Monday, 20 May 2013

பாடல்- 33:

சிலிர்த்துப்புறப்பட்டான் அனுமன்
அனுமனது வாலும் புறப்பட்டது!

இராமனின்  கருணை அறமும்
அனுமனைத் தொடரும் அல்லவா
அதுபோல் -
அனுமன் வால் தொடர்கிறது

அதுமட்டுமா
“இழி தொழில் அரக்கர்கள்
பார்க்க நேரலாம்” என
ஒளிந்து ஒளிந்து
வானில் செல்கிறது வால் -    
எமனது பாசக்கயிறு போல்!

பாடல்-34 :

அன்று -  
மேருமலைலைச் சுற்றியிருந்தது
ஆதிசேஷன்!
திருமால் ஆணையினால்
கருடன் வந்து சேர்ந்ததும்
தளர்ச்சி அடைந்தது ஆதிசேஷன்!

மலையை இறுக்கிப் பிடித்து
ஆதிசேஷன்
தளர்ச்சி செய்தது போல
அனுமனது வால் இப்போது உள்ளது!

பாடல்-35:
அனுமனின்
மலைத்தோள்களாம் வெற்றித் தோள்கள் பறக்கும்போது
உண்டான காற்று வீசி
தேவர்கள் செல்லும் விமானங்களில் மோதியது
தமக்குள் மோதிக்கொண்ட விமானங்கள்
உடைந்து கடலில் வீழ்ந்தன .

பாடல்-36:
கடல் தாவும் அனுமனின் வேகம்
வச்சிராயுதம் தாங்கிய
இந்திரனையே கவலை அடைய வைத்தது

அதிகரிக்கும் அனுமனின் வேகம்-  
இலங்கையும் தாண்டுமே என எண்ணி
இலங்கைக்கு அப்பாலுள்ள நாடுகள்
விலகி ஓடின.

பாடல்-37:
பல யோசனை தூரம் நீளமுடைய
அனுமனின் உடம்பு உற்பத்தி செய்த காற்று
திசை முழுதும் பரவிய கடலை
கலங்க வைத்தது
மீன்கள் இறந்தன
திமிங்கலத்தையே உண்ணும் திமிங்கிலகிலங்கள்
இறந்தன செத்து மிதந்தன.

பாடல்-38:
அனுமனின் கைகள்
வேகம் தந்தன
தளராமல் நிமிர்ந்துள்ளன
அனுமனின் கைகளை
அனுமனின் கைகளோடுதான் ஒப்பிட வேண்டும்.

அந்தக் கைகள் எப்படி உள்ளன?
அருங்குண வள்ளல் இராமன்
உயிர்த்தம்பி இலக்குவன்
அனுமனுக்கு இருபுறமும்
முன்னே செல்வது போல் உள்ளன!

பாடல்-39:
கிழக்குத்திசையை தாங்கி நிற்கும்
ஐராவதம் எனும் யானை
பாற்கடல் கடைந்தபோது உண்டானது போல
மைந்நாகம் எனும் மலை
வானைத் தொடுவது போல
அப்போது -
கடலின் நடுவே உண்டானது
அனுமனின் பாதையை மறித்தது!

பாடல்-40:
செம்பொன் மயமான ஆயிரம் சிகரங்கள்
மின்னிட வந்தது மைந்நாக மலை!
ஓயாத அருவித் தொகுதிகளை
மேலாடை என அணிந்திருந்தது மைந்நாகமலை!
திருமாலே- 
இராவணன் போன்ற தீயோரைத் தீர்க்க
மீன்கள் நிறைந்த கடலிலிருந்து எழுந்ததுபோல
மறித்து நின்றது மைந்நாகமலை!

பாடல்-41:
ஞானநூல்களின் கருத்துகளை அறிந்து கற்காமல்
ஐம்புலன் காட்சிகளில் மூழ்கியோரை
முதலில் தாங்கிய பூமாதேவி
பிறகு -  
வலிதாளாமல் விலகியதால்
கடலில் மூழ்கிப் போனாள்

ஆமை வடிவம் தாங்கி
கூர்ம அவதாரம் கொண்டு
பூமியைத் தாங்கினான் திருமால்

அப்போது- 
மந்தரமலை மீண்டும்
மலையாக உயர்ந்ததே
அது போல் நிற்கிறது
மைந்நாகமலை.





