Tuesday, 14 May 2013

பாடல்-13:

காலூன்றிய அனுமனால்
இத்தனை விளைவுகள் கண்டனர்
தேவர்களும் முனிவர்களும்
மூவுலகச் சான்றோர்களும் விரைந்து மொய்த்தனர்
மலர்க்கொத்து
மணம் வீசும் பொடிகள் மணிகள் தூவினர்
“வித்தகனே சென்று வருக” என்றனர்
விரைந்தான் அனுமன் -  
விரைவு வேறு அனுமன் வேறல்ல எனப்படும் அனுமன்!

பாடல்-14:

அனுமனின் துணைவர்கள்
அப்போது ஒரு வார்த்தை சொல்லினர்:-
“மலை போன்ற வெற்றித் தோள் உனக்கு
வெற்றி மாலை உனக்கே உனக்கு
எனினும்
அகத்தியர் தாண்டிய கடல்
நம் வலிமைக்கு மிகவும் எளிய கடல் என இகழாமல்
கருத்துடன் பயணம் புரிக”
மனதை ஒருமைப்படுத்தி
ஒப்புக் கொண்டான் அனுமன் எனும் சத்தியசீலன்!

பாடல்-15:

“அனுமனின் மிகப் பெரும் உருவம்
இலங்கைக்கும் அப்பால் செல்லும்”
விண்ணவர் கணிப்பும் வியப்பும் இப்படி!

கடல் தாண்ட முடிவு செய்து
முன்புறம் சாய்ந்து
கால்களை அழுத்த
அனுமன் திருவடியால்
மகேந்திரமலை அழுந்திப் போனது
பூமியும் அழுந்தியது

பாடல்-16:

வாலை உயர்த்தி
வலிமையான கால்கள் மடக்கி
மார்பை குறுக்கி
பெருமையான தோள்கள் பொங்கிட
தோள்கள் பூரிக்க
கழுத்தினைச் சுருக்கிக் கொண்டான்
காற்றின் விரைவைக் கொண்ட கைகள் நீட்டினான்
அனுமனின் தலை பிரம்மலோகம் அளாவியது
மற்றவர் கண்கள்  காண முடியா உயரத்தில்
இப்போது 
வேகமுடன் தாவுகிறான் அனுமன்.

பாடல்-17:

அனுமனின் அந்த எழுச்சி
பெரிய மரங்களை
வான் நோக்கி எழுப்பியது
ஓங்கிய மலைப்பாறைகளை பறக்கவிடுகின்றது
வெல்லும் வேழங்களை எழுப்பியது
“இராம நாயகன்  பணி இது” என எண்ணி -
அனுமனுடன் அவையும் பறப்பது போல
வானில் படர்ந்தன!

பாடல்-18:

“வாழ்வில் ஒருவர் உயரும் வேகமும் எழுச்சியும்கண்டு
நாமும் அவருடன் சேர்ந்து உயர்ந்துவிடலாம்”
எனும் நினைப்பு தவறு என்பதை
உணர்த்துவது போல
அனுமன் தாவிச் செல்லும் வேகமுடன்
உயரே புறப்பட்டு எழுந்த
பாறைகள் - பச்சை மரங்கள்- பசுக்கள்-   
பல்வகை உயிர்கள்
அனைத்தும் தெற்குத் திசை சென்று
உயர்ந்தன ஆனால் அவை குறிக்கோள் இல்லாமையால்
கடலில் வீழ்ந்தன!

பாடல்-19:
எண்ணவியலா எண்ணிக்கையில்
அனுமனுடன் எழுந்த பாறைகள்
பச்சை மரங்கள்
பலவகை உயிர்கள்
ஒரே நேரத்தில் கடலில் விழுந்து
அதனால் -   
தூர்ந்து விட்டது கடல்!
அப்போது எழுந்த கடலின் அலைகள்
வேதங்கள் போன்ற இராமன்
சீற்றம் கொள்வதற்கு
முந்தைய நிலை போலிருந்தன!
முன் அறிவிப்பு!

பாடல்-20:

அனுமன் செல்லும் வேகத்தால்
கடல் கிழிறது
அதனால்
நாகர்கள் வாழும் பாதாள உலகமே தெரிகிறது
நாக மாணிக்கங்கள் மின்னின
“நாகங்களில் சிறந்த நாகலோகம் காணும் தவம் செய்தேன்”
என கருதிக் கொண்டான் அனுமன்.

பாடல்-21:


கடலில் வாழும் நாகர்கள்
கருடர்களின் மிகப்பெரிய சிறகுகள் மட்டுமே
கடலைப் பிளக்கும் என  அறிந்திருந்தனர்
இப்போது - 
அனுமனின் வலிமை கண்டு
கருடர்களே  கலங்கிப் போனார்கள்
“இனி நாம் பிழைப்பது உறுதியில்லை” என ஓடினர்.

பாடல்-22:
அனுமனின் தாவுதல் -  
ஊழிக்காற்றின் வேகத்தோடு மோதியதால்
கடலில் உண்டான அலைகள்
அனுமனுக்கு முன்னரே பயணித்து இலங்கையில் மோதின
கடலில் துள்ளிய மீன்களும் முதலைகளும்
சுறாமீன்களும் அடங்கின
வேதனையில் தத்தளித்தன.

பாடல்-23:
இந்த  உலகை
எட்டுத்திசைகளிலும் தாங்கும் எட்டு யானைகள்
அனுமனின் வேகம் கண்டு நடுங்கின
உலகின் பொருட்கள் நடுங்கின
அதுமட்டுமல்ல -  
இராமதூதனின்  வேகம் இப்போது அதிகரிக்கிறது
ஆதிசேஷனோடு முன்பு போர் செய்தபோது
மேருமலையின் மூன்று சிகரங்கள் ஒடிந்தன
அப்போது திரிகூட மலை பறந்து சென்று
தென்கடலில் விழுந்தது
அந்த மலையின் வேகத்திற்கு சமம் -
தற்போது அனுமனின் வேகம்!

                 
                                                               --தொடரும்

No comments:

Post a Comment