Friday 17 May 2013

பாடல்-24:

“உச்சை சிரவம்” எனும் வெள்ளைக்குதிரை!
கூரிய வச்சிராயுதம்!
இரண்டும்  கொண்ட தேவேந்திரனாலும்
கண்களால் காண முடியா வேகம்!

பூமியும் கடலும்
அனுமனின் கால்களின் கீழே அடங்கும்படி
அண்டம் கடந்த வேகம்

எப்படியிருக்கிறதெனில் -
இலங்கை நோக்கிய
தனித்துவமான
புஷ்பக விமானம் போல உள்ளது !

பாடல்-25:
 
அனுமனின் விரைவு பயணம் கண்டு
தேவர்கள் துதித்தனர்
வேத முனிவர் வியந்து வாழ்த்தினர்
மண் உலகினர் வணங்கினர்
அனுமனது மனதிலோ -  
அறச்சீற்றம் இருந்தது

“அரக்கர் தலைவன் இராவணனை
இன்னமும் அமுக்க வேண்டும்”
என்று கயிலாய மலை
சிவபெருமானை விட்டுப் புறப்பட்டது போன்ற மனநிலையே
இப்போது அனுமன் மனநிலை.

பாடல்-26 :

அனுமன் -
ஒரு பிரம்மச்சாரி

அனுமன் -
பிரம்மனை விடவும் அறிவில் மிக்கான்


அனுமன் -
உலகுக்கு அச்சாக நிற்கும்
அறம் தழைக்கச் செய்பவன்

அத்தகைய அனுமன்  எனும் மேருமலை
நீண்ட நாளாய்ப் பிரிந்துள்ள
மகன் என்னும்
திரிகூட மலையை
சந்திக்க விரைவது போல உள்ளதே!

பாடல் -27 :
தந்தைக்கு ஒத்த வேகம்
தனயனுக்கு வருவதில்லை ஒத்திருப்பதில்லை
அனுமனோ
தன் தந்தை வாயுதேவனுக்கே சமம் ஆனான்.

ஆம்- அனுமன் வேகத்தால்
நட்சத்திரங்கள் உதிர்ந்தன
மேகம் கிழிந்தது!
கடல் பொங்கிற்று
வானம் குழைந்தது
திசைகள் வெடித்தன
மேருமலை நடுங்கியது.





பாடல் - 28 :

எவன் ஒருவனுக்கு
தனது தவப்பயன் தீர்கிறதோ
அவன் அழிவான் !
இதற்கு நிரூபணம் இராவணனே !
அவன் அழிவைத் தடுக்க -
இருபது கரங்களலும்  இயலாது
பத்துத் தலைகளாலும் இயலாது
இதற்கு அறிகுறி ஒன்று நடக்கிறது
அன்று
கிழக்கில் எழுந்து சூரியன் மேற்கில் மறையவில்லை
அனுமன் என்ற சூரியன் -
வடக்கில் உதித்தது !
ஆம்!
தெற்கில் உள்ள இலங்கை நோக்கி செல்கிறது !

பாடல் - 29 :

அரண்டு மிரண்ட
பாவத் தொழில் புரியும் அரக்கர்களுக்கு
இலங்கை நகர் விட்டு
வெளியேற முடியவில்லை
தனியே வாழவும் முடியவில்லை
இராமனே துணை என்றனர்
இராமனின் கரங்களில் உள்ள அறச்சக்கரமாகிய
அனுமனைக் கண்டனர்.


பாடல் -  30 :
அனுமனின் உடல் -
முழு நிலவாகி
இருளை அழித்தது

மகா மேரு மலையும்
வெட்கப்படும்படி பறக்கிறான் அனுமன்

பெருந்தீ -
கடல் சூழ்ந்த உலகம் முழுதையும் அழிக்கின்ற
யுகத்தின் முடிவு நாளில்
வட திசையில் தோன்றும் பவுர்ணமி நிலவு ஒத்துள்ளான் அனுமன்

பாடல் - 31 :

சக்ரதாரியான திருமாலுக்கு
தன் வலிமை முழுதும் காட்டியதில்லை கருடன்
எனினும்
தேவர்களுக்கு புரிய வைக்க
அசுரர் குடல்கள் சரித்தான் ஒருநாள்
மலைகளைப் பொடி செய்து
ஏழு கடல்களையும் நிலைகுலையச் செய்தான்  ஒருநாள்

அடடா! அனுமனின் பலம் -
இப்போது பெரிய திருவடியான
கருடனையும் ஒத்திருக்கிறது



பாடல் - 32 :

தேவர்களின் உலகையே
திருமால் -
அன்று
காலினால் அளந்தான்

வான்முகடும்
ஏழு உலகங்களும் அஞ்சிட 
அனுமன் கடக்கிறான்
“எமனது பாசக்கயிறு போல்
அனுமனது வால் அளக்கிறது”
என்று தேவர்கள் திகைத்தனர்.

                         --தொடரும்.





1 comment:

  1. அனுமனின் வேகத்தை மிஞ்சும் உம் எழுத்தின் வேகம்.
    அனுமன் சூரியனாகவும்,அதேசமயம் நிலவாகவும் இருப்பது ஆச்சர்யம்!
    -நளினிசாஸ்திரி

    ReplyDelete