Wednesday 16 January 2013

செவிகளா ! கண்களா!

           
                சிந்திக்கச் சிந்திக்க திகைப்பூட்டுவதே வாழ்வின் அதிசயம். நிகழ்காலக் கடமைகளில் உழல்வது மட்டுமே நமது பொறுப்பு என அது நம்மை நம்ப வைக்கிறது. ஆனால் நாம் எதிர்காலக் கடமைகளுக்கும் இலட்சியங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அழுத்தபூர்வமான நிலையில் அது நம்மை அழுத்தி இருப்பதை மறுக்க முடியுமா ? இப்படிப்பட்ட வாழ்வியலைக் கொண்டுள்ள நாம் , நமது செயல்பாடுகளுக்குள் இயந்திரங்கள் பலவற்றைப் புகுத்திக் கொண்டோம். புகுத்துதலுக்கு விஞ்ஞானத்தைக் காரணமாகச் சுட்டினோம். அது நமது நேரத்தை மிச்சம் செய்வதாக கற்பனை செய்தோம். ஒரு கருவியால் மிச்சமாகும் நேரம் , இன்னொரு கருவியைப் பராமரிக்க ஆகும் நேரத்தில் கழிந்து விடுகிறது. பொருளுக்காக கருவிகளை நுழைத்து , கருவிகளுக்கான பொருளாகிப் போய்விட்டதே இந்த நூற்றாண்டில் நம் பரிதாப நிலை.
ஒன்றல்ல, இரண்டல்ல..எண்ணற்ற  கருவிகள் நம் வாழ்வைச் சூழ்ந்து விட்டன. எதற்குத்தான் கருவி என்றில்லை. பல் தேய்த்துவிடும் கருவி , உடல் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் கருவி, சின்ன வெங்காயம் உரிக்கும் கருவி, நாக்கைப் பிரட்டாமல்  உணவை மெல்லாமல் வயிற்றுக்குள் தள்ளும் கருவி , என்பவற்றைக் கூட எதிர்பார்க்க ஆரம்பித்துவைக்கிறது இன்றைய கருவிக்காலம். மாறாக,  நம் முன்னோர்கள் உண்ட உணவின் பலங்கள், அவர்களை அழியாத கோவில் படைப்புகளை நிர்மாணிக்கும் பலசாலிகள் ஆக்கி வைத்திருந்தன என்பதை எண்ணிப்பார்க்கலாம். போர் பயமற்ற அன்றைய சூழல் ஆன்மாவை நோக்கி , எளிதாக - ஆழமாக - உண்மையாக - மிகப்பெரும் தமிழர்கள் - அதிக எண்ணிக்கையில் ஈடுபட உதவிற்று,  ஆன்மீகம் சுத்திகரிக்கப்பட்டது. ஆகம விதிகளில்  நிர்ணயமான கோவில்கள் மிகப்பல சத்தியச் சுடராய் தலை நிமிர்ந்தன. இன்றும் அவை நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நமது ஆன்மா எழுப்பும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளிப்பன. இன்னும் அதன் சக்திகள் நமக்குள்தூண்டலை உற்பத்தி செய்கின்றன.