பாடல்-42:

மைந்நாக மலையின்
வளர்ச்சியும் அதிகமே

கடலைக் கிழித்து
பாதாள லோகம் வரை பறந்து
அமுதம் கவர்ந்து மீண்டும் அங்கிருந்து
அழகிய நிறமுடன் கருடன் மேலெழுந்து விரைவு போல்
மைந்நாகமலை வானைத்தொட வளர்கிறது!

பாடல்-43:
திருமாலே-   
எல்லா உலகமும் படைப்பவன்
அழிப்பவனும் அவனே
ஒருவராலும் உணர முடியாதவன் அவனே
அவனது அருளாலே
நெடுநீரிலே
மூன்று உலகங்களும் தோன்றின
பிரம்மனும் தோன்றினான்

பிரம்மனைப் பெற்ற
பொன்மயமான அண்டம் போல
மைந்நாக மலை வளர்ந்தது
வானைத் தொட்டது!


பாடல்-44:
திருமால் படைத்த நீரினுள்
பிரம்மன் மூழ்கித் தவம் இருந்தான்
“இந்நீரில் என்னைப்படைந்த
என் தந்தையாகிய திருமாலை
நான் காணாமல்
என் பணி தொடங்கமாட்டேன்”
என்று தன் தவம் முடித்து
நீரிலிருந்து பிரம்மன் எழுந்தது போல்
மைந்நாக மலை
வானைத் தொட எழுந்தது!

பாடல்-45:
இலக்குமியின் மலர்மாலையால்
இந்திரன் பவனி வந்தான்
அப்போது நேர்ந்தது தீயசெயல்

பொறுக்க முடியாமல் சபித்தார் துர்வாசர்
அதனால் எல்லாமும் கடலில் மூழ்கி மறைந்தன

மீட்பதற்கு திருமால் முயற்சித்தார்
அசுரர்களும் தேவர்களும் கடைந்த
திருபாற்கடலிலிருந்து
எழுந்த சந்திரன் போல
மைந்நாக மலை -  
வானைத் தொட எழுந்தது


பாடல்-46:
செம்பொன் பொருந்திய சிகரங்கள்- 
ஒருபுறம் குங்குமப்பூ போல் உள்ளன
ஒருபுறம் பவளக்கொடி சுற்றியுள்ளன
ஒருபுறம் நீலநிறமாய் உள்ளன
பெண் துணையுடன் தூங்கிய சுறாமீன்கள்
பக்கம் கலைந்து
பெருமூச்சுடன் உலவும்படி
மைந்நாக மலை வளர்கிறது

பாடல்-47:
வளைந்த கர்ப்பம் முதிர்ந்த முத்துச்சிப்பிகள்
ஒலித்தன.
அடர்த்தியான பாசிகள்
வானைச் சூழ்ந்த மேகங்கள் போலத் திகழ்ந்தன
பளிங்குப் பாறைகளில்
பெரிய முத்துக்களைப் பிரசவிக்கும் சங்கு
அழகிய நட்சத்திரங்கள் சூழ்ந்த
நிலவின் பெருமையை
பரிகாசம் செய்யும்படி
மைந்நாக மலை
வானைத் தொட வளர்கிறது.

பாடல்-48:
ஒன்றல்ல
இரண்டல்ல
ஆயிரமல்ல
பல்லாயிர மணிவகைகள்
பக்கமெல்லாம் கைகள் போலத் தோன்றியதால்
கடலில் முத்துக் குளிப்பவன்போல்
வளரும் மைந்நாக மலை தெரிகிறது.

பாடல்-49:
எள்ளை அருவித் தொகுதிஅள்
அனுமனுக்கு உதவுவதுபோல
வானிலிருந்து ஆடும் கொடிகளாய் விழுகின்றன
மைந்நாகமலை உயர உயர
மலைச்சுனையில் வாழும்
பனை மீன்களும்
திமில் எனும் மீன்களும்
துள்ள ஆரம்பிக்கின்றன.

