அடுத்த முறையேனும்..
தூக்கி எறியும்போது யோசியுங்கள்
பிஞ்சு மழலையின் உள்ளங்கையளவு
புளிசாதப் பருக்கைகள் என்றாலும்
யார் கண்டது
அது ஒரு எறும்பின் ஆயுள் பசிக்கு உதவக்கூடும்!
அடுத்த முறையேனும் யோசியுங்கள்
தூக்கியெறியும் உணவு மிச்சத்தின்போது
வானில் பறக்கும் கருப்பு காந்தியே
காக்கை எனத் தெரியக்கூடும்!
அடுத்த முறையேனும் யோசியுங்கள்
கைத்தாங்கலாய் சிலர்
தமது தாய் தந்தையை
வயோதிக விடுதி வாசலில் விடும்போது
அவர்களின் ஒல்லியான கண்ணீர் கோட்டில்
அழியப்போவது நம் நிம்மதி எனத்தோன்றக்கூடும்!
அடுத்த முறையேனும் ஒரு கணம் யோசியுங்கள்
நம்பிக்கையற்ற நாக்கினால்
எந்த ஒரு சொல்லையும்
இளைஞர்களிடம் தூக்கியெறியும்போது
மெளனத்தின் சிறப்பு உத்தமம் என அறியக்கூடும்!
துக்கியெறியத் தெரியாமல்
பாலிதீன் குப்பை மனதை அழிக்காமல்
டெலீட் கமாண்ட் இல்லா மனிதராய் வாழ்வது
பலவீனம் என்பது புரிந்துவிட்டால்
நாமும் அன்புச்சிகரம் தொடக்கூடும்!
( பேசும் புதியசக்தி - ஜனவரி 2016)
No comments:
Post a Comment