Monday, 24 December 2012

திருப்பாவை -1

முதல் நாள்
பாடல் - 1   
திருப்பாவையில் தூய்மை
நம்மைச் சுத்தம் செய்து கொள்ள அழைக்கிறது மார்கழி மாதம் என்பதை ஆண்டாள் போல் யாரும் நிச்சயமாகச் சொல்லவில்லை. அன்புத் தமிழில்பக்தியுடன் அழைக்கவுமில்லை. குளிரில் சுருள்வதும் போர்வையில் மடங்குவதும் நல்லது செய்யுமா? என்று ஒரு நொடி சிந்தித்தே ஆக வேண்டும். சுத்தமாக இருப்பதாக நினைப்போம். “எல்லாம் நம்மிடமே! நாமே எல்லாமும் அறிவோம்” என்கிற எண்னங்களை விரட்டுவதற்கு பயிற்சி மாதம் மார்கழி மாதமே என்பது கோதையின் அழகிய எண்ணமாகும். அதனால்தான் நீராட வாருங்கள் என்று அழைப்பது முதல் பாடலிலேயே நடக்கிறது.
கர்வம் என்கிற எண்ண அழுக்கு அகல, குளம் எங்கே கிடைக்கிறது என்று நேரே சொன்னால் யாரும் ஏற்கத் தயங்குவார்கள். ஆனால் நாராயணனை பாடிப் புகழ அருள் நிச்சயமாகும் என்று சொல்வது எத்தனை அழகிய பாதை! அந்த எண்ணமே “நமக்கே பறை தருவான்” என்பதாகும்.  நமக்கு + ஏ= நமக்கே என்பதில் உள்ள “நமக்கே”வை கவனியுங்கள். அச்சொல்லில் நமக்கு நிச்சயமாக அருள் கிடைக்கும் என்று உறுதியும் தொனிக்கிறது. அதே சொல்லை இன்னும் ஒரு முறை உச்சரித்தால் ,எத்தனை அழுக்காக இருந்தாலும், அம்மா தன் குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொள்வது போல் நம்மீது இரக்கப்பட்டு நமக்கே கூட அருள் செய்வான் என்கிற அர்த்தமும் வரும். என்னே நயம்!
பாடல் :
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment