Friday 23 August 2013

சுந்தர காண்டம் 326-350


பாடல்-326:

“சம்பாதி” எனும் கழுக்குகளின் அரசன்
இலங்கையில் சீதையைக் கண்டேன் என்றான்
அவன் உரை பொய்யோ?
கருவாக சீதையை மறைத்துவைக்கும் நெடுநகர் இலங்கையைக்
கடலில் கரைத்து இந்நேரம் நான்  
பெருந்தேவியை கண்டிருக்க வேண்டுமே
அப்படிச் செய்யாத நான்
இந்த உடம்பு கொண்டு இன்னமும்
உயிர் வாழ்ந்து உழல்வேனோ.

பாடல்-327:

“வான் அறிய
மண் அறிய 
பூங்குழலாள் சீதையை
பிடித்துச் சென்ற அரக்கனுடன்
இலங்கையைப் பெயர்த்தெடுத்து
கடலிலே மூழ்கடித்த பின்பே
நான் முடிந்து போதல் முறையானது”
என உணர்ந்தான் அனுமன்.

பாடல்-328:

எள் அளவு இடமும் விடாமல்
அனுமன் அலைந்தான் திருமால் போல்!
பறவைகள் தங்கும் பூஞ்சோலையை
முற்றிலும் தேடிவ்¢ட்டு அப்பால் நகர்ந்தான்
தேன் சிந்தும் இன்னொரு சோலை
அருகில் தெரிந்தது.

3 .காட்சிப்படலம்

பாடல்-329:

சோலை நெருங்கினான் அனுமன்
“இந்த இடத்திலும் சீதை
இல்லாமல் போனால்
திரிகூட மலையில் மோதி
இலங்கையை மோதி அழிப்பேன்
எனக்கு இருக்கு ஒரே வழி அதுதான்” என எண்ணினான்.

பாடல்-330:

சோலையுள் புகுந்தான் இராகவன் தூதன்!
வானவர் பூமழை தூவினர்
மனம் மகிழ்ந்தனர்
அரக்கர் இராவணன்
அச்சோலையில் சிறை வைத்த
சீதை நிலையை இனி கூறுவோம்.


பாடல்-331:

வலிய அரக்கியர் நடுவே
சீதாப்பிராட்டி இருத்தல் கண்டான் அனுமன்
கல்லிடையே தோன்றிய மருந்துச்செடி
ஒரு துளி நீரும் பெறாமல்
இருப்பது போல் இருக்கின்றாள்
நன்மைகள் அறுபட்டு வாடிய நங்கை அவளுக்கு
துடி இடை போல
மற்ற அங்கங்களும் மெலிந்து விட்டன.

பாடல்-332:

மயிலின் சாயல் போனது
குயிலின் இனியகுரல் போனது
உறக்கம்  என்ற ஒன்று போயே விட்டது
கண்கள் மூடுதலும் திறத்தலும் போனது
ஒளியற்ற உடம்பு என ஆனாள்
வெயிலில்  வைத்த விளக்கு போல் ஆனாள்
கூரிய பல் புலிக்கூட்டம் நடுவே சிக்கிய
புள்ளிமான் போல ஆனாள் சீதை .

பாடல்-333:

இராமபிரான் இருக்கும் திசை நோக்கி
இராமபிரானை எண்ணி விழுவாள் விம்மினாள்
மெய் கீழே விழுவாள்
எழுவாள் ஏங்குவாள்
மனம் இரங்குவாள்
தொழத்துவங்குவாள்
உடல் வெப்பமாக அழுவாள்
துன்பப் பெருமூச்சு விடுவாள்
வேறு எதுவும் செய்யாள் மகாதேவி!

பாடல்-334:

முன்பு நூலிழை நுட்பம் கொண்ட
சீதையின் கண்களுக்கு அவற்றின் குளிர்ச்சியால்
“மழைக்கண்” என்பார்கள் இப்போது -  
கண்ணீர் பெருகி விழுகிறது
கண்களாகிய துளை வழியே
முலைகளாகிய மலைகளைக் கடந்து எனவே -  
மழைக்கண்ணின் அர்த்தம் இன்று இதுதான்!

