தினர்
தேவர்கள் மகிழ்ந்து!

பாடல் - 72 :

மின்னல் ஒத்த வலிமை உடைய
சுரசை
தனது பெருத்த உடல் நீங்கி
சுயவடிவுடன்
அனுமனுக்கு
தாயைவிடவும் அன்பு தாழ வாழ்த்து சொல்கிறாள்:
“ அனுமனே! இனி உன்னால் ஆகாதது எது! ”

பொன்மேனி அனுமன்
அவளது ஆசிகளை
அணிந்து புனைந்து பறந்தான்
இலட்சியம் உள்ளவனுக்கு
புகழ்ச் சொல் கேட்கவும் நேரமில்லை!

பாடல் - 73 :

எத்தனை சாதனை இது!
மகிழ்ந்தது இயற்கை
விருந்து செய்தது தென்றல்
கீதம் இசைத்தனர் கின்னரர்கள்
பாடலுக்கு ஆடினர் தேவமகளிர்
பிராணிகளும் புகழ்ந்தன
வேதங்கள் ஓதினர் அந்தணர்கள்


பாடல் - 74 :

கடமை வீரன் அனுமன்
பாராட்டுகளை ஏற்கவும் நேரம் தராமல்
பறக்கின்றான்
எனினும் வாடைக்காற்று  விடவில்லை!
அனுமனின் செந்தாமரை  மலர் முகத்து வியர்வையை
மந்தார மலர்களின் மணம் வீசும்
வாடைக் காற்று தூவியது
வித்தியாதரர்கள் தத்தம் உலகிலிருந்து
கொண்டு வந்த
காந்தாரப் பண்  எனும் தேனை
அனுமன் செஞ்செவி பருகியது.
எனினும் பறப்பதை நிறுத்தவில்லை!

பாடல் - 75 :

அப்போது இன்னொரு துன்பத்தின் திறப்பு விழா!
கருங்கடல்
இன்னொரு கருங்கடலைப் பெற்றது போல்
ஆலகால விஷம் ஒத்த
அங்கார தாரை
“ இப்போது  என்னைக் கடப்பது யார்? ” என
எழுந்து நின்றாள்


பாடல் -76:

முன்பு-  
திருமாலுடன் போரிட
கடலின் மீது நடந்த
மது- கைடவன் எனும் இரண்டு அரக்கர்களை
ஒத்திருந்தாள் அங்கார தாரை!

காத தூரம் வரை அறிகின்ற கண்களுடன்
காலில் உள்ள சிலம்பொலி
கடல் போல் ஒலித்திட
கேள்வி கேட்கிறாள் அங்கார தாரை!


பாடல் -77:

அங்கார தாரையின் கோரைப் பற்கள்
அனுமனை குறைத்து மதிக்கும்
குறை மதியால்
குறை மதியான
பிறை மதி போல் வளைந்து ஒளி விட்டன

சிவபெருமான்
யானை உரித்து தோலாடை தரித்தது போல்
அவளது உடை!

தாமரையில் தோன்றிய  பிரம்மன்
உலகுக்கு அமைத்த உறை போல
அவள் வாய்!

பாடல் -78 :

அலை நெடுங்கடலின் நீர்
அங்கார தாரை கால்களைக் கழுவியது
அவளது தலையோ
வான் உச்சி முட்டிற்று
பகைத் திறம் ஆராய்ந்தான் அனுமன்
“ அறத்தை மட்டுமல்ல
அருளையும் விழுங்கியவள் இவள்”
என அறிந்தான்

பாடல் - 79 :

பெரிய பூமியிலும் வழி இல்லை
நீண்ட பூமியிலும் வழி இல்லை
அந்த அரக்கியின் வாயில்
செல்வதே கதி என ஆனது
அதற்கு அனுமன் மிகவும் வருந்தினான்

ஆழமான குகை போன்ற வயிற்றை
பிளந்து செல்ல நினைத்தான்
அவளை நெருங்கி
கூறிய வார்த்தைகள் இவை:-


பாடல் - 80 :

“ நிழலைக்கூட
பற்றி இழுக்கும் வரம் பெற்றாய்
அதனால் என்னை இழுத்து விட்டாய்
வெகு உயரத்தில் தகுந்த வேகமுடன்
ஓய்வில்லாமல் செல்வதைக் கண்டும்
என் செயலின் அவசரம் உணரவில்லை நீ
உன் வாயினால்
வான வழியும் அடைத்து விட்டாய்
நீ யார்?
இங்கு எதற்கு நிற்கிறாய்? ”

பாடல் - 81 :

“ என்னைப் பெண் என எள்தாய் நினைக்கும் நினைவை
விட்டு விடு அனுமா!
என் அருகில் வந்தால்-
தேவர்களும் உயிர் இழப்பது உறுதி
எமனே வந்தாலும் சரி-
என் கண்ணில் பட்ட உயிர்களை உண்ணும்
ஆசையை போக்க இயலாது ”
என்றாள் அங்கார தாரை

பாடல் - 82 :

கூறி முடித்த அரக்கி
அனுமனை உண்ண வாய் திறந்தாள்
அனுமனும் புகுந்தான்
அறம் அரற்றியது!
இனி
“அனுமன் அவ்வளவுதான்” என்று
தேவர்களும் நலிந்து மெலிந்தனர்
கண் இமைக்கும் நேரம் தான்!
நரசிங்கம் தூணிலிருந்து வந்ததுபோல
அவள் வயிற்றைக் கிழித்து
அனுமன் பிறந்தான்!

பாடல்-83:

கள் குடித்து குடித்து
அந்த மணம் நிரம்பிய
கள்வாய் அரக்கி அவளது
வயிற்றுக்குடல்களை
நீண்ட கைகளில் சுற்றிக் கொண்டு
வானில் பறக்கிற அனுமன்
இப்போது -  
முள் நிரம்பிய மலைக்குகையுள் நுழைந்து
அங்குள்ள பாம்புகளைக் கொத்தி
வானில்
பறக்கும் கழுகு போன்று உள்ளான்.

பாடல்-84:

இறவா வரம் பெற்ற தலைவர்களில்
திலகம் போன்றவள்
அரக்கியின் குடல்களை
சுற்றிக் கொண்டு
நீண்ட வாலுடன் வானம் செல்லும்
காற்றாடிக்கு உவமை ஆனாள்!

பாடல்-85:

ஆர்த்தார்கள் வானவர்கள்
அழுதார்கள் அரக்கர்கள்
மலர்மாரி  பெய்தான் பிரம்மன்
வியந்தார் சிவபெருமான்
ஆசிகள் அளித்தனர் முனிவர்களின் தலைவர்கள்.

                                     

                                            --தொடரும்




















1 comment:

  1. ஜெய் ஹனுமான்(மீண்டு மீண்டும் வந்தவன்-ஆஹா)
    அன்பே சிவம்
    -நளினிசாஸ்திரி

    ReplyDelete