Tuesday 19 February 2013

பிப்ரவரி 14காதலும் 14வருடக் காதலும்!


**
காதல் என்ற பெயரில்
இருக்கலாம் முற்றுப்புள்ளி
காதலில் வேண்டாமே.

**
ஆதலினால் காதல் செய்வீர் என
பாரதி அடுக்கிய காரணம் தாண்டியும்
காதல் வேண்டும் மானுடர்க்கு.

**
இமயச்சிகரம் தொடுவதுதான் காதல் என
காதல் புரியாமல் இருந்துவிடாதீர்
காதல் -
“புரிய” வேண்டும் என்பதை
நோக்கமாகக் கொள்க.

**
அன்னப்பறவை
சக்கரவாகப் பறவை
எல்லாப் பறவையும்
நீ காணலாம் உன் மனைவியிடம்.

**
சுதந்திர தினத்திற்கு
நாடுகள் என்ற வேறுபாடும்
தேதி மாறுபாடும் உண்டு
காதல் தேதியற்றது
எக்கணமும் உயிரானது.



**
சகியே
சுதந்திர தினத்திற்குப்
பள்ளியில் மிட்டாய் தந்தனர்
காதலர் தினத்திற்கு
இதழ்களே இனிமையானவை.

**
மாறுபடுவதும்
கருத்து வேறுபடுவதும்
சகிப்புத்தன்மை
வளர்க்கிறது என்று
சொன்னால் நான்  சாதாரணன் ஆவேன் என்பதனால்
அது உன் தனித் தன்மை என்று
புரிந்து கொள்ளும் சக்தியைக் கேட்கின்றேன்
சொல்லடி சிவசக்தி!

**
நிறைய நண்பர்கள்
பக்திக்கான அடையாளமான
திருநீறும் குங்குமமும் கண்டு வியப்புறுகின்றனர்
இரகசிய விலகல் அடைகின்றனர்
சகியே - 
ஆண்டவனே சிவசத்தியாகும் போது
நானும் சிவசக்தி சின்னம் அணிவது
ஏற்புடையதே!

**
மின்னல் கண்டு
தாழம்பூ மலர்வது இயற்கை
என் காதல்
எப்போதுமே மின்னல் கூட்டமாய் ஒளி வீசுவதால்
சகியே
அது உனக்குச் சாதாரணமாய்ப் போனது- 
ஒரு பகல் பொழுது ஒளி போல!

**
வீடுகளுக்கு இலக்கம் உண்டு
வீதிகளுக்கு இலக்கம் உண்டு
அன்புக்கு இலக்கம்
உன் கண்களாய் அறிகிறேன்
யாரிடம் சொல்வேன் ஆதலால்
உன் கண்களிடமே சொல்லுகிறேன்.

**
இலக்குவன் தினமே
காதலர் தினமாக
அறிவிக்கப்பட வேண்டும்!
அண்ணன் வாழ்வுக்காக காடு சென்ற -
தம்பியின் தியாகத்தில்
அரும்பியது
இராமதேசத்தில் முதன்முதல் காதல் தினம்.

**
வாய் மூடி
மென்று தின்றால்
உமிழ் நீர் கலந்தால்
சர்க்கரை நோய் வருவதில்லை
ஆனால்
காதல் இனிப்பை
நெஞ்சில் மூடி மென்னறு உணர்ந்தால்
காதல்நோய் வளர்ந்துவிடுமே!



**
எத்தனையோ தேதிகள் இருக்க
14ம் தேதியில்
காதல் தினத்தை வைத்திட
காரணம் என்ன என யோசித்தால்
பதினான்கு ஆண்டுகள்
அண்ணல் இராமனுக்காக
தன் மனைவி ஊர்மிளையைப் பிரிந்த
இலக்குவனே
நினைவில் வருகிறான்.
பிரியாத காதலை விட
பிரிந்த காதலின் சக்தி
உலகை ஆள்கிறது
தமிழின் ஊட்ட சக்தியாக !

***

மண் சட்டியில்  பழைய சாதத்தில்
நீர் ஊற்றி
மறுநாள் காலை
அளவுடன் உப்பிட்டு
எலுமிச்சையும் பிழிந்து
தொட்டுக் கொள்ள  சின்ன வெங்காயமும்
பச்சை மிளகாயும் சேர்த்து
உண்ணும் நேரம் போல
இனிமையாய் இருந்தது காதல்
இன்று
பிரிட்ஜில் வைத்து உண்ணுகின்ற
சில்லிட்ட
மூன்றாம் நாள் குழம்பு போல்
ஆனது ஏனோ!
ஆக்கியது நீயோ நானோ!

**

இராமனுக்காக சீதை
14 வருடங்கள்
தானும் காட்டுக்குப் போனாள்
சீதையின் தியாகம்
போற்றுகிறோம்
ஊர்மிளையும் தான்
தியாகம் செய்தாள்
கணவன் இலக்குவனைப் பிரிந்து
14 வருடங்கள்

வீட்டுச் சிறையில் இருந்தாள்.
போற்றுவோம் ஊர்மிளை
காதலை!
இலக்குவன் காதலுக்கோ
இன்னமும் இமயம் புதிதாக வேண்டும்!

*****

2 comments:

  1. வீடுகளுக்கு இலக்கம் உண்டு
    வீதிகளுக்கு இலக்கம் உண்டு
    அன்புக்கு இலக்கம்
    உன் கண்களாய் அறிகிறேன்
    யாரிடம் சொல்வேன் ஆதலால்
    உன் கண்களிடமே சொல்லுகிறேன்.//

    சீதையின் தியாகம்
    போற்றுகிறோம்
    ஊர்மிளையும் தான்
    தியாகம் செய்தாள்//

    இனிமையாய் இருந்தது காதல்
    இன்று
    பிரிட்ஜில் வைத்து உண்ணுகின்ற
    சில்லிட்ட
    மூன்றாம் நாள் குழம்பு போல்
    ஆனது ஏனோ!
    ஆக்கியது நீயோ நானோ!//

    அனைத்து நாட்களுமே அன்பானவர்களுக்கு கொண்டாட்டமே!!

    (வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்களேன் ... கருதிடுவதற்கு எளிதாய்...)

    ReplyDelete
  2. தட்டச்சில் சிறு தவறு... 'கருத்திடுவதற்கு' (comment)எளிதாய்...

    ReplyDelete