Saturday 22 December 2012

வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் -2

அறிஞர் ஜீன்பால் சார்த்தர் கூறுவார்: “இந்த உலகின் அழியாத பொருள் ஒன்றுடன் நான் தொடர்புடையவன் என்கிற எண்ணத்தை இழந்துவிட்டால், மனிதன் எல்லாவற்றையும் இழந்துவிடுவான்” ஆம். அழிவேயில்லாத ஆன்மாவுடன் -பிரம்மத்துடன் நமது விழிப்புணர்வு இணைக்கப்பட்டே உள்ளதை மறந்து தவிக்கிறோம். எல்லாம் நம்மால்தான் என்கிற எண்ணத்தை விட்டுவிட முடியாத பலவீனம் நம்மை மேலும் மேலும் பலவீனன் ஆக்குகிறது. ஆனால் தன்னை முழுமுதல் பொருளுடன் இணைக்கப்பட்ட உணர்வுடன் தியாக வாழ்வு வாழும் ஒருவரை சந்திக்கப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லை.
கோவை சிவப்பிரகாச சுவாமிகளை நேரில் சந்திக்க முற்பட்டபோது அவரே முயற்சித்தாலும் எழ முடியாத உடல்பாங்குடன் கட்டிலில் குப்புறக்கவிழ்ந்த நிலையில் காணக்கிடைத்தார். ஆனால் அவர் புன்னகையில் உள்ள சத்தியத்தை எளிதாக உணர்ந்தேன். மீற முடியாத புன்னகை அது. வரவேற்றார். “வாங்க” என்ற கொங்கு பாஷையில்தான் எத்தனை அன்பு. ஒருவரை எந்த உணர்வுடன் தொடுகிறோம் என்பதற்கு குரலின் கனிவே சாட்சி. தன்னுடைய உடம்புக்கு நேர்ந்த விபத்து பற்றி துளியும் காட்டாத அன்பு பரந்த முகம் கோடியில் ஒருவருக்கே கிட்டும். அவர் முகத்தில் வரவேற்ற புன்சிரிப்பு வலியை மறைக்க போடும் திரைப்பூச்சாக இல்லை. “உட்காருங்க” என்றார். கட்டிலின் முன்புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். “உங்கள் அன்பு ஓங்கி வளர்க” என்றபடி இந்த மாதம் அறநிலையத்துக்கு தாங்கள் வாங்கி வரும் அரிசியின் தரம் பற்றிப் புகழ்ந்தார். அறநிலையம் என்பது (130 நபருக்கு) அவர் அன்னதானமிட்டு தங்கும் இடவசதியுடன் (இலவசமாக) நடத்துகின்ற அனாதைஇல்லம் என்பது புரிந்தேன்.
வள்ளல்பெருமான் இராமலிங்க சுவாமிகள் சித்தி வளாகம் செல்கிற வழியில் எதிர்புற சந்தில்தான் சிவப்பிரகாச சாமிகள் இருக்கிறார். “இத்தனை அருகிலேயே இருக்கிறீர்களே” என்றேன். சுவாமிகள் புன்னகைத்து “குருடனுக்கு வெளிச்சம் பற்றி எதுவும் தெரியாது.ஆனால் அங்கிருந்து (சித்தி வளாகத்திலிருந்து) பார்க்கிற (அருட்பெரும் ஜோதி) ஆண்டவருக்கு இவன் குருடன் என்பது தெரியும் அல்லவா! அதுவே நல்ல வழிகாட்டும் தானே..” என்று புன்னகையுடன் சொன்னார். முத்துச்சிதறல் உள்ளே பரவியதாய் உணர்ந்தேன்.
                            எப்போது விபத்து? எதனால் சுவாமி இப்படி ஆனார்?  அடுத்த மாதம் அரிசி வாங்க உதவி கிட்டியதா?

                                        (தொடர்ந்து பேசுவோம்)

2 comments:

  1. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  2. “குருடனுக்கு வெளிச்சம் பற்றி எதுவும் தெரியாது.ஆனால் அங்கிருந்து (சித்தி வளாகத்திலிருந்து) பார்க்கிற (அருட்பெரும் ஜோதி) ஆண்டவருக்கு இவன் குருடன் என்பது தெரியும் அல்லவா! அதுவே நல்ல வழிகாட்டும் தானே..” எத்தனை ஆழமான விஷயங்களையும் எத்தனை சுலபமாக சொல்லிவிட்டு செல்கிறார்கள் .. அதனால்தானோ .. அவர்களால் சாதாரணமானவர்களையும் தாண்டி ஒவ்வொரு நாளும் வாழ முடிகிறது .. அந்த அற்புதமான மகானை பற்றி இன்னும் அறிய ஆவல் .. தொடர்ந்து எழுதுங்கள் ..

    ReplyDelete