Thursday, 31 January 2013

அருள் நமக்கு கிடைக்குமா!

          ஒரு கோடீஸ்வரர் இருக்கிறார். அவரிடம் யாசகம் கேட்டுச் செல்கின்றோம், கோவில் எழுப்பிட. அவர் தனது கணக்குப் பிள்ளையிடம் கூறி 50000 செக் தருகிறார். இப்போது பணம் தந்தவர் கணக்குப் பிள்ளை என்பதால் அவர் பக்திமான் என்று நினைக்கலாமா? கோடீஸ்வரருக்கு தானே அந்த புண்ணியம் போய்ச்சேரும்? அவர் தன் கையால் எடுத்துத் தரவில்லை, அவ்வளவு தான்.
            வேகமாக விரையும் காரினில் பின் சீட்டில் அமர்ந்து “இப்படிப்போ அப்படிப்போ” என டிரைவருக்கு கட்டளையிடுவார் கார் சொந்தக்காரர். ஓட்டாமல் உட்கார்ந்திருக்கிறார் என்பதால் அவர் காரின் சொந்தக்காரர் அல்லாமல் போய் விடுவாரா ? அவர் அந்நிலையில் இருக்கிறார் அவ்வளவுதான்.
            சிவபெருமான் அருளுதலை சக்தி மூலமாகச் செய்கிறான்.  இதனை சிவமே தனக்கு எடுத்து இயம்பியது என்று அகவல் பாடுகிறார் வள்ளல் பெருமான். அகவல் என்ற சொல் அழகானது. நாய் குரைக்கும். மயில் அகவும். அக ஓசை. காகம் கரையும். இக்கால கவிஞர்கள் தன் துன்பம் கண்டே கரைகிறார்கள். வள்ளல் பெருமான் உலகினர் துன்பம் அற்று வாழ சிவத்திடம் அகவுகிறார் இப்படி:-
“அருள் அலாது ஓர் அணுவும் அசையாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே”
                அதுமட்டுமா சொல்கிறார். அருள் பெற்று விட்டால் எல்லாம் இயலும். இது உண்மை. அதனால் அருளுற முயல்க என்று சிவம் அருளியதாம் அவரிடம். அதாவது அருள் பெற முயற்சிக்க வேண்டும். முயற்சியிலாது எதுவும் கிட்டாது. பக்தியும் அதன் மூலம் அருள் பெற முயல்வதும் சோம்பேறித்தனமானவை அல்ல. அது முயற்சி தொடர்புடையது. அதனால்தான் அருள் பெற முயல்க என்றார் வள்ளலார்.
“பிரான் அருள் உண்டேல் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டேல் உண்டு நல்ஞானம்
பிரான் அருளில் உண்டு  பெருந்தன்மையும்
பிரான் அருளில் உண்டு  பெருந்தெய்வமும் ஆமே”
-    எனும் திருமூலர் வாக்கில் இறை அருளால் நாம் பெருந்தெய்வப் பண்புகளையும் பெற முடிவது புரிய வரும். வள்ளுவப்பெருந்தகை
“அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லாகி ஆங்கு” என்கிறார். 
           நிறையபேர் “ஆங்கு” என்ற சொல்தொடரை விட்டுவிடுகிறார்கள். அப்படிச் செய்தால் அக்குறள் தனித்தனியான இரண்டு வாக்கியங்கள் போல் உப்பு சப்பு இல்லாத முழக்கமாக இருக்கும். உலகப்பொது மறையாம் வள்ளுவம் அப்படி இருக்குமா? இருக்காது. உலகினருக்குத் தெரிந்ததை வைத்து, தெரியாததை விளங்க வைக்கிறார் வள்ளுவர் பெருமான் . பொருள் இலாதவரை இந்தப் பொருள் உலகம் மதிக்காமல் எப்படி விரட்டுமோ அது போல அருள் உலகிற்கு அருள் இருந்தால்தான் மதிப்பு என்பது விளக்கம்.  
           வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் வாழும் அன்னதான ஆதீன சித்தர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் தயவு வடிவானவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது கூறினார்:- “  இலங்கையில் இந்திய ரூபாய்கள் செல்லாது. அங்கு செல்லும் முன்பு அந்த நாட்டுக்கேற்ப பணத்தை மாற்றிக்கொள்கிறோம். அந்நியச்செலாவணி என்பார்கள்.  அதே போல, நாம் செல்லப்போகும் அருள் உலகத்திற்கு ஏற்ற புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும்” என் அழகுற விளக்கினார். எவ்வளவு அழகிய விளக்கம்! 

              எடுத்துக் கொடுங்கள். எடுத்து எடுத்துக் கொடுங்கள். குறையாது. ஆம். அட ஆமாப்பா. குறையாது. அப்படி ஒரு பொன் இருக்கிறது. அது எடுக்க எடுக்க அடுத்து அடுத்து ஓங்குகிறதே. மெய் அருள் என்கிற தங்கம் உனக்கு இருக்கின்றது. உனக்குள் இருக்கின்றது. தளரக் கூடாது. நீ எடு. நீ எடுத்தால் வளரும் தங்கம் அது. உன் உள்ளம் கிளறி இதைக் கூறுகிறேன் அப்பா. அப்படிப்பட்ட செம்பொன் அது. அது அருள் பொன் என்று உரத்துச்சொன்னார் வள்ளல் பெருமான்.

           *****

No comments:

Post a Comment