                ஏக்கப்பெருமூச்சுவிட வைக்கும் கடந்த காலத்தையும், இயந்திர வாழ்வையும் ஒப்பிட்டு மீண்டும் நுகத்தடி மாடுகள் போல நுழைவதாலோ நாம் இயந்திரகதியில் சுழல்வதாலோ, தேவையான காரணங்களை அடுக்குவதாலோ வாழ்வின் எல்லை நம்மை மன்னித்துவிடுமா என்ன!
              சொந்த பந்தங்களுக்கும் , அலுவலக வேலைகளுக்கும் , போட்டுக் கொண்ட அரிதாரங்களுக்கும் ஈடு கொடுப்பதிலேயே  காலம் கழிக்கும் நம்மை காலன் கேட்கும் கேள்வியோ வேறு.  ஹீப்ரு மத நம்பிக்கையில் மேலுலகில் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கப்படுகிறது. 
1. நீ பூமியில் சந்தோஷமாக இருந்தாயா ?
 2. பிறரை சந்தோஷமாக வைத்திருந்தாயா ? 
          இந்த இரு கேள்விகள் எழுப்பும் அதிர்வுகள், மிகவும் தன்னைத் தொலைத்துவிட்ட நவீன மனிதனுக்கு எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசாட்சி மிக்க நடுத்தரவர்க்கத்தினர், உண்மையும் உழைப்பும் மிக்க அடித்தட்டு வர்க்கத்தினர் , தர்ம சிந்தையுள்ள சில மேல்தட்டு மக்கள் ஆகியோர் இதயத்திற்குள் இக்கேள்விகள் பாயும் சக்தி கொண்டுள்ளன.
          மிக மிக அதிகமான விஞ்ஞானக் கருவிகளில் தொலைபேசியும் ; செல்போனும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மிக மிக அருகாமை தரும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மகளை வெளிநாட்டில் கற்க அனுப்பும் தந்தை , தன் ஒரே மகனை வடகிழக்கு மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்பும் தாய் ஆகியோர் அந்த செல்போனை மட்டுமே  நம்பி அனுப்புகின்றனர். பேச்சே ஆதாரம். பேச்சே மகனின் உருவம்!
            தொலைபேசியும் செல்போனும் என்ன செய்துள்ளன?நமது உறவுகளை செவி வழியே புகுத்தி சொல்பிரபஞ்சம் வழியாக, ஏற்கனவே நாம் நம் மனதில் பதித்திருந்த சொல்சித்திரம் வழியே  விரிந்து கொள்கின்றனவே தவிர, நிஜத்தில் வேறு ஏதும் நிகழ்வதில்லை. அதாவது உதாரணத்திற்கு ஐந்தாண்டுகளாக ஒருவர் வெளியூரிலிருந்து பேசிப்பேசி ஒருவரைக்குறித்து ஏற்படுத்திக்கொண்ட உருவம், நேரில் காணுகையில் (கண் என்ற ஊடகம் வழியே காணும்போது) மிக மிக மாறுபட்டதாக இருக்கும். அதாவது, நமது அகத்தில் ஒரு பிளவு ஏற்படுத்திவிட்டன கருவிகள். இதனால் தனது கண்ணை நம்புவதா, செவியை நம்புவதா என்ற  கேள்வி முடிச்சில் இருபத்தோரம் நூற்றாண்டு மனிதன் தவிக்கிறான். ஓயாத பேச்சுகளின் வழியே ஏற்பட்ட அகபிம்பம் வேறு. நேரில் கண்களுக்கு ஏற்படும் வேறு நடத்தை கொண்ட மனித ஆளுமை வேறு.
                    வேறுபட்ட பொய்ச்செய்திகள் செல்போனில் மழைபோல பொழியும் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க எளிய வழி இருக்கிறது. அண்ணல் காந்தி சொன்ன மிக எளிய வழி தான் அது. ஆம். உண்மை பேசுதல். தொலைபேசியிலும் செல்லிலும் உண்மையான தகவல்களை மட்டுமே நேர்மையாக (நேரில் இருப்பதாகக் கருதி) பரிமாறிக் கொண்டால் மனித உறவுகளில் மகிழ்ச்சி ஏற்படும்.
            நவீன கருவிகள் எத்தனை நுழைந்தாலும் மனித உறவுகள் காயப்படாமல் தப்பிக்க வழி ஏற்படும். பூசல்கள் குரோதங்கள் அழியும். இல்லையேல் தப்பும் தவறுமாக அவசரமாக தொலைபேசியில் பறக்க விடும் சொற்களால் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் நிலை ஏற்படும். தொலைபேசியிலும் செல் பேசியிலும் பேசும் வாழ்வை, கூடிய வரையில்,  சுத்தம் கொள்வோம். நேர்மையுடன் நடந்து மனித உறவு விரிசல் தடுப்போமாக.

                           *****

1 comment:

  1. பொருளுக்காக கருவிகளை நுழைத்து , கருவிகளுக்கான பொருளாகிப் போய்விட்டதே //

    வாழ்வின் எல்லை நம்மை மன்னித்துவிடுமா என்ன!//

    1. நீ பூமியில் சந்தோஷமாக இருந்தாயா ?
    2. பிறரை சந்தோஷமாக வைத்திருந்தாயா ? //

    இரண்டும் ஒன்றையொன்று ஆதாரமாகக் கொண்டவை தானே...

    //ஓயாத பேச்சுகளின் வழியே ஏற்பட்ட அகபிம்பம் வேறு. நேரில் கண்களுக்கு ஏற்படும் வேறு நடத்தை கொண்ட மனித ஆளுமை வேறு. //

    விரிசல் தடுப்போமாக.


    ReplyDelete