பாடல்-335:

ஒரு விடை கிடைத்திருக்கிறது இப்போது
ஆம்!
உலகில் உள்ள காதல்களுக்கெல்லாம்
தலைவன் -  தலைவி பிரிவுத் துன்பம் வரும்போது
எந்த உருவில் அந்தத்துன்பம் இருக்கும்
என்ற கேள்விக்கு
சீதை உருவினைச் சொல்க!
கரிய மேகமும், கண்களில் உள்ள மையும்
இராமபிரானை  நினைவு செய்தன அதனால்
அருவி போல் விழுந்த கண்ணீர் அதிகமாகி
அலைகடல் அடையும்படி அழுதாள்
ஆம்!
அருவிகள்
கடலை அடைவது இயற்கை தான்!

பாடல்-336:

மகாதேவி மங்கையர்க்கரசி சீதாப்பிராட்டியின் ஆடைகள்
நனைவதும் காய்வதும் கொண்டன
எப்படி?
பவழ நிறக்கால்களுடன்
கருமேக நிற உடல் கொண்ட இராமபிரானை
நினைந்து நினைந்து கண்ணீர் பெருகி
ஆடைகள் நனையும்
உடனே
தாங்க முடியாத  துன்பமும் பெருமூச்சும் உண்டாவதால்
நனைந்து ஆடைகள் உலர்ந்துவிடும்.

பாடல்-337:

சீதையின் இதயம்
உயிர்விட எண்ணியது என்றாலும்
விதியின் வலிமையைக் கடப்பது இயலாது
என்று அஞ்சினாள்
சூரிய வம்சத்திற்கு உண்டான பழி தீர்ந்திட
நாயகன் வருவார் வருவார்
என்கிற ஒரே ஒரு துணிவுதான் அவளிடம் உள்ளது
அனைத்து திசைகளையும்
அளந்து அளந்து பார்க்கிறாள்

பாடல்-338:

நிலத்தில் கிடந்த நிலவு போன்ற
சீதையின் கூந்தல்
இராகு கிரகத்தின் கரும்பாம்பு போன்ற தோற்றம் உடையது
பொறுமை பொருந்திய சீதையின் கூந்தல்
திருமுகத்தின்
பக்கங்களில் படர்ந்த கன்னங்களை
நன்றாகக் கவ்விப் பரந்திருந்தது.

பாடல்-339:

சூடான பாலின் மீது படரும்
பாலாவி ஒத்த நூலாடையே சீதை அணிவது
அவளது உடலோ - 
நீரில் தோய்ந்து தூய்மை பெற அவசியமில்லாத
அன்னப்பட்சியின் உடலாகும்
எனவே - 
சீதையின் பிரிவுத் தோற்றத்தை
இப்படிக் கூறலாம்:-
“பாற்கடல் அமுதம் கொண்டு
மன்மதன் தீட்டிய ஓவியம் ஆனால்
புகை படிந்த ஓவியம்!:”

பாடல்-340:
சீதையின் எண்ணங்களும் துன்பங்களும் இனி காண்போம்
மானைத் தொடர்ந்த இராமனை
இளவல் இலக்குவன் காணவில்லையோ...
கனைக்கும் கடல் நடுவே
இலங்கை உண்டு என்பதை
உணராமல் இருப்பார்களோ...
மனம் குழைந்தாள் சீதை
உருகினாள்
புண்ணைப்பிளந்து
அதில் நெருப்புத்தழல் நுழைந்தது போல
மனம் புகைந்தான்.

பாடல்-341:

கழுகுகளுக்கு அரசன் சடாயு
மாண்டு போய்விட்டான் இனி - 
யார் இருக்கிறார்கள்
நான் கடத்தப்பட்டதை சென்று சொல்வதற்கு?
இந்த பிறப்பில்
இனி காண்பது சாத்தியமில்லை
சத்தியமாய் இல்லை என
அந்த மனம் விம்மியது கலங்கியது
மீண்டும் மீண்டும் நெருப்பு புகுந்து புண் எரிவது போல
மெலிந்தாள் உத்தமி.

