Monday, 6 May 2013


பாடல் 5 :

மெல்லிய
பெண்யானைகள் அஞ்சி ஓடின
வால் உயர்த்தி ஓடி வந்து
களிறுகளின்
மேகநிற உடம்பை இறுகத் தழுவின
காதலால் அல்ல பயத்தினால்!

ஆண் யானை என்றாலும்
களிறு என்ற பெயர் கொண்டாலும்
பயம் வரும்போது-
ஆண் என்ன! பெண் என்ன!
செவிகளை அசைத்து அசைத்து
முதுகுப்பக்கம் அடித்து அடித்து
காற்றைக் கிளப்பும் களிறுகள்
பயம் தீராமல்-
அங்கிருந்த மரங்களை
துதிக்கையால் இறுகப்பற்றின! சுற்றின!

பாடல் 6:

ஒளி வீசும் மகேந்திர மலை உச்சியில்
தீப்பொறி பறக்கிறதே!
ஆம்! அனுமன் களிப்பும் குதிப்பும்!

சிகரம் பொடியாகிறதே...
ஆம்
சிகரத்துக்கே இப்போது
முதுகு பிளக்கும் வலி!
சிறிய குட்டிகளை
கண்கள் திறக்காத குட்டிகளை
உடம்பில் முடி முளைக்காத குட்டிகளை
புலி இனங்கள்
கவ்விக்கொண்டு ஓடுகின்றன.

                              (06/05/2013)

No comments:

Post a Comment