பாடல்-50:
மனிதனுக்குள்
உட்பகைகள் பாம்பு போன்றன
பகை செய்கின்ற உள் பாம்புகள் ஐந்து!
காமம்-குரோதம்-லோபம் மோகம் மதம்-மாச்சர்யம்

இவை மட்டுமல்ல- 
வீழ்த்தும் மூன்று குற்றங்களும் உண்டு!
ஆணவம்-கன்மம்-மாயை

இவை யாவும் அழியவேண்டும் என்ற
ஞானம் வந்தபின் -  
ஞானிகளுக்குச் சந்தேகம் தெளியும் நிமிடம் போல
நச்சுப்பாம்புகள்
மலை நீரின் அடி ஆழம் விட்டு வெளியேறின
இப்போதும் -  
மைந்நாகமலை வளர்கிறது வளர்கிறது !

பாடல்-51:
கண்ணாடிப்பரப்பு
எத்தனை வழுவழுப்பானது!
அதில் - 
ஒரு உளுந்து உருண்டு முடிப்பதற்கு
எத்தனை நேரம் ஆகிவிடும்! 
அத்தனை குறுகிய கால நொடிகளுக்குள்
வளர்ந்து உயர்ந்துவிட்டதே
மைந்நாக மலை!

அயராத மனமுடைய அண்ணல் அனுமனே
“இது என்னவோ!”
என அயர்ந்தான் மலை கண்டு!

பாடல்-52:

துன்பங்கள் மலைபோல் மறித்தாலும்
உடனே நாம் செயல்படக்கூடாது
அதன் உச்சி வரை வளரக் காணவேண்டும்
நிதானித்து
அதன் பின்னரே புரட்டித் தள்ள வேண்டும்.

ஊக்கமுடையவன் ஒடுங்குவது
முட்டுவதற்காக போர்க்கடா
பின்வாங்குவதற்கு சமம்!
அனுமனும் இப்போது அப்படித்தான்

கடல்மேல் பரந்து வளர்ந்த மலை
நமக்கு “தீமை” என எண்ணவில்லையாம்
“நன்மைதராது” என்று தீர்மானித்தானாம்
நன்மையே விரும்பும் உள்ளம் எப்படி எதிர்மறை எண்ணும்?
சிகரத்தை மேல்கீழாகப் புரட்டித்தள்ளினான்!
ஆகாயத்தில் உயர்ந்தான்!

பாடல்-53:
கடலுக்குள் இத்தனை வருடங்கள்
ஒளிந்து கிடந்த மலை
அனுமனின் புரட்டுதலால் வருந்தி
தன் உயரம் குறைத்தது
உள்ளம் நொந்தது

நீங்காத அன்பு கொண்டு - 
சிறு மானிட வடிவம் கொண்ட்து
அனுமன் செல்லும் உயரமும் உயர்ந்தது
“என் ஐயனே கேள்” என்று கெஞ்சியது

பாடல்-54:
“ஐயனே! எனைப் பகைவன் என எண்ணாதீர்
இந்திரன் வீசிய வச்சிராயுதம்
அனைத்து மலைகளின் சிறகுகளையும் வெட்டியது
அப்போது -  
வாயுதேவன் எனைக் காக்க
கடல் ஆழத்துள் வைத்துக் காத்தான்” என்றது

பாடல்-55:
மைந்நாக மலை பேசப்பேச
அனுமன் ஆச்சரியம் ஆனான்
பாசமோடு பேசிற்று அந்த மலை

“மலையாகிய என் உயர்வு
உன் உயர்ந்த தோளைவிட குறைவே!
நீ வாயுதேவனின் அன்புப்புதல்வன்
என்னால் உனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை
உன்னால் எனக்கு ஆக வேண்டியது ஒன்று உண்டு” என்றது

“பொன் மயமான சிகரத்தில்
சிறிது ஓய்வெடு! பிறகு கிளம்பலாமே!
அப்படிச்செய்தால்
உன்னால் உயர்வு பெறுவேன்” என்றும் பணிந்து கேட்டது!


                                 --தொடரும்



No comments:

Post a Comment