பாடல்-342:

நாயகன் இராமபிரான்
இளவல் இலக்குவனைக் குறித்து
நான் கூறிய தகாத வார்த்தைகளால்
எண்ணற்ற வினைகள் உண்டாகி விட்டன அதனால்
“அறிவில்லாத சீதை” என்று துறந்து விட்டிருப்பானோ...
அதனால் தான் மீட்க வரவில்லையோ...
முன்னைப்பிறவி ஊழ்வினையோ ..
பலப்பல காரணங்களை கூறிக் கொண்டாள்
வாய் வறண்டது
உணர்வுகள் தேய்ந்தன உயிரும் பதைத்தது

பாடல்-343:

சீதை இருந்த இடத்தைக் கரையான்கள் அரித்துத் தின்றன
அதற்கு கவலைப்படவில்லை
“மெல்லிய இலை உணவு உண்ணும் இராமநாயகன்
இப்போது யார் பரிமாற உண்பான்?
விருந்தினர் வருவரே
உபசரிக்க யாரும் இல்லையே”
நினைத்து விம்மினாள்
“இந்த மனநோய்க்கு ஏது மருந்து?” என மயங்குவாள்.

பாடல்-344:

இரவும் தெரியாத நிலையில்
பகலும் தெரியாத நிலையில்
வாழும் சீதை
இன்னொன்றும் நினைப்பாள்:-
“வஞ்சனை அரக்கர்கள் எனது சீதையை
இத்தனை பகல் பொழுதுகள்
உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள்
தின்றிருப்பார்கள் என நினைத்தானோ
தனது சூரிய குலப்பெருமை
தனது மனைவிக்கும் உண்டு
எனத் தணிந்து போய்விட்டானோ
என்ன செய்வேன்! என்ன செய்வேன்!”

பாட-345:

ஒரு வேளை இராமனின் அன்னையும்
இளவல் பரதனும்
மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்றார்களோ!
இருக்காது இருக்காது
பதினான்கு வருடங்கள் நிறையாமல் திரும்பமாட்டார் அவர்
ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது
இடர் படரப் படர பிறர் அடையாத வலி அடைந்தாள்.

பாடல்- 346:

முன்பு
“முரன்” எனும் அசுரன் ஒத்தவர்கள்
போரிட்டார்களே...
எல்லையில்லா மாய வஞ்சக அர்க்கர்களுடன் போரிட
இன்னும் ஒரு போர் உள்ளது போலும்” என்று நினைத்தாள்
கரன் முதலிய பதினான்கு ஆயிரம் நபர்களுடன்
நிகழ்ந்த போரினை எதிரே கண்டது போல்
கலங்கினாள் சீதை.

பாடல்-347:

இராமன் ஓர் ஆண்சிங்கம்
சிங்கத்தின் தன்மையும் உண்டு அவனிடம்
கேகய நாட்டு கைகேயி
“நெடுநிலமான கோசல நாடு
உன் தம்பிக்கு உரியது” என்றதும்
அது கேட்ட இராமபிரான் முகம்
முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு பொலிவானதே!
அதை நினைத்து வாடினாள் சீதை.

பாடல்-348:

“அரச பதவி நீ அடைக” என்றாலும்
சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் முகம் தான்
“அரச பதவி துறந்து காடு செல்க” என்றாலும்
சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் முகம்தான்
அப்படிப்பட்ட தன்மையுள்ள
இராமபிரானை எண்ணி வாடினாள் சீதை.

பாடல்-349:

கங்கை தேங்கும் திருமுடியும்
மூன்று கண்களும் சிவந்த சிவன் அம்சமே
நீண்ட வில்!
அதனை
 இரண்டு துண்டுகளாக்கி விழச்செய்த
இராமபிரான் தோள் வலிமை நினைந்து
மெலிகிறாள் சீதை.

பாடல்-350:

இந்திரனுக்கு  துன்பம் செய்த
கரன் தூஷணன் உள்ளிட்ட
பதினான்காயிரம் அரக்கர்கள் படையை
மூன்றே நாழிகையில் வீழ்த்தினான் இராமபிரான்
அந்த வில்லின் சிறப்பு புகழ்ந்து
ஏங்கி வெதும்புகிறாள் சீதை.


 -அனுமனோடு மீட்போம்.

1 comment:

  1. சீக்கிரம் மீட்கவும்
    சீதையின் பிரிவுத் துயர் தாங்கவில்லை.
    (கவனம் தேவை..எழுத்துப் பிழைகள் எட்டிப் பார்க்கின்றன.உ-ம் கழுக்கு )
    -நளினி சாஸ்திரி

    ReplyDelete