இந்த எண்ணம் அப்போதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை
பக்கவாட்டில் தலை ஓரமெல்லாம் நரைக்கும்
முப்பதாறு வயதில் தோன்றுகிறது -
முதியோர் இல்லத்திலிருக்கும் என்னை விட இருமடங்கு வயதுடைய
தாயாருக்குப் பரிசொன்று தர வேண்டுமென!
கருவறையைத் தொட்டிலாக்கி
நெஞ்சுக்கு இதம் தந்தாளே
அதை நினைவூட்டும் நன்றியுடன்
அம்மாவுக்கு
இலவம் பஞ்சு மெத்தை செய்து
தொட்டில் ஒன்று போட்டால் என்ன!
பாலகனாயிருந்த பருவத்தில்
அம்மா அருகில் அணைத்துக் கொள்ள அவள் மேல்
தலையணை போல் கால் போட்டுத் தூங்குவேனே ..
அதை நினைவூட்டும் நன்றியுடன்
என் அன்புக் காற்றை நிரப்பி அருமையாய் ஒரு
தலையணை செய்து தந்தாலென்ன!
குமரனாய் வளர்ந்த பருவத்தில்
ஒரு நாக்கு போதாதென்று நான்
ஐம்பது ருசியுடன் பலதும் கேட்க
சமையலறையில் அடுப்புடன் போராடி
கை சுட்டுக் கொண்டு வடித்துப் போட்டாளே ..?
அதை நினைவூட்டும் நன்றியுடன்
ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில்
அம்மாவைப் பசியாற்றினால் என்ன?
குடும்பம் மூழ்கும் நேரம்
அப்பா நோயில் வாடும் நேரம்
பலர் வீட்டு வேலை செய்து
தன் மேனி தான் தேய
தனக்கு வைத்திருந்த
இருமல் மருந்து செலவுக் காசில்
நான் படிக்க புத்தகங்கள் வாங்கித் தந்தாளே
அதை நினைவூட்டும் நன்றியுடன்
அம்மாவைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதியே
ஒரு நூல் வெளியிட்டால் என்ன!
வாலிபனாய் நிமிர்ந்த காலத்தில்
தான் தாலி அறுத்திருந்தாலும்
எனக்காகத் தப்பாமல் தக்க துணை தேடித் தந்து
தான் ஒதுங்கிக் கொண்டாளே ...
அதை நினைவூட்டும் நன்றியுடன்
அம்மாவை என் மனைவியுடன்
புகைப்படம் எடுத்துத் தந்தால் என்ன!
அம்மாவுக்கு எது செய்ய நினைத்தாலும்
எது வாங்க நினைத்தாலும்
எது அணிவித்துப் பார்த்தாலும்
அதிலொரு குறை
ஒரு கல் உப்பு உணவில் அதிகம் போல
நெஞ்சு உவர்த்து விடும் எனும் அச்சத்தால்
அம்மாவிடமே
கேட்டுச் செய்வோமே என்று
நேரில் காணச் சென்றேன் அம்மாவை.
சுமார் அறுபது எழுபது மூதாட்டிகளுடன்
சக்தைத் தோலாக
கிழட்டுப் பறவையாக
சுவரோடு சுவராக
தேகம் இடிந்து உட்கார்ந்திருந்தாள்
என் அம்மா...
அம்மாவின் கால் மண் என் நெற்றியில் ஒட்ட
அவள் காலில் வீழ்ந்து
உனக்கு என்ன வேண்டும் கேளம்மா என்றேன்
அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தாள்
பழுதுபட்ட தொலைநோக்கியில்
வானத்தைப் பார்ப்பது போல
பிறகு சொன்னாள்
“காதோரம் தலை ஓரமெல்லாம்
வெள்ளை வெள்ளையா
பூத்துப் போச்சே என் ராசவுக்கு
மை வாங்கிப் பூசிக்கடா..”
எந்த வயதிலும்
தனது மகன் நன்றாயிருக்க வேண்டும் என நினைக்கும்
அவள் மனதே பரிசாக
எப்போதும் எனக்குக் கிடைக்கிறது
அவளுக்கு நான் வாங்க நினைத்த பரிசுகளெல்லாம்
வெறும் தூசாய் போகிறது.
*****
அனைத்திந்திய தேசிய கவி சம்மேளனத்தில் 26.1.2003ல் அனைத்து இந்திய மொழிகளிலும் ஒலிபரப்பாகியது.
No comments:
Post a Comment